முன்னுரை 1


முன்னுரை – 1*

ஓம் ஸ்கந்தம் வந்தே லோக-குரும் ஓம்.

    சிவபெருமானின் கிருபா-சக்தியின் மொத்த உருவமானவரும், தேவ லோகத்தின் தெய்வீகத் தலைவரானவரும், வித்யா-மாயையான அன்னை பராசக்தியின் அன்புக் குழந்தையானவரும், இறை-அனுபவத்தை அடைந்திடுவதற்கான பாதையில் நேர்மையாக பயணிக்கும் சாதகர்களுடைய தூய இதயங்களை நிரப்பும் மர்மமான சாதனை சக்தியாளருமான கார்த்திகேயப் பெருமானுக்கு எனது நமஸ்காரங்கள்! அவருடைய ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

    தென்னிந்தியாவில் திருவண்ணாமலையிலிருந்த மகாமுனியான திரு அருணகிரிநாதர் அருளிய "கந்தர் அனுபூதி" என்ற புகழ்வாய்ந்ததொரு தமிழ்ப் படைப்பை, ஆங்கிலத்தில் வழங்கும் இப்புதிய முயற்சி சம்பந்தமாக இந்த வார்த்தைகளை எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த ஞானார்த்தம் ததும்பும் கவிதை நூல் அறிவெல்லை கடந்த ஆழ்நிலை அனுபவத்தின் ஒளிக்கதிரால் பிரகாசிக்கிறது. அரிய மற்றும் உயரிய ஆன்மீகப் புதையலான இறை-அனுபவம், மற்றும் அவர் அனுபவிக்கும் பரவச ஆனந்த நிலை, ஆகிய இரண்டையும் சேர்த்துப் புனைந்து இவ்வுலகிற்கு அளித்த அருணகிரிநாதருடைய இந்த விழுமிய கவிதையானது, இறைவனை அடைய ஆர்வமுள்ள சாதகர்களுக்கு கிடைக்கப் பெற்ற அருட்திறல். ஆனால் இந்த ஒப்புயர்வில்லா செல்வமான ஆன்மீக பொக்கிஷமானது தமிழ் மொழியில் இருப்பதால், உலகின் பெரும்பான்மையான (தமிழ் அறியாத) சாதகர்களுக்கு இது பயன்படாமல் போய்விட்டது. ஆகையால், (இறைவனின் பெயரையே தன் பெயராகக் கொண்ட) ஸ்ரீ என்.வி.கார்த்திகேயன் அவர்கள் இதனை ஆங்கிலத்தில் தரம் மற்றும் நயத்துடன் மொழி பெயர்த்ததன் மூலம், இவ்வரிய ஆன்மீகப் படைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, தமிழ் அறியாதவர்களுக்கு ஒரு சிறப்பான சேவை செய்திருக்கிறார். கந்தர் அனுபூதி நூலின் அனைத்துச் செய்யுள்களையும் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மிகச்சிறந்த விளக்க உரைகளையும் சேர்த்துத் தந்துள்ளதால், இந்த தனித்துவமான சேவையானது இன்னும் மதிப்புமிக்கதாகிவிட்டது.

    மொழிபெயர்ப்பாளரும் விளக்கவுரையாளருமான திரு என்.வி. கார்த்திகேயனின் ஆன்மீக அந்தஸ்தை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தும் இவரது விளக்கவுரையானது மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இவர் எனக்கு தனிப்பட்ட முறையில் சென்ற பத்து வருடங்களாக நன்றாகப் பழக்கம்; இறைவன் மற்றும் நமது அன்புக்குரிய குரு மகராஜ் சுவாமி சிவானந்தாஜியின் கிருபையைப் பூரணமாகப் பெற்ற இவர் ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதை நான் நேரில் கண்டு அறிந்திருக்கிறேன். அருட்செல்வர் அருணகிரிநாதரின் ஞானார்த்தம் ததும்பும் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தது, இவர் செய்த ஒரு மிகப்பெரிய ஆன்மீக சேவையே. இதன்மூலம் இவர் உலகத்தினரின் ஆழமான நன்றிக்குப் பாத்திரரானார்.

    இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு, “The Divine Life” எனப்படும் நமது சங்கத்தின் ஆங்கில மாதாந்திர சஞ்சிகையின் ஒவ்வொரு இதழிலும், தொடர்கட்டுரையாக, 1969ஆம் வருடம் துவங்கி சென்ற மூன்று வருடங்களாக வெளிவந்தது; அது அச்சஞ்சிகையின் மதிப்பைப் பெருமளவு அதிகரித்தது என்று கூறினால் அது மிகையாகாது. நமது வணக்கத்துக்குரிய பூஜ்ய குருதேவர் சிவானந்த மகராஜ் அவர்களின் சிரத்தைமிக்க சீடரான இவர், குறிப்பிடத்தக்க ஆன்மீக முன்னேற்றம் மற்றும் (ஞான) முதிர்ச்சி அடைந்து வந்ததை நான் மிகப் பெருமையுடனும் திருப்தியுடனும் கவனித்து வந்துள்ளேன். இந்த அற்புதமான படைப்பினை தந்ததற்காக இவருக்கு நன்றி தெரிவித்து இவரை வாழ்த்துகிறேன். மேலும், மிகவும் தெளிவாகவும் மற்றும் திறத்துடனும் ஒளிரும் தனது விளக்கவுரைகள் மூலம் எந்த இறை அநுபூதியை இவர் இப்படைப்பில் விளக்கியுள்ளாரோ, அவ்வனுபூதியை இறைவன் இவருக்கு வழங்கி அருள வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். கந்தப் பெருமான், தனது தெய்வீக மகிமைகளோடு தன்னை இவருக்கு வெளிப்படுத்திக் கொண்டு, அபரோக்ஷ அநுபூதி என்னும் பேரானந்தத்தை இப்பிறவியிலேயே இவருக்குத் தந்து அருள்புரிய அவரை வேண்டிக் கொள்கிறேன்.

    மிகவும் ஊக்கமளிக்கும், மறைபொருளை வெளிப்படுத்தும் அளவிடற்கரிய மதிப்புமிக்க இந்த நூலை உலகெங்கிலும் வாழும் மக்கள் படித்து பயன்பெற நான் வாழ்த்துகிறேன். மேலும், இந்நூல் பற்பல வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, அதன்மூலம் எண்ணற்ற உண்மையான சாதகர்கள் இதைப் படித்தும் பயன் பெற்றிட வாழ்த்துகிறேன். எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து இந்த முன்னுரையை எழுதுவதில் நான் ஆனந்தம் கொள்கிறேன். இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்.

ஓம் ஸ்ரீ சரவணபவாய நம:!
சிவானந்த ஆசிரமம்,
ஸ்கந்த சஷ்டி பண்டிகை தினம்,
26, அக்டோபர், 1971.
 
சுவாமி சிதானந்தா
தலைவர், தி டிவைன் லைஃப் சொசைட்டி
                   

* இந்த முன்னுரையும் அடுத்து வரும் முன்னுரையும், ‘தி டிவைன் லைஃப் சொசைடி’ 1972ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிட்ட “KANDAR ANUBHUTI” என்ற எனது நூலில் இடம்பெற்றுள்ளன.

*********************

முன்னுரை – 2

    சமய இலக்கியங்களில் ஒரு அழியாப் படைப்பெனக் கருதப்படும் அருட்செல்வர் அருணகிரிநாதரின் “கந்தர் அநுபூதி”யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தனது விளக்கவுரையுடன் வழங்கிய திரு கார்த்திகேயன் அவர்களின் இப்படைப்பை நான் முழுவதுமாக ஆழ்ந்த திருப்தியுடன் படித்து மகிழ்ந்தேன். திரு கார்த்திகேயனுடன் எனக்கு நீண்ட காலமாக தொடர்பு உள்ளதால், ஆன்மீக விஷயங்களில் இவரின் பேரார்வம், இறைவனுக்கு சேவை செய்து வாழ்வதில் தீவிர விருப்பம், இறைவனிடம் பக்தி, மேலும் பொதுவாகப் பிரச்சனைகளை நேர்த்தியாகக் கையாளும் திறமை ஆகியவைகள் இவருக்கு இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இவரின் உள்ளார்வம் மற்றும் தான் பெற்றிருந்த ஆத்ம ஞானத்தை உலகத்தில் உள்ள சாதகர்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற இவரது நோக்கத்திலுள்ள நேர்மை ஆகியவைகளைப் பற்றியும் நான் சுயமாக உறுதி அளிக்க முடியும். ஆழ்ந்த ஆய்வுப்பொருளான ஆத்மாவைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் திறமை கொண்ட இவரைப்போன்ற எழுத்தாளர்களால்தான், அருட்செல்வர் அருணகிரியாரால் ஞானார்த்தமாக வழங்கப்பட்ட சாதனையின் உளவியல் மற்றும் நடைமுறைச் செயல்முறைகளைப் புரிந்து கொண்டு பிறருக்கு விளக்கி உரைக்க முடியும்.

    இவரின் இவ்வுரை, இறைவனை அடைய விரும்பும் சாதகர்களின் நோக்கத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது; இதுதான் ஒரு ஜீவாத்மாவின் தேவைகளுக்கு உணவளிக்கும் ஒரு ஆன்மீக நூலுக்கு உரை எழுதுவதில் பின்பற்ற வேண்டிய சரியான முறையாகும். நாம் பின்னர் எப்படி இருப்போம் (அ) எப்படி இருக்க வேண்டும் என்பதில் நம் கவனத்தை செலுத்துவதைவிட, நாம் இப்போது எப்படி/ என்னவாக இருக்கிறோம் என்பதில்தான் நம் கவனம் அதிகமாக செலுத்தப்பட வேண்டும். நமது தற்போதைய நிலை பரிதாபகரமானது, --- பல சிக்கல்கள், காம உணர்ச்சிகள், உந்தல்களுடன் சிறிது ஆன்மீக நாட்டங்கள் ஆகியவை சேர்ந்த ஒரு குழப்பமான தொகுப்பாக உள்ளது. இவையனைத்தும் மனிதனின் அக வாழ்க்கையின் உண்மைகளை நோக்கும் ஒரு யதார்த்த அணுகுமுறையை பின்பற்றுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வணுகுமுறை மனிதனின் வெளி வாழ்க்கையைவிட அவனுடைய ஜீவாத்மாவின் நன்மையை பற்றிய கவனத்தைதான் அதிகம் கவர்ந்திழுக்கும். இம்மதிப்பீட்டில் நோக்கின், மிகத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கம் செய்யப்பட்டுள்ள திரு கார்த்திகேயனின் இந்நூல், சுய-கட்டுப்பாடு மற்றும் சுய-அமைதி பெறுவதற்காக ஆன்மீகப் பாதையில் போராடும் அனைத்து நேர்மையான சாதகர்களின் தினசரி வாழ்வில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு மிகவும் பொருத்தமானதாகிறது. இது மட்டுமல்ல. இறுதியில் அவர்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் முழுநிறை இறை-அநுபூதியை அடைவதற்கு இந்நூல் மிகுந்த ஆற்றலுடைய துணையாகும். ஆகவே, இது கட்டுப்பாடான ஆன்மீக வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறையின் அழகான விளக்கம், அதன்மூலம் அடையப்படும் உச்ச இலக்கு (வாழ்க்கையின் குறிக்கோள்) (THE SUMMUM BONUM OF EXISTENCE) ஆகிய இரண்டின் விளக்கத்தை தன்னகத்தே கொண்ட ஒரு ஆழமான ஆய்வு நூல். நலம் பயக்கும் சக்திகளை உலகம் முழுதும் பரப்புவதற்காக இந்நூல் வரவேற்கப்படட்டும்.


ரிஷிகேசம்,
25 மே, 1972.
சுவாமி கிருஷ்ணானந்தா
பொதுச் செயளாலர், தி டிவைன் லைஃப் சொசைடி

No comments:

Post a Comment