செய்யுள் – 28
ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே.
பொழிப்புரை: “ஓ கெடுதல் இல்லாத அமுதம் போன்ற இனிமையானவரே! கூரிய வேலை ஏந்திய அரசே! ஞானமே வடிவானவரே! (இதற்கும் மேலே) சொல்லமுடியுமோ? (முடியாது. ஏனெனில்), நானென்ற என்னை (Individuality) விழுங்கி, (வேறோன்றுமில்லாமல்) “வெறும் தானாய்” நிலை நின்ற “அது”, “தத்” என்று சொல்லப்படும் பரம்பொருள்.”
விளக்கவுரை
“பொன்னே மணியே பொருளே அருளே “ என்று கூவி முறையிட்ட சாதகனுக்குக் கருணைக்கடலான முருகன் அருள்மழையைப் பொழிந்தான். அதன்பயனாக சாதகன் ஆனந்தக்கடலில் மூழ்கினான். அந்த அபரிமித இறை-கிருபையால், இதுவரை அனுபவித்திராத ஆழ்ந்த தியானம் கைவரப்பெற்றான். அந்த ஆழ்ந்த தியானத்தில் அண்ட உணர்வின் (Cosmic Consciousness) விளிம்புவரை அவனால் தொட முடிந்தது. இறை-கிருபையால் என்னதான் சாத்தியம் இல்லை!
நீண்ட சோதனைக்குப் பின்னர், சாதகன் அனுபவித்த ஆழ்ந்த உண்மையான தியானத்தின் படிப்படியாக முன்னேறுகிற நிலைகளை விளக்கமாக விவரிக்கிறது இச்செய்யுள். இது ஒரு மிக அற்புதமான செய்யுள். இப்பொழுது அவன் அச்சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்டான். அவனால் அவன் மனதில் எந்தவொரு எண்ணத் தடங்கல்களும் இன்றி முழுமன நிறைவுடன் தியானம் செய்ய இயலுகிறது; அந்த தியானத்தில் சாதகன் படிப்படியாக வெவ்வேறு நிலைகளின் அநுபவங்களைப் பெறுகிறான். ஆனால், இந்நிலைகள் நிச்சயமாக ஒரே நாளில் அடையப்படுவன அல்ல. நீண்டகாலம் முறையாக தியானம் செய்யப்படும்போது அவை படிப்படியாக அனுபவிக்கப் படுகின்றன. பொதுவாகக் கூறுவதானால், தியானிக்கும் மனம் (அ) ஜீவ உணர்வு (ஜீவபோதம்), மூன்று முக்கிய வழிக்கட்டங்களை அனுபவித்து, பின்னர் சமாதியின் ஆரம்ப நிலையில் நுழைகிறது; அந்த நிலை அண்ட உணர்வு (Cosmic Consciousness) (அ) இறைவன் (அ) ஆத்மாவின் வெளிவட்டத்தை (விளிம்பைத்) தொடுவது போன்றது. இதை சற்றேகுறைய சமாதி நிலை எனலாம்.
முதல் வழிக்கட்டம்: “ஆனா அமுது” – தியானம் துவைத நிலையில் (இருமை இயல்பு/இரட்டைத் தன்மையில்) துவங்குகின்றது, அதாவது, (1) தியானம் செய்பவன், மற்றும் (2) தியானிக்கப்படும் பொருள். ----- (1) தியானிக்கும் மனம்/உணர்வு, மற்றும் (2) தியானிக்கப்படும் பொருளாக “ஆனா அமுது” (என்றுமிருக்கும் அமுதம்/ ஆனந்த சொரூபம்) எனப்படும் ஸச்சிதானந்த சொரூபமான இறைவன்/ ஆத்மா. இந்த துவைத நிலையில் தியானமானது துவங்குகின்றது. உண்மை தியானம் அமுதம்போல் தித்திக்கும் ( அதாவது ஆனந்தத்தை தருகின்றது). தியானம் இவ்வாறு ஆனந்தத்தைத் தருவதால், சாதகன் அதைப் போதும் என்று ஒருநாளும் கூறாமல், மேன்மேலும் அதை அநுபவித்துக் கொண்டிருக்கவே விரும்புவான். இதற்கு நேர் எதிரானது புலன்களின் (இந்திரியங்களின்) வாயிலாக அடையப்படும் இன்பங்கள்; அவை குறுகியகால அநுபவத்திலேயே சலிப்பு மற்றும் வெறுப்பை அளிப்பதோடல்லாமல், புலன்களையும் தேய்மானப்படுத்தி, பதட்டம்- கவலை- வியாதி- பாவம் போன்றவைகள் ஏற்படவும் செய்கின்றன. ஆனால், ஒரு பக்தனுக்கு (அ) ஆன்மீக சாதகனுக்கு, இறைவனைப் பற்றிய எண்ணம்/ தியானம் முடிவற்ற ஆனந்தத்தைத் தருகிறது; அது ஒரு (நல்) வாழ்வு தரும் அமுதமாகிறது. இறைவனைப் பற்றிச் சிந்திக்கும்/ தியானிக்கும் மனம், இறைசிந்தனையிலேயே மேன்மேலும் ஆழ்ந்து, அதில் இறைவனை தேவாம்ருதமாகவே அநுபவிக்கிறது. அவ்வாறு அமுதமாக சுவைக்கப்படும் பொழுது மேன்மேலும் இனிப்பாக ஆகிகொண்டே போகிறது (அதாவது, மனதில் ஆனந்தம் பெருகிக் கொண்டே போகிறது). இறை-தியானம் மேன்மேலும் ஆழ்ந்து செய்யப்படும்பொழுது, அவரின் மீது அதிக ஈடுபாடு வந்தமைகிறது. இறைவனை ஆழ்ந்து சிந்தனை செய்தால் அது தரும் மகிழ்ச்சி மிகவும் இனிமையானது என்பதால், அந்த பக்தன் அவரை ஒரு நொடி நேரம்கூட மறக்க விரும்புவதில்லை. அதனால், அது “ஆனா அமுது” என்று சொல்லப்படுகிறது. சில சமயங்களில், சாதகன் தியானம் தரும் ஆனந்த சுகத்தை அநுபவிப்பதற்காக, உணவு மற்றும் தூக்கத்தைக்கூட துறந்து விடுகிறான். இவ்வாறாக ஆழ்நிலை தியானமானது தொடர்ந்து சிலகாலம் செய்யப்படும்பொழுது, தியானிப்பவன் தியானிக்கப்படும் பொருளிலிருந்து (பரம்பொருள்) வேறுபட்டவன் என்ற துவைத பாவனையைக் கடந்து செல்கிறது.
இரண்டாவது வழிக்கட்டம்: “அயில் வேல் அரசு” – ‘கூரான வேலாயுதத்தைத் தாங்கிய மன்னர்,’ வேல் என்பது ஆத்ம ஞானத்தைக் குறிக்கும். ஞான சொரூபனான முருகனும் அவனுடைய வேலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. வேல் முருகப் பெருமானின் மீது சாத்தப்பட்டுள்ளது; அவரிடமிருந்து வேல் வேறுபட்டதல்ல; அது அவராகவுமில்லை. (வேலை அவரிடமிருந்து பிரித்துப் பார்த்திட இயலாது, எனினும் அது அவரோடு ஒன்றாகிவிடவுமில்லை.) அதுபோலவே, இந்த இரண்டாவது கட்டத்தில், தியானம் மிகவும் ஆழமாகப்போய், மனம் மிக நுட்பமாகி, சுத்தமாகவும் ஆகிவிடுகிறது; அதனால் மனம் (அ) ஜீவாத்மா, பெருமான்/ ஆத்மாவுடன் மிக நெருங்கி இருப்பதை உணர்கிறது. அந்நிலையில் அது இறைவனோடு ஒன்றாகவுமில்லை வேறாகவுமில்லை. அப்பொழுது, அது ஆத்மாவில் (வேல் போன்று) வெறுமனே சாத்தப்படுகிறதே தவிர, அதனுடன் ஐக்கியமடைந்து விடுவதில்லை. இப்படியாக, முதல் கட்டத்தில் இருந்த துவைத பாவனை கடக்கப்பட்டு, இந்த இரண்டாவது கட்டத்தில் ‘ஒன்றாகவும் இல்லை; வேறாகவும் இல்லை’ என்ற விசிஷ்டாத்வைத (அங்கம்-அங்கி) பாவனையை அடைகிறது.
“வேல்” நீண்ட காம்பு கொண்டு, அதன் இலை நடுவில் பரந்தும், மேலே நுணியில் கூர்மையாகவும் இருக்கும். தியானத்தின் உயர்ந்த நிலையில் உள்ள தியான மனோபாவம் (உணர்வு) வேல் போன்றது; அதாவது, ஆழமான சிந்தனை, பரந்த பார்வை, கூர்மையான புத்தி ஆகியவைகளை (உருவத்தில் வேலைப்போல்) கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் அநுபவிக்கப்பட்ட மகிழ்ச்சி, ஜீவனை ஆத்மாவிடம் மேன்மேலும் இழுக்கிறது. ஜீவனும் ஆழ்ந்த அநுபவத்திற்கு ஏங்கிக் கொண்டே, ஆத்மாவுக்கு மிக அருகில் சென்று, ஆத்மாவில் சாய்ந்து கொள்கிறது (வேல்போல்). சேகரிக்கப்பட்டு, குவிக்கப்பட்டு ஒருமுகப்படுத்தப்பட்ட மனமானது, தியானத்தில் முழுவதுமாக ஆழ்ந்து, ஆத்மாவிற்கு மிக அருகில் சென்று அதுவாகவே ஆகிவிட்டதுபோல் உணரத் தொடங்குகிறது; அது (அதன் தனித்தன்மை இன்னும் இருந்தும்கூட) தியானப் பொருளோடு கிட்டத்தட்ட ஒன்றாகிவிட்டதுபோல் உணர்கிறது; அதாவது, பெருமானிடம் வேல் இடம் பெற்றிருப்பது போல. இதுதான் இரண்டாவது கட்டம். இத்தகைய தியானமானது எவ்விதத் தடங்கல்களின்றி, இடைவிடாதும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செய்யப்படும்பொழுது மேலும் ஆழமாகி, மூன்றாவது கட்டத்தை அடைகிறது.
மூன்றாவது வழிக்கட்டம்: “ஞானாகரன்” – ஞானமே உருவானவர். தியானத்தின் இந்த மூன்றாவது கட்டம் மிகவும் உயரிய நிலை. இதில் இறைவன் ஞானாகரனாக, ஞானப்பிழம்பாக, ஸச்சிதானந்தக் கடலாக அனுபவிக்கப் படுகிறார். தியானத்தில் முழுவதுமாக ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் (ஜீவாத்மா), (எதன் உண்மை தத்துவம் பரமாத்மாவே) பலகாலமாக செய்துவரும் ஆழ்ந்த தியானத்தில் அது ஆத்மாவின்மேல் அமைந்திருந்து வந்ததால், அதன் மற்றும் அனைத்து ஜீவர்களின் ஆதார ஸ்தானமான அண்ட உணர்வெனப்படும் பரமாத்மாவில் ஐக்கியமாகும் தருவாயை அடைகிறது. இது, ஒரு நதியானது கடலில் சங்கமமாகும் தருவாயில் உள்ளது போன்றது. அந்த சங்கமமாகும் நதியானது வியந்து, “ஓ! கடல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர் மட்டுமே உள்ளது!” என்று ஆச்சரியமடைகிறது. ஆனால், அதற்குமேல் தனக்கு என்ன ஆயிற்று என்று அதனால் நினைக்கவோ பேசவோ முடியாமற் போய்விடுகிறது; ஏனெனில் அதற்குள் அது கடலால் விழுங்கப்பட்டு, அதில் அமிழ்ந்துவிடுகிறது. எனவே, கடலைப் பற்றி அது என்ன சொல்லமுடியும்? அந்த கடைசி கட்ட அநுபவத்திற்குப் பின்னர் ஜீவனின் நிலையும் அதேபோலத்தான் ஆகிவிடுகிறது. ஆத்மாவைத் தொடும் விளிம்பிலுள்ள ஜீவன் (இரண்டாவது கட்டம்), தியானத்தை மேலும் ஆழமாகச் செய்து, மூன்றாவது கட்டத்திலிருக்கும்போது கடலில் சங்கமமாகும் விளிம்பில் இருக்கும் நதி போலவே இருக்கிறான். அப்பொழுது ஜீவன் ‘ஞானாகரனே’ என்று வியக்கிறது; “ஓ ஞான வடிவமே! ஒளிமயமானவரே! பிரகாசமே பிரகாசம்! எங்கும் எதிலும் எல்லாப் பக்கங்களிலும் ஒரே பிரகாசம்!!’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில், அதில் அமிழ்ந்துவிடுகிறது. எனவே, “ஞானாகரனே” என்று சொன்னபின், அதே வாக்கியத்தில், சாதகன் வியப்போடு “நவிலத்தகுமோ” --- ‘(இதற்கு மேல்) சொல்லமுடியுமோ (முடியாது)’ என்று கூறுகிறான். இக்கட்டம் அடையப்படும் பொழுது தியானிக்கும் (ஜீவ) உணர்வு இறை/ஆத்ம உணர்வினால் ஆட்கொள்ளப்படுகிறது (ஜீவ உணர்வு ஆத்ம உணர்வினால் விழுங்கப்பட்டு விடுகிறது), ஆத்மா மட்டுமே ஞானாகரனாக (அத்வைதமாக) இருக்கிறது, இதற்குப் பின்னர் நடப்பது எதையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது, ஏனெனில் ‘யான்’ என்றும் ‘தியானிப்பவன்’ என்றும் சொல்லிவந்த அந்த ‘நான்’ எனப்படும் ‘ஜீவ’ உணர்வு, ‘அது’ எனப்படும் உயரிய பரம்பொருளால் விழுங்கப்பட்டு, ‘அது’ (பரம்பொருள்) தானாக மட்டுமே எஞ்சி, (வெறும் தானாய்) ‘இருப்பு நிலை’யாய் நின்று விடுகிறது – ‘யானாகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்ற அது தற்பரமே’.
இச்செய்யுளின் முதல் இரு வரிகளில், அச்சாதகன் தியானத்தின் மூன்று கட்டங்களை அவன் எப்படி அனுபவித்து வருகிறானோ அப்படியே அச்சமயமே அவைகளை வர்ணிக்கிறான்; எனவே, அவை நிகழ் காலத்தில் உள்ளன. அவனால் அதற்கு மேல் எதுவும் சொல்ல இயலவில்லை, ஏனெனில், “அது” (‘தத்’ அல்லது “அது” எனும் பரம்பொருள்) அவனை விழுங்கிவிட்டது. அதன்பின், தான் பெற்ற சமாதிநிலை போன்ற மேதக்க அவ்வநுபவத்தை, தன் நனவு நிலைக்குத் திரும்பிய பின்னர், நினைவுபடுத்திச் சொன்னது, செய்யுளின் இரண்டாவது பகுதியில் (கடைசி இரு வரிகள்) உள்ளது. எனவே, அது இறந்த காலத்தில் இருக்கிறது.
அச்சாதகன் அந்த மேதக்க அநுபவம் எப்படி இருந்தது, அவ்வநுபவம் வருவதற்கு முன்னர் எத்தகைய அநுபவங்கள் அவனுக்கு வந்தன என்றெல்லாம் விவரிப்பதன் நோக்கம், தன்னைப்போல் ஆன்மீக சாதனைகள் செய்து முயற்சிப்பவர்களுக்கு இம்மாதிரியான அநுபவங்கள் ஏற்பட்டால், அவர்கள் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் அந்த மகத்தான அநுபவத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள வசதியாயிருக்கும் என்பதுதான்.
அந்த மூன்றாவது கட்ட இறுதியில் அவன் அனுபவித்த ‘விழுங்கிய’ என்ற அநுபவத்திற்கு சற்றேறக்குறைய ஒத்த அநுபவம், நம் தினசரி வாழ்க்கையில் நிகழும் ஆழ்ந்த நித்திரை என்று கூறலாம். நாம் தூங்க விரும்பும்போது, முதலில் படுக்கையில் படுத்துக் கொண்டு, மனதை எல்லா அவயவங்களிலிருந்தும் மெதுவாக திரும்பப் பெற்று, அப்படி திரும்பப் பெறப்பட்ட (ஒருமுகப்படுத்தப்பட்ட) மனம் அதன் உறைவிடமான இதயத்தை அடைகிறது. இதுவரை நமக்கு என்ன நடந்ததென்று தெரியும். பின்னர், எப்போது தூங்கினோம் என்றோ, எப்படி தூக்கம் வந்தது என்றோ அறியாமல் நாம் தூங்கி விடுகிறோம். நாம் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நமக்கு ஒன்றும் தெரிவதில்லை; ஏனெனி, அப்பொழுது நாம் காரண சரீரத்தில் இருக்கிறோம். அவித்யா/ அறியாமை/ அக்ஞானம்/ தமஸ்/ இருட்டு என்றெல்லாம் அழைக்கப்படும் காரண சரீரமென்பது சஞ்சித கர்மங்கள் (இதுவரை கோடானுகோடி ஜன்மங்களில் செய்த கர்மங்களின் பலன்கள் - அநுபவத்திற்கு வராத பலன்கள்( சேகரித்து வைக்கப்படும் வீடு (Store House). தூக்கநிலையில், அத்தகைய காரண சரீரத்தில் நாம் அமிழ்ந்து விடுகிறோம் அல்லது நாம் காரண சரீரத்தால் ஆட்கொள்ளப்படுகிறோம். தூக்கத்தின் பொழுது, நாம் இறந்து விடவில்லை, உயிருடன் தான் உள்ளோம், அப்பொழுது நமக்கு விழிப்புணர்வு (அ) பிரக்ஞை (அ) உணர்வு உள்ளது. எனினும் நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஏன்? ஏனெனில், ஜீவ உணர்வு/ மனது/ அகங்காரம் அப்பொழுது தமஸ் அல்லது இருளால் (அறியாமையால்) சூழப்பட்டிருக்கிறது, ‘விழுங்க’ப்பட்டுள்ளது. அச்சமயத்தில், மனம்/உணர்வு இருப்பதால், நமக்குத் ‘தெரியும்’ (We ‘Know’); ஆனால், மனமானது தமஸால் அல்லது இருளால் சூழப்பட்டிருப்பதால், நமக்குத் தெரிவது (We Know ‘Nothing’) “ஒன்றுமில்லை” என்பது, அதாவது, நமக்கு எதுவும் தெரிவதில்லை. இது, ஒருவன் நன்கு திறந்திருக்கும் தனது கண்களோடு கும்மிருட்டறையில் இருப்பதுபோன்றது. அவன் கண்கள் திறந்திருப்பதால், அவனால் பார்க்க இயலும்; அவன் பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறான், ஆனால் அவன் பார்ப்பது ‘ஒன்றையுமேயில்லை’ (He is ‘seeing’, but seeing ‘Nothing’). ஏனெனில் அவனைச் சுற்றி ஒரே கும்மிருட்டு உள்ளது, அவன் இருட்டில் மூழ்கி இருக்கிறான். அவனால் எதையுமே பார்க்க இயலவில்லை (அதாவது, அவன் இருந்த நிலை “கண்ணிருந்தும் குருடு” என்கிற நிலை). அதுபோலவே, நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்பொழுது, மனம் / அகங்காரம்/ உணர்வு/ விழிப்புணர்வு இருக்கிறதால், நாம் ‘அறிகிறோம்’, ஆனால், ‘ஒன்றுமில்லை’ என்பதை அறிகிறோம். ஏனெனில், நாம் தூங்கும் சமயத்தில் இருளில் (தமஸில்) முழுவதுமாக அழுந்து/மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறோம். தூங்கும்போது நாம் ‘ஒன்றும் அறியவில்லை’ என்பதுகூட, தூங்கும் சமயத்தில் தெரியாது; தூங்கி விழித்த பின்னரே தெரிய வருகிறது. எனவே, தூக்கத்திலிருந்து விழித்த பின்னர், “நான் நன்கு தூங்கினேன். எனக்கு ஒன்றுமே தெரியாது (அச்சமயத்தில் இருள் மட்டுமே இருந்ததால்). நான் ஆனந்தமாக இருந்தேன்” என்று சொல்கிறோம். அதனால்தான், அது இறந்த காலத்தில் சொல்லப்படுகிறது. அதேபோல, சற்றேகுறைய சமாதி நிலையை அணுகிய அந்தக் கடைசி அநுபவத்தில், தியானிக்கும் உணர்வு பரம்பொருளால் ‘விழுங்கப்பட்டு’, அப்பரம்பொருள் மட்டுமே ‘இருக்கிறது’ (That alone IS). தியானிப்பவன் (ஜீவபோதம்), ‘எல்லையற்ற அறிவு/ சோதிப்பிழம்பு/ ஞானாகரன்’ என்றெல்லாம் அறியப்படும் ‘பரம்பொருள்’ தத்துவத்தால் ஆட்கொள்ளப்படுகிறான். இது அவனுக்கு அப்பொழுது தெரியாது; அந்த அனுபவத்திலிருந்து சாதாரண நனவு உணர்விற்கு வந்தபின்னர், நினைவுபடுத்திப் பார்க்கும்போதுதான் தெரிய வருகிறது. எனவே, அச்சாதகன் இறந்த காலத்தைக் குறிக்கும் சொற்களால் “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்ற அது தற்பரம்” என்று கூறுகிறான். தன்னை, யான்/தியானிப்பவன் என்றெல்லாம் கருதும் ‘நானெனும் உணர்வா’கிய ‘ஜீவ-உணர்வை’ விழுங்கி (யானாகிய என்னை விழுங்கி), வேறோன்றுமில்லாமல் (வெறும்) “தான் மட்டுமாய்” (தானாய்) நிலை நின்ற “அது” (நிலை நின்றது), “தத்” என்று சொல்லப்படும் பரம்பொருள் (தத் பரம்).’ இவையெல்லாம் ஒரு பெரிய மர்மம். நமது இவ்வளவு பெரிய விவர்ணனை எல்லாம் ஒரு பலவீனமான முயற்சியே. விவர்ணனை செய்து, அனுபவத்தை எடுத்துச் சொல்லமுடியுமோ! – நவிலத் தகுமோ! இருந்தாலும், இவ்விவர்ணனை ஓரளவிற்கு அதைப் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும்.
ஒரு இருட்டறையில், நாம் சாதாரண இருட்டால் உறையிடப்பட்டு மூடப்படுகிறோம்; ஆழ்ந்த தூக்கத்தில் நாம் உறையிடப்படுவது, ஆன்மீக இருட்டு எனும் அறியாமையால் (அவித்யை). ஆனால், சமாதி நிலையின் விளிம்பைத் தொட்ட அநுபவத்தில், நாம் உறையிடப்படுவது ஞானத்தால் (வித்யா/ பேரறிவு/ ஒளி/ எல்லையற்ற அறிவு), அதாவது பரம்பொருளால்.
“விழுங்கி”: விழுங்கி என்றால் ஒன்று மற்றொன்றை விழுங்கியது, அதாவது நாம் உணவை விழுங்குவது போல, என்றெல்லாம் அர்த்தம் கொள்ளக் கூடாது. தியானத்தின் மிக உச்ச நிலையில், தியானம் செய்யும் நானெனப்படும் ஜீவ-உணர்வு இறைவனை ஞானாகரனாக அனுபவத்தில் உணரும்பொழுது, ஜீவாத்மா ‘தத்’ எனப்படும் பரமாத்மாவால் அனைத்து பக்கங்களிலிருந்தும் உறையிடுவதுபோல் சூழப்படுகின்றது; ஜீவன், ‘தத்’தின் (பரம்பொருளின்) உள்ளடக்கமாகிறது; அதனால், ஜீவன் தன்னை ‘தத்’ விழுங்கி விட்டதாக உணர்கிறது.
“விழுங்கி” – நானெனப்படும் யானாகிய என்னை விழுங்கி, ‘வெறும் இருப்பாக’ நின்ற ‘அது’, “தத்” எனப்படும் பரமாத்மா (பரம்பொருள்). “விழுங்கி” என்ற சொல் மிகவும் மகத்துவபூர்ணமானது; அகங்காரமெனும் ஜீவ-உணர்வு அண்ட/பரமாத்ம-உணர்வில் ‘மூழ்கியதே’ தவிர, தன் தனித்தன்மையை இழந்து விடவில்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. ஏனெனில், அதன் மூல காரணமான அவித்யை (அறியாமை) அழிக்கப்படவில்லை; இந்த உண்மை அடுத்த செய்யுளில் வெளிப்படுத்தப்படுகிறது. 42-ம் செய்யுளில்தான், அறியாமை ‘அற்றது’ (அழிக்கப்பட்டது) என்று ஐயத்திற்கு இடமின்றி குறிப்பிடப்படுகின்றது. இங்கு அடையப்பட்டது தியானத்தின் ஒரு உயரிய நிலை மட்டுமே; இது தியானத்தின் இறுதி நிலையான சமாதி (பேருணர்வு) என்ற குறிக்கோளை அடைந்ததாக ஆகாது. அந்த இறுதிநிலையான சமாதி “அடையப்பட்டது” என்று ஆணித்தரமாகப் பின்னர்தான் (செய்யுள்கள் 42, 43 & 44) அறிவிக்கப்படுகிறது. பல சாதகர்கள் தியானத்தின் மூன்றாவது கட்டத்தின் உச்சத்தை (‘விழுங்க’ப்பட்ட நிலையை) அடைந்ததும், சமாதி அவஸ்தையை/ இறைவனை அடைந்து விட்டதாகத் தவறாக நினைத்து, அத்துடன் தங்கள் சாதனையை விட்டு விடுகிறார்கள். ஆனால், அப்படிச் செய்யக்கூடாது. எனவே, சுவாமி சிவானந்தா மஹராஜ் அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்: “இந்தக் கட்டத்தில், பல சாதகர்கள் தாங்கள் தங்கள் குறிக்கோளை அடைந்து விட்டதாகத் தவறாக எண்ணி, தங்கள் சாதனைகளை அத்துடன் நிறுத்தி விடுகிறார்கள்; அவர்கள் இங்குமங்கும் சென்று, உபதேசம் செய்யத்தொடங்கி, அனைத்துத் தர மக்களுடன் கூடி, சேர்ந்து வாழ்ந்து, இறுதியில் அதோகதி அடைகின்றனர். எனவே, இக்கட்டத்தில் அவர்கள் ஆன்மீகப் பயிற்சிகளை விட்டுவிடாமல், குறிக்கோளான இறைவனை அடையும்வரை தொடர்ந்து செய்ய வேண்டும்”.
செய்யுள்-2ல் செய்யப்பட்ட பிரார்த்தனை ‘என்னை “இழந்த” நலத்’தை, அதாவது முக்தியை, அடைவதற்கு. ஆனால், இச்செய்யுளில் (28) அனுபவித்த ‘என்னை “விழுங்கிய”’ நிலை முக்திநிலையல்ல; நாம் மேலே பார்த்ததுபோல் இது அண்ட-உணர்வின் விளிம்பைத்தொடும் ஒரு கண நேர கண்ணோட்டப் பார்வை மட்டுமே. இருந்தும், இதுவும் ஒரு மெச்சத்தக்க நிலைதான். என்றாலும், முக்தியை அடைய சாதனை தொடர்ந்து செய்யப்படவேண்டும்.
அருணகிரியார், ‘தூய இருப்பாக’ (வெறும் தானாய்) இருக்கும் ‘தத்’ அல்லது பரம்பொருளை “அது” என்று குறிப்பிடுகிறார்; ‘அவனோ’, ‘அவளோ’ என்று அல்ல. இறைவன், இறைவி என்றுக் கடவுளை ஆண் தெய்வம் (அ) பெண் தெய்வம் என்றெல்லாம் வழக்கமாக நாம் கருதும் கோட்பாடுகள் கடக்கப்பட்டு, ‘தத்’ அல்லது ‘அது’ என்ற அந்த பூரண அனுபவத்தில் முடிவடைகின்றன. அதனால்தான், அருணகிரியார் அதை ‘தத்’ எனும் ‘அது’ என்கிறார். எந்த ஒன்று அறுதியானதோ, பரம்பொருளோ, பூரணமானதோ அந்த ஒன்று ‘தூய இருப்பாக’ (வெறும் தானாய்) மட்டுமே இருக்கின்றது. அவ்வளவுதான். அதைப்பற்றி இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இங்கு, உற்சாககரமான ஒன்று கவனிக்கத்தக்கது. செய்யுள்-13-ல் ‘அது’ என்பதுவே ‘முருகன்’, ‘தனி வேல் முனி’, ‘நம் குரு’ என்று சொல்லப்பட்டது. இச்செய்யுளில் (28), “ஆனா அமுதே --- அயில் வேல் அரசே --- ஞானாகரனே” என்று கூறப்படும் மூன்று அநுபவ கட்டங்களும், 13-ம் செய்யுளில் தலை கீழான அநுபவ கிரமத்தில் “முருகன் -- தனி வேல் முனி -- நம் குரு” என்று இருக்கின்றன. இவ்விரண்டு செய்யுள்களில் கூறப்பட்ட அநுபவக் கிரமங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், சில அரிய உண்மைகளை வெளிப்படுத்துபவையாகவும் தெரிகின்றன:
ஆக, செய்யுள்-13ல், இறைவன் மனித வடிவில் குருவாகத் தோன்றுவது; அரூபமான அறுதி உண்மையானது உருவம் தாங்கி இந்த நனவு உலகில் தோன்றுவது (இறங்கு வரிசை). இச்செய்யுளில் (28ல்) மனிதன் இறைவன் நிலைக்கு உயர்வது, அதாவது ரூபம் தாங்கிய ஜீவன், அரூபமான பரமன் நிலையை உணர்வது (ஏறு வரிசை). ‘அது’ என்ற சொல் இரு செய்யுள்களிலும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது; முந்தைய செய்யுளில் (13ல்) ‘அது’, ‘குரு’வாக வருகின்றது; பிந்தைய செய்யுளில் (28ல்) ‘ஜீவன்’, ‘அது’வால் விழுங்கப்படுகிறது.
பதிமூன்றாம் செய்யுளில் பெற்ற அநுபவமே இந்த இருபத்தெட்டாம் செய்யுளிலும் பெறப்பட்டதெனச் சொல்லக்கூடும்; என்றாலும் இப்பொழுது பெற்ற அநுபவம் உரிய சாதனைகள் செய்ததினால் (ஜீவ முயற்சியினால்) அடையப்பட்டது என்று அறிய வேண்டும். அதாவது, முந்தைய அநுபவம் சாதகனுக்குக் ‘கொடுக்கப்பட்டது’ (Given); பிந்தைய (தற்போதைய) அநுபவம் சாதகனால் ‘அடையப்பட்டது’ (Attained). முதலில் கொடுக்கப்பட்ட அநுபவம், அவனுக்குத் தேவையான ஊக்கத்தை வழங்கி, சாதனைகள் செய்து, போராடி அதை அடைவதற்காக.
|
செய்யுள் 28
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment