செய்யுள் – 29
இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.
பொழிப்புரை: “ஓ! மல்யுத்தம் செய்யத்தக்க வலிமை பொருந்திய, வீரமிக்க பன்னிரு தோள்களில் (தங்கள் மகிமையைக்கூறும்) எனது சொற்களை அணிந்துகொண்ட, ஒளி வீசுகின்ற வேலாயுதப் பெருமானே! இல்லை என்று சொல்லப்படும் இம்மாயையில் நீங்கள் என்னை வீழ்த்தினீர் (விழும்படிச் செய்துவிட்டீர்கள்)! (என்னே என் பரிதாப நிலை!) பொல்லாதவனாகிய என்னுடைய அறியாமையை நீங்கள் பொறுத்து (மன்னித்து, நீக்கி) விடவில்லையே!’
விளக்கவுரை
அந்த அளப்பரிய ஞானம் மற்றும் ஆனந்தம் கலந்த மகத்தான அநுபவத்தில் அகங்காரம் விழுங்கப்பட்டு, பரம்பொருள் மட்டுமே பிரகாசித்திருந்த நிலையில் (முந்தைய செய்யுள்), மாயை மறைந்து விட்டதாக (அ) இல்லாமல் போய்விட்டதாகத் தோன்றியது; சாதகனும் மாயையிலிருந்து தான் விடுபட்டுவிட்டது போலவும், அறியாமை தன்னை விட்டு விலகிவிட்டது போலவும் உணர்ந்தான். ஆனால், அவன் தன் (தியானத்திலிருந்து) நனவு நிலைக்குத் திரும்பியபொழுது, தான் இன்னும் மாயையின் பிடியில் இருப்பதையும், தனது குறைகள் முன்னர் இருந்தது போலவே உள்ளதையும், அவனது அறியாமையும் அப்படியே இருப்பதையும் உணர்கிறான், அதாவது அவனது அறியாமை மன்னிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை (“அறியாமை பொறுத்திலையே”). மாயையும் அறியாமையும் ஒன்றே ----- முந்தையது அண்ட முழுதளாவியது; பிந்தையது தனிப்பட்ட ஜீவனுடையது. எனவே, “ஓ பெருமானே! நீங்கள் என்னை இல்லாததாயிருந்த மாயையில் (வாழும்படி) தள்ளிவிட்டீர்கள்! நீங்கள் இந்தத் தீயேனுடைய அறியாமையை மன்னித்தாயில்லை, அழித்தாயில்லை! அந்தோ பரிதாபம்!” என்று அச்சாதகன் இறைவனிடம் பிரார்த்திக்கின்றான்.
சாதகன், தன்னுடைய தியானத்தின் உச்சநிலையில் சற்றேகுறைய அண்ட-உணர்வை அனுபவித்த பின்னர் (செய்யுள்-28), தன் பழைய நிலைக்கு வருகிறான். ஏனெனில், ஜீவத்துவத்திற்குக் காரணமான, கர்மங்களின் களஞ்சியமான மூல-அவித்யை என அழைக்கப்படும் அறியாமை அழிபடவில்லை, இன்னும் அவனிடம் இருக்கிறது. (“பொல்லேன் அறியாமை பொறுத்திலை”). சாதகன் தன்னைத் தானே பொல்லேன் (தீயவன்) என்று குறிப்பிடுவதிலிருந்து, அவனுடைய கணக்கில் தீர்க்கப்படாமல் இன்னும் அனுபவிக்கவேண்டிய சில தீய/ கெட்ட கர்மங்கள் (சஞ்சித கர்மா) இருப்பதை அவன் அறிந்துகொண்டான் என்பதும் தெரிய வருகிறது (இந்த விஷயம் செய்யுள்-31இல் வெளிப்படுத்தப்படுகிறது). இவற்றிலிருந்து அவன் செய்யுள்-28இல் பெற்ற அநுபவம், பூரண இறை-அனுபவம் இல்லை, (அ) அவன் இறைவனை அடையவில்லை என்பதும் தெளிவாகிறது. எனவேதான், விழுங்கி என்ற சொல், அறியாமை இன்னும் அழிபடவில்லை என்பதைக் குறிப்பதற்காக அங்கு உபயோகிக்கப்பட்டது என்ற உண்மை இச்செய்யுளில் உறுதிப்படுத்தப்படுகிறது. அதே சமயம், அச்சாதகன் ‘பேசா அநுபூதி’ (செய்யுள் -43) பெற்ற பிறகு (அதாவது, அவன் இறைவனை முற்றும் உணர்ந்த பிறகு), நனவு நிலைக்கு வந்தபின், அவன் அநுபவத்தை செய்யுள்-44ல் தன் தலையில் கிரீடமாக சூடப்பட்ட அந்த இறை-பாதங்களை, அவன் எல்லா இடங்களிலும் கமழ்வாதக் (காண்பதாகக்) கூறுகிறான்; இதிலிருந்து, அவனிடத்தில் மாயை இப்பொழுது இல்லை என்று தெளிவாகிறது. செய்யுள்-42ல் அவன், ‘அறியாமை அற்றது’ (இல்லாமல் போய்விட்டது) என்பது தீர்மானமாக தெளிவாக்கப்படுகிறது; அதன்பின், செய்யுள்-43ல் “பேசா அநுபூதி பிறந்தது” என்று, இறை-அநுபூதி பூரணமாக அவனால் அடையப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது; இவையிரண்டையும் தொடர்ந்து வரும் செய்யுளில் (44ல்), மோட்சம்/முக்தி நிலையான இறைவனின் தாமரைப் பாதங்கள் அவனுக்கு அளிக்கப்பட்டதென்பது உறுதி செய்யப்படுகிறது.
28ஆம் செய்யுளில் அனுபவித்த உயர்ந்த நிலையிலிருந்து கீழிறங்கி உலக அனுபவத்திற்கு வந்தது அச்சாதகனுக்கு மிக வருத்தமாக இருந்தது. அந்த உயர்ந்த அனுபவமும் இந்த உடனடி உலக அனுபவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரெதிரானதும் மற்றும் சமரசமற்றதாகவும் இருந்தன. அந்த சற்றேகுறைய இறை-உணர்வைப் பெற்ற முந்தையநிலையில், ஸச்சிதானந்தம் (பரம்பொருள்) மட்டுமே இருந்தது, மேலும் உலகம் (மாயை) என்ற ஒன்று உண்மையில் இல்லை என்று, அந்த அநுபவம் அவனை நம்ப வைத்தது; ஆனால், தியானத்திலிருந்து வெளிவந்த பின்னர், அவன் இவ்வுலகில் (மாயையில்) தான் வாழ வேண்டியிருந்தது, அதை சமாளிக்கவும் வேண்டியிருந்தது. அச்சாதகனின் தற்போதைய (இக்கட்டான) நிலையை “இல்லே எனும் மாயையில் இட்டனை” என்று இச்செய்யுள் எவ்வளவு துல்லியமாகவும், உருக்கமாகவும், மற்றும் மிக அழகாகவும் சித்தரிக்கிறது பார்த்தீர்களா!
“இல்லே எனும் மாயை”: ‘மாயா (மாயை)’ என்பது ஒரு சமஸ்கிருதச் சொல், அதன் சொற்பிறப்பியல் அர்த்தம்: “எது (உண்மையில்) இல்லையோ (அது மாயா)”. மாயா என்றால் என்ன? அது ஏன் இல்லையென்று சொல்லப்படுகிறது? என்பதைச் சற்று பார்ப்போம். எல்லையில்லா, பரிபூரண, இரண்டற்ற பரம்பொருள் (பிரம்மம்) எவ்வித நிபந்தனையுமற்ற இருப்பை உடையது. ஆகையால், அது இரண்டற்றது. எனவே அதற்குப் புறம்பாக மற்ற இன்னும் ஒன்று இருக்கமுடியாது. ஆகையால் அதுவும் இவ்வுலகமும், இரண்டும் இருக்க முடியாது. “இவ்வுலகம் உண்மையானது, அது எதையும் சார்ந்து இராமல் சுதந்திரமாக இருக்கிறது, அது பிரம்மத்தைச் சாராமல் தனியாக இருப்பது.” ---- என்பது உண்மையென்று ஒப்புக்கொண்டால், எல்லையற்ற பிரம்மத்துக்கு ஒரு எல்லை வரையறையை (கட்டுப்பாட்டை) ஏற்றுக்கொள்வது போலாகும். பின்னர், பிரம்மம், பிரம்மமாக இருக்காது; அதாவது, பிரும்மம் ஒரு எல்லைக்குட்பட்டது என்றாகும், இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், பூரணசுதந்திரமான எல்லையற்ற பரம்பொருளோடுகூடவே மற்றொரு சுதந்திரமான ஒன்று இருக்க முடியாது. எனவே, உலகிற்கு (உலகப் பொருள்களுக்கு) உண்மையில் இருப்பு உள்ளதாகக் கொள்ளலாகாது. அவை பரம்பொருளின் நிலை மாறுதல் அல்லது தோற்றம் மட்டுமே, (உண்மையில் இருப்பு என்பது பிரம்மத்தில் மட்டுமே உள்ளது; உலகமென்பது பிரம்மத்தின் நிலை மாறுதல் மட்டுமே. பிரம்மத்தின் இருப்பு உலகின் இருப்பாகத் தோற்றமளிக்கிறது), கடலிலுள்ள அலைகள் கடல் நீரின் நிலை மாறுதல் மட்டுமே (உண்மையில் கடல் நீரே கடல் அலையாக மாறித் தோன்றுகிறது). கடல் அலைகளுக்கு உண்மையில் தனியாக இருப்புமில்லை, உண்மையில் கடலிலிருந்து அலைகள் வேறானவையல்ல. அலைகள் நீரே; கடலும் நீரே, அலைகள் கடலே. ஆகையால், கடலைத்தவிர அலைகளுக்கென்று தனியான இருப்பு உண்மையில் இருப்பதாகச் சொல்வது, அறிவின்மையாகும்; ஏனெனில், அலைகள் தாம் இருக்கும் கடலின் இருப்பை மட்டும் பகிர்ந்து கொள்கின்றன. அதேபோன்றதுதான் இந்தப் பிரபஞ்சமும், இவ்வுலகமும். அதற்கென்று பரம்பொருளிலிருந்து வேறுபட்ட தனியான இருப்பு என்பது கிடையாது. ஆனால், பலரால் இவ்வுலகம் உண்மை, அதற்குத் தனியான இருப்புத் தன்மை இருக்கிறது என்று கருதப்படுகிறது; அவர்கள் இவ்வுலகிற்கு அடிப்படையாக இருக்கும் பிரம்மத்தின் இருப்பைக் காண இயலாமையால், அதை மறந்து, இறுதியில் அப்படிப்பட்ட ஒன்றே இல்லையென்றும் மறுக்கின்றனர். “இறைவன் இல்லை; காணப்படும் இவ்வுலகமே உண்மை.” இவ்வாறாக, உண்மையில் இல்லாத ஒரு உலகம் இருப்பதாகத் தோன்றுவதோடல்லாமல், எந்தப் பரம்பொருளே இவ்வுலகமாகத் தோற்றம் அளிக்கிறதோ அப்பரம்பொருளே புறக்கணிக்கப் படுகிறது. எப்படிப்பட்ட விசித்திரமிது! இது தான் ‘மாயை’ என அழைக்கப்படுகிறது. உண்மையில் இல்லாததை இருப்பதாகப் பார்ப்பதும், உண்மையில் இருக்கும் ஒன்றை பார்க்காமல், இல்லை என்பதும், --- இதுதான் மாயை. சரி, அப்படியானால், மாயை என்ற உண்மையான ஒன்று உள்ளதா? இல்லை. மாயைக்கு இருப்பு என்பதில்லை. அது உண்மையில் இருக்கும் ஒரு பொருளும் அல்ல; தோற்றத்திற்கும் உண்மைக்கும் (உலகத்திற்கும் பரபிரம்மத்திற்கும்) இருக்கும் சம்பந்தத்தை (அவ்வாறு ஒரு சம்பந்தம் இருக்குமெனில்) சரியாகப் புரிந்து கொள்ள இயலாத நிலைமையை விவரிக்கவே, ‘மாயை’ என்ற சொல்லை, நாமிருக்கும் இந்த அக்ஞான நிலையில், உபயோகிக்கிறோம். எந்த ஒன்று உண்மையில் இல்லையோ, ஆனால் இருப்பதுபோல் தோற்றம் அளித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த ஒன்றின் பரம்பொருளுடனான சம்பந்தத்தை திருப்திகரமாக விவரிக்க இயலாமையையே, ‘மாயை’ என்று கூறப்படுகிறது. (குறிப்பு: சதா ‘தன்னந்தனி’யாக நிற்கும் பரம்பொருளுக்கு எதனுடனும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல இயலாது.) உள்ளதுபோலத் தோற்றமளிக்கும் இவ்வுலகின் புதிரற்ற புதிரைத் தீர்ப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு சாதனமே இந்த மாயை. இது அல்ஜீப்ரா கணிதத்தில் சமன்பாட்டு கணக்குகளை (Equations) தீர்த்துவைப்பதற்காக, ‘X’ என்ற காரணியை சேர்த்துக் கொண்டு, பின்னர் சமன்பாட்டு கணக்கின் விடையானது காணப்படும்பொழுது, அந்த ‘X’ –காரணி தானே இல்லாமல் போய்விடுவதைப் போன்றது. “பேசா அனுபூதி பிறந்தது” போன்ற பரம்பொருள் அநுபவ நிலையில், இவ்வுலகமும் நானெனும் ஜீவனுமே இல்லாமல் போய்விடுகின்றபோது, மாயை எங்கு எப்படி இருக்க முடியும்? உலகமும், அதைத் தோற்றமளிக்கச் செய்யும் மாயையும் இல்லாமல் போய்விடுகின்றன. அதனால்தான், அதை “இல்லே எனும் மாயை” என்று சொல்லப்படுகிறது.
“என் சொல்லே புனையும் சுடர் வேலவனே”: “பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயிலேறிய வானவனே” (செய்யுள்-27) என்ற அச்சாதகனுடைய புகழ் சொல்-மாலையைப் புனைந்து கொண்ட பின்னரே, அந்த ஆனந்தத்தில் சற்றேகுறைய சமாதி அனுபவத்தை (செய்யுள்-28) அவனுக்குக் கொடுத்தருளினார் முருகப் பெருமான்!
“பொல்லேன் அறியாமை பொறுத்திலையே”: சாதகன், தன்னைப் ‘பொல்லாதவன்’ என்று ஏன் சொல்லிக்கொள்கிறான்? அந்த சற்றேகுறைய சமாதி அனுபவத்தில், அவனுடைய முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்ட உள்நோக்கிய மனத்தால், முன் ஜன்மங்களில் அவன் செய்திருந்த பல கோரகர்மங்கள் இருக்கும் அறியாமை எனும் காரண சரீரத்தை, அவனால் பார்க்க முடிந்ததுபோலத் தோன்றுகிறது. ஆகையால்தான், அவன் சுய பச்சாதாபப்பட்டு : “பொல்லேன் அறியாமை பொறுத்திலையே” என்று கூறுகிறான்..
அறியாமையில் மூழ்கியிருக்கும் ஒருவன் இவ்வுலகை முற்றிலும் உண்மை என்று நம்புகிறான்; அதற்கேற்ப, அவனுடைய நடவடிக்கைகளும் உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் உண்மையானவை என்ற உறுதியான நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளன. உலகாயதவாதியான அவனுக்கு இவ்வுலகத்தைத்தவிர வேறு உண்மை, இறைவன் உட்பட, இல்லவேயில்லை. அவன் உலகப்பொருள்களைச் சேகரித்து, ஆட்கொண்டு, அநுபவித்து, இன்பமாய் இருக்க விரும்புகின்றான். உலகம்தான் அவனுடைய இறைவன். இப்படியாக, அவனுக்கு மாயை (இவ்வுலகம்) மட்டுமே ஒரு யதார்த்த உண்மை. ஆனால், ஆத்மானுபூதி பெற்ற ஒரு ஞானிக்கு, மாயை உண்மையில் இல்லவே இல்லை; ஏனெனில், அவர் மாயையின் உலக தோற்றத்தை கடந்து, இறைவனின் விழிப்புணர்வில் நிலைபெற்றிருக்கிறார். சாதகன்தான் இவ்விரண்டு நிலைகளுக்கிடையில் அகப்பட்டுத் தவிப்பவன்; அதுவும் ஓரளவு சாதனையில் முன்னேறி இருக்கும் ஒரு சாதகன். அவனுக்கு மாயை என்பது உண்மையானதும் இல்லை, உண்மையற்றதும் இல்லை. பரம்பொருள் மட்டுமே அறுதி உண்மை என்றும், இவ்வுலகத்திற்கு உண்மையான இருப்பு இல்லை என்றும் அவன் அறிவான். ஆனால், இப்புரிதல் ஒரு தத்துவார்த்த நிர்ணயமாக மட்டுமே அவனிடம் இப்பொழுது உள்ளது; இது அவனுடைய உண்மையான அநுபவமாக இன்னும் ஆகிவிடவில்லை. இப்பொழுது அவன் அநுபவத்தில் இருந்து அவனைத் திணற வைப்பது இவ்வுலகம்; அதனுடன்தான் அவன் விவகாரம் செய்து வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. அது தரும் யதார்த்த அநுபவத்தை அவனால் இன்னும் களைந்தெறிய முடியவில்லை. அவன் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருக்கிறான். நாம-ரூபங்களை (இவ்வுலகை) புறம்தள்ளி, இவ்வுலகையே (விஸ்வரூப) இறைவனாக, ஞானிகள் பார்ப்பதுபோல், அவனால் பார்க்க இயலவில்லை. ஏனெனில் அவன் அப்பரம்பொருளை இன்னும் அடையவோ அநுபவிக்கவோ இல்லை. அதே சமயம், இவ்வுலகம் மட்டுமே தனக்கிருக்கும் ஒரே உண்மை என்று அதை கட்டியணைத்து வாழ்ந்திருக்கும் ஓர் உலகாயதவாதி போலவும் அவனால் இருக்க இயலவில்லை. ஏனெனில் உலகின் சாரமற்றதன்மையை அவன் புரிந்து கொண்டிருக்கிறான். இவ்வாறாக இரண்டுக்கும் இடைப்பட்டநிலை சாதகனுடைய நிலை. இந்நிலையிலுள்ள சாதகனுக்கு மாயை உண்மையுமில்லை, இல்லாததுமில்லை; இல்லை என்று “சொல்லப்படும்” மாயை --- “இல்லே எனும் மாயை”. எனவே, அச்சாதகன் “இல்லே எனும் மாயையில் இட்டனை” என்று சொல்கிறான்.
|
செய்யுள் 29
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment