செய்யுள் 14

CSS text-indent Property

செய்யுள்– 14



கைவாய்   கதிர்வேல்   முருகன்   கழல்பெற்று
உய்வாய்   மனனே   ஒழிவாய்   ஒழிவாய்
மெய்வாய்விழி   நாசியொடும்   செவியாம்
ஐவாய்வழி   செல்லும்   அவாவினையே.

    பொழிப்புரை: “ஒ மனமே! கதிர்வேலைக் கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானின் திருவடியைப் பெற்று, நற்கதியைப் (முக்தியைப்) பெறுவாயாக. உடல், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் வழியே (உலகியல் பொருள்களை அனுபவிக்க) வெளிச்செல்லும் ஆசைகளை ஒழித்து விடுவாயாக, (முழுவதும்) ஒழித்து விடுவாயாக.”

விளக்கவுரை 

    (பன்னிரண்டு மற்றும் பதின்மூன்றாம் செய்யுள்களில்) சாதகனுக்கு அருளப்பட்ட அரிய அனுபவத்திலிருந்து மீண்டு, அவன் சாதாரண நிலைக்கு வந்தபின், அவனுக்கு, குருவானவர் ஆன்மிக சாதனைகளைத் தொடர்ந்துசெய்து அவன் குறிக்கோளை விரைவில் அடைவதற்காக மேலும் இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “ஒ மனமே! வேல் தாங்கி நிற்கும் முருகப் பெருமானின் மலர்பாதம் பற்றி, அவர் கிருபையை அடைந்து, உன்னை காப்பாற்றிக் கொள்வாயாக. (இவ்வாறு செய்வதன் மூலம்) மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்து வழிகள் மூலம் வெளிச்செல்லும் ஆசைகளைத் துறப்பாயாக, முழுவதுமாக துறப்பாயாக.” இவ்வறிவுறுத்தலின் மூலம் குருவானவர் சாதகனுக்கு குறிப்பால் உணர்த்துவது: “பெண்கள் மீதான ஈர்ப்பு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் அப்பொருள்களோ, அல்லது அவைகளை விரும்பும் புலன்களோ அல்ல; மனதிலுள்ள ஆசைகள் மட்டுமே காரணமாகும். அப்படியானால், அவ்வாசைகளை என்ன செய்வது! ஒன்று, அவற்றைத் துறக்க வேண்டும்; அல்லது இறைவனிடம் அடைக்கலம் புகுவதன்மூலம் அவை உணர்ச்சி மேம்பாடு (Sublimation) செய்யப்பட வேண்டும்.” பிரச்சனைகளிலிருந்து உய்வதற்கு இது ஒன்றே வழி. ஆகையால்தான், இறை-தாள் பற்றி ஆசைகளைக் களைந்திட குருவானவர் அவனுக்கு அறிவுறுத்துகிறார். இதுவரை புறப்பொருள்களைச் சுற்றியே அமைந்திருந்த சாதனை இச்செய்யுளில்தான் (முதன்முதலாக) உள்முகமாக மனதின்பால் திருப்பப்படுவதைக் காணலாம். வெளிப்புற-சாதனை சிறிது சிறிதாக உட்புற-சாதனையாக மாற ஆரம்பிக்கிறது.

    மனதைப் பற்றிய மற்றும் சாதனைகளின் சூட்சுமமான அரிய ரகசியங்கள் இச்செய்யுளில் (மனதைச் சீர்படுத்துவதற்காக) வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ஒரு பொருள் நமக்குப் பிடிக்கவில்லையானால், நாம் அதை தூக்கி எறிகிறோம். அதுபோல ஆசைகளை ஒதுக்கித்தள்ள முடியாது. ஆத்ம (ஜீவ) சக்தியின் வெளிச்செல்லும் தன்மையின் உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுகளே ஆசைகள்; எனவே அவ்வளவு எளிதாக அவைகளை விட்டுவிடவோ, வலுக்கட்டாயமாக தூக்கி எறியவோ, அல்லது மன உறுதி மூலம் கட்டுப்படுத்தவோ இயலாது. அவைகளைத் தூய்மைப்படுத்தி, நயமாக்கி, தெய்வீகச் சிந்தனையில் ஈடுபடுத்தி, உள்முகமாகச் செல்லவைத்து, இறைவனில் அல்லது ஆத்மாவில் நிலைபெறச் செய்யவேண்டும். ஆகவே, ஆசைகளைத் துறந்திட இறைவனைப் பற்றுவது ஒன்றே வழி. எனவே தெய்வப்புலவர் திருவள்ளுவர் “பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (பொருள்: மற்றெல்லாப் பற்றுகளையும் விட்டொழிப்பதற்கு, பற்றற்றவனாகிய இறைவனின் பாதங்களை இறுகப் பற்று.) என்று கூறுகிறார்.

    ஆன்ம அனுபவம் எனப்படும் அனுபூதியை பெறுதற்கு ஆசைகளே தடையாக உள்ளன. அவை ஒருவனை வெவ்வேறு திசைகளில் இழுத்து, அவனைச் சிதைத்து, அவனுடைய மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அறவே இழக்கச்செய்கின்றன. ஆன்மீக விடுதலைக்கு (முக்திக்கு) ஆசைதான் மிகப்பெரும் தடை. எனவேதான், ஆசையை விட்டுவிட மனதிற்கு புத்திமதி தரப்படுகிறது. விட்டுவிட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்கே, “விடுவாய்” “விடுவாய்” என்று இரண்டு முறை கூறப்பட்டுள்ளது: “ஒழிவாய் ஒழிவாய், ஐவாய்வழி செல்லும் அவாவினையே. ஆனால், எவ்விதம் விட்டுவிடுவது? “முருகப் பெருமானின் பாதங்களில் அடைக்கலம் ஆவதன் முலம்.” இதைத்தவிர வேறு ஏதேனும் வழியுள்ளதா? வேறொரு வழியும் இல்லை; இருக்கும் ஒரே வழி -- “முருகன் கழல் பெற்று உய்வாய்” என்பதுவே.

    இறைவனின் தாளில் அடைக்கலம் புகாமல் ஆசைகளை விட்டொழிப்பதென்பது முடியவே முடியாது. அது ஏன் அப்படி? இதைத் தெரிந்து கொள்வதற்கு, ஆசைகளின் வடிவமைப்பு பற்றிய ஒரு சிறிய ஆய்வு அவசியமாகிறது. அவ்வாய்வில் கொஞ்சம் ஆழமாகச் சென்று, ஆசைகள் இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆசை என்றால் என்ன? அல்லது, ஆசை ஏன் உண்டாகிறது? இவ்வாறான ஆழ்ந்த சிந்தனை செய்தால், ஆசைகள் உடலையோ, புலன்களையோ, ஏன் மனதைக்கூட சார்ந்தவை அல்ல; உண்மையில் இவையெல்லாம் ஆசைகள் (ஆத்ம-சக்தியின் ‘வேகம்’) தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் வழிகள். இந்த சக்தி உடலின் உள்ளுறையும் ஆத்மாவைச் சார்ந்தது. அறியாமை காரணமாக, பரமாத்மாவிடமிருந்து தன்னை வேறாக நினைக்கும் ஜீவாத்மா (Individual soul) அல்லது தனித்தன்மை கொண்டுவிட்ட ஆத்மா, தனது மூலாதாரமான பரமாத்மாவுக்குத் திரும்பி, அதனுடன் ஐக்கியமாகி ஆனந்தநிலையை அடைய ஏங்குகிறது. இந்த ஏக்கமே பக்தி, பேரார்வம், முமுக்ஷுத்துவம் அல்லது முக்தி/ வீடு / ஆன்ம விடுதலை/ பரமானந்த நிலை அடைவதில் தீவிர விருப்பம், எனப் பலவாறாக அழைக்கப்படுகிறது. பரமாத்மாவுடன் திரும்பவும் ஐக்கியம் அடைய ஜீவாத்மா கொண்டிருக்கும் இந்த அடங்காத விருப்பம் உண்மையானதும், பாராட்டுதற்குரியதும் ஆன ஒன்றுதான்; எனினும், அறியாமை காரணமாக, தான் இழந்த ஆனந்தத்தை உலகப் பொருள்களிலிருந்து அடையலாம் என்ற பொய்யான நம்பிக்கை கொண்டு, அந்த ஜீவாத்மா அவைகள்மீது கொள்ளும் விருப்பமாக மனது மற்றும் புலன்களின் வாயிலாக வெளிப்படுகிறது. இவ்வாறு வழிதவறி வெளிப்புறத்தில் மகிழ்ச்சி தேடும் முயற்சியே ஆசை என அழைக்கப்படுகிறது. இதற்கு மாற்று உட்புறம் (ஆத்மாவை) நோக்கி இச்சக்தியை திருப்பி அனுப்புவதே ஆகும். இதுவே சரியான வழி. மையத்திலிருந்து விலகிச் சென்றுவிட்ட ஒருவன் மையத்தை திரும்பவும் அடைய விரும்பினால், இங்குமங்கும் சென்று கொண்டிராமல், மையத்தை நோக்கி திரும்பி நடக்க வேண்டும். அப்படியே புலன்களின் வாயிலாக வெளிப்பட்டு ஆசை என ஆகிவிட்ட அந்த ஆத்ம-சக்தி புலன் விஷய உலகில் சஞ்சரிப்பதைவிட்டு, தன் ஆதாரமான ஆத்மாவிற்கு திரும்ப வேண்டும். இந்த செயல்முறை, ஆசைகளை மேன்மைப்படுத்துதல், இறை-பக்தி, ஆத்ம தியானம், சாதனை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. ஐம்புலன்கள் வாயிலாக வெளிப்படும் ஆசைகளை விட்டுவிடுவதற்கான ஒரே வழி பரம்பொருளான இறைவனிடம் அடைக்கலம் புகுவதுதான். இச்செய்யுள் அவ்வாறு செய்திட மனதை அறுவுறுத்துகிறது.

    ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஆசைகள் எவ்வாறு தடையாக இருக்கின்றன என்பதையும், அதனால் அவற்றைக் களைய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அறிவுரைகள் இச்செய்யுளில் மிக மறைமுகமாகக் கூறப்பட்டிருப்பதால், அவை நமது கவனத்திற்கு வராமல் போய்விடக்கூடும். ஆசைகள் புலன்களை ஊக்குவித்து, கிளர்ச்சி அடையச் செய்து, அவைகளின் வாயிலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, இவ்வாறு மனதையும், உணர்வையும் வெளியில் செல்லச் செய்கின்றன. இது ஆன்மீக சாதனைக்கும் பரம்பொருளை அடைவதற்காகச் செய்யும் உயரிய முயற்சிகளுக்கும் நஞ்சாகிறது. ஆசைகளின் வெளிச்செல்லும் போக்கு, ஜீவாத்மாவைத் தூண்டி, புற உலகோடு தொடர்பு கொள்ளச்செய்வதன் மூலம், அந்த ஜீவாத்மாவைத் தன்னில் தானே திருப்தியுடன் நிலைத்திருக்க விடாமல் செய்கின்றது. இதுவே நம் அனைவரின் மகிழ்ச்சியற்ற நிலைக்குக் காரணம். உணர்வு தன்னில் தானே நிலைத்திருப்பது –-- ஆத்மா தன்னில் உறைவது --- இதுதான் உண்மையான ஆனந்தம் என்று சான்றோர் சொல்கின்றனர்; இந்த உண்மையான பேரானந்தத்தின் ஒரு சிறு துளியை தினமும் நாம் ஒவ்வொருவரும், ஆழந்த உறக்க நிலையில் எதிர்மறையாக அனுபவிக்கிறோம்; ஆனால், அனுபவிக்கும் உணர்வு அப்பொழுது இல்லாமல் அனுபவிக்கிறோம்.

    ஆழ்ந்த உறக்கநிலையில், பொருள்கள் இல்லை, அவற்றுடனான தொடர்பும் இல்லை, புலன்களும் மனதும் செயல்படுவதில்லை; எனினும் ஒருவன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறான். தூக்கத்தில் ஆனந்தமும், அமைதியும் அனுபவிக்கப்படுவதால், ஒவ்வொருவரும் தூங்குவதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள். ஒருவனுக்கு உடல் உபாதைகளும் மன உளைச்சல்களும் இருக்கலாம், ஆனால் அவை அனைத்துமே ஆழ்ந்த தூக்க நிலையில் மறைந்து விடுகின்றன. தூக்கம் நமக்குத் தேவையான மகிழ்ச்சி, ஆறுதல், அமைதி, ஓய்வு ஆகிய அனைத்தையும் ஒருசேரத் தருகின்றது; வேறு எந்த வழியிலிருந்தும் இவைகளை அடைந்திட இயலாது. தூக்கத்தில் இவை எங்கிருந்து வருகின்றன? உடலுக்கும், புலன்களுக்கும், மனதிற்கும் உள்ளே இருக்கிறது அந்த பேரின்பம் மற்றும் பேரமைதியின் ஸ்வரூபமான ஆத்மா (உணர்வு, சைதன்யம், இறைவன், கடவுள், பெருமான்). உறங்கும்போது, மனம் தற்காலிகமாக அந்த ஆனந்த ஆத்மாவில் உறைகிறது. ஆனால், விழித்து எழுந்தவுடன், மனம் புலன்களைக் கொண்டு செயல்படும்பொழுது, இந்த ஆதார சக்தியிலிருந்து விலகி வெளியே போய் விடுவதால், பேரின்ப நிலையை இழக்கிறது. ஆழ்ந்த தூக்க நிலையில் மனம் இவ்வாதாரத்திற்குத் திரும்பும்பொழுது, ஆத்மானந்தத்தை அனுபவிக்கிறது. ஆனாலும், தூக்க நிலையில் அறியாமை எனும் மெல்லிய திரை ஒன்று மனதை ஆத்மாவில் கலந்துவிடாமல் தடுக்கிறது, எனவே நாம் ஆத்ம-ஆனந்தத்தை எதிர்மறையாகத்தான் நுகர முடிகிறது. மேலும், தூக்கத்திலிருந்து விழித்தவுடன், பழையபடி துக்கத்தை எதிர்கொள்கிறோம். ஆனால், நெடிய சாதனைகள் மூலம் சமாதி நிலையை அல்லது இறைவனை அடையும் பொழுது, அறியாமையெனும் திரை நிரந்தரமாக அழிந்துவிடுகிறது; உண்மையான மகிழ்ச்சியும் பேரானந்த நிலையும் எப்பொழுதும் நிலைத்து நிற்கிறது. இந்நிலையை அடைவதற்காகவே, மனம் இறைவனின் பாதங்களை இறுகப் பற்றி உய்வடையுமாறு பணிக்கப்படுகிறது –-- “கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே.” அதன்பிறகே, மனம் புலன்களின் மூலம் வெளிப்படும் ஆசைகளை அடியோடு விட்டுவிட முடியும்.

    ஆன்மிகப் பேரின்பத்தை பெற்றிட எதற்காக ஆசைகளைத் துறந்திட வேண்டும்? நாம் ஏன் ஆத்மாவின் ஆனந்தம், ஆசைகளைப் பூர்த்திசெய்து அதிலிருந்து வரும் இன்பம் இவை இரண்டையும் ஒருசேர அனுபவித்து மகிழக்கூடாது? என்ற ஒரு சந்தேகம் நம்மில் எழலாம். ஆம், அவ்வாறு செய்ய இயலுமென்றால், எவ்வளவு அருமையாக இருந்திருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக, முன்பே குறிப்பிடப்பட்ட காரணங்களால், அவற்றை ஒருசேர அனுபவித்திட இயலாது. சிறிதளவு நாம் சிந்தித்தாலே அவ்விரண்டும் சேர்வதென்பது முடியவே முடியாதென்பது உடனே புரிந்துவிடும். அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது; ஒன்று உள்நோக்கிச்செல்வது, மற்றொன்று வெளிநோக்கிச்செல்வது. எனவே, ஒரே சமயத்தில் அவ்விரண்டும் இணைந்து இருக்க முடியாது; எப்படி வெளிச்சமும் – இருட்டும், பகலும் - இரவும் ஒரே சமயத்தில் ஒருசேர இருந்திட இயலாதோ அப்படியே இவையும் இணைந்திருக்க முடியாது.

    இரண்டையும் சேர்ந்து அனுபவிக்க இயலாதென்றால், ஆசைகளை மட்டும் பூர்த்தி செய்து அதன் மூலம் இன்பம் பெற்று வாழ்ந்திடலாமே? எதற்காக ஆசைகளைத் துறக்க அறிவுறுத்துகிறீர்கள்? ஏனென்றால், ஆசைகளைப் பூர்த்தி செய்வதென்பது ஓர் இயலாத காரியம். மேலும், ஆசைகள் அலைகள் போல் முடிவற்றுத் தொடரும் தன்மை படைத்தவை. ஆசைகள் முடிவற்றவை, “ஆசைக்கோர் அளவில்லை” என்பது எல்லோரும் அறிந்ததே. மேலும், ஆசைகள் பூர்த்தி செய்ய இயலாதவை என்பதே அனைத்து வேதங்களின் முடிவான வாக்கு; அனைத்து மனிதர்களின் அனுபவங்களும் அதுவே. இன்பத்தை அனுபவிப்பதன்மூலம் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயன்றால், மேன்மேலும் அவ்வின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகள் தூண்டப்படுகின்றன; தீயில் வார்க்கப்பட்ட நெய்மூலம் தீ நன்கு கொழுந்துவிட்டு எரிந்து மேன்மேலும் நெய்யை வார்த்திட வைப்பது போல, இன்பத்தை அனுபவிப்பதன்மூலம் ஆசைகளெல்லாம் பூர்த்திசெய்யப்பட்டு, எனக்கு இனி ஆசைகளே இல்லையென்று சொல்பவர் எவருமில்லை. மேலும், ஆசைகள் பூர்த்தி செய்யப்படும் முறையில் பல தோஷங்கள் காணப்படுகின்றன; அதனால், பாவங்களும் விளைகின்றன. எனவே, ஆசைகளைப் பூர்த்தி செய்யவும் இயலாது; அவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பது விரும்பத்தக்கதும் அல்ல.

    ஆசைகளைப் பூர்த்தி செய்ய இயலாதென்றால், அவைகளை வலுக்கட்டாயமாக அமுக்கிவைத்து, அவைகளிலிருந்து விலகி சுதந்தரமாக இருக்க முடியுமா? அது இயலாத காரியம். ஏனெனில், ஆசைகள் ஆத்ம-சக்தியின் வெளிச்செல்லும் ‘வேகம்’; அவை எந்த வழியிலாவது எப்படியாவது தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத்தான் செய்யும். எனவே அந்த ‘வேகத்தை’ வெகுநாள் தடுத்துவைக்கமுடியாது, அப்படிச்செய்ய முயல்வது, மிகச் சக்திவாய்ந்த ஒரு சுருள் வில்லைக் (spring) கையால் அமுக்கிவைத்துக் கொண்டிருப்பதைப் போலாகும். ஆனால், எவ்வளவு நேரம் அப்படி வைத்திருக்க முடியும்? நமக்குத்தெரியும், அப்படிக் கட்டுப்பாட்டை ஒரே சீராக தளர்ந்திடாமல் வைத்திடுதலும் முடியாது, கட்டுப்பாடு சிறிதளவு தளர்வு அடைந்தாலும், உடனே அவ்வேகம் (ஆசைகள்) வெடித்து, சீறிக் கிளம்பி விடும். மேலும், அடக்கப்பட்ட ஆசைகள் பெரும்பாலும் மக்களை பித்துப் பிடித்தவர்களைப் போல் வெறி கொள்ளச்செய்து, அவர்களைக் கிறுக்கர்களாக்கி விடுகின்றன.

    எனவே, ஒரு சக்தியை ஏதாவதொரு விதத்தில் உபயோகப்படுத்தாமல் வெறுமனே ஓரிடத்தில் தேக்கி வைத்திட இயலாது. ஒரு நதியின் நீரை ஒரு அணையில் தேக்கினால், அந்நீரை கால்வாய்கள் மூலமோ அல்லது ஏதாவதொரு விதத்திலோ வெளியேற்றி சரியாக உபயோகத்திட வேண்டும்; இல்லையேல் தேக்கப்பட்ட நீரின் அழுத்த சக்தி ஏதாவது ஒருசமயம் அணையையே (உடைத்து) அடித்துச் சென்று விடும். எனவே, ஒரு சக்தி அல்லது ஆற்றல் வெறுமனே உபயோகத்திற்கு வராமல் தடுக்கப்பட முடியாது; ஏதாவது ஒரு விதத்தில் அதை உபயோகத்திற்கு கொண்டுவந்துதான் தீர வேண்டும். இதிலிருந்து தெரிவதென்னவென்றால், ஆசைகளை முழுவதும் அனுபவித்து இல்லாமல் செய்வதும் இயலாது, அடக்கவும் இயலாது, நிரந்தரமாக தடை செய்வதும் இயலாது. பின் என்னதான் செய்ய வேண்டும்? “ஆசைகள் பதங்கமாக்கப்பட வேண்டும்; மேன்மைப்படுத்தப்பட வேண்டும். உலக விஷயங்கள் மீதான ஆசைகளை மடைமாற்றி, பிரார்த்தனை, பூஜை, பஜனை, பக்தி, தியானம் ஆகியவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், இறைவன் பால் திருப்புவது ஒன்றே வழி. வேறெந்த வழியிலும் ஆசைகளைக் கையாள இயலாது; ஏனெனில், ஆசைகளை நிறைவேற்றி கழிக்கவோ, அடக்கி வைக்கவோ செய்யப்படும் முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாது.

    ‘ஐம்புலன்கள் மூலம் வெளிப்படும் ஆசைகளை விட்டுவிடுவாயாக’ என்பதுதான் அறிவுரை. ஏனெனில், ஏதாவது ஒரு புலன் கட்டுப்படுத்தப்படாமல் விட்டுவிடப்பட்டால், ஆசையெனும் பெரும் சக்தி அதன்மூலம் கசியத் தொடங்கி, அளவில் பெரிதாகி எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்பட்டு, பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு ஆகிவிடாமற்செய்து, சக்தியானது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டால்தான், அச்சக்தியை இறை-தியானத்தில் செலுத்த இயலும்.

    “ஓ மனமே, இறை-பாதத்தைப் பற்றி உய்வாயாக; அனைத்து ஆசைகளையும் விட்டுவிடுவாயாக.” மனம் இறைவனை தியானித்தோ, அடைந்தோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் இயலும்; அல்லது பொருள்களைச் சிந்தித்து அவை மீதான ஆசை வசப்பட்டு தன்னை அழித்துக் கொள்ளவும் முடியும். எனவே, இறை-சிந்தனை என்பது உலகியல் பொருள்களின் மீதான சிந்தனைக்கு ஒரு சரியான மாற்று மருந்து; இறை- சிந்தனை என்பது ஆத்ம சிந்தனை / ஈஸ்வர சிந்தனை என்றும், பொருள்- சிந்தனை என்பது விஷய சிந்தனை என்றும் வேதாந்தத்தில் அழைக்கப்படுகிறது. முந்தையது மோட்சத்திற்கும், பிந்தையது பந்தத்திற்கும் (துக்கத்திற்கும்) ஒருவனை அழைத்துச் செல்கிறது. எதனால் அப்படி? ஏனெனில், மனதால் ஒருவித எண்ணமும் இன்றி ஒரு நிமிடம்கூட இருக்க இயலாது; மேலும், ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே மனதால் சிந்திக்க இயலும். மனதைப் பற்றிய இந்த மிகப்பெரிய ரகசியத்தை சாதனை செய்பவர்கள் அறிந்து, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனம் இறைவனைப் பற்றி சிந்தித்து பக்தி செய்து தன்னை உய்வித்துக் கொள்ளலாம்; அல்லது ஆசைகளின் விஷயங்களைப் பற்றி சிந்தித்து, அது தரும் இன்பங்களை நுகர்ந்து, முடிவில் முடிவற்ற துன்பங்களில் உழலலாம். அதனால்தான், “மனமே ஒருவனின் பந்தத்திற்கும், மோட்சத்திற்கும் காரணம்” (மன ஏவ காரணம் மனுஷ்யானாம் பந்த மோக்ஷயோ:) என்று அமிர்தபிந்து உபநிஷதம் (செய்யுள்–2) சொல்கிறது. விஷய சிந்தனையில் வசப்படாமல் மனமானது காக்கப்பட வேண்டுமானால், ஏதாவது ஒரு உயரிய, மிக வசீகரமான, மிக அழகான, மேலும் மகிழ்வளிக்கும், மனதைத் தன்னில் முழுதும் லயிக்கும் இலக்கு ஒன்று அதற்குத் தரப்பட வேண்டும் --- இலக்குகளிலேயே மிகவும் சிறந்த இலக்கு பரமானந்த இறைவனே, பரம்பொருளே, ஆத்மாவே. ஆகவேதான், “கையில் வேல் தாங்கிய முருகப் பெருமானின் தாமரை பாதத்தில் அடைக்கலமாகி, உய்வடைவாயாக; மேலும், அனைத்துப் புலன்கள் வாயிலாக வெளிப்படும் ஆசையை துறந்துவிடுவாயாக” என்று மனம் அறிவுறுத்தப்படுகிறது.

    ஏழாம் செய்யுளில், “ஓ மனமே, ஏன் துன்பப்படுகிறாய். இப்பொழுது, முக்தி அடைய ஒரு உபாயம் உள்ளது, அதைக் கேளாய்: எதையும் பதுக்கி வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் தானம் செய்வாயாக; கூர் வேல் தாங்கிய பெருமானின் தாமரைப் பாதத்தை தியானம் செய்வாயாக,” என்று கூறப்பட்டது. இச்செய்யுளில் (14-ல்), “ஒ மனமே! கதிர்வேலை கையில் தாங்கி நிற்கும் முருகப் பெருமானின் மலர்ப்பாதம் பெற்று உய்வாயாக. ஐம்புலன்களின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆசைகளை ஒழித்து விடுவாயாக, (முழுவதுமாக) ஒழித்து விடுவாயாக,” என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்விரண்டு செய்யுள்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால், ஒரு பெரிய இரகசியம் காணப்படும். அதாவது, தானம் செய்வதற்கு இறைவனைச் சிந்திக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவனைச் சிந்திக்காமலும் தானம் செய்ய முடியும். (அப்படிச்செய்பவன் மோட்சம் அடைவான் என்று கூற இயலாது). ஆனால், ஆசைகளை விடவேண்டுமென்றால், இறைவனைப்பற்றி முதலில் சிந்தித்தல் அவசியம். இறைவனைச் சிந்தித்து அவன் கழல்களைப் பெறாமல் ஆசைகளை விடுவதென்பது இயலாத காரியம். ஆன்மீக வழிமுறையில் பொதிந்துள்ள அரும்பெரும் இரகசியங்களையும் படிப்படியாக முன்னேறுவதையும் எவ்வளவு துல்லியமாகவும் நேர்த்தியாகவும் அருணகிரியார் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் பார்த்தீர்களா!

No comments:

Post a Comment