செய்யுள் 34



செய்யுள் – 34


சிங்கார   மடந்தையர்   தீநெறி   போய்
மங்காமல்   எனக்கு   வரம்   தருவாய்
சங்க்ராம   சிகாவல   ஷண்முகனே
கங்காநதி   பால   க்ருபாகரனே.


    பொழிப்புரை: ஓ ஷண்முகப் பெருமானே! போர்த் திறம் மிக்க மயிலை உடையவனே! கங்கையின் மைந்தனே! கருணையின் உருவமே! அலங்காரம் செய்துகொண்டு ஆடவரை மயக்கும் பொது மகளிரின் தீய வழியில் நான் சென்று அழிந்துபோகாதிருக்க எனக்கு வரம் தந்தருளுங்கள்!

விளக்கவுரை

    வீட்டைத் துறந்து, சந்நியாசம் எடுத்துகொள்ள, புனித கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் தன் குருவின் ஆசிரமத்தை அச்சாதகன் அடைந்தான் (செய்யுள்-33). சன்னியாச ஆசிரமத்தில் நுழைவதற்குமுன் தன்னைத் தயார் செய்து கொள்வதற்காக, அவன் முருகனிடம் ஒரு வரத்தைக் கேட்கிறான்.கங்கை நதியின் மைந்தனே! ஓ கருணைக் கடலே! வசியப்படுத்தும் மங்கையர்களின் தீய வழிகளில் நான் என்னை அறியாமலேயே சென்று பாழாகிவிடாமல் இருக்க எனக்கு வரம் வழங்குங்கள் என்று கேட்கிறான். சிங்கார மங்கையர் வசப்பட்டு சீரழிந்துவிடாமல் இருக்க ஒரு ‘வரம்’ தந்து அருள்புரியுமாறு வேண்டுகிறான்.

    ஆன்மீக சாதனையின் ஆரம்ப காலகட்டத்தில், அச்சாதகன் மனைவி-மக்களின் அன்புவலையில் அகப்பட்டு காமத்தினால் துன்புறுத்தப் பட்டான் (செய்யுள்-4 & 5); பின்னர், குருவின் உபதேசம் பெற்ற பிறகு, பெண்களின் முன்னிலையிலோ (அ) அவர்களைப் பற்றிய எண்ணங்களினாலோ அவன் மனம் அவர்கள்பால் இழுக்கப்பட்டு ஊசலாடியது (செய்யுள்- 9); பின்னர், குருவிடமிருந்து தீக்ஷை பெற்று, தியானத்தை முறையாகச் செய்திடும் நுட்பத்தை அவரிடமிருந்து அறிந்து, தியானத்தின் மேம்பட்ட நிலைகளுக்கு அவன் முன்னேறிய பிறகு, அவனது ஆழ்மனதில் நுண்ணிய மற்றும் காரண நிலைகளில் புதைந்திருந்த கடந்தகால சிற்றின்ப அனுபவங்களின் சுவடுகள் நனவு நிலைக்கு மேலெழும்பி அவனை தொந்தரவு செய்து வந்தன (செய்யுள்-24). இப்பொழுது, சற்றேகுறைய சமாதி அனுபவம் பெற்ற பின்னர் (செய்யுள்-28), இனிமேற்பட்டு காமத்தினால் பாதிக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்துவிடுகிறது. எனினும், ஆத்மானுபூதி பெற்றிடும்வரை இந்த அபாயம் இருப்பதால், வசியப்படுத்த முயலும் பெண்களால் தூண்டப்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீய வழியில் செல்வதிலிருந்து தன்னைப் பாதுகாத்துகொள்ள, முருகனிடம் வரம் தந்து அருளுமாறு வேண்டிக் கொள்ளுகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காமத்திலிருந்து விடுதலை பெற முன்பு பிரார்த்தனைகள் செய்ததுபோல் அல்லாமல், இப்பொழுது அவன் இறைவனிடம் வேண்டுவது ஒரு ‘வரம்’ மட்டும்தான்; அதாவது, அவன் சன்னியாசம் மேற்கொள்ள இருப்பதால் அத்தகைய சம்பவங்கள் ஒரு விபத்து போலவோ தற்செயலாகவோகூட தனக்கு நிகழ்ந்திடாதிருக்கவும், அவைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், இவ்வரத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் வேண்டுகிறான். இறை- கிருபையுடன் அவன் நித்திய கண்காணிப்புடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் ஒரு சிறு கவனக் குறைவு ஏற்பட்டாலும் தவறிவிடும் அபாயம் எந்த சமயத்திலும் நேரிடக்கூடும். பலகாலம் தனிமையிலிருந்து கடும்தவம் செய்த முனிவர்கள்கூட, சிறு கவனக் குறைவாக இருந்ததால், இக்காம உள்ளுணர்வுக்குப் பலியாகி விட்டதைப் பற்றிப் புராண இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே ஒருபொழுதும் இவ்விஷயத்தில் அசட்டையாக இருந்திடக்கூடாது. இறை-அனுபூதி பெற்றிடும்வரை, ஒருவன் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதை (2-59), “பரம்பொருளை ஒருவன் கண்டுணர்ந்த பின்னரே, புலனின்பப் பொருள்களின் மீதான அவனது ருசி அழிபடுகிறது” (ரசோப்யஸ்ய பரம் திருஷ்ட்வா நிவர்ததே), என்று அறிவிக்கிறது.

    ‘கங்கைநதி பால’, ‘க்ருபாகரன்’ ஆகிய இரு அடைமொழிகள் இச்செய்யுளிலும், ‘மந்தாகினி தந்த வரோதயன்’, ’கருணாகரன்’ என்று முந்தைய செய்யுளிலும் குறிப்பிடப்படுவதிலிருந்து, பெருமானின் கிருபை கிடைத்து, அச்சாதகன் கங்கைக் கரையிலுள்ள ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டான் என்பதும், அவன் வேண்டிய வரங்கள் கிடைத்து விட்டன என்பதும் உறுதியாகத் தெரிகிறது.

    ஒருவன் இறை-அநுபூதியை அடையும்வரையில், காமமும் அகங்காரமும் இறுதிவரை விடாப்பிடியாக அவனைத் தொடரும். ஒருவன் தன் வீடு, வாசல்களைத் துறந்து, ஏகாந்தத்தில் வாழ்வானாயின், மயக்கும் கன்னிகளின் வலையில் அவன் விழுந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே, அவ்வாறு தனக்கு நிகழ்ந்திடாமல் காத்தருளும்படியான ஒரு வரத்தை ஷண்முகப் பெருமானிடம் அச்சாதகன் வேண்டுகிறான். இது ஒரு நேரடியான மற்றும் எளிய பிரார்த்தனையாக அமைந்திருப்பது இதன் விசேஷம். இதுவரை நாம் பார்த்து வந்த செய்யுள்களில், பிரார்த்தனைகள் இச்செய்யுளில் உள்ள மாதிரி நேரடியாக இருக்கவில்லை --- ‘எப்பொழுது அருளுவீர்கள்?’, ‘நான் துன்பப்படத்தான் வேண்டுமா?’, ‘எவ்வளவு காலம்? --- இவ்வாறான பரிதாபகரமான முறையீடுகளைத்தான் நாம் இதுவரை பார்த்தோம். ஆனால், இங்கே பிரார்த்தனை ஒரு நேரடி கோரிக்கையாயிருக்கிறது, “எனக்கு ஒரு வரம் தாருங்கள்”. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. அப்போதைக்கு வேண்டுமானால் அவன் காமத்தினால் பாதிக்கப்படாமலும் பெண்களால் வசீகரிக்கப் படாமலும் இருக்கலாம்; ஆனால் அவன் காம உணர்வுகளை கடந்து விட்டதாகவோ, அதற்கு அடிபணிந்திட மாட்டேனென்றோ ஒருபொழுதும் நம்பிக்கையுடன் இருக்கமுடியாது. ஆகவே, இப்படிப்பட்ட தவறுகள் தன்னையறியாமலேகூட நிகழ்வதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவன் பெருமானிடம் வரம் கோருகிறான்.

    கேட்கப்பட்டது வரம். வரமென்பது தெய்வீக நன்கொடை (அநுக்கிரகம்). வரத்தால் பிணி நிரந்தரமாகக் குணமாகிடும்; மனித முயற்சியில் அப்பிணி திரும்ப வரும் அபாயமுண்டு. எனவே, வரம் கோரப்படுகிறது. இந்த வரம் யாரிடம் கேட்கப்பட்டது? கிருபையின் உருவகமான “கிருபாகரனிடம்” கேட்கப்பட்டது. ‘கிருபை’ மற்றும் ‘வரம் அளிப்பது’ இவ்விரண்டும் சேர்ந்தேயிருக்கும் தன்மையுடையது. ‘வரம் அளிப்பது’ என்பது அருட்கொடை; அதாவது, தகுதியில்லாத பொழுதும் தரப்படுகிற ஒன்று. இது கிருபையால் தரப்படுவது. கிருபை கொண்டு தரப்படுவதுதான் வரம். அச்சாதகன் இங்கு வேண்டுவது அத்தகைய வரத்தைத்தான். எவ்வளவுதான் கடின முயற்சி செய்தாலும், பெண்ணாசையை சுய முயற்சியினால் மட்டும் களைந்திட இயலாது. யாருக்கெல்லாம் இறை-கிருபை கிடைத்ததோ, அவர்கள் மட்டுமே இப்பிணியிலிருந்து நிரந்தரமாகக் குணமடைந்தார்கள். காமத்தின் பிடியிலிருந்து ஒருவனை இறை-கிருபை மட்டுமே விடுவிக்க முடியும். எனவே, அச்சாதகன் கருணாகரனான பெருமானிடம் வரம் வேண்டி பிரார்த்தனை (இச்செய்யுளில்) செய்கிறான். பெருமான் இங்கு ‘கங்காநதி பாலன்’ என்று அழைக்கப்படுகிறார். முந்தைய செய்யுளில், முருகப் பெருமான் தேவர்களுக்கு வரமாக அளிக்கப்பட்டதையும், மந்தாகினியில் அவதரித்ததையும் நாம் பார்த்தோம். ‘மந்தாகினி-தந்தவன்’ (அ) ‘கங்கை-புதல்வன்’ இரண்டும் ஒன்றே. அவரே ஆறுமுகம் கொண்டவர். அவர் ஆறுமுகக் கடவுள் (ஷண்முகர்). அதில் ஒரு முகம் ‘கூறுமடியார்கள் வினை தீர்க்க வந்த முகம் - (வரம் தரும் முகம்)’. “ஓ ஷண்முகப் பெருமானே! கங்கையின் மைந்தனே! கிருபாகரனே! நீங்கள் வரமாகத் தேவர்களுக்கு அளிக்கப்பட்டீர்கள்! இப்பொழுது, நான் ‘சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் இருக்க’ எனக்கு வரமளியுங்கள்” என்று சாதகன் வேண்டுகிறான்.

No comments:

Post a Comment