செய்யுள் – 13
முருகன் தனிவேல் முனி நம்குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.
பொழிப்புரை: “உருவம் உடையது அன்று, உருவம் இல்லாதது அன்று; உள்ளது அன்று, இல்லாதது அன்று; இருள் அன்று, பிரகாசம் அன்று; என்று சொல்லும் தன்மையில் நின்ற “அது”வே (அப்பரம்பொருளே அல்லது பரமாத்மாவே) முருகப்பெருமான் என்றும், (அதுவே) இணையற்ற வேல் தாங்கிய முனிவன் என்றும், (அதுவே) நம் குரு என்றும் (அப்பெருமான்) திருவருள்கொண்டு அறியமாட்டாதவர்கள் அறியவும் முடியுமோ!” (திருவருளைக் கொண்டு அறிபவர்களைத்தவிர மற்றவர்களால் அறியமுடியாது.)
விளக்கவுரை
சென்ற செய்யுளில், குரு (மௌனித்து) தன்னையே பேரமைதி தத்துவமாக அச்சாதகனில் வெளிப்படுத்திக் காட்டிய பொழுது, அச்சாதகனும் அமைதியாகி, இந்த உலகைப் பற்றிய ‘(பொருள்) ஒன்றும் அறிந்திலனே’ என்று வியந்து கூறுவதைப் பார்த்தோம். அவ்வாறு பொருள் ஒன்றும் அறியாத நிலையில், அவன் வேறு என்னதான் அறிந்து கொண்டான்? மனிதனின் சாதாரண புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அப்பொழுது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது! அந்த அசாதாரண அநுபவத்திலிருந்து அவன் மீண்டபோது, அதை “என நின்ற அது” என்று இறந்த-காலத்தில் குறிப்பிடுகிறான். அவன் அனுபவித்தது மெய்ப்பொருள் தத்துவம். அதை அவன் ‘அது’ என்கிறான். {பரம்பொருள் (அ) மெய்ப்பொருள், தமிழில் ‘அது’; சம்ஸ்கிருதத்தில் ‘தத்’; ஆங்கிலத்தில் ‘That’ என்று கூறப்படுகிறது.} அந்த ‘அது’ (அ) மெய்ப்பொருளைப் பற்றிய அவனுடைய அநுபவம் என்ன? அது விவரிக்க இயலாத ஒன்று. –--- உருவம் உடையது அன்று, உருவம் இல்லாதது அன்று; உள்ளது அன்று, இல்லாதது அன்று; இருள் அன்று, பிரகாசம் அன்று; என்ற எவ்விதத்திலும் விவரிக்கமுடியாத ஒரு விசித்திரமான அனுபவம். மேலும், அவ்வநுபவம் அவனுக்கு உணர்த்தியது என்னவெனில், (i) அந்த “அதுவே” முருகன், “அதுவே” ஒப்பில்லா வேலாயுதம் தாங்கிய பெருமான், “அதுவே” நம் குரு; (ii) மேலும், இறையருள் பெற்ற ஒருவராலன்றி, வேறு எவராலும் அதனை அறிந்திட இயலாது என்பதேயாகும்.
இந்த உண்மை சாதகனுக்கு ஒரு மிகப்பெரிய திருவெளிப்பாடு. அதில் அவன் அறிந்து கொண்டது மூன்று உண்மைகள்: (1) அந்த மெய்ப்பொருள் தத்துவமானது விவரிக்க இயலாதது; (2) அந்த தத்துவமே முருகன், அதுவே வேல் தாங்கிய பெருமான், அதுவே அவனுக்குக் குருவாகவந்து செய்யுள் 8, 11இல் “மெய்ப்பொருள் பேசிய” மகான்; மேலும் (3) அதனை அறிவதற்கு தெய்வக் கிருபை ஒன்றே வழி. இறைவனும் குருவும் ஒன்றே என்ற உண்மை, அஞ்ஞான இருளில் அலையும், கேவலம் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் அறிந்திட முயற்சிப்போருக்கு வெளிப்படாது. தெய்வக் கிருபையாகிய ஒளி மட்டுமே இதனை வெளிப்படுத்தும். அதனால் தான் ‘அருள் கொண்டு அறியார் அறியுந் தரமோ’ என்று இச்செய்யுள் கூறுகின்றது.
