செய்யுள் 15



செய்யுள் – 15


முருகன்   குமரன்   குகன்என்று   மொழிந்து
உருகும்   செயல்தந்து   உணர்வென்று   அருள்வாய்
பொருபுங்கவரும்   புவியும்   பரவும்
குருபுங்கவ   எண்குண   பஞ்சரனே.

    பொழிப்புரை: வானுலகத்தோரும் இவ்வுலகத்தோரும் போற்றி வணங்குகின்ற குரு சிரேஷ்டரே! எட்டு திவ்ய குணங்களின் உறைவிடமே! “முருகன், குமரன், குகன்” என்று மெய்யன்புடன் உங்கள் திருநாமங்களை மொழிந்து (ஜபம் செய்து), என் உள்ளம் உருகும் நிலை தந்து, உங்களை என் நெஞ்சில் உணர்ந்து அனுபவிக்க எப்போது அருள்புரிவீர்?” (விரைவில் அருள்புரிவீராக!)

விளக்கவுரை

    சாதகனுக்கு சமாதி நிலையை அறிமுகப்படுத்திய பின்னர் (செய்யுள்-12), குருவானவர் அவனை இறை-பாதம் பெற்று உய்வடையுமாறும், அதன் மூலம் ஆசைகளை விட்டுவிடுமாறும் அறிவுரை செய்தார் (செய்யுள்–14). அவ்வறிவுரைகளால் உந்தப்பட்ட சாதகன், நாம ஜபம், பஜனை, கீர்த்தனம் ஆகிய சாதனைகளைத் தீவிரமாக மேற்கொள்கிறான். இந்த பக்தி சாதனை, ஆசைகளையும் மனதின் வெளிச்செல்லும் போக்கையும் ஓரளவுக்கு வலுவிழக்கச் செய்வதில் உபயோகமாயிருக்கிறது. ஆனால், மனமும் இதயமும் சேராமல், வெறுமனே வாயால்மட்டும் செய்யப்படும் நாம ஜபம், கீர்த்தனை முதலியவைகளால் (மொழிதலால்) யாதொரு பயனும் விளைந்திடாது என்று அவன் அறிந்திருக்கிறான் (செய்யுள்–5). மேலும் தனது முயற்சி மட்டும் போதாது; அதோடு கடவுளின் கிருபையும் சேர்ந்திட வேண்டுமென்றும் அச்சாதகன் அறிந்திருக்கிறான். எனவே, அவன் இப்பொழுது குருவாகிய இறைவனை கிருபை காட்டுமாறு வேண்டுகிறான். அவ்வருளால், “முருகன், குமரன், குகன்” என்று அவன் சொல்லும்பொழுதே, அவன் மனம் நெக்குருகி, அவனுள்ளே உறையும் இறைவனை அவன் உணருமாறு செய்ய வேண்டுகிறான்.

    கடவுளைப் பற்றுவது, ஆசைகளைத் துறப்பது ஆகிய இரண்டும் ஒன்றுக்கு பின்னர் மற்றொன்றாக தனித்தனியாக செய்யப்படும் சாதனைகள் அல்ல. அவை இரண்டும் ஒரே சமயத்தில் செய்யப்பட வேண்டிய சாதனைகளே; ஏனெனில், மனதால் ஏதாவது ஒன்றைப்பற்றி மட்டுமே ஒரு சமயத்தில் சிந்தித்திட இயலும். இறைவனைப் பற்றி சிந்தித்தால், விஷய சிந்தனையான ஆசைகளுக்கு இடமில்லை. எவ்வளவிற்கு மனம் இறைவனை நாடிச் செல்கிறதோ, அவ்வளவிற்கு அது ஆசைகளிலிருந்து விடுபட்டு, ஆசைகளை பலம் இழக்கச் செய்கிறது. எனவே, இறைநாம ஜபம், சங்கீர்த்தனம் போன்ற சாதனைகள் மனப்பூர்வமாகவும், தொடர்ச்சியாகவும் வெகுநாள் செய்யப்படும்பொழுது, ஆசைகளின் தீவிரம் நாளடைவில் நீர்த்துக்கொண்டே போய், இறுதியில் அவை இருக்குமிடமே தெரியாமல் மறைந்து விடுகின்றன. ஆசைகள்தான் ஒருவனின் மனதையும், நெஞ்சையும் கடினமாக்குகின்றன. ஆகையால், இறைநாம ஜபத்தை விடாமல் ஆத்மார்த்தமாக செய்துவந்தால், ஆசைகள் நாளடைவில் பலமிழந்து அழிந்து போகின்றன, மனம் தூய்மையாகித் தானாகவே நெகிழ்ந்து உருகுகிறது; நெஞ்சில் உறையும் இறைவன் உணரப்படுகிறான். இறைவனருளால் சாதகன் ஆத்ம-சாக்ஷாத்காரம் அடைகிறான். அவ்வருளைப் பெறுவதே இச்செய்யுளில் செய்யப்படும் பிரார்த்தனையின் நோக்கம்.

    இந்தப் பிரார்த்தனை யாருக்குச் செய்யப்படுகிறது? “பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனுக்கு.” வானுலகத்தோரும் மண்ணுலகத்தோரும் போற்றி வழிபட்டுத் துதிக்கும் முருகப் பெருமானிடம் செய்யப்படுகிறது. சிவனாரிடமிருந்து பெற்ற விசேஷ வரங்களைக்கொண்டு அசுரன் சூரபத்மனும் அவனுடைய சகோதரர்களும் தேவர்களை தேவலோகத்திலிருந்து விரட்டியடித்தும், மேலும் பலவிதமாக அவமதிப்பு செய்தும் துன்புறுத்தினர். கந்தப் பெருமான் அவ்வசுரர்கள் அனைவரையும் போரில் அழித்து, அவர்கள் தந்துவந்த கடும் தொல்லைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்றி, தேவலோகத்தையும் அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தார். எனவே, தேவர்கள் அனைவரும் பெரும் பக்தி சிரத்தையுடன் கந்தனை எப்பொழுதும் பூஜிக்கின்றனர். இவ்வுலகில் வாழும் மனிதர்களும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, துன்பங்களைக் களைந்திட, செல்வம் பெற்றிட, மகிழ்ச்சி அடைய, பக்தி பெருக, கடவுளை உணர --- எதுயெது தேவையோ அவை அனைத்தையும் அடைந்திட --- கந்தப் பெருமானை அணுகி, அவன் புகழைப் பாடி தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்து, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யதுகொள்ள அவரை நாடுகின்றனர்.

    கந்தப் பெருமான் பிரணவ மந்திரத்தின் ரகசிய மறைபொருளை சிவனாருக்கு உபதேசித்தார். மேலும், அகஸ்திய மகாமுனிவருக்கும், பராசர முனிவரின் ஆறு புதல்வர்களுக்கும் மெய்ஞான உபதேசத்தைத் தந்தருளினார். ஆகவே, முருகன் ஸத் குரு, ஆதிகுரு, குருபுங்கவ, என்றெல்லாம் போற்றிப் புகழப்படுகிறார்.

    தேவர்களாலும் மனிதர்களாலும் போற்றப்படும் குரு சிரேஷ்டரான முருகன் “எண்குண பஞ்சரன்”, எட்டு திவ்ய குணங்களின் உறைவிடம். இறைவனின் எட்டு குணங்கள் தமிழ் நூல்களில் விதவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று:

  1. தன்னைத் தானே சார்ந்திருப்பவன் (சுதந்திரன் – Self Dependent),
  2. தூய உடல் கொண்டிருப்பவன் (Immaculate Body),
  3. இயற்கை உணர்வுடையவனாக இருப்பவன் (Natural Understanding),
  4. அனைத்தும் அறிந்தவனாக இருப்பவன் (Omniscience),
  5. மாயை நீங்கிய இயல்பினனாக இருப்பவன் {Naturally free from Maya (Attachments)},
  6. எல்லையில்லா கிருபை உடையவனாக இருப்பவன் (Unlimited Grace),
  7. முழுமையான ஆற்றல் பெற்றிருப்பவன் (Omnipotence),
  8. எல்லையற்ற ஆனந்தம் பெற்றிருப்பவன் (Limitless Bliss).

      மேற்கூறிய எண்குணங்களும் மற்றைய திவ்ய எண்குணங்களும் ‘ஸத் – சித் – ஆனந்தம்’ என்ற மூவகை பேரியல்புகளுக்குள் அடக்கம். எனவே, “எண்குண பஞ்சரன்” என்றால், முருகன் ஸச்சிதானந்த பரப்ரம்மம் என்று பொருள்.

    இறை-நாமங்களில் எல்லையற்ற சக்திகள் பொதிந்திருக்கின்றன; அவை பாவங்களை அழித்து மனதைத் தூய்மைப்படுத்துகின்றன. இறைவனைவிட அவர் நாமங்கள் அதிக சக்தியுடையவையாகக் கருதப்படுகின்றன; ஏனெனில், இறைவன் ஒரு சிலரை மட்டுமே நேரடியாகக் காத்தருளினார், ஆனால், அவருடைய நாமங்களோ பலருக்கு முக்தியைத் தந்தருளியிருக்கின்றன, தந்துகொண்டுமிருக்கின்றன. ஒவ்வொரு இறைநாமமும் அண்ட அதிர்வுகளின் ஒரு சூட்சும வடிவம் (சூட்சும உறைவிடம்); ஒரு சக்திவாய்ந்த ஒத்திசைவு அதிர்வு; எனவே, அவை மனதில் ஏற்படும் ஒன்றுக்கொன்று முரணான எண்ண-அதிர்வுகளை அழிக்கும் திறன் கொண்டவை. மேலும், இறை-நாம ஜபம் அவ்வொத்திசைவு அதிர்வுகளை உடல் மற்றும் மனம் முழுவதும் பரப்புகின்றது. அதனால் மனம் பிரம்மாண்ட அதிர்வான இறைவனுடன் நன்கு இணைந்திருக்க முடிகிறது. எனவே, இறைநாம ஜபம் இடைவிடாது நீண்டகாலம் செய்யப்படும்போது, மனம் மேன்மேலும் நுட்பமாகிக்கொண்டே போய், நெக்குருகி, இறைவனிலேயே தன்னைக் கரைத்துக்கொள்ளுகிறது. ஆகவே, ‘முருகன், குமரன், குகன்’, என்று அவர் திருநாமங்களை அனுதினமும் இடைவிடாது ஜபித்திடவும், அதன் மூலம் தன் மனதை நெகிழச் செய்து, நெஞ்சில் இறைவனை உணர்ந்து அனுபவிக்கவும் அருளுமாறு சாதகன் இறைவனிடம் வேண்டுகிறான்.

    இதயத்தின் உணர்வுடன் இயைந்து செய்யப்படும் நாம-ஜபம் எளிதில் அடையக்கூடியதல்ல; ஏனெனில் மனம் அநேக அசுத்தங்களால் நிரம்பி இருக்கிறது. அந்த மனதை சுத்தம் செய்வதற்கே பலகாலம் பிடிக்கும், அதன் பின்னரே மனமும் நெஞ்சும் உருகிட இயலும். எனினும், அதற்காக உளச்சோர்வடைய வேண்டியதில்லை. சாதகன் பூரண நம்பிக்கையோடு, நீண்ட காலத்திற்கு இறை-நாமங்களை ஜபம்பண்ணி வந்தால், அந்த நாமங்களிலுள்ள சக்தியே விரும்பிய விளைவைத் தந்திடும் என்பது உறுதி. இறை-நாமங்களின் இடைவிடாத ஜபமே ​​உரிய காலத்தில் நெஞ்சத்தையும் உருக்கி, கடவுளோடு ஒன்றுவதற்கும் வழிவகுக்கும். அது பூரண ஆன்மீக விழிப்புணர்வில் முடிவடையும். இப்படியாக எல்லா ஆன்மீக சாதனைகளின் இலக்கான இறைவனை, நம்முடைய உண்மைத் தத்துவத்தை, இறை-விழிப்புணர்வை அல்லது தெய்வீக அனுபவத்தை அடைவோம் என்பது உறுதி.

    இறை-நாமத்தை நாம் ஜபிக்கும்போது, ​​நமது மனம் உருக வேண்டும், நெஞ்சம் பரம்பொருளை உணர வேண்டும். அதாவது, நம்முடைய பேச்சு, எண்ணம், உணர்வு ஆகிய அனைத்தும் இறைவனுடன் ஒருங்கிணைய வேண்டும். அப்பொழுதுதான் இறை-அனுபவம் உண்டாகும். அவ்வாறு ஒருங்கிணையாமல், வாய்மட்டும் ஜபம்செய்தால், உலக அனுபவம் எனும் இந்த மாயை நம்மை விட்டு அகலாது; ஐந்தாம் செய்யுளில் சித்தரிக்கப்பட்ட நிலைமையில்தான் நாம் (“ஜகமாயையுள் நின்று தயங்குவதே”) எப்பொழுதும் இருந்துகொண்டிருப்போம். எனவே, நாம் நம்பிக்கையை இழந்துவிடாமல். இறை-நாமாக்களை, அவரது பாதங்களின் மீது மிக்க அன்பும் பக்தியும் கொண்டு, இடைவிடாது பலகாலம் தொடர்ந்து ஜபம்செய்து வந்தால், காலப்போக்கில் மனதில் உருக்கமும், நெஞ்சில் தெய்வீக உணர்வுகளும் ஏற்படுமென்பது நிச்சயம். "ஒருவன் நீண்ட காலத்திற்கு, எந்தவித தடைகளுக்கும் இடம் தராமல், அன்போடும், முழு இசைவோடும் தொடர்ந்து சாதனை செய்துவந்தால், அவன் அதில் நிலைபெற்றுக் கொள்கிறான்," என்கிறார் பதஞ்சலி மகரிஷி (ஸது தீர்ககால நைரந்தர்ய ஸத்கார சேவிதோ த்றுட பூமிஹி" – யோக சூத்ரா: சமாதி பாத:14).

    இறை-நாம ஜபம் எண்ணற்ற ஆசைகளால் கனத்துப் போயிருந்த நெஞ்சை நெகிழ்த்தி, இறுதியில் இறை-விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்கிறது. இது பக்தி யோக சாதனை. இந்த சாதனை, நாமஜபம் - நெஞ்சுநெகிழ்தல் - இறைநுபவம் ஆகிய மூன்று படிகளைக் கொண்டது; இச்செயல்முறையை, வேதாந்த சாதனையின் வாசனா-க்ஷயம், மனோ-நாசம், மற்றும் தத்வ-ஞானம் ஆகிய மூன்று படிகளுடன் ஒப்பிடலாம்.

    நுட்பமான / சூட்சுமமான ஆசை, ‘வாசனை’ எனப்படும். மனம் என்பது வாசனைகளால் நிரம்பிய ஒரு மூட்டை மட்டுமே. எப்படி நூல் இழைகள் இல்லையேல் துணி என்ற ஒன்று இருக்க முடியாதோ, அப்படியே வாசனைகள் இல்லாதபோது, மனம் என்ற ஒன்றே இல்லாமற் போகிறது. ​​நாம் ஒரு பொருளைப் பற்றி சிந்திக்கும்போது, ​​அதன் மீது ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசை எனப்படும் அலை அல்லது அதிர்வு மனத்தின் அமைதியை, சமநிலையைக் கெடுக்கிறது. ஒரு பொருளின் சிந்தனை, ஆசையாகி, மனதின் அமைதியைக் கெடுக்கும் திறன் பெற்றிருக்கிறது. அப்படியே, இறைவனின் சிந்தனை மனதில் அமைதி அல்லது சமநிலையை உருவாக்கும் திறன் பெற்றிருக்கிறது. அதாவது இறை-சிந்தனையால் மனதிலிருக்கும் ஆசைகள் அழிக்கப்பட்டு, மனதில் அமைதி நிலவுகிறது. இவ்வாறான ஆசைகளின் அழிவு அல்லது மனதிலிருந்து வாசனைகளின் இழைகளை அறுக்கும் செயல், வாசனா-க்ஷயம் என்றழைக்கப்படுகிறது. இந்த வாசனா-க்ஷயம் பக்தி மார்க்கத்தில் நாமஜபத்தால் ஏற்படுகிறது. ஈஸ்வர-சிந்தனைக்கும் (நாம-ஜபத்துக்கும்), விஷய-சிந்தனைக்கும் (உலகப்பொருள்-சிந்தனைக்கும்) பலன்களில் எவ்வளவு வித்தியாசம்!

    ஒரு துணி உருவாவதற்குக் காரணமான நூலிழைகள் ஒவ்வொன்றாக அதனின்று இழுத்து எடுக்கப்படும்பொழுது, துணி என்ற ஒன்றே இல்லாமல் போவதுபோல, வாசனை எனும் எண்ண இழைகளால் உருவாக்கப்பட்ட மனதிலிருந்து ஒவ்வொரு இழையாக, ​​படிப்படியாக வாசனைகள் அழிக்கப்படும்போது, மனமே இல்லாமல் போய்விடுகிறது. இவ்வாறு, வாசனா-க்ஷயம், மனோ-நாசத்திற்கு (மனது அழிவதற்கு) வழிவகுக்கிறது. இது இறை-நாமங்களை தியானிப்பதன் (நாமஜபம் செய்வதன்) காரணமாக, நெஞ்சம் உருகுவதைக் குறிக்கிறது. மனம் அவ்வாறு அழிக்கப்படும்போது, ​​ சுயமாக பிரகாசிக்கும் தன்மை கொண்ட ஆத்மா ஒளிமயமாக பிரகாசத்துடன் ஜொலிக்கிறது; சூரியனை மறைத்திருக்கிற மேகம் விலகும்போது, ​ சூரியன் தானே பிரகாசிப்பது போல. சூரியன் எப்பொழுதும் இருக்கிறது, சதா பிரகாசித்துக் கொண்டுதானிருக்கிறது; நாம் சூரியனை உருவாக்கவுமில்லை அல்லது அதற்கு வெளிச்சம் தரவும் இல்லை; நீராவிகளின் தொகுப்பாலான மேகங்கள் சிதறியதால் திரை விலக்கப்பட்டு, மறைக்கபட்டிருந்த சூரியன் தானே பிரகாசிக்கிறது. இதேபோல், வாசனா-க்ஷயம் (ஆசைகளின் நாசம்) நிகழும்போது, ஆசைகளின் மூட்டையான மனம் அழிக்கப்படுகிறது (மனோ-நாசம் ஏற்படுகிறது); பின், நம் நெஞ்சில் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை அனுபவரூபமாக உணருகிறோம். இதுவே தத்வ ஞானமாகும்.

    எனவே, வாசனா-க்ஷயம் மனோ-நாசத்திற்கும், மனோ-நாசம் தத்வ- ஞானத்திற்கும் வழிவகுப்பதுபோல; இறை நாமத்தை ஜபிப்பது, மனதை நெகிழ வைத்து, பின்னர் இறை-அனுபவத்திற்கு இட்டுச் செல்லும். இத்தகைய மிகப் பெரிதானதும் மிக அரிதானதுமான வேதாந்த உண்மைகள் இந்த செய்யுளில் வெகு எளிமையான முறையில் அளிக்கப்பட்டுள்ளன. “தத்வ- ஞானம்” என்பதை தமிழில் “உணர்வு” எனலாம், அதாவது இறை-விழிப்புணர்வு, இறை-அனுபவம் அல்லது இறை-உணர்வு எனலாம்.

    இறை-நாமத்தை ஜபம் செய்தல் (மொழிதல்), மனது உருகுதல் (உருகுதல்), இறைவனை உணர்ந்து கொள்ளுதல் (உணர்தல்) --- இவை முறையே உடல், மனம் மற்றும் நெஞ்சத்தின் (இருதயம்) நிலைகளையும், அல்லது ஸ்தூல, சூட்சும மற்றும் காரண (ஆன்மீக) நிலைகளையும் குறிக்கும் என்று சொல்லலாம். பக்திப் பாதையோ அல்லது ஞானப் பாதையோ, எதுவாக இருந்தாலும், கடக்கப்பட வேண்டிய நிலைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையே, அந்நிலைகளைக் குறிக்கும் சொற்களில்தான் வேறுபாடு உள்ளது.

    ஜப சாதனை, இறைவனை அடைய வைக்கும் / உணர வைக்கும் சக்தி படைத்தது. ஜபம் தியானத்திற்கும், தியானம் ஆன்மீக விடுதலையான மோட்சத்திற்கும் அழைத்துச் செல்கிறது. எனவே, சுவாமி சிவானந்த மகராஜ், ஜப சாதனையை இறைவனையடைய செய்யப்படும் ஒரு முழுமையான சாதனையாகக் கருதுகிறார்.

    "முருகன் - குமரன் - குகன்" என்ற கந்தப்பெருமானின் பெயர்களின் கிரமத்திற்கும், "மந்திர ஜபம் - மனது உருகுவது – நெஞ்சு உணர்தல்" என்ற செயல்களின் கிரமத்திற்கும் ஒரு விசேஷ முக்கியத்துவம் இருப்பது போல் தெரிகிறது. குகன் என்றால் ‘இதய குகையில் உறைபவன்’ அல்லது 'நெஞ்சில் குடியிருப்பவன்' எனறு பொருள்; அதாவது, ‘குகன்’ ஆத்மாவைக் (உண்மையான “நான்”) குறிக்கும். ‘உணர்வு’ எனும் அனுபவமும் நெஞ்சோடு சம்பந்தப்பட்டது. இப்படியாக, இச்செய்யுளில் அருணகிரியார் உண்மையான “நான்” (Self) அல்லது “ஆத்மா”வின் கருத்துப்படிவத்தை அறிமுகப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. முதலில் பகிரங்க (வெளி விஷயங்களுடன் சம்பந்தப்பட்ட) சாதனைகளையும், பின்னர் மனம் மற்றும் ஆசைகள் சம்பந்தப்பட்ட சாதனைகளையும் போதித்து வந்த அவர், இச்செய்யுளில் அந்தரங்க சாதனை எனப்படும் உண்மையான உள்சாதனையைத் தொடங்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment