செய்யுள் 12



செய்யுள் – 12


செம்மான்   மகளைத்   திருடும்   திருடன்
பெம்மான்   முருகன்   பிறவான்   இறவான்
சும்மாஇரு   சொல்லற   என்றலுமே
அம்மா   பொருளொன்றும்   அறிந்திலனே.

    
    பொழிப்புரை: “சிவந்த நிறம் கொண்ட மானின் (மான் வடிவத்தில் இருந்த லக்ஷ்மி தேவியின்) மகளாகப் பிறந்த வள்ளியைக் கவர்ந்தவரும், மகிமை வாய்ந்தவரும், பிறப்பும் இறப்பும் (ஆதியும், அந்தமும்) அற்றவருமான முருகப் பெருமான், ‘சொல்லற’ (மௌனமாக) ‘சும்மா இரு’ என்ற அக்கணமே, நான் (இந்த உலகப்) பொருள் ஒன்றையும் அறியவில்லை! என்ன ஆச்சரியம்!”

விளக்கவுரை

    பிரம்ம தேவனின் மானசீக புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத் குமாரர் என்ற நான்கு குமாரர்களும் சிவனாரின் இன்னொரு ரூபமான தக்ஷிணாமூர்த்தியிடம் சென்று, பரம்பொருளை அடையும் யோகத்தை உபதேசித்திட வேண்டினர். அவர் யோக நிலைகளை அவர்களுக்கு விளக்கி உபதேசம் செய்தார். முடிவில், யோகத்தின் கடைசி நிலையான “சமாதி” நிலையை உபதேசிக்க வேண்டிய கட்டத்தில், அவர் “சொல்லற” மௌனமாகி ------ (“சமாதி”யில் ஆழ்ந்து) அந்த நால்வரையும்கூட “சும்மா இரு”த்தல் நிலையில் (சமாதி நிலையில்) இருக்கச் செய்தார். அதாவது, அவர் சொல்லற (ஒன்றும் பேசாமல்) இருந்து, அவர்களையும் சும்மா இரு’-ங்கள் என்று சொல்லாமற் சொல்லி, மௌனமாக ஆக்கி ‘சமாதி’ நிலையை அடைய வைத்தார். அவர்களுக்கு வார்த்தைகளால், பேச்சால் எவ்வித உபதேசமும் செய்யாமல், அச்சமாதி நிலையை அனுபவிக்க வைத்தார். சமாதி நிலை என்பது ஆழ்ந்த மௌன நிலை. அந்நிலையை அவர்களும் அடையமாறு செய்ய, தானே மௌனமாக இருந்து உபதேசித்தார். சமாதிநிலையை உபதேசித்திட தானே சமாதிநிலையில் இருந்து, சொற்களால் எவ்வித உபதேசமும் செய்யாமல் அவர்களையும் சமாதிநிலை எய்த வைத்தார். எப்படி அவர் சொல்லாமல் சொல்லி சமாதிநிலையை வெளிப்படுத்தினார் அல்லது அனுபவிக்கவைத்தார் என்பது ஆன்மிகத் துறையில் ஒரு மிகப்பெரிய மர்மம் தான்!

    மேலே கொடுக்கப்பட்ட உதாரணம் புரிந்து கொள்வதற்காக தரப்பட்ட ஒன்று. பிரம்ம தேவனின் மானசீக புத்திரர்களானதால், அந்த நால்வரும் பிறந்ததிலிருந்தே உலக விவகாரங்களால் சிறிதும் களங்கப்படாத முற்றிலும் தூய்மையான மனம் கொண்டிருந்தனர்; ஆகையால், சமாதியில் எப்பொழுது வேண்டுமானாலும் நுழையத் தகுதி பெற்றிருந்தனர். ஆனால், அச்சாதகனோ சாதனையின் ஆரம்ப நிலையிலே இருப்பதால், உண்மை சமாதி நிலையை அடைவதற்கான தகுதியை இன்னும் பெற்றிருக்கவில்லை. எனவே, அவனுக்கு குருவானவர் கணநேர கண்ணோட்டமாக (glimpse), அதாவது மாதிரிக்கு (sample-க்கு), ஒரு தற்காலிக சமாதி அநுபவத்தைத் தந்தருளினார். அதை எவ்விதத்தில் அவனுக்கு அருளினார்? குரு கிட்டத்தட்ட இவ்வாறு செய்தாரெனலாம்: குரு சாதகனை தன் முன்னால் அமரச் சொல்லி, அவனைக் கண்களை மூடிக்கொண்டு, இறைவனைப்பற்றி நினைக்கச் சொல்வார். அதே சமயம் தானும் கண்களை மூடிக்கொண்டு, புலனிந்திரியங்கள், மனம் ஆகியவைகளைத் திரும்பப் பெற்று, சமாதிநிலைக்குள் புகுவார். சமாதிக்குள் நுழையும் அத்தருவாயில், குரு ‘சொல்லற’ (பேசாமல், மௌனியாய்) ஆகி விடுவார் –--- அந்நிலையில் புலன்களும், மனமும் அடங்கியிருக்கும். இவ்வாறு, அவர் சமாதியில் ஆழ்ந்து விடுவார் –---- உண்மையான ‘மௌனம்’ சொல்லற ஆகிவிடுவார். சமாதியில் ஆழ்ந்த குருவானவர் சாதகனின் மனதில் (ஆத்மாவில்) நுழைந்து, அச்சமாதி நிலையை அவன் மனதிலும் தூண்டி விடுவதன் மூலம், அவனை “சும்மா இருக்கச்செய்து (மௌனமாக்கி) சமாதியில் ஆழ்த்துகிறார். அவர் இவ்வாறு அவனை ஒரு சமாதி நிலையைத் தற்காலிகமாக அநுபவிக்க வைக்கிறார். அவ்வாறு செய்தவுடன் (“என்றலும்”), அவனுள் என்னதான் நடக்கிறது? சாதகன் தன் உடல், சுற்றுப்புறம், பரந்த உலகம் ஆகியவைகளைப் பற்றிய உணர்வை இழந்துவிடுகிறான்; (உலகிலுள்ள) பொருள்கள் எதுவும் அவனுக்குத் தெரியாது போகின்றன –-- “பொருள் ஒன்றும் அறிந்திலன்”. அத்தருணத்தில், குருவானவர் சாதகனின் விழிப்புணர்வாகவே தன்னை தோற்றுவித்துக் கொண்டு (இக்குருவாக வந்தவர் பெருமானே என அடுத்த செய்யுளில் காண்போம்), அவனுக்கு மௌனமாக “அறிவுரை” செய்கிறார். அப்பொழுது இறை-உணர்வு ஜீவ-உணர்வில் புகுந்து அதை மேற்கொண்டுவிடுகிறது. ----- அதாவது, கற்பிப்பவரும் கற்பவனும் இரண்டறக் கலந்து வேறுபாடுகளற்று ஒன்றாகி இருக்கின்றனர். எனவே, சுருங்கக் கூறின், குரு தன்னில் தானே சமாதியில் ஆழ்வது சொல்லற (சொல்லல்) –-- (மௌனமாக அறிவுரை சொல்லல்) --- அதாவது பேசாமல் பேசுதல்; அவர் சாதகனின் உள்ளே (ஆத்மாவில்) நுழைந்து, அவனை (தற்காலிகமாக) சமாதி நிலையில் ஆழ்த்துவது சும்மா இரு என்ற மௌனமான அறிவுரையாகும். (அதாவது, ‘சும்மா இருக்கச் செய்தல்’). இப்படியாக, இறை-உணர்வை (பேருணர்வை) சாதகனில் தூண்டிவிடுவதுவே (1) பேசாமல் (சொல்லற) செய்யும் அறிவுரையும், (2) சும்மா இருக்கச்செய்யும் (சும்மா-இரு) அறிவுரையும் ஆகும். அதாவது, சும்மா இரு என்ற குருவின் அறிவுறுத்தல் சாதகனுக்கு சொல்லற (பேசாமலேயே) வழங்கப்பட்டது. குரு சாதகனை ‘சும்மா இரு’ என்று சொற்களால் சொல்லவில்லை. அதாவது இவ்அறிவுறுத்தல், பேச்சு, சைகை போன்ற நேரலை வழிமுறையின் மூலமோ எண்ணப்-பரிவர்த்தனை மூலமோ நடைபெறவில்லை. பின் எவ்வாறுதான் நடைபெற்றது என்று கேட்டால், அதற்குப் பதில்: இது ஒரு புரியாத, புதிரான, ஆன்மீக “நிகழ்வு”; ஆத்மாவால், ஆத்மாவின்மூலம் ஆத்மாவிற்கு நடைபெறும் ஒரு ஆன்மீக செயல்முறை ---- மறை பொருளான / விந்தையிலும் விந்தையான/ மர்மமான ஆன்மீக நிகழ்வு என்று கூறலாம். குரு அல்லது இறைவன் தன்னையே சாதகனின் ஆத்மாவாக வெளிப்படுத்திக் கொள்கிறார். இது தெய்வீகக் கிருபையினால் நடைபெறும் நிகழ்ச்சி; வெறும் மனித முயற்சியினால் அடையக்கூடியது அல்ல. அந்தோ! இந்த ஆன்மீக விழிப்புணர்வில், தற்போதைக்கு ஜீவனும் இல்லை, உலகம் கூட இல்லாமற் போய்விடுகிறது.

    ஆகையால், பரம்பொருளான குரு ஒருவனின் (ஜீவனின்) நெஞ்சத்தில் பேரமைதியாக (பரமாத்ம-உணர்வாக) தன்னை வெளிப்படுத்திக் கொள்வது “சொல்லற்ற” (செய்துகொள்வது); அதே சமயம் ஜீவாத்மா-உணர்வு அதில் ஈர்த்துக்கொள்ளப்பட்டு மௌனமாதல்’ அல்லது ‘சும்மா இருத்தல்’; உடனே உலக-உணர்வு இல்லாமல் போவது பொருள் ஒன்றும் அறிதல் இல்லாமை ---- ஆகிய இம்மூன்றும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இது, (செம்மான் மகளைத் திருடும் திருடன்) பெருமான் வள்ளியைக் கவர்ந்ததின் ஆன்மிக முக்கியத்துவத்தின் சாரம். வள்ளி எங்கிருந்தாளோ அங்கேயே முருகன் நடு இரவில் சென்று, அவளுடைய உற்றாரும் சுற்றமும் உறங்கும்பொழுது, அவளைக் கவர்ந்து வந்தார் அல்லவா! அதுபோலவே, குருவானவர் (பரம்பொருள்) சாதகனின் நெஞ்சத்திற்குள் நுழைந்து (அதைக் கவர்கிறார்), சமாதி நிலை அனுபவத்தை நடுஇரவு வேளையில் {அதாவது புலன்களும், மனமும் சும்மா இருக்கும் (நடுஇரவு போன்ற) வேளையில்}, தருகிறார்.

    மெய்ப்பொருள் தத்துவத்தைப் பற்றி தான் அறிவுறுத்திய பின்னரும் (செய்யுள்–8), அச்சாதகன் மிகவும் அமைதி குலைந்து காணப்படுவதை கண்ணுற்ற (செய்யுள்கள்–9,10) குரு, மேலும் தேவையான அறிவுறுத்தலை திரும்பவும் பலமாகத் தந்தார் (செய்யுள்-11); அதோடல்லாமல் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கென, இச்செய்யுளில் மேலே கூறியவாறு, அந்த மெய்ப்பொருளைப் பற்றிய கணநேர கண்ணோட்டத்தை (glimpse), தனது ஆன்மிக சக்தி கொண்டு தந்தருளுகிறார். இது ஒரு திணறடிக்கும் அத்வைத (இரண்டற்ற) விழிப்புணர்வு அனுபவம். குருவானவர் எவ்வாறு இந்த அனுபவத்தைத் தந்தருளினார்? சொற்களால் தரவில்லை, சொல்லற்ற மௌனம் மூலமாக (சொல்லற) அவனை “சும்மா இரு”க்க வைத்தார்; அப்படிச்செய்ததுமே (என்றலுமே), அவன் உடல் மற்றும் இவ்வுலகப் பொருள்களின் அறிதல் போய், “அம்மா!பொருள் ஒன்றும் அறிந்திலனே” என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து, தன்னுணர்வை இழந்த நிலையை அடைகிறான். பின், அவன் என்னதான் அனுபவித்தான்? அந்த நிலையிலிருந்து வெளிவந்து, பழைய நிலைக்குத் திரும்பியவுடன், அடுத்த செய்யுளில், அவனே அந்த நிலையில் தான் அனுபவித்ததை எடுத்துரைக்கிறான். அத்தகைய உயரிய சமாதிபோன்ற அனுபவத்தைத் தனக்குத் தந்தருளியது (குருவாகி வந்த) பெருமானே என்பதும் அந்த நிலையில் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. என்ன ஆச்சரியம்!

    மகா ஞானிகள், யோகிகளே இம்மாதிரி அனுபவங்களைத் தர வல்லவர்கள். அவர்களுக்கு இது சகஜம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், தொடுவதன் மூலமே, தன் சிஷ்யனான விவேகானந்தருக்கு ஆன்மீக விழிப்புணர்வைத் தந்து பரமானந்த நிலையைத் தந்தருளினார்; அப்பரவச நிலையில் சைதன்யத்தை மட்டுமே அவர் எங்கும் கண்டார்.

    ஆனால், அச்சாதகன் பெற்ற அந்த நிலை, தனது இலக்கான இறைவனை அடைந்ததாகாது; இறை-அனுபூதி அல்ல. இருந்தபோதிலும், பேருணர்வை (இறை-அனுபூதியை) அனுபவிப்பது சாத்தியமே என்று புரிய வைக்கவும், மேலும் தன்னால் அவனை வழிகாட்டி அவ்அனுபவத்தை பெற்றிடச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டிடவும், குருவானவர் அமைதி குலைந்திருந்த சிஷ்யனுக்கு ஒரு க்ஷணநேரம் அந்த அனுபவத்தைத் தற்காலிகமாக, மாதிரிக்கு (sample) தந்தருளுனார். இந்த தற்காலிக அனுபவம் சாதகனுக்கு பெருமான் மற்றும் குருவின் இயல்பைப் பற்றிய நுண்ணறிவையும் (உள்நோக்குப் பார்வை) கொடுக்கிறது. இந்த உண்மையை அவன் சாதாரண நிலைக்குத் திரும்பிய பின், அவனே கூறுவதை அடுத்த செய்யுளில் காணலாம்.

    மிகவும் உயரிய இந்த மெய்ப்பொருள் தத்துவத்தை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்வதில் அருணகிரியார் மிகவும் வல்லவர் என்பதை இச்செய்யுள் எடுத்துக்காட்டுகிறது. தாயுமான சுவாமிகள் அருணகிரியாரின் இத்திறனை மிகவும் வியந்து போற்றிப் புகழ்கிறார்.

    பெருமான் (இறைவன்) மிகவும் மகிமை வாய்ந்தவர். அவருடைய மகிமைகளை மனிதர்கள் புரிந்து கொள்வது என்பது மிகமிக அரிது. அவர் அழிவில்லாதவர், பிறப்பும் இறப்பும் இல்லாதவர். நம்மைப்போல் அவர் கர்மத்தின் விளைவினால் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. ஆனால், தன் சுய-இச்சையினால் (தடையற்ற விருப்பம்) பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்ற மனித உரு தாங்கி அவ்வப்பொழுது அவதாரம் எடுக்கிறார். மனித குலத்தை உய்விக்க பெருமான் “கீழ் இறங்கி வருவது” அவதாரம். பரம்பொருள் இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றுவது அவதாரம். உண்மையில், இறை–உணர்வு (பேருணர்வு) கீழிறங்கி வந்து ஜீவ-உணர்வை மேலான தன்நிலைக்கு உயர்த்திச் செல்வதுதான் அவதாரங்களின் நோக்கம்.

    செய்யுள் ஆறில், மானின் புதல்வியாக ஸ்ரீ வள்ளி தேவி பிறந்தாள் என்று ஏற்கனவே பார்த்தோம். பிறந்ததிலிருந்தே, வள்ளி பெருமான் மேல் அபரிமிதமான அன்பை வைத்திருந்தாள், அவள் வளர வளர அதுவும் மேன்மேலும் வளர்ந்து வந்தது. இதை அறிந்த முருகன், ஒருநாள் மாறுவேடம் புனைந்து வள்ளி காத்துவந்த தினைப்புனம் சென்று, தேவியின் பக்தியை பலவாறு சோதித்துப் பார்த்தார். தேவியினுடைய உறுதியான பக்தியைக் கண்டு மகிழ்ந்து, தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டு, தான் கூடிய சீக்கிரமே அவள் வீட்டிற்கு வந்து தேவியை மணம் புரிந்து கொள்வதாக உறுதியளித்தார். எனவே, வள்ளி தேவி இரவு பகல் பாராமல் எப்பொழுதும் அவரின் வருகைக்காக ஆசையுடன் காத்திருந்தார். ஒருநாள், நடுஇரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவள் வீடு சென்று, எவரும் அறியாதவாறு அவளைக் கடத்திச் சென்று, மணம் புரிந்து, தன் தெய்வீக துணைவியாக்கிக் கொண்டார். அதனால், அவரை ‘செம்மான் மகளைத் திருடும் திருடன் என்று இச்செய்யுள் வர்ணிக்கிறது.

    உண்மையில், பெருமான் ஒரு மிகப்பெரிய கள்வன்; ஏனென்றால், அவர் தன் பக்தர்களின் நெஞ்சைக் கவர்ந்து செல்கிறார். நடுஇரவில் அவர் வள்ளிதேவியைக் கவர்ந்தார் என்பதில் ஓர் ஆன்மீகத் தத்துவமும் உள்ளது. “வள்ளி” பெருமானுடன் இரண்டற கலந்திட விரும்பும் ஒரு ஜீவாத்மாவைக் குறிக்கும். பெருமானை அடைந்திடத் தீர்மானித்து, சாதனைகளை பேரார்வமுடன் செய்து வரும் சாதகனை, பெருமான் வள்ளிக்குச் செய்ததுபோல், பலவாறு சோதித்துக் கடைசியில் அவனுடைய மனதில் ஆன்மீக அனுபவங்களையும் திட நம்பிக்கையும் கொடுத்து, அதன்மூலம் அவனை சீக்கிரம் ஆட்கொள்ளப்போவதை உணர்த்துகிறார். ‘ஜீவாத்மா’-வும் (சாதகனும்) அத்தகைய பெருமகிழ்ச்சிக்குரிய தருணத்திற்காக ஆவலுடனும், விழிப்புடனும் காத்திருக்கிறது; நடுநிசியில், அனைவரும் தூங்கி, அனைத்தும் அமைதியாக (சத்தமின்றி) இருக்கும் தருணத்தில் பெருமானும் தோன்றுகிறார். “நடுநிசி” என்பது புலன்கள், மனம், மற்றும் புத்தி ஆகியவைகளின் சக்தி வெளிவிஷயங்களிலிருந்து திரும்பப் பெறப்பெற்று, பெருமானை அடையவேண்டும் என்ற பேரார்வத்தால் விழுங்கப்படுவதால் அவை செயற்படாமல் போகின்றன. அத்தருணத்தில் பெருமான் ஜீவாத்மாவைக் கவர்கிறார்/திருடுகிறார் ------ பரமாத்ம-உணர்வு ஜீவாத்ம-உணர்வைத் தன்வசப்படுத்திக் கொள்ளுகிறது.

    இதில், ஆன்மீகத்தின் பரம ரகசியம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இறைவன் தோன்றிட வேண்டுமானால் அல்லது உயர்ந்த ஆன்மிக-உணர்வை விழிப்புறச் செய்ய வேண்டுமானால்:

(1) மனதின்கண் உள்ள ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்காகப் பொருள்களுடன் தொடர்ப்புகொள்ள வெளிச்செல்லும் புலன்களின் போக்கையடக்கி,

(2)   புலன்களைத் தூண்டிடும் மனதின்கண் உள்ள ஆசைகளை நீத்து,

(3) தன் உண்மை நிலையான ஆனந்த-சொரூபத்தை மறந்ததனால், அந்த ஆனந்தத்தைப்பெற, உள்ளுணர்வு (ஆத்மா) மனதின்மூலம் ஆசைகளாகப் பரிணமித்து வெளிச்செல்லும் தவறான தன்மையை விட்டு,

தன் உறைவிடமான இதயத்திற்குத் திரும்பிவந்து அதில் நிலை பெற வேண்டும்.
    

No comments:

Post a Comment