இவ்வாறு உணர்த்தப்பட்ட பிறகு, அச்சாதகன், குரு வேறு, பெருமான் வேறு என்று வித்தியாசம் பார்க்காமல், இருவரையும் ஒன்றாகவே பார்க்கிறான். சிறிதளவும் வித்தியாசம் இல்லாமல், இருவரும் ஒருவரே என்று உணர்கிறான். “குருவே பிரம்ம தேவன, குருவே விஷ்ணு, குருவே சிவன், குருவே சாக்ஷாத் பரப்பிரம்மம். அத்தகைய குருவிற்கு நமஸ்காரங்கள்.” என்று குரு-கீதை சொல்கிறது. (குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேஷ்வர:, குரு: சாக்ஷாத் பரம் பிரம்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம:). எனவே, இனிமேல், அவன் குருவை ஒரு மனிதனாகப் பார்க்கவில்லை, மகானாகக்கூட பார்க்கவில்லை, இறைவனாகவே பார்க்கிறான். சாதகன் பெற்ற இந்தத் தற்காலிக அனுபவம், தனது உயரிய இலக்கான இறை-அநுபவத்தை அடைய அவனுடைய குரு வழிகாட்டி அதை அடையச்செய்வார் என்பதில் அவனுக்கு உறுதியான நம்பிக்கையைக் கொடுத்தது.
எனினும், சாதகனுடைய இந்த அநுபவம், உண்மை இறை-அநுபவம் அல்ல. அவன் இறை-அநுபவம் அடைந்துவிட்டான் என்று கருதிடக் கூடாது; சாதகனின் பரிதாப நிலையைக் கண்ணுற்ற குரு (செய்யுள்கள்: 9 & 10), அவன் மீது கருணை கொண்டு, அவனை ஊக்குவிப்பதற்காக ‘அளித்த’ ஒரு வகையான ‘தூண்டப்பட்ட’ சமாதி நிலை தான் இது; அதுவும், ஒரு ‘வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காகத்தான்’ -- அதாவது, குருவானவர், தன்னுடைய உண்மையான இயல்பிலும், அச்சாதகனை இறை-அநுபவம் பெற வழிகாட்டிட தனக்கு உள்ள ஆற்றலிலும் அவனுக்கு நம்பிக்கை உண்டாக்கவேதான். மேலும், அவன் அனுபவித்தது “வரையறுக்கப்பட்டது” ஏனெனில், பரம்பொருள்தான் முருகன், வேல் தாங்கிய பெருமான், தன் குரு என்பதுவரைக்கும்தான் அவன் அநுபவித்தான்; அது அரைகுறையானது. காரணம்? அந்தப் பரம்பொருள் இவைமூன்றுமட்டுமல்லாமல், அதுவே அனைத்தும், அதுவே முழுப் பிரபஞ்சமும், அதுவே தன்னுள் இருக்கும் ‘ஆத்மா’ (குகன்) கூட என்றும் அவன் உணரவில்லை. (இவ்வாறெல்லாம் அனைத்தும் பரம்பொருளே என்று அவன் பூரண இறை-அனுபவம் பெற்ற பின்னர்தான் அதை உண்மையில் உணர்வான் -- செய்யுள்கள் 44 & 51.) அவன் இப்பொழுது பெற்ற அனுபவம் ஏன் “வரையறுக்கப்பட்டது”? அத்தகைய வரையறுக்கப்பட்ட அனுபவமே இப்பொழுது அவன் இருக்கும் நிலைக்குப் போதுமானதாக இருந்ததென்பதே காரணம். ஏனெனில், அவன் ஆன்மிக சாதனையின் தொடக்க நிலையில் இருந்ததால், அனைத்தும் பரம்பொருளே என்றும், அதுவே தன்னுள்ளும் உறைகிறது என்றும் உணரும் அளவிற்கு, அவனது மனது முழுத்தூய்மை / தகுதி பெற்றிருக்கவில்லை; எனவே, அவன் அப்பொழுதிருந்த நிலையில் பரம்பொருளை எவ்வாறு அவனால் உணர இயலுமோ, அவ்வாறு மட்டுமே அவனுக்கு உணர்த்தப்பட்டது எனலாம். ஆன்மீக திருவெளிப்பாடுகளும் அனுபவங்களும், ஒருவன் அதைப் பெற்று அனுபவிக்கக்கூடிய தகுதிக்கேற்ப, படிப்படியாகத்தான் கொடுக்கப்படுகின்றன. அதனால்தான், சென்ற செய்யுளில் அவன் அனுபவித்தது, சாதனைசெய்து அதன்மூலம் அடையப்பெற்ற பூரண இறை-அனுபவ நிலை அல்ல, ஆனால் கிருபையினால் அவனுக்குத் தற்காலிகமாக தரப்பட்ட ஒன்றுதான். எனவேதான், அவன் ‘அருள் கொண்டு அறியார் அறியுந் தரமோ’ என்று கூறுகிறான். அது உண்மையான இறை-அனுபவம் அல்லாது, ‘கொடுக்கப்பட்ட’ கணநேரத் தோற்றமானதால், அதிலிருந்து சாதாரண நிலைக்கு மீண்ட பின்னர், அதை ஞாபகப்படுத்தி விவரிக்க முயற்சிக்கும்போது, அது வெறும் ஆய்வறிவாகிறது. எனவே, அதைச் சரியாக விவரிக்க முடியவில்லை; ஆதலால், அவன் அதை எதிர்மறைச் சொற்களில் “உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று, இருளன்று, ஒளியன்று என நின்றதுவே” எனக் கூறுகிறான். ஆனால், குருவிடமிருந்து மேலும் உபதேசம் பெற்று (செய்யுள்–20), அதன்படி இடைவிடாது நெடுங்காலம் உபாசித்து (செய்யுள்–21லிருந்து), மனதையும், நெஞ்சையும் தூய்மைப்படுத்திக் கொண்டு, தீக்ஷை பெற்று, தியானத்தில் ஆழ்ந்து, இறுதியில் உண்மையான சமாதி நிலை பெற்று (செய்யுள்கள் – 42, 43, & 44) கடவுளைப் பூரணமாக அடைந்து, எப்பொழுதும் ஆனந்தக் களிப்புடன் இருக்கும் நிலையான ஜீவன் முக்தனாகிய பின்னர் (செய்யுள் 51), அச்சாதகன் “உருவாய், அருவாய், உளதாய், இலதாய்,.........” என்று நேர்மறையாக இப்பிரஞ்சத்திலுள்ள அனைத்தும் மெய்ப்பொருள் தத்துவமே –-- எந்த ஒன்றையும் விட்டுவிடாது எல்லாவற்றையும் (தன் உள்ளுறையும் குகன், மற்றும் குரு உட்பட அனைத்தையும் அடக்கி / சேர்த்து ) --- என்று வர்ணிப்பதைக் காணலாம்.
இவ்வாறு அவனுக்கு குரு தன் கிருபைகொண்டு அளித்த இறை-அநுபவமானது, (செய்யுள்–12), தற்காலிகமாக தூண்டப்பட்ட (மாதிரியான) சமாதி காட்சியே. மகாபுருஷர்கள், மகாத்மாக்கள், யோகிகள், அசாதாரணமான சக்தி கொண்ட (‘பிரம்ம நிஷ்ட குரு’ என்றழைக்கப்படும்) குருமார்கள் ஆகியவர்களால் மட்டுமே இம்மாதிரியானத் தற்காலிகச் சமாதி நிலையை தன் சிஷ்யர்களுக்குத் தர இயலும். மேலும், அவர்களால் மட்டுமே, சாதகன் ஆன்ம சாதனையின் இறுதி இலக்கை அடையும் வரை வழிகாட்டி, அவ்வழியில் அவ்வப்பொழுது அச்சாதகர்கள் எதிர்கொள்ளும் அனைத்து இடர்களையும் களைந்து காத்திட இயலும். பகவான் ஆதிசங்கரர் “விவேக சூடாமணி” என்ற நூலில் (வி.சூ.செய்யுள்:2) இதன் மகத்துவத்தைப் பற்றி “துர்லபம் திரயமேவைதத் தேவாநுக்கிரக ஹேதுகம்; மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹாபுருஷ சம்ஸ்ரய:” என்று கூறியுள்ளதை இங்கு நினைவு கொள்வோம்: “மூன்று விஷயங்கள் கிடைப்பது மிக மிக அரிது, கடவுளின் கிருபையால் மட்டுமே அவை நமக்குக் கிடைக்கப்பெறும்; அவையாவன: 1. மனிதப் பிறவி (மனுஷ்யத்வம்), 2. எல்லாவிதமான வரையறைகள், துக்கம், துன்பம் ஆகியவைகளிருந்து விடுதலை பெற்று, முக்தியடைவதில் தீவிர ஆசை (முமுக்ஷுத்வம்), 3. கவனிப்பு, வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருசேர அருளும் மகாபுருஷரின் கண்காணிப்பைப் பெறுதல் (மஹாபுருஷ சம்ஸ்ரய:). தன் அதிர்ஷ்டத்தினால் இப்படிப்பட்ட ஒரு மஹாபுருஷரின் கவனிப்பைப் பெறும் சாதகனுக்கு எவ்விதமான பயமோ கவலையோ இல்லை. அவன் பூரண பாதுகாப்பைப் பெறுகிறான். முக்தியைப் பெறவேண்டும் என்ற தீவிரமான இச்சையில் ஒருவன் உண்மையாக இருந்தால், அவனுக்கு இறைவனே ஒரு மஹாபுருஷ- குருவாக வருவார், அல்லது ஒரு மஹாபுருஷ குருவை அவன் சந்தித்திடச்செய்வார்.
