செய்யுள் 27



செய்யுள் – 27


மின்னேநிகர்   வாழ்வை   விரும்பிய யான்  
என்னே   விதியின்   பயன்   இங்கிதுவோ
பொன்னே   மணியே   பொருளே   அருளே
மன்னே   மயிலேறிய   வானவனே.


    பொழிப்புரை: “ஓ பெருமானே! தாங்கள் பொன்போல அருமை வாய்ந்தவர், மாணிக்கம் போன்று பிரகாசிப்பவர், மெய்ப்பொருள் தத்துவம், (முக்தியளிக்கும்) அருளே வடிவானவர், சர்வ-லோக அரசர், மயில் வாகனனான தேவாதி தேவன். (தாங்கள் இவ்வாறாக இருந்தும்) மின்னலைப் போன்று தோன்றி மறைந்திடும் இந்த உலக வாழ்க்கையை நான் விரும்பியது, என்ன ஆச்சரியம்! இது எனது தலை விதியின் பயன்தானோ!
    
விளக்கவுரை

    “மின்னல் போன்று தோன்றி மறையும் இவ்வாழ்க்கையை நான் விரும்பியதேன்? இதற்குக் காரணம் எனது விதியின் பயன்தானோ?” - என்றெல்லாம் சாதகன் வியப்புறுகிறான். நமது தற்போதைய வாழ்க்கை, நாம் விரும்பி, கேட்டுப் பெற்ற ஒன்று. இந்த வாழ்க்கை நமது விதியின் பயன்’. கர்மாவின் தாக்குதல்கள் ஏற்படுத்திய கொடூரங்களை பலகாலமாக அநுபவித்த காரணத்தால் (செய்யுள்கள் – 23 லிருந்து 26 வரை), அச்சாதகன் விதிக்கு () கடந்தகால கர்மங்களுக்கு (‘வெவ்வினை’ செய்யுள் 25) இருக்கும் பேராற்றலை அபரிமிதமான சக்தியை -- மிகவும் நன்றாக உணர்ந்து கொள்கிறான். பழைய ஜன்மங்களில், அவிவேகத்தினால் பொருள்களின் உண்மைத் தன்மையைப்பற்றிய ஒரு சரியான புரிதலை கொண்டிராததால், அவன் புலன்-விஷய நுகர்ச்சி, இன்ப நாட்டம், பணம்- சொத்து ஆகியவற்றின் மீதான தனது தீராத தாகத்தைத் தணிக்கும் முயற்சியில் மாயைப் பொருள்களான கானல்நீர் பின்னால் ஓடித் திரிந்தான். அந்த ஆசைகளும், வீண் முயற்சிகளும் சேர்ந்து, அவனுடைய அறியாமையை (சம்ஸ்காரங்களின் மூட்டையை) பலப்படுத்தி, அதன் கர்ம-வினைப்பயனாக அவனை பலவிதங்களிலும் தொல்லைக்கு உள்ளாக்கி வந்தது. இவ்வளவு நாள் அவைகளை அனுபவித்தபின், அவன் தனது கஷ்டங்களுக்கான காரணங்களை இப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டுவிட்டான்; அதேசமயத்தில், அவனைத் துன்புறுத்தி வந்த சம்ஸ்காரங்களின் (வினைப்பயன்களின்) காலமும் அதன் முடிவடையும் தறுவாய்க்கு தற்போது வந்திருந்தது. எப்படி தடித்த, பரந்த, கரிய முகில்கள் சூரியனை மறைத்திடும்பொழுது இருள் சூழ்ந்து, இரவு போன்று தோன்றச்செய்து, பின்னர் அவை விலகத் துவங்கும்பொழுது வெளிச்சம் சிறிது சிறிதாகப் பரவத் துவங்குகின்றதோ, அப்படியே பல காலமாக அச்சாதகனை துன்புறுத்தி வந்த பழைய கர்மங்கள் முடியப்போகும் தறுவாய்க்கு வந்தபோது, அவனுடைய தியானத்தில் பலமும் புகழும் வாய்ந்தப் பெருமானுடைய காட்சியும் இலேசாகத் தெரியத் துவங்குகிறது. கூடிய விரைவில் ஞானசூரியனான பெருமானும், முழுமகிமையுடன் (தியானத்தில்) பிரகாசிப்பார். எனவே, அவன் வியந்து கூறுகிறான்: “ஓ பெருமானே, எனது விதி () கர்மவினையின் ஆற்றல் எவ்வளவு மர்மமாக உள்ளது பாருங்களேன்; அது என்னை மின்னல் போன்ற இந்த நிலையற்ற வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுக்க வைத்து, இவ்வுலக விஷயங்களில் விருப்பம் இல்லாமலிருந்தும்கூட ஆர்வம் கொள்ளச் செய்து விட்டது! என்றாலும், தங்கள் கிருபையால் அவை இப்பொழுது முடிவடையும் தருணத்திற்கு வந்து விட்டன. வாழ்க தங்கள் கிருபையும் மகிமையும் ---- பொன்னே, மணியே, பொருளே, அருளே!”

    “மின்னே நிகர் வாழ்வு”வாழ்வு மின்னல் போல நிலையற்றது. முந்தைய ஜன்மங்களில், அச்சாதகன் விவேகம் எனப்படும் உலகைப் பற்றிய சரிதான புரிதல் இல்லாமலிருந்தான், இப்பொழுது அவனால் சரியான கோணத்தில் பார்க்க முடிகிறது இந்த வாழ்க்கை நிலை இல்லாதது. இங்கிருக்கும் அனைத்துமே தோன்றி மறையும் தன்மையைக் கொண்டவை. மாறுவதென்பது இவ்வுலகத்தின் நியதி. மின்னல், தோன்றிய நொடிப்பொழுதிலேயே மறைவதைப்போல, வாழ்வும் வந்து போகிறது. எப்படி உணரப்படுவதற்கு முன்னரேயே, மின்னல் மறைந்து விடுகிறதோ; அவ்வாறே, இந்த (மனித) வாழ்க்கையும் நிச்சயமற்றது. இப்பொழுது இருக்கிறது போல் இருந்து, இப்பொழுதே மறைகிறது. இக் குறுகிய, நிச்சயமற்ற வாழ்க்கையும், ஒவ்வொரு தருணத்திலும் நோய், துன்பம், பதட்டம் ஆகியவைகளால் நிரம்பியதாகத்தான் இருக்கிறது. நம் கண் முன்னரே பொருள்களும் மனிதர்களும் அழிவதைத் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், இருந்தாலும் அவைகளிலிருந்து இன்பம் பெறலாமென்று ஆசை (வீண் நம்பிக்கையைக்) கொண்டு, அவைகளை விட்டுவிடாமல் வெகு கெட்டியாகப் பிடித்துக் கொண்டுதானிருக்கிறோம். நமது உடல் கூட வியாதி, தேய்வு, மரணம் ஆகியவைகளுக்கு உட்பட்டது; இவ்வுலகப் பொருள்களும் விரைவில் அழியக்கூடியது; ஒன்று நாமே இறந்து போய்விடலாம், அல்லது அவைகள் சொல்லிக்கொள்ளாமலேயே எந்நேரத்தில் வேண்டுமானாலும் நம்மைவிட்டுக் கிளம்பி விடலாம். இவ்வாறெல்லாம் தோன்றி மறையும் தன்மை படைத்தது இவ்வாழ்க்கை என உணராது, சாதகன் தன் முந்தைய பல ஜன்மங்களாக மயக்கத்தில் ஆழ்ந்து, அவைகளின் பின்னர் வெகுவாக ஒடி, கெட்ட கர்மங்கள் பலவற்றைச் செய்தான் (தன் கணக்கில் பாவங்களை உருவாக்கினான்). ஆனால், இப்பொழுது சரியான புரிதல் (செய்யுள் -17), மற்றும் குருவின் உபதேசம் (செய்யுள் -20), ஆகியவை கிடைத்தபின், தானே முன்னர் செய்த கர்மங்கள் எவ்வாறெல்லாம் தன்னை துன்பத்தில் மூழ்கச் செய்கிறது என்பதை சாதகன் நன்கு அறிந்து கொள்கிறான் (செய்யுள்கள் -23 முதல் 26 வரை). இவ்வாறாகத் தான் படும் துன்பங்களுக்குத் தானே காரணமென்று சாதகன் உணர்ந்து, அதனுடன் சமரசம் செய்து, அதை தனது விதியென்று பெரிய மனம் கொண்டு ஏற்றும் கொள்கிறான்; மேலும், இந்த விதியின் பிடியிலிருந்து விலகிச் செல்வதற்கான ஒரே வழி அருள்மயமான, கருணைக் கடலான முருகப் பெருமானைச் சரண் அடைவதுதான் என்றும் அவன் அறிகிறான்.

    எனவே, நம் பிரச்சனைகளுக்கு நாமே காரணம்; பிறரைப் பழி சொல்ல வேண்டியதில்லை என்பதைச் சாதகன் புரிந்துகொள்கிறான். தானிருக்கும் கொடூரமான சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்து அருள்புரியுமாறு இறைவனிடம் கெஞ்சுகிறான். இவ்வாறு அவன் மறுபடியும் மறுபடியும் (முன் செய்யுள்களில்) பிரார்த்தனை செய்துகொண்டே இருந்திருக்கிறான். கடைசியாக, இச்செய்யுளில், “பொன்னே, மணியே, பொருளே, அருளே” என்று இறைவனைப் புகழ்கிறான். இவையெல்லாம் வெகுகாலம் நீடித்திருக்கும் இயல்பு கொண்டவை. இவை மின்னல் போன்று தோன்றிமறையும் இயல்பு கொண்ட மனித வாழ்க்கைக்கு நேர்எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. இது, அவனது கதியற்ற நிலையையும் சரணாகதியையும் வெளிப்படுத்தும் மிக சக்தி வாய்ந்த இறைவனின் அருளை ஈர்க்கும் பிரார்த்தனை.

    சாதகனின் துன்பகரமான, மிக மோசமான நிலையை 23 லிருந்து 27 வரையான செய்யுள்கள் விவரிக்கின்றன. பழைய கர்மங்களின் சுவடுகள் (சம்ஸ்காரங்கள்) ஆழமாக வேரூன்றியிருந்த அறியாமையிலிருந்து கிளம்பி, நனவு நிலைக்கு மேலெழும்பி வந்து, தன் முழுஆற்றலை வெளிப்படுத்தும்பொழுது, அது எந்த அளவிற்கு ஒருவனை தொந்திரவு செய்ய வல்லது என்பதை அவன் நன்கு உணர்கிறான். அவன் எந்த அளவிற்கு கதியற்றவனாகிவிட்டான் என்பது, சென்ற நான்கு செய்யுள்களில் (23-27), மூன்றில் இறைஅருளை அவன் வேண்டியிருப்பதிலிருந்து புலப்படுகின்றது. அதிலும் முக்கியமாக கந்தர் அநுபூதி நூலிலேயே இந்த இரு செய்யுள்களில் (26 & 27) மட்டுமே, தொடர்ச்சியாக (ஒன்றன்பின் ஒன்றாக வரும் செய்யுள்களில்) சாதகன் இறைவனிடம் ‘அருள்’ வேண்டி மன்றாடுகிறான். அவனுடைய உதவியற்ற விரக்தி நிலையும், அவன் இறைவனின் கிருபையை அடையத் துடிக்கும் நிலையம் இதிலிருந்து தெரிய வருகிறது. மேலும், இது, அவனது வைராக்கியம் முதிர்ச்சியடையத் தொடங்குகிறது என்பதையும் தெரிவிக்கிறது. (அவனுடைய வைராக்கியம் முதிர்ந்து பக்குவமடைந்ததை செய்யுள்- 33ல் காணலாம்.)

    இறைவன், தன் கிருபையை அருளுவதற்கு ஏன் இத்தனை கால தாமதம் செய்ய வேண்டுமென்று நாம் வியக்கலாம். இறைவன் அவ்வாறு செய்வதற்குச் சில காரணங்கள் உள்ளன:

  1. அறியாமையிலிருந்து வெளிப்பட்டுச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கர்ம-விளைவுகள் அனைத்தும் சோர்வடைந்து கரைந்துவிட வேண்டுமென்று அவர் நினைப்பது.
  2. சாதகனின் சரணாகதி முழுமையானதாக ஆகவேண்டும், அதற்காக அவனை அநாதையாக்கி, அவன் அனுபவிக்கும் துன்பங்களின் கடைசிக் கட்டத்தை அடையச் செய்ய வேண்டும். கடினமாக உழைத்து சம்பாதித்த சொத்து மட்டுமே மதிக்கப்படும். இறை-கிருபையும் அது போன்ற ஒன்றுதான். எனவே, இறைவன் தன் கிருபையை அருளுவதற்கு முன்னர், செயல்படத் தொடங்கிவிட்ட கர்மங்கள் அனைத்தும் முற்றுப் பெறட்டும் என்று காத்திருக்கிறார். இறைவன் தனக்குக் கட்டாயம் தன் கிருபையை அருளுவாரென்ற நம்பிக்கையுடன் சாதகனும், எல்லாப் பிரச்சினைகளுக்கும் இடையில், அவனது தடுமாறும் தியானப் பயிற்சியை விடாமல் தொடர்கிறான்.

    இச்செய்யுளில், அவசியம் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. சாதகன் அருளை வழங்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லை; பதிலாக, இறைவனை அருளேஎன்று அழைக்கிறான் --- பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயிலேறிய வானவனே என்று அழைக்கிறான். இறைவனே அருள். அவர் அருள் நிறைந்தவர்; அருளே உருவானவர்; கருணாகரன். அவ்வாறாகவே அவர் அழைக்கப்பாடும்பொழுது, அவர் எப்படி மேலும் தாமதம் செய்திட முடியும்? அந்தோ! என்ன விந்தை!. கருணைக்கடலான முருகனே தன் கிருபையை ஒரு இடைவிடாத மழை போல் சாதகன் மீது பொழியப் போவதை, அடுத்த செய்யுளில் நாம் பார்க்கத்தான் போகிறோம்!

    இறைவனின் உண்மை சொரூபத்தைப் பற்றிய போதிய ஞானம் இல்லாமையினால், மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகை நாம் உண்மையென்று எண்ணி, அதன் பின்னே செல்கிறோம். இறைவனின் உண்மை சொரூபம் என்ன? அது, “பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே.” அவர் மட்டுமே மதிக்கத்தக்க (என்றுமே அழியாத) பொருள்; இவ்வுலகப் பொருள்களெல்லாம் அழியும் தன்மையைக் கொண்டவை. மிக அரியதும், உள்ளார்ந்த மதிப்பு கொண்டதும், சுயமாகப் பிரகாசிப்பதும், நீடித்து இருக்கும் தன்மைகளைக் கொண்டதுமான பொன்னைப் (தங்கத்தைப்) போன்றவர் அவர். நவரத்தினத்தில் ஒன்றான மாணிக்கம் போன்று சுயமாக ஒளிரும் தன்மை படைத்தவர். அவரே அனைத்தின் ஆதாரமான அந்தப் பரம்பொருள், உண்மை தத்துவம். இதற்கெல்லாம் மேலே, அவர் கருணையின் மொத்த உருவம், அன்பின் வடிவம், கிருபையின் ஸ்தூல வடிவம், கருணைக்கடல், கருணாமூர்த்தி, கருணாகரன், அன்பழகன். பிரபஞ்சப் பொருள்களோ அழியும் தன்மை படைத்தவை, ஆனால் அவரோ இப்பிரபஞ்சத்தின் நிரந்தர மன்னன் (மன்னர்களுக்கெல்லாம் மன்னன்). உண்மை பக்தர்களுக்கு உடனுக்குடனே ஆசிகளை வழங்கி அருளுவதற்காக, விரைந்து பறந்து செல்லும் மயிலைத் தன் வாகனமாகக் கொண்டவர்.

    பல ஜன்மங்களாகவே மிகுந்த ஆவலுடன் உலகப் பொருள்களின் பின்னால் தானாகவே விரும்பிச் சென்று, அவைகளை ஆண்டு அநுபவித்து வாழ்ந்த சாதகன், இப்பொழுது ‘எனக்கு அவைகள் தேவையில்லை; எனக்கு இறைவன் மட்டுமே வேண்டும்’ என்று சொல்வதால் அவைகள் அவனை விட்டு விலகிவிடுமா என்ன? விலகவே விலகாது. நாம் முன்னர் வேண்டுமென்று விரும்பி, அவைகளின் பின்னால் சென்று அவைகளுக்கு அடிமையாகிவிட்டதனால், இப்பொழுது அவைகளை வேண்டாம் என்று நாம் ஒதுக்க நினைத்தாலும், அவைகள் நம் மீது கொண்டுள்ள பிடிப்பை சிறிதுகூட தளர்த்துவதில்லை. தாங்கள் உலகப் பொருள்களை ஒதுக்கிவிட்டு உண்மையான அன்புகொண்டு இறைவனை அடையக் கடும் முயற்சி செய்து வந்தபோதிலும், உலகப் பொருள்களின் தாக்கமும், துன்பமும். பாதிப்புகளும் தங்களைத் தொடர்வது ஏன் என்று புரிந்துகொள்ள முடியாமல் பெரும்பாலான பக்தர்களும், சாதகர்களும் வியக்கின்றனர். இறைவனிடம் உண்மையாகவே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு, அவரை நேர்மையுடன் தேடி (நாடி) வரும் பக்தர்கள், தங்களுக்குள்ளே உலகின் மேல் ஒரு புரிந்துகொள்ள முடியாத வேட்கை, நுட்பமான ஆசைகளின் வடிவத்தில், இருக்கும் ஒரு விசித்திரமான நிலையை உணர்கிறார்கள். ஆனால், அவர்களால் அதன் காரணத்தை அறிய முடிவதில்லை. இந்த புதிருக்கான விடையை அருணகிரியார் (இலைமறை காய்போல்) இங்கு குறிப்பிடுகிறார். முன்னர் அவர்கள் மிகவும் விரும்பி நேசித்து அடைந்து ஆண்டு அநுபவிக்க விரும்பிய பொருள்கள், இப்பொழுது அவர்கள் அவைகளை விரும்பவில்லை என்றாலும், அவர்கள் முன்னே தோன்றி அவர்களை ஆட்கொள்ள முயல்கின்றன. இதுவே (இதை அறியாததே) அந்த பக்தர்களின் தற்போதைய துன்பத்திற்குக் காரணம். ஆனால், இதை குறிப்பிடும் அருணகிரியார், அதனோடு ஒரு பெரும் இரகசியத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறார். ‘முன்னர் அவன் அவைகளை தீவிரமாக விரும்பியதால், இப்பொழுது அப்பொருள்கள் அவனிடம் வந்து சேர்கின்றன; அதேபோல், இப்பொழுது அவன் அவைகளை விரும்பாததால், அவைகளைக் கொண்டுவந்த சக்திகளின் வலிவு தீர்ந்தவுடன், அவைகள் தாமாகவே அவனை விட்டு விலகிப் போய்விடும்’ என்பதுதான் அந்த இரகசியம். எனவே, தற்போதைய சிரமங்கள், அவன் இறைவனைத் தேடும் முயற்சியில் தடை செய்ய விடக்கூடாது. முன்னர் நாம் விரும்பிய பொருள்கள் இப்பொழுது தானே நம்மிடம் வருவதுபோல, இப்பொழுது நாம் மனப்பூர்வமாக அடைந்திட முயற்சிக்கும் இறைவனும், ஒருநாள் நாம் அவரை அடையும் பாக்கியத்தை அருளத்தான் செய்வார். நாம் இறைவனை அடைந்திடும் ஏக்கத்துடன் கடும்முயற்சி செய்து வந்தால், கடவுள் நமக்கு நிச்சயம் ஒருநாள் அருளுவார் என்ற ஒரு உத்தரவாதம் இதில் புதைந்திருக்கிறது. இது திண்ணம்; இதுவே அந்த இரகசியம். நாம் உண்மையிலேயே இறைவனை விரும்பும்பொழுதுகூட, இந்த நிலையற்ற உலகத்தின் தொடர்ந்த பாதிப்புகள் நம்மை துன்புறுத்தக்கூடும்; ஆனால், அவை நம்மை அதையரியப் படுத்தக்கூடாது. மாறுதலாக, அதே சமயம், இந்த உத்திரவாதத்தை நினைவில் கொண்டு, (அதாவது இறைவனை அடைவது நிறைவேறுமென்பதை அந்த நியதி/ விதி (சட்டம்) உறுதியளிக்கின்றதை நினைவில் கொண்டு) நாம் இறைவனை அடைந்திடும் முயற்சியில் மேலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். தைரியமிழந்து, மனம் தளர்ந்து நிற்கும் சாதகர்களுக்கு எத்தகையதொரு ஊக்கம் இங்கு தரப்படுகிறது என்று பாருங்கள்!

    ஆகையால், இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமற்றது என்பதை உணர்ந்துகொண்டு, நாம் நமது கவனத்தை பரமாத்மாவும், நித்திய உண்மையும், கருணைக் கடலும், தன்னை சரணடைந்தவருக்கு உதவ எப்பொழுதும் தயாராக இருப்பவருமான அந்த இறைவனின்பால் திருப்ப வேண்டும். அப்பொழுது, உலகம் நம்மை பாதிப்பதை (கட்டுப்படுத்துவதை) விரைவில் நிறுத்திவிடும். மீண்டும் மீண்டும் நம்மை நித்தியமற்ற இவ்வுலக வாழ்க்கைக்கே திருப்பியனுப்பும் கர்ம விதியின் பிடியிலிருந்து தப்பித்திட நமக்கிருக்கும் ஒரே வழி இறைவனிடம் சரணாகதி செய்வதேயாகும். ”ஓ பெருமானே! நிலையற்ற இவ்வாழ்வை நிலையானதெனக் கருதி இப்பொழுது நான் அடைந்து கொண்டிருக்கும் துன்பங்களுக்கு, எனது தலைவிதிதான் காரணமா?” ----- சாதனை செய்து ஆன்மீகத்தில் கணிசமான முன்னேற்றமடைந்த பின்னரும், இப்படிப்பட்ட சோர்வு மனப்பான்மை சாதகர்களின் வாழ்க்கையில் வருவது சகஜமே. ஆனால், இதைக் கண்டு சாதகன் இறை-நம்பிக்கையை இழந்து விரக்தியடையக் கூடாது. ஏனெனில் ‘இறைவன் கருணையின் உருவம், அவரே என்றும் அழியாத பரம்பொருள், என்றும் மாறாத மெய்ப்பொருள்’. எப்படிப்பட்ட (ஒன்றுக்கொன்று மாறுபட்ட) ஒப்பீடு! மின்னலின் ஒளிக்கீற்று தோன்றிய நொடியிலேயே மறைந்திடுவதைப் போல, உலக வாழ்க்கையும் நிலையற்றது; இறைவன் நித்யமானவர், கருணை நிறைந்தவர். எனவே ஊக்கமற்ற மனநிலையிலுள்ள சாதகர்கள், தாம் இறையருளைப் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்ற ஆறுதல் கொண்டு, சாதனையை மேலும் தொடர வேண்டும் – இதுவே அருணகிரியார் தரும் அறிவுரை.
    
    
    

No comments:

Post a Comment