செய்யுள் 21



செய்யுள் – 21


கருதா   மறவா   நெறிகாண   எனக்கு
இருதாள்   வனசந்தர   என்றிசைவாய்
வரதா   முருகா   மயில்   வாகனனே
விரதா   சுரசூர   விபாடனனே.

    பொழிப்புரை: "மயிலை வாகனமாகக்கொண்ட முருகப் பெருமானே! கேட்ட வரங்களை வழங்குபவரே! தன்னுடைய பக்தர்களைப் பாதுகாக்கும் விரதம் பூண்ட தேவனே! சூரபத்மனை வேலால் பிளந்தவனே! நான் நினைப்பும் மறப்புமற்ற நிலையான முக்தியையடைய தங்களின் இரண்டு பாதத் தாமரைகளை எனக்குத் தந்தருள என்று திருவுள்ளம் கொள்வீர்?”

விளக்கவுரை

    ஆத்மாவை தியானம்செய்து அதை உணர்ந்திடும் (அடைந்திடும்) வகையின் நுட்பத்தைக் குரு சாதகனுக்கு உபதேசம் (தீக்ஷை) செய்தருளினார். அந்த உபதேசம், ஆத்மாவை அடைந்திடும் தகுதியை அவனுக்குத் தந்தருளியது (செய்யுள்-2௦).

    குருவின் தீக்ஷையும், அதனுடன் வழங்கப்பட்ட மிகவும் ஆற்றல் கொண்ட சக்தியும், தான் கூடிய சீக்கிரமே இறைவனை அடைய வேண்டுமென்ற துடிப்பை அச்சாதகனிடம் ஏற்படுத்தியது. எனவே, அவன் தன் தியானத்தை மேலும் தீவிரப்படுத்தி, இவ்வாறு முருகப் பெருமானிடம் வேண்டுகிறான்: “கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய்?” ---- “நான் நினைப்பும் மறப்புமற்ற நிலையான முக்தியையடைய தங்களின் இரண்டு பாதத் தாமரைகளை எனக்குத் தந்தருள என்று திருவுள்ளம் கொள்வீர்?”

    ‘கருதா மறவா நெறி நெறிஎனும் சொல்லிற்கு பாதை’, ‘நிலை’, ‘மோட்சம் (முக்தி)’ என்று பல அர்த்தங்கள் உண்டு. எனவே, இங்கு கருதா மறவா நெறி என்பது முக்தி நிலையைக் குறிக்கும். கருதா மறவா நெறியும் ‘பாத கமலங்களும்’ ஒன்றே; இரண்டுமேமுக்திஎனப்படும் ஆத்ம விடுதலையைத்தான் குறிக்கின்றன. அதனால்தான் கருதா மறவா நெறிகாண, ‘இருதாள் வனசந்தர’ வேண்டுகிறான் அச்சாதகன். ‘இருதாள்’களே முக்தி, அவை முக்திக்கு வழி அல்ல. எனவே, அவைகளால் தரப்படும் ‘கருதா மறவா நெறியும் முக்தியாகத்தானிருக்க வேண்டும், முக்திக்கு வழியாக அல்ல.

    முக்தி என்பது பரமானந்த நிலை, இரண்டற்ற நிலை. அதில் இரண்டாவது பொருள் கிடையாது. அது ‘தன்னந்தனி நின்றது’ (செய்யுள்-49). எனவே அது ‘கருதா மறவா’ நிலை. அந்த நிலையில் கருதுவதற்கோ மறப்பதற்கோ வேறொன்றும் இல்லை. மேலும், அந்நிலையில் ஆத்மா (அ) சைதன்யம் தன்னிலேயே நிலைத்திருப்பதால், அது தன்னைப்பற்றி கருத வேண்டியதுமில்லை, தன்னை மறக்கவும் முடியாது.

    முக்தியென்பது எங்கோயிருக்கும் ஒரு இடமோ () குறிப்பிட்ட இருப்பிடமோ அல்ல; அது, எல்லா பந்தங்கள், தளைகள் மற்றும் வரம்புகளிலிருந்தும் ஆத்மா மொத்தமாக சுதந்திரம் பெற்ற நிலையாகும்; அது ஒரு முழுமையான (பூரண) உணர்வு நிலை; அகண்ட ஸச்சிதானந்தம், இரண்டற்ற நிலை. இந்நிலையில் சிந்திக்கவோ, மறக்கவோ இயலாது, ஏனெனில் சாதகனின் தனித் தன்மை (Individuality) இறைவனில் இரண்டறக் கலந்து, இறைவனாகவே ஆகிவிடுகிறது; ‘நானெனப்படும் அகங்காரம் மற்றும் என்னுடையது எனப்படும் மமகாரம் ஆகிய இரண்டும் நீங்கிய நிலையே, ‘இறைவன் பாதங்கள்’ () மோட்சம் என மறைகள் குறிப்பிடுகின்றன. ஆகவே, இறைபாதங்கள் முக்தியை அடைவதற்கான ஒரு வழியல்ல; அவையே முக்தி. பதினெட்டாம் செய்யுளில், பகவான் சிவனார் (பரம்பொருள்) உணரா மறவாஎன குறிப்பிடப்படுகிறார்; அதுவே இச்செய்யுளில் கருதா மறவாஎனறு குறிப்பிடப்படுகிறது.

    18-ம் செய்யுளில் மேற்கொள்ளப்பட்ட இறை-தியானம் ஞானப் பாதைக்குரியது; அதுவே பக்திப் பாதையான இறை-பிரார்த்தனை மூலம் இச்செய்யுளில் பலப்படுத்தப்படுகிறது. ‘கருதா மறவா நெறி ஞானப் பாதையையும், ‘இருதாள் தந்தருளுதல்’ பக்திப் பாதையையும் குறிக்கின்றன என்று சொல்லலாம். இப்படியாக, சாதனையின் துவக்கத்தில் தோளொடு தோள் இணைந்து செயல்படத் துவங்கும் பக்தியும் ஞானமும், பின்னர் சாதனை நன்கு முன்னேற முன்னேற, அவை ஒன்றோடொன்று ஐக்கியமாகிக் கொண்டே போகின்றன.

    புலன்களால் உணரப்படும் இவ்வுலகில், நாம் பெற்றிடும் அனுபவங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று எதிர்மாறான ஜோடிகளால் நிர்வகிக்கப் படுகின்றன. அனைத்துமே ஜோடிகளாய் உள்ளன. நல்லது – கெட்டது, வெளிச்சம் – இருட்டு, அறியாமை எனும் அக்ஞானம் – அறிவு எனும் ஞானம். பிறப்பு – இறப்பு, விருப்பு – வெறுப்பு, பகல் இரவு, நல்லொழுக்கம் தீய ஒழுக்கம், எண்ணுதல் – மறத்தல், என்று பட்டியலை மேன்மேலும் அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்கோர் முடிவென்பதில்லை. ஏன்? இவ்வுலகமோ வெறுமே புலன்களால் உணரப்படுவது () சார்புடையது. நாமோ கால-தேச, இடம்-நேரம் ஆகிய வரையறைகளுக்குட்பட்ட உயிரினங்கள். நமக்கு வரையறையற்ற நிலை என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், இறைவன், முக்தி, ஆன்ம விடுதலை, அறுதியுண்மை, சித் எனப்படும் தூய உணர்வு, ஆகியவைகளெல்லாம் எவ்விதமான வரையறைகளுமற்ற நிலைகள், துவந்தங்கள் எனப்படும் மேற்கண்ட எதிர்மாறான ஜோடிகள் இவைகளில் கிடையாது. நெருங்கவும் முடியாது. ‘இறைபாதங்கள்’, ‘முக்தி’, ‘நினைப்பும் மறப்புமற்ற நிலை’ ஆகியவைகளைப் பெற இச்செய்யுளில் செய்யப்படும் பிரார்த்தனை இத்தகைய ‘வரையறையற்ற இருப்புநிலையை’ அடைவதற்கே.

    இச்செய்யுள் மற்றும் 35-ம் செய்யுளில், பாத தாமரைகளைத் தந்தருள வேண்டி செய்யப்படும் பிரார்த்தனை, பின்னர் செய்யுள்-44இல் பூர்த்தி செய்து வைக்கப்படுகிறது. மேலும் ‘பாதங்கள்’ என்பது ‘முக்தி நிலை’ என்பதும் அங்கு உறுதிப் படுத்தப்படுகிறது. செய்யுள்கள் 42, 43, 44 – ‘முக்தி நிலை’ அல்லது ‘ஆத்ம அனுபூதி நிலை’ யை வெளிப்படுத்துகின்றன.

    அச்சாதகன் முருகப் பெருமானிடம் அவரது இரு தாள்களையும் தனக்கு தந்தருளுமாறு பிரார்த்திகிறான். பெருமானின் தாள்கள் என்பது பெருமானேதான். தாள்களை அருளுவதும், முக்தி (இறை உணர்வு) அடைவதும் ஒன்றேதான். நமக்கு, இறைவன் வழிபாடோ தியானமோ செய்யப்படும் பொருள். இவ்விரண்டிலும், அவர் நம்மைத் தவிர வேறானவர், நம்மிலிருந்து வேறு பட்டவர், நம்மிலிருந்து தனியானவர், அந்த அவருக்கு நாம் வழிபாடுகள் செய்கிறோம், அவரை நினைத்து தியானமும் செய்கிறோம். அவரை ஒரு பொருளாக்கி (உருவகப்படுத்தி), நாம் வழிபாடும் தியானமும் செய்கிறோம். ஆனால், அவ்வழிபாட்டிலும்/ தியானத்திலும் நாம் பிரார்த்திப்பதோ ‘அவர் நம்முடன் ஒன்றிட வேண்டும்’, ‘அவர் தன்னை நம்மிடம் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்’, ‘அவரின் இரு தாள்களை நமக்குத் தந்தருளுள வேண்டும்’, ‘அவரையே நமக்கு அளித்திட வேண்டும்’, என்பதுதான். இப்பிரார்த்தனைகள் அனைத்தும், இறைவனின் உருவநிலைக்கு நேரெதிரான உருவமற்ற முக்தி நிலையைப் பெறுவதற்காக இருக்கிறதல்லவா? இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால் இறைவன், அவரின் இரு பாதங்கள், முக்தி, ஆகிய எல்லாம் ஒன்றே என்பதுதான்.

    கருதா மறவா நெறியும் இருதாள் வனசமும்”: நாம் இறைவனைப் பல்வேறு விதமாக வழிபடுகிறோம், தியானிக்கிறோம் --- நாம் விக்கிரக பூஜை செய்வதுபோல, அவர் நமது இதயத்தில் அமர்ந்திருப்பது போல, நம் முன்னால் அவர் நிற்பது போல, இவ்வாறு பற்பலவிதமாக அவரை தியானிக்கிறோம், ‘சிந்திக்கிறோம்’; இது ‘கருதுதல்’, அதாவது, நாம்வேறு அவர்வேறு என கருதுகிறோம். ஆனால், இச்செய்யுளில் “கருதா மறவா நெறிகாண” வேண்டப்படுகிறது. நாம் செய்யும் தியானம், வழிபாட்டில் இறைவனைச் ‘சிந்திக்கிறோம்’, அதாவது அவன் வடிவம், பெயர் சார்ந்த சிந்தனைகள் இருக்கின்றன; அவனுடைய உண்மை சொரூபம் பற்றிய தியானமில்லை. அதனால், இவை அந்த உயரிய (முக்தி) நிலையை அடையப் போதுமானதல்ல. பின் எப்படி அந்நிலையை அடைவது? இறைவனை இறைவனாகவே, அதாவது பகுக்கப்படாத (பெயர்-உருவமற்ற) பரம்பொருளாகத் தியானம் செய்ய வேண்டும். எப்படி? இறைவன் அனைத்திலும் உயரியவர், அவரே முழுமையானவர், அவரே எங்கும்-எதிலுமிருக்கும் இருப்பு, நாம் உட்பட அனைத்தும் இறைவனில் அடக்கம், அவர் அகண்டாகாரம், இரண்டற்றவர் -- இவ்வாறெல்லாம் அவர் தியானிக்கப்பட வேண்டும். இவ்வாறு பலகாலம் தீவிரமாகத் தியானம் செய்யப்படும்பொழுது, தியானம் ஆழமாக ஆழமாக, தியானிக்கும் தனி உணர்வு (சிற்றுணர்வு – Individuality) பரம்பொருளான பேருணர்வில் தன்னை இழந்துவிடுகிறது. ஜீவாத்மா பரமாத்வாவில் லயித்துவிடுகிறது. எப்படி ஒரு அலையானது, கடலின் ஆழத்தை அறியவிரும்பிக் கடலில் மூழ்கினால், அதனுள் ஆழ்ந்து தன்னை இழந்து, கடலாகவே ஆகிவிடுமோ, அப்படியே பகுக்கப்படாத இரண்டற்ற பரம்பொருளாக இறைவனை தியானிக்கும் ஜீவனும் அப்பரம்பொருள் தத்துவத்தில் கரைந்து விடுகிறது. அலை, கடலின் ஒரு தோற்றம், ஒரு பகுதி; இரண்டும் தண்ணீர்தான்.. அதேபோல் ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஒரு தோற்றம், ஒரு பகுதி; இரண்டும் சைதன்யமே. இப்படியாக, ஜீவாத்மா பரம்பொருளில் கரைந்துவிடும் பொழுது, ஜீவன் என்ற ஒன்று இருந்தால்தானே, அதனால் சிந்தனை செய்யவோ, மறக்கவோ இயலும்? எஞ்சி இருப்பது ------ “வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே” பரமாத்மா மட்டுமே, தன் அருமை பெருமையுடன் எங்கும் நிறைந்த சந்நிதானமாய், ஸச்சிதானந்தமாய் இருக்கிறது. தனி மனிதத்வம் (ஜீவத்வம்) என்பது இல்லாமல் போய்விடுகிறது. இது முக்தி நிலை. நான்’ எனப்படும் அகங்காரம் மற்றும் என்னுடையதுஎனப்படும் மமகாரம் ஆகிய இரண்டும் நீங்கும் இந்நிலையையே, ‘இறைவன் பாதம் (தரிசனம்) வழங்குகிறதுஎன மறைகள் குறிப்பிடுகின்றன. அப்படியாக, இறை-பாதங்கள் வழங்கப்படும்பொழுது, அதாவது தன்னில் (ஜீவனில்) தானாக (இறைவனாக) தோன்றும்பொழுது, தனித்தன்மையான ஜீவத்வம் மறைகிறது அதாவது, ‘நான்’, ‘எனதுஎன்ற அகம்பாவமும், மமகாரமும் அழிபடுகின்றன. இவ்வாறு ஜீவபாவம் அழிபடும்பொழுது, கருதும், மறக்கும் நிலைகள் கடக்கப்பட்டு (Transcended), கருதா மறவா நிலையில், ஜீவன் தன் ஆதாரமான இறைவனில் ஐக்கியமாகிறது, இந்நிலையே முக்தி (ஆன்ம விடுதலை) எனப்படுகிறது. அதனால்தான், கருதா – மறவா நிலையை அடைய (இது அறிவெனும் ஞானமார்க்கம்) இறைவனின் பாதபத்மங்களை வழங்குமாறு (இது பூஜா முதலிய பக்தி மார்க்கம்) சாதகன் பிரார்த்தனை செய்கிறான். எனவே, பக்தியினால் எந்நிலை அடையப்படுகிறதோ, அதுவே ஞானத்தினாலும் அடையப்படுகிறது; ஆகவே, இந்நிலையில் இரண்டும் ஒருங்கிணைந்து ஒன்றாகிவிடும். ஒன்றை அடைவதால், மற்றொன்றும் அடையப்படுகிறது. இரண்டு மார்க்கத்தினாலும் அடையப்படும் குறிக்கோள் (நிலை) ஒன்றே. ‘பரா பக்தி’ மற்றும் ‘ஞானம்’ ஆகிய இரண்டும் ஒன்றுதான், என்கிறார் சுவாமி சிவானந்த மகராஜ். அச்சாதகன், பக்தர்களுக்கு வேண்டியதை வேண்டியவாறு தந்தருளும் முருகப் பெருமானிடமிருந்து இக்கிருபையை வேண்டுகிறான்.

    மயில் வாகனான முருகப் பெருமான் வரங்களை அளிப்பவர். பெருமானிடம் வேண்டப்படும் பிரார்த்தனைகள் உளமார்ந்ததாக இருப்பின், கேட்டது கேட்டபடியே கிடைக்கும்.முருகப் பெருமான் பக்தர்களுக்கு சுலபத்தில் வரம் தந்து அருளுபவர். உளமார்ந்த பிரார்த்தனைகள் வீண்போவதில்லை; கண்டிப்பாய் அவர் அருளுகிறார். அவரே மயில்வாகன முருகப்பெருமான், அழியாத அழகு படைத்தவர், என்றும் இளமையானவர்.

    முருகப் பெருமானுடனிட்ட போரில், சூரபத்மன் இறுதியில் ஒரு பெரும் மாமரமாகி நின்று போரிட்டபொழுது, பெருமான் தன்னுடைய கூரிய வேலாயுதத்தால் அதனை இரு கூறாகப் பிளந்தார். உடனே, சூரபத்மன் தன்னுடைய சுய அசுர உருவத்தை எடுத்தான். அதையும் அவ்வேல் இரு கூறாகப் பிளந்து, இரண்டு கூறுகளையும் கடலில் எறிந்தது. முருகப் பெருமானின் கூரிய வேலாயுதத்தால் மட்டுமே இச்செயற்கரிய செயலை செய்திட முடிந்தது. அதனால், அவர் அதிபயங்கரமான சூரபத்மனை அழித்தவர் என போற்றப்படுகிறார்.
    

No comments:

Post a Comment