செய்யுள் 17



செய்யுள் – 17


யாமோதிய   கல்வியும்   எம்மறிவும்
தாமேபெற   வேலவர்   தந்ததனால்
பூமேல்   மயல்போய்   அறமெய்ப்   புணர்வீர்
நாமேல்   நடவீர்   நடவீர்   இனியே.


    பொழிப்புரை: "நாம் கற்ற கல்வியும், நமது அறிவும் வேலாயுதப் பெருமான் தாமே நமக்கு அருளியது. எனவே, இனிமேல் உலகத்தின்மேலுள்ள மயக்கத்தை ஒழித்து, பரம்பொருளுடன் முழுதும் ஒன்றுபட்டு இரு; அவன் மகிமைகளை என்றும் எப்பொழுதும் நாவினால் பாடிக் கொண்டே இரு”.
    
விளக்கவுரை

    சாதகன் தற்போது இருக்கும் நிலையை அடைய, அவன் சாதனையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி நீண்ட காலமாகிவிட்டது. இந்தக் காலகட்டத்தில், அவன் சமய மற்றும் ஆன்மீகப் புத்தகங்கள் பலவற்றை நன்கு கற்றறிந்து (ஸ்வாத்யாயம் செய்து), பல்வேறு ஸத் சங்கங்களில் பங்கேற்று, குருவினிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றிருந்தான். அப்புத்தகங்கள், அவைகளிலிருந்து அவன் பெற்ற அறிவு முதிர்ச்சி, குருவின் அறிவுரைகள் ஆகிய அனைத்துமே, உண்மையிலே, வேலவப் பெருமானாலேயே அவனுக்குத் தரப்பட்டவை {யாமோதிய கல்வியும் எம்மறிவும் (நாம்) பெற வேலவர் தாமே தந்தது}. வேலவப் பெருமானே குருவாய் வந்து அவனுக்கு அறிவுரை தந்ததையும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் (8, 11, 12 & 13-ம் செய்யுள்கள்).

    அதனால் (ஆகையால்): வேலவராலேயே கொடுக்கப்பட்ட “யாமோதிய கல்வியும் எம்மறிவும்” எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் (அ) அது கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன, என்பதைக் குறிக்கின்றது. வேலவர் அதை எதற்காகக் கொடுத்தார்? நம் சாதனையில் முன்னேறப் பயன்படுத்தி, இறைவனை அடைவதற்குத்தான் கொடுத்தார்.

    பேராசை எனும் பிணியில் அகப்பட்டு, விவேக சக்தியை இழந்து, பிறப்பு-இறப்பு எனும் சக்கரத்திலகப்பட்டு உழலுவதையுணர்ந்து, அதிலிருந்து விடுதலைபெற பிரார்த்தனை செய்த (செய்யுள்-16) சாதகனுக்கு இறைவன் இச்செய்யுளில் வழி காட்டுகிறார். ‘அவிவேகம்’ (‘விவேகம்’ இல்லாமை) தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். அதனால், அவிவேகத்தால் நம்மில் தோன்றிய ஏக்கங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்படாத ஆசைகள் எனப்படும் பிணிகளின் தாக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, பெருமானிடமிருந்தே பெறப்பட்ட அறிவுரைகளை சாதகன் இப்பொழுது செயல்படுத்த முயல்கிறான். அந்த அறிவுரைகள் என்னென்ன? அவைகளை பெருமான் எதற்காக அவனுக்குத் தந்தருளினார் என்று காண்போம்:

  1. இனி”(யே) - இனிமேல்,
  2. “பூமேல் மயல் போய்”பெயரும் உருவமும் கொண்ட இவ்வுலகப் பொருள்கள் (நாம-ரூப பிரபஞ்சம்) நிரந்தரமான மகிழ்ச்சியைத்தர இயலும் என்ற மயக்கத்தை (உலக மாயையை), விவேக சக்தியை வளர்ப்பதன் மூலம், ஒதுக்கித் தள்ளுவாயாக (உலக மாயையை விவேகத்தின் மூலம் கடந்து செல்வாயாக),
  3. “அற மெய்ப் புணர்வீர்”பெயர் மற்றும் உருவத்தால் மட்டும் வேறுபடும் இவ்வனைத்து உலகியல் பொருள்களின் பின்புலத்தில், அவைகளுக்கு ஆதாரமாயிருக்கும் மெய்ப்பொருளுடன் முழுமையாக ஒன்றுபடுவாயாக ------ ஒரே உண்மைப்பொருளாகவும், ஸத்-சித்-ஆனந்த சொரூபமாகவும் (அஸ்தி-பாதி-பிரிய சொரூபமாகவும்) இருக்கும் அப்பரம்பொருளுடன் நிரந்தரமாக ஐக்கியமடந்து உய்வாயாக. எப்படி?
  4. “நாமேல் நடவீர் நடவீர்”முருகன், குமரன், குகன் போன்ற இறை நாமங்களை விடாமல் தீவிரமாக நாவால் ஜபம் செய்து, அவனுடைய மகிமைகளை மனதாரத் துதித்துப்பாடினால், அது மனதையுருக்கி நெஞ்சில் இறை-உணர்வைத் தந்திடும். (செய்யுள் - 15).
    ஆன்மீகப் பாதையில் எதிர்ப்படும் இடர்களையும், கஷ்டங்களையும் விலக்குவதற்காக இருக்கும் ஒரே சாதனம் ஆன்மீக சாதனையை மேலும் கடுமையாக செயல்படுத்துவதுதான்; இதைத்தவிர வேறு எந்த சாதனமும் இல்லை. சூட்சும ஆசைகள் (பேராசை) நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்பதனால் (செய்யுள்-16), நாம் உறுதி தளர்ந்துபோய், அவைகளுக்கு அடிபணிந்து விடாமல், துணிந்து மேலும் முனைப்புடன் எதிர்த்துப் போராட வேண்டும். “கஷ்டங்கள்/தடைகள் நம்மை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் படிகள்” என்று சுவாமி சிவானந்த மகராஜ் சொல்கிறார். எனவே, முடிவில் மனம் உருகத்தான் செய்யும்; சாதகன் தன் குறிக்கோளை அடைவதில் வெற்றி பெற்றே தீருவான். எனவேதான், ‘நாமேல் நடவீர் நடவீர்’ என்பதில்,நடவீர்என்ற சொல் இருமுறை சொல்லப்பட்டிருக்கிறது. அதில், மேலே கூறப்பட்ட விளக்கம் அடங்கியுள்ளது. ஜபம் துதித்தல் ஆகிய ஆன்மீக சாதனைகள், சாதகனால் மேன்மேலும் தீவிரமாக செயல்படுத்தப் படும்பொழுது, அவை தானாகவே தியானத்திற்கு வழிகோலி (அடுத்த செய்யுள்), பேராசை (ஏக்கங்கள்) எனும் மனநோயின் பிடியிலிருந்து விடுவித்து சாதகனைக் காத்திடும்.

    மன ஏக்கங்களை விட்டுவிடுதல் என்பதே “பிரத்யாகாரம்() சுய கட்டுப்பாடு என்றழைக்கப்படுகிறது. விவேகம்’ (பொருள்களின் உண்மைநிலையை சரியாகப் புரிந்துகொள்ளும் பகுத்தறிவு) மற்றும் ‘வைராக்கியம்’ (பற்றின்மை / விருப்பமின்மை) ஆகிய இவ்விரண்டையும் அடிப்படையாகக்கொண்ட பிரத்யாகாரம் கைகூடிய பின்னரே, சாதகனால் ‘தாரணம்’ (மனதை ஒருமுகப்படுத்துதல்) மற்றும் ‘தியானம்’ (ஒரே சிந்தனையில் மனதை நிலைநிறுத்தல்) ஆகிய ஆன்மீக சாதனையின் அடுத்தடுத்த உயர்நிலைகளுக்கு முன்னேறிச் செல்ல இயலும்.

    தங்களுக்குத் தெரிந்ததை பிறருக்குப் பகிர்ந்தளிக்க விருப்பமில்லாத அறிவாளிகளிடம் சென்று யாசிக்காமல், ஆத்ம ஞானத்தை நேரடியாக இறைவனிடமிருந்தே வேண்டிப் பெறுமாறு 45-ம் செய்யுளில் அறிவுறுத்தப்படுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

    முருகப் பெருமானே அச்சாதகனுக்கு குருவாக வந்து, அவன் உடலல்ல, அதிலுறையும் ஆத்மா என்று அவனுக்கு வாய்மொழியாகத் தந்த அறிவுரை (ஹிதோபதேசம்) (செய்யுள் – 7). அவனுக்கு வெறும் தத்துவார்த்தப் புரிதலாக அமைந்ததே தவிர, உள்ளார்ந்த நம்பிக்கையாக மாறிவிடவில்லை. ஆனால், அவன் தொடர்ந்து செய்த சாதனையாலும், குரு மேன்மேலும் அவனுக்குக் கொடுத்த அறிவுரை மற்றும் அனுபவங்களாலும் (செய்யுள்கள் 11 முதல் 14 வரை), அந்த தத்துவார்த்தப் புரிதல் இப்பொழுது உள்ளார்ந்த நம்பிக்கையாக மாறியமைந்து, சாதனையில் தொடர்ந்து செயல்படத் தேவையான மனபலத்தை சாதகனுக்குக் கொடுத்து ஊக்குவிக்கிறது.

    நாம் ஓதிய நூல்கள், நமக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர் (குரு), அவரிடம் கற்றதை நாம் புரிந்து கொண்டது, ஆகிய இவ்வனைத்தும் நமக்கு இறைவனால் நேரடியாகத் தரப்பட்டவை அல்லது ஏற்பாடு செய்யப்பட்டவை. இவ்வுலகிலிருக்கும் நூல்கள் எண்ணிலடங்காதவை. அவைகளில் எந்தப் புத்தகத்தைப் படித்தால் நாம் முன்பு பெற்றிருக்கும் அறிவிற்கு மேலும் வலிமை சேர்க்குமோ அவற்றை இறைவனே தேர்ந்தெடுத்துத் தருகிறான். ஒவ்வொரு சாதகனும், பக்தனும் எல்லா புத்தகங்களையும் படிப்பது முடியாததல்லவா? (நூல்களோ அநேகம், நமக்கிருக்கும் நேரமோ மிகமிகக் குறைவு). எனினும், அவரவருக்கு எந்த புத்தகம் தேவையோ, அது எப்படியோ மர்மமாக அவரவருக்கு வந்து சேர்கிறது! இறைவனே அவ்வாறு கொண்டுவந்து சேர்க்கிறார்; ஆனால். இந்த இரகசியத்தை அவர் நமக்கு எளிதில் வெளிப்படுத்துவதில்லை.

    மேலும், நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆசிரியரிடம் (குரு/ பள்ளி/ஆசிரமம்) செல்கிறோம், ஆனால், அங்கு ஒரு சமயத்தில் கற்கும் நூல் ஒன்றேயாயினும், அந்த ஆசிரியர் எப்படி கற்றுத்தருகிறாரோ, அதற்கேற்பவே நம் புரிதலும் அமைகின்றது. அனைத்திற்கும் மேலே, நாம் எதைப் படித்தோமோ அதைச் சரியாகப் புரிந்து கொள்வதும் (உள்ளிருந்து) இறைவனால் கொடுக்கப்படுகிறது. ஒரே ஆசிரியரிடமிருந்து ஒரே புத்தகத்தை பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரின் புரிதலும் வெவ்வேறுவிதமாக உள்ளது. இதற்குக்காரணம், இறைவன் எவ்வளவுக்கு புரியவைக்கிறானோ அவ்வளவுக்கு மட்டும்தான் ஒருவன் புரிந்துகொள்ள முடியும். நம்மால் உண்மைத் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறதென்றால், அது இறைவனது கிருபையாலேதான். நமக்கு அருமையான புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நூல்களை நன்கு கற்ற, ஆன்மீக விழிப்புணர்வை நேரடியாக அடைந்த, நேர்மையான அன்பான ஒரு குருவின் வழிகாட்டல் கிடைத்தால், பரம்பொருளைப் பற்றிய மெய்ஞானத்தை நாம் அடையப் பெற்றால், இவற்றுக்குக் காரணம் இறைவனுடைய கிருபையே என்பது திண்ணம். எந்தெந்த புத்தகங்களை நாம் படித்திட வேண்டுமோ, அந்தந்த புத்தங்களை நம்மிடம் அனுப்பி வைப்பது இறைவனே; அவரே நம்மை நம் குருவுடன் சேர்த்து வைக்கிறார்; அப்புத்தங்களை படித்து முடித்து குருவின் அறிவுரைப்படி நாம் நடந்த பின்னர், கடைசியில் உயரிய ஞானத்தையும் அவரே நமக்கு உணர்த்துகிறார்; அதாவது, அவரே நம்முள் மெய்ஞானமாகப் பிரகாசிக்கிறார். சாதகன் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்பொழுது, அவன் இதுவரை எந்த புத்தகத்தில் படிக்காததும், குருவிடமிருந்து கேட்காததுமான உண்மைத் தத்துவங்கள் பல எங்கிருந்தோ அவன் உள்ளத்தில் உதிப்பதை உணர்கிறான். இது சாதகர்களின் அனுபவம். அவ்வுண்மைகள் எங்கிருந்து வருகின்றன? படித்தவை/கேட்டவை வெளிப்படுத்தியதைவிட அதிக அளவில், குருவாகிய இறைவன் அவன் உள்ளிருந்து அரிய இரகசிய உண்மைகளை வெளிப்படுத்துகிறார். இப்படியாக, ஆன்மீக சாதனையின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதனையின் தொடக்கத்திலிருந்து இறுதியில் நாம் நிறைஞானியாகும்வரை -- இறைவன் நம்முடன் உறுதுணையாக இருந்து உதவி புரிகின்றார்.

    இறைவனே புத்தகமாகவும், குருவாகவும், ஞானமாகவும் வருகின்றார். புத்தகம் ஒரு ஜடப்பொருள் (insentient object -- அது அறிவு செறிந்த உயிரற்ற பொருள்.) அதில் அறிவானது தத்துவ வடிவில் உள்ளது. அதாவது, அறிவானது புத்தகத்தில் “இருப்பாக” இருக்கிறது (Exists); அதுவே ஸத் (இருப்பு எனும்) சொரூபம் ஆகிறது. அடுத்து, குரு (உயிருள்ளவர்) விழிப்புணர்வுள்ளவர் (Conscious being); அவரே அறிவின் திருவுருவம் (ஞானப் பெட்டகம்), அவருடைய நடைமுறை வாழ்வில் ஞானம் ‘பிரகாசிக்கிறது’. எனவே, குரு “சித்” (சைதன்யம்/ விழிப்புணர்வு) சொரூபம். மேலும், அவர் தன்னை ஞானமாக நம்மில் வெளிப்படுத்திக் கொள்ளும்பொழுது, நாம் ஞானசொரூபமாகவே ஆகி, ஆன்ம விடுதலையையும் பேரானந்தத்தையும் ஒரே சமயத்தில் அடைகிறோம்; இதுவே ஆனந்த சொரூபம். இவை ஞானத்தை (அறிவை) அடைவதற்கான படிப்படியான நிலைகள் – 1. புத்தகத்தில் இருக்கும் ஞானம் (வெளிப்படாது மறைந்திருக்கும் நிலை – Potential stage), 2. குருவிடமிருந்து வரும் ஞானம் (வெளித்தோன்றிய பிரகாசிக்கும் நிலை – Vibrant stage), மற்றும் 3. சுய-அனுபவமான ஞானம் (அநுபவ நிலை – Experience stage); ஞானத்தின் இருப்பு, ஞானத்தின் உணர்வு, மற்றும் ஞானத்தின் பேரின்ப நிலைகள், அதாவது ஸத்-சித்-ஆனந்த நிலை.

    இச்செய்யுள் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தையும் புகட்டுகிறது. இது நம் அகங்காரத்தை அகற்றிட உதவி செய்கிறது. நாம் பெற்ற கல்வியைப் பற்றிய, அல்லது அடைந்த ஆன்மீக ஞானத்தைப் பற்றிய அகங்காரம் விரும்பத்தக்கதல்ல. நாம் பெற்ற கல்வியும், அடைந்த ஞானமும் இறைவனால் தரப்பட்டவையேதவிர, நாமாகப் பெற்றவையல்ல. அதனால் இவைகளைப்பற்றி அகந்தை கொள்ள யாதொரு முகாந்திரமும் இல்லை. இவை நம்முடையதல்ல, இறைவன் அருளியவை. ஆகவே அவைகளைப் பற்றி நாம் கர்வம் கொள்வதற்கு முகாந்திரமேது? எனவே, நம்மிடம் இருக்கும் அனைத்தும் இறைவன் நமக்கு தந்தவைகளே என்ற உண்மையை எப்பொழுதும் மறக்காமல் நினைவில் இருத்தி விநயமுடன் வாழ இச்செய்யுள் உபதேசிக்கிறது.

    எத்தகைய புரிதலை இறைவன் நமக்குத் தந்தருளுகிறார்? வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தப்படாத புத்தக அறிவல்ல; ஆனால் வாழ்வாகவே இருக்கும் மெய்ஞானம் அல்லது ஆன்மீகப் புரிதலையே தந்தருளுகிறார். அப்புரிதல் நமது வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்ட, நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கடைபிடித்து அனுசரிக்கவேண்டிய, நடைமுறை அறிவு. அதுதான் என்ன? பெயர் மற்றும் உருவத்தில் பலப்பலவாக வேறுபட்டுத் தோன்றும் இவ்வுலகப் பொருள்களின் மீதுள்ள மதிமயக்கத்தை அறவே ஒழித்துக் (போக்கிக்) கொண்டு (பூமேல் மயல் போய்), ஸத் -சித்-ஆனந்தமான மெய்ப்பொருளாகிய உண்மைத் தத்துவத்துடன் இணைபிரியாது ஒன்றி இருப்பதுவே (அற மெய்ப் புணர்வீர்).

    எதனால் இவ்வுலகின் மீதான மதிமயக்கம் ஏற்படுகிறது? இந்த மயக்கத்திற்கு அவிவேகம் எனும் பகுத்தறிவின்மை (அ) உலகைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமையே காரணம். பெயர் மற்றும் உருவத்தினால் வேறுபடும் பொருள்களாலானது இவ்வுலகம்; எனவே இதை நாமரூப பிரபஞ்சம் என்று கூறுகிறோம். பொருள்களின் பின்புலத்திலுள்ள உண்மை தத்துவத்தைக் காணாமல், அவைகளின் பெயர் மற்றும் உருவங்களை (நாம-ரூப பேதம்) மட்டுமே காண்பது மதிமயக்கத்திற்கான காரணம். அதாவது, உண்மை தத்துவத்திற்கும் அதன் தோற்றத்திற்குமுள்ள வேறுபாட்டைக் காண இயலாமையே காரணம். பொருள்களின் நாமரூப வித்தியாசத்தால் அவற்றில் வெவ்வேறு மதிப்பைக் காண்பதால், பொருள்களின்மீது விருப்பமோ வெறுப்போ உண்டாகிறது. அதற்குப்பதிலாக, அவற்றின் பின்புலத்திலுள்ள சாரத்தை (அ) அதிஷ்டானத்தை காண்போமாகில், எவ்வித மதிமயக்கமும் ஏற்படாது. -- அபரிமிதமான விருப்பமோ, வெறுப்போ, முன்னுரிமையோ, அன்போ அல்லது பகைமையோ இருக்காது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஒரே மரக்கட்டையிலிருந்து பலப்பல வடிவங்களில் செய்யப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பூசப்பட்ட பொம்மைகள் – யானை, சிங்கம், குதிரை, பூனை, புலி, நாய், ஒட்டகம், முதலானவை – ஒரு குழந்தையின் முன்னே வைக்கப்பட்டால், அக்குழந்தை சில பொம்மைகளை விரும்பும், சிலவற்றை விரும்பாது. அதற்குக் காரணம், அது தான் பார்க்கின்ற உருவங்கள் மற்றும் அதன் பெயர்களை உண்மை என்று நம்புகிறது, அனைத்துப் பொம்மைகளும் ஒரே மரக்கட்டையிலிருந்துதான் செய்யப்பட்டவை என்ற அறிவு அதற்கு இல்லை. நாய் மற்றும் பூனை அதற்குப் பிடிக்கும், அவைகளை அன்புடன் தூக்கி, தன் மடியில் வைத்துக் கொள்ளும், கட்டியனைத்து முத்தமிடும், கொஞ்சி விளையாடிடும். அதே சமயம், சிங்கத்தைத் தொடக்கூட அஞ்சி பயப்படும். ஒவ்வொரு பொம்மையிலும் வெவ்வேறுவிதமான மதிப்பை, பயனைப் பார்ப்பதால் அதற்கேற்ப நடந்து கொள்ளும். ஆனால், வளர்ந்த பக்குவடைந்த மனிதனுக்கு அவைகளில் எந்த வேறுபாடும் தெரியாது. ஏனெனில், அவன் கண்களுக்கு அவைகளின் உருவங்கள் வெவ்வேறாகத் தென்பட்டாலும், அவ்வுருவங்கள் எதிலிருந்து உருவாயின என்பது தெரிந்திருப்பதால், அவனால் பெயர்கள்–வடிவங்கள் உருவாக்கும் பேதங்களை பொருட்படுத்தாமல் இருக்க முடிகிறது. (மரத்தை கண்டுகொண்ட) அவன் (அக்குழந்தை செய்ததுபோல) நாயை விரும்பி கொஞ்சவும் மாட்டான்; சிங்கத்தைக் கண்டு அஞ்சவும் மாட்டான். எனவே, பெயர்-உருவம் தரும் பேதத்தை மட்டும் (நாம-ரூபத்தை) காண்பதுதான் உலகிலுள்ள பொருள்களின் மேல் நம்மிடம் ஏற்படும் மயக்கத்திற்குக் காரணம்; உண்மையில் பார்த்தால் அவைகள் அனைத்துமே ஒரே மூலப்பொருளிலிருந்து பலப்பல வேறுபாடுகள் செய்து உருவானவையே. எல்லாத் தங்க நகைகளும் உண்மையில் வெறும் தங்கம்தானே; அவற்றில் தங்கத்தைத் தவிர வேறொன்றும் கிடையாதுதானே? வளையல், ஆரம், மோதிரம், என்று பலவாறு நாம் சூட்டும் பெயர்கள் அந்த நகைகளின் வடிவ வித்தியாசத்திற்கே அன்றி, அவற்றின் மூலப் பொருளான தங்கத்திற்கு அல்ல. வடிவத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களால் அந்த நகைகள் அழைக்கப்பட்டாலும், அவைகளின் மூலப்பொருள் தங்கமே, தங்கத்தையன்றி வேறொன்றுமில்லை. எனவே, அவை ‘தங்க நகை’ என்று அழைக்கப்படுகின்றன. மேலும், அவற்றின் பெயர்களில் உள்ள வேறுபாடு, அவற்றில் தங்கத்தைக் காண்பதில் எத்தடையும் செய்வதில்லை. அதைப்போலவே, இவ்வுலத்திலுள்ள பொருள்களின் நாம-ரூபங்கள், அவற்றின் சாரமான ‘ஸச்சிதானந்தத்தை’ கண்டு, அநுபவத்தில் உணர்வதற்கு எவ்விதத்திலும் தடையாக இருப்பதில்லை. இப்படியாக, பொருள்களின் பெயர்கள்–உருவங்களின் (நாம-ரூபங்களின்) மீதான மயக்கத்தைப் போக்கி, (“பூமேல் மயல் போய்”) அவைகளனைத்தின் ஆதாரமாயிருக்கும் ஸத் சிதானந்தத்தை உணர்ந்து, மனதை அதிலேயே ஸ்திரமாக (“அற”) நிலைத்திருக்கச் செய்தல் வேண்டும் (“மெய்ப் புணர்வீர்”). –– “பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்”.

No comments:

Post a Comment