செய்யுள் 35



செய்யுள் – 35


விதிகாணும்   உடம்பை   விடா   வினையேன்
கதிகாண   மலர்க்கழல்   என்று   அருள்வாய்
மதிவாணுதல்   வள்ளியை   அல்லது   பின்
துதியா   விரதா   சுரபூபதியே.


    பொழிப்புரை: ஓ தேவலோகத்திற்கு ஈஸ்வரனே! ஓ கந்தப் பெருமானே! ஒளிவீசுவதும் பிறைச் சந்திரனைப் போன்றதுமாகிய நெற்றியையுடைய வள்ளிதேவியைத் தவிர வேறு யாரையும் துதிக்காத (புகழாத) விரதம் பூண்டவரே! (இன்னும் பல ஜென்மங்களில்) கர்மங்களை அநுபவிக்கும் உடலை விட முடியாத (தவிர்க்க முடியாத)) அளவிற்கு (சஞ்சித) கர்மங்களை உடையவனாகிய நான் நற்கதியை (முக்தியை) அடையத் தங்கள் தாமரைமலர் போன்ற திருப்பாதங்களை எனக்கு என்று அருள்வீர்.

விளக்கவுரை

    அச்சாதகன் இப்பொழுது தன் குருவை அடைந்து விட்டான்; மேலும், சிங்கார பெண்கள் விரிக்கும் வலைக்குள் விழுந்து மங்கிவிடாத வரம் ஒன்றையும் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டான் (செய்யுள்-34); அதனால், எவ்வித இடர்ப்பாடுகளும் இல்லாமல், ஆன்மீக சாதனைகளைச் செய்வதில் அவனால் தன் மனதைப் பூரணமாக ஈடுபடுத்த முடிகிறது. இத்துடன், இறைவனை அடைய வேண்டுமென்ற ஆர்வமும் அவனிடம் தீவிரமாக வளரத் தொடங்கியது. அம்மகத்தான சற்றேகுறைய இறை-அநுபவத்திலிருந்து (செய்யுள்-28 & 29) தன்னை மாயையான இவ்வுலக-வாழ்விற்கு இழுத்துக் கொண்டுவந்த (“தாழ்வானவை செய்தன” -- செய்யுள்-31) கர்மங்களை எப்படியாவது முடிவிற்கு கொண்டுவர அவன் ஆர்வம் கொண்டான். எனவே, ஓ பெருமானே! வள்ளி தேவியைத் தவிர வேறு எவரையும் துதிக்காதவரே! விதியை அநுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் உடல் எடுத்து உழலுவதிலிருந்து (பிறவிச் சுழலிலிருந்து) விடுபட இயலாத அளவிற்கு என்னுடைய (சஞ்சித) கர்மங்கள் உள்ளன. இவற்றிலிருந்து விடுபட்டு, நான் முக்தியை அடையத் தங்கள் தாமரைமலர் போன்ற திருப்பாதங்களை என்று அருள்வீர்! என்று அவன் இறைவனிடம் பிரார்த்திக்கிறான். தன்னை நினைத்து ஏங்குகிற ஜீவாத்மாக்களை உடனே ஏற்றுக்கொள்ளும் பெருமானின் தெய்வீகக் கொள்கையை, வள்ளிதேவியின் விஷயத்தில் அவர் கடைப்பிடித்ததை, அவருக்கு இங்கு ஞாபகப்படுத்தி, தானும் அவ்வாறு அவரின் கருணையைப் பெறுவதற்காகவே, அவர் வள்ளி தேவியைப் பாராட்டி வணங்குவதை அச்சாதகன் வர்ணனை செய்தான்போலும். மேலும், இது, தன்னை சம்சாரத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அவனுக்கு இருக்கும் தீவிர விருப்பம், இறைவனைத் திருமணம் புரிந்து கொள்வதில் வள்ளி தேவி காட்டிய தீவிரம் போன்றது என்பதைக் காண்பிக்கிறது.

    செய்யுள்-21 மற்றும் இச்செய்யுளில் முக்தியாகிய இறை-பாதங்களைத் தனக்குத் தந்தருளுமாறு அச்சாதகன் செய்த பிரார்த்தனைகள் செய்யுள்-44இல் நிறைவேற்றப்படுகின்றன. (இதைப் பின்னர் காண்போம்.)

    “விதி காணும் உடம்பு” : --- (கர்ம பலன்களை அநுபவிக்கும் உடல்.) இவ்வுடல் பிராரப்த கர்மத்தின் விளைவாகும்; அப்பிராரப்தத்தை அநுபவிப்பதும் இவ்வுடலே; அப்பிராரப்தத்தை (அநுபவித்துத்) தீர்ப்பதும் (கழிப்பதும்) இவ்வுடலே. பிராரப்த கர்மம் என்பது சஞ்சித கர்மத்திலிருந்து இப்பிறவியாய் வெளிப்பட்ட ஒரு சிறிய பகுதி; சஞ்சித கர்மம் என்பது ஒருவன் தான் முற்பிறவிகளில் செய்த (தீர்க்கப்படாத) கர்ம பலன்களின் மொத்தத் தொகுப்பு. இச்சஞ்சித கர்மம், ஒருவனைத் தாழ்ந்தப் பிறவிகளான புல், பூண்டு, பசு-பட்சிகளிலிருந்து உயர்ந்த பிறவியான தேவர்கள் வரையிலான உயிரினங்களில் ஏதோ ஒன்றாக, பற்பல பிறவிகள் எடுத்திட வைக்கும் ஆற்றல் கொண்டது. ஆதலால், தற்போதைய பிராரப்த கர்மங்கள் தீர்ந்தவுடன் இவ்வுடலானது இறக்கும்பொழுது, அவன் முக்தி அடைந்து விடுவதில்லை; மீதமிருக்கும் தனது சஞ்சித கர்மங்களைத் தீர்ப்பதற்காக, அவன் (ஜீவாத்மா) பலப்பல பிறவிகளை எடுத்துத்தான் ஆக வேண்டும். அச்சஞ்சித கர்மத்திலிருந்து எவ்வெப்பகுதிகள் அவன் எடுக்கும் அடுத்த பிறவிக்கும் மற்றும் அதற்கு அடுத்தடுத்து எடுக்கும் பிறவிகளுக்கும் காரணமாகுமோ, அவ்வப்பகுதிகள் அவ்வப்பிறவிகளின் பிராரப்த கர்மமாகிறது. அப்பிறவிகள் மனிதப் பிறவியாகத்தான் இருக்கவேண்டு மென்பதில்லை; எண்பத்து நான்கு இலட்சம் யோனிவகைகளில் (செய்யுள்-39), பிராரப்த கர்மங்களின் இயல்புக்கு (நல்லது, கெட்டது, இரண்டும் கலந்தது) ஏற்ற யோனிவகையில் ஏதோ ஒன்றாக இருக்கலாம். ஆகையால், சஞ்சித கர்மம் என்பது, பிராரப்த கர்மங்களை அநுபவிக்கும் அநேகப் பிறப்புகளுக்குக் காரணமாகிறது. இதுவே இச்செய்யுள் “விதி காணும் உடம்பை விடா வினையேன்” என்று விளம்புவதின் அர்த்தம் --- “(இன்னும் பல ஜென்மங்களில்) பிராரப்த கர்மங்களை அநுபவிக்கும் உடலை விட்டுவிட (தவிர்க்க) முடியாத அளவிற்கு (சஞ்சித) கர்மங்களை உடையவனானவன் நான்.” --- “எனது (சஞ்சித) கர்மங்கள் மலைபோலுள்ளதால், (பிராரப்த) விதி காணும் உடம்பிற்கு ஒரு முடிவு என்பதே இல்லை.” அதாவது, பிறப்பு-இறப்பு சுழற்சிக்கு ஒரு முடிவு இல்லை. இதுவே முன்னர் “உழலுதல்” – “பிறப்பு இறப்பு சுழற்சியில் சுழன்று வருதல்” என்று செய்யுள்-16ல் குறிப்பிடப்பட்டது; பின்னர் செய்யுள்-39ல் மாவேழ் சனனம்” – ‘ஏழு பெரிய பிறவிகள்என்று குறிப்பிடப்படுகிறது.

    இந்த முடிவற்ற பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து ‘கதி காண’ (விடுபடும்) வழிதான் என்ன? பெருமானின் மலர்க் கழலைப் (பாதங்களைப்) பெறுவதே அதற்கான தீர்வு. எனவே அச்சாதகன் ‘மலர்க் கழல் அருள்வாய்’ (முக்தி தருவாயாக) என்று இங்கு பெருமானிடம் வேண்டுகிறான். எப்பொழுது பெருமானின் பாதங்கள் ஒருவனுக்கு அருளப்படுகின்றதோ, அப்பொழுது அவனது அனைத்துக் கர்மங்களும் துடைக்கப்படுகின்றன; “கால்பட்டு அழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே” (கந்தரலங்காரம்-40). அல்லது, எப்பொழுது வேல் (ஞானம்) தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றதோ (ஆத்ம ஞானம் பெறப்படுகின்றதோ), அப்பொழுது அவனது அனைத்துக் கர்மங்களும் எரிக்கப்படுகின்றன; {ஸ்ரீமத் பகவத் கீதை (4.37) -- ஞானாக்னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா”.} இரண்டின் அர்த்தமும் ஒன்றேதான் --- அதாவது, முக்தி பெறப்படும்பொழுது, அனைத்து கர்மங்களும் (சஞ்சித கர்மம் உட்பட) உடனே மிச்சமீதி ஒன்றுமில்லாமல் முழுவதுமாக அகன்று விடுகின்றன. அனைத்துக் கர்மங்களிலிருந்தும் முழுமையாக விடுதலையடைவதற்கு, இதையன்றி வேறு எவ்வழியும் இல்லை. இல்லையெனில், அக்கர்மங்களை கழித்திட, கர்ம விதிப்படி, 84 இலட்சம் யோனிகளான உயிரினங்களில் மாறி மாறிப் பிறந்திட வேண்டும்.

    கர்மங்கள் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று மூன்று வகைப்படும். இதுகாறும் எடுத்த எல்லா ஜன்மங்களிலும் செய்த கர்மங்களின் மொத்த தொகுப்பு (கூட்டுத்தொகை) சஞ்சித கர்மமாகும். இச்சஞ்சிதத்தை ஜீவனானவன் ஒவ்வொரு ஜன்மத்திலும் தன்னுடன் (காரண உடலில்) எடுத்துச் செல்கிறான். சஞ்சித கர்மங்கள் முழுவதுமாகத் தீரும்வரை, ஜீவனுக்கு முக்தி என்பது கிடையாது. இந்த மொத்த சஞ்சிதத் தொகுப்பிலிருந்து, ஒரு சிறிது எடுக்கப்பட்டு, அப்பொழுது ஜீவன் எடுக்கப் போகும் ஜன்மத்தில் அனுபவிப்பதற்கென்று ஒதுக்கப்படும்; அது பிராரப்த கர்மம் என்று அழைக்கப்படுகிறது. அந்த பிராரப்த கர்மங்களை அனுபவித்துத் தீர்க்கும்போது, அந்தப் பிறவியில், ஜீவன் புதிய கர்மங்கள் செய்கிறது, அப்புதிய கர்மங்கள், ஆகாமிய கர்மம் என்றழைக்கப்படுகிறது; அவை சஞ்சித கர்மத்துடன் சேர்க்கப்படுகிறது. இவ்வாறாக, சஞ்சிதம் -- பிராரப்தம் -- ஆகாமியம் -- சஞ்சிதம் என்ற சுழற்சி வட்டம் ஏற்படுகிறது. வங்கியில் நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கை இந்த மூன்று விதமான கர்மங்களுக்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்:

  • சஞ்சிதகர்மா என்பது சேமிப்புக் கணக்கிலிருக்கும் இருப்புத்தொகை (Total balance),
  • பிராரப்தகர்மா என்பது அக்கணக்கிலிருந்து அவ்வப்பொழுது திரும்ப பெறப்படும் தொகை (Withdrawls),
  • ஆகாமியகர்மா என்பது அக்கணக்கில் அவ்வப்பொழுது சேர்க்கப்படும் தொகை (Deposits).

    நம்முடைய இந்த உடல் சஞ்சித கர்மத்தின் ஒரு சிறு பகுதியான பிராரப்த கர்மத்தை அனுபவித்துக் கழித்திடும்போது, நாம் இவ்வுடலில் தற்போது செய்யும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படுகிறது; இந்த ஆகாமிய கர்மங்கள் சஞ்சித கர்மத்துடன் கூட்டப்படுகிறது (சேர்ந்து விடுகிறது). எனவே, நம்முடைய இவ்வுடல் பிராரப்த கர்மத்தின் காரியமாக இருக்கும் அதே சமயத்தில் ஆகாமிய கர்மத்தின் காரணமும் ஆகிறது. அதாவது, சஞ்சிதத்தின் ஒரு பகுதியைத் தீர்க்கும் இவ்வுடல், ஆகாமியம் மூலம் ஒரு பகுதியை அதில் சேர்த்து விடுகிறது. ஆதலால், சஞ்சிதமென்பது ஒரு முடிவிற்கு வரவே முடியாத தொடர்கதைபோல் தோன்றும்; அதேபோல் பிறப்பு-இறப்பு எனும் இச்சம்சாரச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற முடியாது என்று தோன்றும். இத்தருணத்தில், இயல்பாகவே நம் மனதில் ஒரு கேள்வி எழும்: இச்சம்சார சக்கரத்திற்கு ஒரு முடிவே இல்லையா? சாதாரணமாக, உண்மையில் ஒரு மனிதனால் இந்தக் கொடிய சக்கரத்திலிருந்து வெளிவர முடியாதுதான். எனவேதான், அச்சாதகன் இறைவனிடம், “விதி காணும் உடம்பை விடா வினையேன்” ---- “(இன்னும் பல ஜென்மங்களில்) பிராரப்த கர்மங்களை அநுபவிக்கும் உடலை விட்டுவிட (தவிர்க்க) முடியாத அளவிற்கு நான் (சஞ்சித) கர்மங்களை உடையவனாக இருக்கிறேன்.” என்று புலம்புகிறான்.

    இந்த உடல் எடுத்ததன் நோக்கம் பிராரப்தத்தை (பழைய கர்மங்களின் பலன்களை) அனுபவித்து முடித்து, அதன்மூலம் சஞ்சிதத்தைச் சிறிது சிறிதாக தீர்ப்பது ஆகும். அதேசமயம், அந்த ஜீவாத்மா புதிய (ஆகாமியம்) கர்மங்கள் எதையும் சேர்க்காமல் வாழவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜீவாத்மா தன்னை இவ்வுடலாகவும், கர்மங்களைச் செய்பவனாகவும் கருதி, கர்ம பலன்களை விரும்பி வாழ்வதால், பொதுவாக எவனாலும் ஆகாமிய கர்மங்களைச் சேர்க்காமல் வாழ முடியாது, இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதற்கு, கர்மயோகத்தை அநுசரிக்குமாறு சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. கர்ம-யோகமென்றால் என்ன? செயல்களைச் செய்பவன் ‘நான்’ என்று கருதாது, இறைவனின் நிமித்தமாகச் செய்வதாகக் கருதி; செயல்களிலிருந்து எவ்விதப் பலன்களையும் எதிர்பார்க்காமல், செய்யும் செயல்களையும், அவை தரும் பலன்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் ஆகிய அனைத்தும் சேர்ந்தது கர்ம-யோகத்தின் சாரமாகும். இப்படியாகக் கர்மங்களைக் கர்ம-யோகமாகச் செய்வதே ஒரு மனிதனுக்கு மிகவும் கடினமான காரியம்; அதை ஒருவன் கஷ்டப்பட்டு ஒழுங்காகச் செய்து வந்தானென்றால், தற்போது செய்யப்படும் கர்மங்களின் பலனை ஆகாமியமாகாமல் தவிர்த்திடக்கூடும். அப்படியே ஒருவன் ஆகாமிய கர்மங்கள் எழாமல் தடுப்பதில் வெற்றி அடைந்தானெனினும், அதனால் சஞ்சித கர்மங்கள் மேலும் வளர்வதுதான் தடுக்கப்படுமே தவிர, அவன் கணக்கில் ஏற்கனவே குவிந்துள்ள சஞ்சித கர்மங்களை அனுபவித்துத் தீர்ப்பதற்கு இன்னும் பல பிறப்புகள் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், வேதங்களும், மகான்களும் அடிக்கடி வலியுறுத்துவது யாதெனில், மனித வாழ்க்கையின் குறிக்கோளான ஆத்மானுபூதியை ஒருவன் இப்பிறப்பிலேயே, உயிருடன் இருக்கும்பொழுதே, அடைய வேண்டும்; பின்பு எடுக்கும் ஒரு ஜன்மத்தில் அல்ல. சுவாமி சிவானந்த மகராஜ் கூறுகிறார்: “வாழ்வின் குறிக்கோள் இறைவனை அடைதல். அதை இப்பிறப்பிலேயே, இல்லை இக்கணத்திலேயே, அடைய வேண்டும்.” இப்பொழுது நம் மனதில் எழும் ஒரே கேள்வி அதை எப்படி அடைவது?’ என்பதுதான்.

    அதை அடைவது எப்படி? அதற்காக நம் முன்னர் இருக்கும் ஒரே வழி: “மலர்க் கழல் அருள்வாய்--- இறைவன் அவனது பாதங்களை நமக்குத் தந்து அருள் புரிய வேண்டுவதுதான். எனவேதான், அச்சாதகன் இறைவனிடம் அதற்காகப் பிரார்த்தனை செய்கிறான். இறைவன், இறை-பாதங்கள், கருணை, இறை- உணர்வு, ஆத்மா, பேரறிவு, வேல், ஆத்ம ஞானம் இவை அனைத்தும் சுட்டுவது பரம்பொருள் ஒன்றையே. இறைவன் தன் பாதங்களை அளித்தல் என்பது ஒருவனின் உள்ளுணர்வில் ஏற்படும் நிலை மாற்றத்தின் வெளிப்புற சார்புக் குறியீடாகும். அது ஆத்ம ஞானத்தின் உதயமாகும். அந்த ஆத்ம-ஞானக் கனல் அனைத்து கர்மங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

    ஜீவாத்மா இரண்டு தனித்தனிப் பொருள்களின் கலவை --- (புருஷ & பிரகிருதி) சைதன்யத்தின் ஒளி (புருஷ), மற்றும், மனம், இந்திரியம், உடல் ஆகியவைகளின் தொகுப்பு (பிரகிருதி). புருஷ என்பது செயல் எதுவுமற்ற தூய உணர்வு (சைதன்யம்), பிரகிருதி என்பது உணர்வு எதுவுமற்ற செயல். ஜீவாத்மா எனும் இவற்றின் கலவையில், ஒவ்வொன்றின் பண்புகளின் பரஸ்பர பரிமாற்றம் ஏற்படுகிறது; அத்தகைய பரிமாற்றத்தினால், செயல் எதுவும் அற்ற உணர்வு எனும் ஜீவாத்மா, தான் செயல் செய்வதாகவும், கர்மபலன்களை அநுபவிப்பதாகவும் கருதுகிறது, அதே சமயத்தில் உணர்வு எதுவும் அற்ற மனம்-இந்திரியம்-உடல்-தொகுப்பு சுயமாக உணர்வும் உயிரும் கொண்டுள்ளதாகத் தோற்றமளிக்கிறது. எனவே, ஜீவாத்மா (ஜீவ- உணர்வு) கீழ்க்காணும் இரண்டில் ஒன்றைச் செய்யக்கூடும் :
  • தனது மனம்-உடல் ஆகிய (உணர்வற்ற) பிரகிருதி தொகுப்பாக அது தன்னை கருதிக் கொள்ளலாம். அப்பொழுது அது, தான் பழைய கர்ம பலன்களை அநுபவிப்பதாகவும், புதிய கர்மங்களைச் செய்வதாகவும் கருதிக் கொள்ளும்;
    (அல்லது)
  • தூய உணர்வு எனும் ஆத்மாவிலிருந்து (புருஷ – பரமாத்மாவிலிருந்து) தான் வேறுபட்டிருக்கவில்லை என்று கருதிக் கொள்ளலாம். அப்பொழுது, மனம், இந்திரியங்கள், மூன்றுவித கர்மங்கள் ஆகியவைகளின் செயல்பாடுகளுடன் தன்னை எந்த விதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளாமலிருந்து, அவைகளால் தொடப்படாத வெறும் சாட்சியாகவும் இருக்கலாம்.

    ஆனால், ஜன்ம ஜன்மங்களாக ஜீவாத்மா தன்னை உடல் முதலானவைகளாகக் கருதி வாழ்ந்துவந்ததால், இந்தத் தவறான அடையாளம் அதற்கு சகஜமாகி, தன் உண்மை அடையாளமான ஆத்மாவையே முற்றிலுமாக மறந்து வாழ்கிறது.

    இறைவனின் பாதங்கள் எப்பொழுது அளிக்கப்படுகின்றதோ, ஞானம் எப்பொழுது உதிக்கிறதோ, ஜீவாத்மா எப்பொழுது தன் சுயத்தன்மையான தூய உணர்வு (இறை-உணர்வு) நிலைக்கு விழித்துக் கொள்கிறதோ, இறைவனின் கிருபை எப்பொழுது கிடைக்கிறதோ, அப்பொழுதிலிருந்து புருஷ (ஜீவாத்மா) பிரகிருதியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. உடனேயே ஜீவாத்மா கர்மங்களின் பிடியிலிருந்து விடுபட்டு விடுகிறது. ‘எப்பொழுது, எவ்வாறு இது சம்பவிக்கிறது?’ என்பது ஒரு பரம இரகசியம். இது சம்பவிக்க, இறையருள் ஒன்றே வழி. இறைவன் மீது ஒரு தீவிர ஏக்கம், மனமார்ந்த பிரார்த்தனை, இதய பூர்வமான முழுமையான அர்ப்பணிப்பு கொள்வதுதான் இறையருள் பெறுவதற்கான வழி. எனவே, அச்சாதகன் ஆன்ம விடுதலை பெற்றிட, இறைவனிடம் அவரது தாமரைப் பாதங்களைத் தனக்குத் தந்தருளுமாறு இறைஞ்சி பிரார்த்தனை செய்கிறான்.

    இப்பொழுது, அடுத்த கேள்வி எழுகிறது. ஒருவனின் வாழ்வில் செயல்படத் தொடங்கிவிட்ட பிராரப்த கர்மங்கள் என்ன ஆகின்றன? ஒரு ‘சாதாரண மனிதனை’ப் பொறுத்தவரை, அவன் பிராரப்த கர்மங்களை அநுபவித்துக் கழித்திடுவான், அதே சமயம், அவன் அப்பொழுது செய்து வரும் புதிய கர்மங்களால் ஆகாமியம் உருவாகிவிடும்; எனவே அவனது சம்சார பந்தம் (பிறப்பு-இறப்பு சுழல்) முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே போகிறது. அது அப்படியிருக்க, ஒரு ‘கர்ம யோகியை’ப் பொறுத்தவரை, அவன் பிராரப்த கர்மங்களை அநுபவித்துத் தீர்த்துவிடுகிறான், ஆகாமியத்தை உருவாக்குவதில்லை, ஆனால் சஞ்சிதமோ அப்படியே இருக்கிறது. அவற்றை அனுபவித்துக் கழித்து ஆத்ம-ஞானத்தை (சம்சாரத்திலிருந்து விடுதலை) அடைய அவன் இன்னும் சில பிறவிகள் எடுக்கவேண்டும். ஆனால், ஒரு ‘ஞானி’யின் நிலை முற்றிலும் வேறானது – தூய உணர்வான ஆத்மாவோடு ஞானி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதால், அவர் மூன்றுவித கர்மங்களாலும் தொடப்படாமல் வாழ்கிறார். அந்த ஞானி பிராரப்த கர்மங்களை அனுபவிப்பதுபோல் பிறருக்குத் தோன்றலாம்; ஆனால், அவருக்கு அப்படி இல்லை. தூய உணர்வான, சர்வ-வியாபக ஆத்மாவில் நிலைத்திருக்கும் ஞானிக்கு, ‘எவ்வுடல் தன்னுடையது, எவ்வுடல் பிறருடையது?’ என்று சொல்ல இயலும்? மற்றவர்களால் ‘இது ஞானியினுடையது’ என்று நினைக்கப்படும் அந்த உடல், ஞானியைப் பொறுத்தவரை அந்த உடலும் மற்ற எந்தவொரு உடலையும் போன்றதே. அவர் இவ்வுலக உணர்வு நிலையிலிருந்து மேம்பட்ட (பாரமார்த்திக) நிலையிலிருப்பதால், அவரைப் பொறுத்தவரையில், உடல் (அ) பொருள்கள் என்பவையே இருக்காது; எங்குமிருப்பது தூய உணர்வு (சைதன்யம்) ஒன்றே; அனைத்தும் அதனால் நிரப்பப்பட்டிருக்கிறது. எப்படி ஒருவன் கனவிலிருந்து விழித்த பின்னர், கனவில் கண்ட வங்கி, வங்கி சேமிப்புத் தொகை, வரவு வைக்கப்பட்ட தொகை, திரும்ப எடுக்கப்பட்ட தொகை, மற்றும் கனவில் அவனால் செய்யப்பட்ட பல விவகாரங்கள், மற்றும் ’கனவு-அவன்’ ஆகிய அனைத்துமே கனவு-நிலைக்கு மேம்பட்ட நினைவு-உணர்வில் ஒருமிக்க அடக்கமாகின்றனவோ; அப்படியே அந்த ஞானிக்கு கர்ம-வினைகளும், அவற்றை அனுபவிக்கும் கர்த்தாவும், அதனால் ஆளப்படும் இவ்வுலக நாடகமும் ஆகிய அனைத்தும் கடக்கப்பட்டு, மேம்பட்ட அவர் நிலைத்திருக்கும் இறை-உணர்வில் அடக்கமாகின்றன. அவ்விரண்டும் உண்மைத்தத்துவத்தின் இருவேறு நிலைகளாதலால், ஒரு நிலையில் செயல்படும் விதி முறைகள் மற்றொன்றில் செயல்படமாட்டா.

    கந்தப் பெருமான் சூரபத்மனைக் கொன்று, தேவர்களை அசுரர்களின் கொடூரங்களிலிருந்து விடுவித்து, தேவலோகத்தில் அவர்களது அசல் நிலைப்பாடுகளை மீண்டும் திரும்பப் பெற்றுத் தந்தார். ஆதலால், அவரே தேவர்கள் மற்றும் இந்திரலோகத்தின் ஈஸ்வரனுமாகிறார்.

    இறைவனிடம் அவருக்கிருக்கும் ஒருமுகப்பட்ட பக்தி காரணமாக, வள்ளி தேவியின் நெற்றி மிகவும் பிரகாசமாக ஒளிர்கிறது. சின்னக் குழந்தையாக இருந்தபொழுதிலிருந்தே, அவருக்கு முருகப் பெருமானிடத்தில் உண்மையான பக்தி தீவிரமாக இருந்தது, மேலும் பெருமானின் லீலைகள், மகிமைகள், ஆகியவைகளைப் பற்றியே எப்பொழுதும் அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அவரது மனமானது பெருமானிலேயே ஆழ்ந்திருந்தது; முருகப் பெருமானையே மணந்திடத் தீர்மானம் கொண்டிருந்தார். எனவே, தன் மீது வள்ளி தேவிக்கு இருந்த ஆழ்ந்த ஏக்கத்தால் மகிழ்ந்து, முருகப் பெருமானே தேவி இருந்த தினைப் புனத்திற்குச் சென்றார். பெருமான் அவரைப் புகழ்ந்து பேசி, சோதித்து, இறுதியில் அவரைத் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர் தன்னிடம் கொண்டிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பிற்காக முருகன் அவரை மட்டுமே புகழ்ந்து பாராட்டினார். அப்படிச்செய்வது முருகப் பெருமானுடைய விரதம் (உன்னதக் கொள்கை).

    இறைவனுடன் ஐக்கியமடைய ஏங்கித் தவிக்கும் ஜீவாத்மாவைக் குறிக்கிறார் வள்ளி தேவி. வள்ளிதேவியைத் தவிர வேறு ஒருவரையும் பாராட்டுவதில்லை என்ற முருகப் பெருமானுடைய கொள்கை, மற்ற எல்லாவற்றையும் நிராகரித்து, அவரிடம் மட்டுமே தங்கள் பூரண பக்தியைச் செலுத்தி, அவரையே அடைய முயலும் ஜீவாத்மாக்களுக்கு அவர் உதவி புரிய விருப்புகிறார் என்பதைத் தெரிவிக்கிறது. அத்தகைய கந்தப் பெருமானிடம் அச்சாதகன் அவரது தாமரைப் பாதங்களை தனக்கு அளித்திடுமாறு வேண்டுகிறான்.
    

No comments:

Post a Comment