இச்செய்யுளில், மேலும் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அது யாதெனில், அருணகிரியார் ‘நம் குரு’ என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, ‘என் குரு’ என்றோ அல்லது ‘உன் குரு’ என்றோ குறிப்பிடவில்லை. இதன் மூலம் அவர் அறிவுறுத்துவது என்னவெனில்: ‘ஒவ்வொரு மஹாபுருஷரான குருவும் இறைவனின் அவதாரம்; எனவே, நாம் அவர்களுக்குள் (உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று) வேறுபாடு படுத்திப் பார்க்கக்கூடாது. சுவாமி சிவானந்தர் ‘குரு தத்துவம்’ (Guru Tattwa) என்ற தன் புத்தகத்தின் தொடக்கத்தில் கூறியதை இங்கு நினைவில் கொள்வது நல்லது: “சாதகனை வழிநடத்த இறைவனே குருவின் உருவில் தோன்றுகிறார். இறை-அருளே குருவாக உருவெடுக்கிறது. குருவைக் காண்பதென்பது இறைவனைக் காண்பதேயாம்...............”
இச்செய்யுளில் அமைந்துள்ள “முருகன் – தனி வேல் முனி – நம் குரு” என்ற அடைமொழி வாசகங்களின் வரிசை கிரமத்தையும், அதன் உள்-அர்த்தங்களையும் எட்டாவது செய்யுளில் இடம் பெற்ற “குமரன் – கிரிராச குமாரி மகன் – சமரம் பொரு தானவ நாசகன்” என்பதோடு ஒப்பிடுவது ஒரு சுவாரஸ்யமான விஷயம். இவ்விரண்டு செய்யுள்களின் வாசகங்களையும் நாம் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்தால், இச்செய்யுளில் எக்கருத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ அஃது எட்டாம் செய்யுளில் சூசகமாக கூறப்பட்டுள்ளது என்பது விளங்கும். குருவாக வந்தது பெருமானே என்ற உண்மை எட்டாம் செய்யுளில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை; ஏனெனில். அச்சாதகன் அன்றிருந்த நிலையில் அவ்வுண்மையை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் அது சூசகமாக கூறப்பட்டிருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இச்செய்யுளில், அவ்வுண்மை தெளிவாகவும், வெளிப்படையாகவும் தரப்பட்டுள்ளது --- எந்த ஒரு உண்மை முன்பு ரகசியமாக வைக்கப்படிருந்ததோ அது அவனுக்கு இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.
அந்த மெய்ப்பொருளே முருகப் பெருமான், அதுவே வேலாயுதம் தாங்கிய முனிவன், அதுவே நம் குரு. இதனால், மெய்ப்பொருள் என்பது ஒன்று, முருகன் என்பவர் இன்னொன்று, வேல் என்பது வேறொன்று, குரு என்பவர் பிறிதொன்று என்று நினைத்தல் தகாது; அந்த ஒரு மெய்ப்பொருளே இவையனைத்துமாகத் தோன்றி உள்ளது என்று உணர்தல் வேண்டும். இந்த உண்மை இறையருளால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்கக்கூடும்.
உருவமோ அருவமோ, உள்ளதோ இல்லாததோ, இருளோ பிரகாசமோ என்று சொல்லமுடியாத மெய்ப்பொருளே முருகக் கடவுளும், ஒப்பில்லா வேலும், குருவும் ஆனபடியால், உருவம் கொண்டு தோன்றிக் கொண்டிருக்கும் பிந்தைய மூன்றிற்கும், உண்மையில் உருவம் இல்லாத நிலையும் இருக்கவேண்டுமல்லவா? ஆம். முருகன், வேல், குரு ஆகிய மூன்றும் உண்மையில், மெய்ப்பொருளைப்போலவே, உருவமற்ற தூய உணர்வே (சைதன்யமே) ஆகும். ஆனால், சிரத்தையுடன் தியானம் செய்பவனுக்கும், பக்தனுக்கும் உதவியாயிருக்க அவை உருவுடையனவாகக் காட்சியளிக்கின்றன. எனவே, அவை ஒவ்வொன்றும் இரண்டு அம்சங்களைக் கொண்டவைகளே ---- பௌதிக (உடல் சார்ந்த - உருவம்) மற்றும் ஆன்மிக (உள்ளம் சார்ந்த – அருவம்) ஆகிய இரண்டு அம்சங்கள்.
சாதனையின் ஆரம்ப கட்டங்களில், மனதால், அதிலுள்ள அசுத்தங்கள் காரணமாக, மெய்ப்பொருளை உள்ளபடி அறிய/தியானம் செய்ய முடிவதில்லை. எனவே, தியானம்செய்ய, அந்த மனத்திற்கு ஒரு பற்றுகோல், அல்லது ஒரு ஆதரவு, அல்லது ஒரு வடிவம் அவசியம் தேவைப்படுகிறது. ஆகவே, எல்லா வடிவங்களுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மா, பல்வேறு தெய்வீக ஆயுதங்களை ஏந்திய உருவம் கொண்ட இஷ்ட தெய்வங்களாகத் தோன்றுகிறார், மேலும் அவரே மனித வடிவம் கொண்டு ஒவ்வொருவரின் குருவாகவும் தோன்றுகிறார்.
அந்த மெய்ப்பொருளே முருகன், வெற்றி வேல் தாங்கிய பெருமான், நம் குரு; இந்த உண்மையை அருள் கொண்டு மட்டுமே உணரமுடியும் என்று செய்யுளில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் யாருடைய அருள் கொண்டு என்று கூறப்படவில்லை. உண்மைதான்; ஆனால், அதற்கு அவசியம் இல்லை! ஏனெனில், இம்மூன்றும் ஒன்றேயானதால், இம்மூவரில் யாரேனும் ஒருவரின் அருளாசியால் உணரப்படுகிறது என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. இவ்வுண்மையும்கூட அவ்வருளால்தான் வெளிப்படுத்தப்படுகின்றது. உண்மையில், இது ஒரு மிகப் பெரிய ஆச்சரியம்தானே! இது ஒரு பரம ரகசியமான, மர்மம் நிறைந்த “கிருபை-சக்கரம்”; ---- கிருபை மூலம் வெளிப்படுத்தப்பட்டு, கிருபை மூலம் அறியப்பட்டு, கிருபை என அறியப்படுகிறது; அனைத்தும் கிருபையே, கிருபையைத் தவிர வேறொன்றுமில்லை.
புத்திசாலித்தனத்திற்கோ, புரிதலுக்கோ, அறிவுக்கோ இங்கு வேலையுமில்லை / இடமுமில்லை. அனைத்தும் கிருபையே. அக்கிருபை என்பதே மெய்ப்பொருள்; அதுவே முருகன், அதுவே வெற்றி வேல் பெருமான், அதுவே குருவும்; அதுவே அருணகிரிநாத-குருவும்கூட. உயரிய ஞானத்தையும் அதையறியும் சாதனங்களையும் இவ்வொரு செய்யுளிலேயே தந்தருளிய அருணகிரிநாத குருவுக்கு பலகோடி நமஸ்காரங்கள்!
|
செய்யுள் 13
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment