செய்யுள் – 38
ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.
பொழிப்புரை: “ஓ வேலாயுதப் பெருமானே! கூதாள மலர் மாலையை அணிந்தவரே! வேடுவக் குல வள்ளி தேவியின் மணாளனே! வேதாள கணங்களால் (பேய்க் கூட்டங்களால்) போற்றப்படுவரே! ஓ பெருமானே, நான் ஒரு படாடோபக்காரன், வம்பன், நன்மை ஒன்றுமே அறியாத மூடன், மேலும் முற்றிலும் தீய குணங்கள் நிறைந்தவன். அப்படிப்பட்ட என்னை நீங்கள் ஏற்று ஆட்கொண்ட கருணையை என்னவென்று சொல்வது!”
விளக்கவுரை
அச்சாதகன் தன் குரு தன்னை ஒரு சீடனாக ஏற்றுக் கொண்டு, தன் பால் மிக்க கருணை கொண்டு சன்னியாச தீக்ஷையும் தந்து, தியான முறையையும் உபதேசத்து அருள்புரிந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவன் தனது நன்றியை வெளிப்படுத்திட சொற்களே கிடைக்காமல் தடுமாறுகிறான். ஏனெனில், இந்த ஆன்மீகப் பாதையில் நடக்கத் தொடங்குவதற்கு முன்னர் அவன் எவ்வாறு இருந்தான் என்பதும்; பின்னர், தொடக்கத்திலிருந்தே ஆன்மீகப் பாதையில் அவன் அவ்வப்போது எதிர்கொண்ட இடர்பாடுகளை எதிர்கொள்ள குரு எப்படியெல்லாம் உதவி செய்து வந்தாரென்பதும்; கடைசியாக அவர் இவ்வுபதேசம் தந்தருளுவதற்கு முன்னர் தனது நிலைமை எப்படி இருந்தது என்பதும் (செய்யுள்-31 – தாழ்வானவை செய்தது) அவனுக்கு நன்றாகத் தெரியும். தன் சஞ்சித கர்ம மூட்டைக்குள் பலவகையான கொடூரமான கர்மங்கள் இருப்பதை அவன் ஒரு வேளை பார்த்ததனால்தான் இங்கு அவன் தன்னை ‘அறத் தீதாளி’ (முற்றிலும் தீய இயல்பு கொண்டவன்) என்றழைத்துக் கொள்கிறான். இவைகளையெல்லாம் நினைவிலிருத்தியே அவன் உணர்ச்சி பொங்க பின்வருமாறு கூறுகிறான்: “நான் ஒரு வரட்டு ஜம்பக்காரன், நல்லது ஒன்றையும் அறியாதவன், கொடூரமான தீய இயல்புகளைக் கொண்டவன்; இருந்தபோதிலும், நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டு மாற்றியமைத்தீர்கள்! உங்களது கருணையைப் பற்றி நான் என்னதான் சொல்ல இயலும்!”
சன்னியாச தீக்ஷை கொடுக்கும்போது நடத்தப்பட்ட சடங்குகளின் அபார சக்தி, கோஷிக்கப்பட்ட வேத மந்திரங்களின் பலன், ‘தத் த்வம் அஸி’ என்ற மகாவாக்கிய உபதேசத்துடன் குருநாதர் அவனுக்குத் தந்தருளிய ஆற்றல், ஆகிய அனைத்துமாகச் சேர்ந்து அச்சாதகனிடம் ஒரு முழுமையான உள் பரிமாற்றத்தையே கொண்டு வந்துவிட்டது. இச்சடங்குகளின் இறுதியில், குரு அவனுக்கு காவி வஸ்திரங்களைக் கொடுக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ளும்போது, அவனை அறியாமலேயே ஒரு உணர்ச்சி அவனை ஆட்கொள்ளுகிறது; ஏனெனில் அவன் எப்படியிருந்தானென்றும், உண்மையில் அவன் சந்நியாசத்திற்கு அருகதையில்லாதவனென்றும் அவனுக்குத் தெரியும். சன்னியாசம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளையும் உடைய ஒருவனைக்கூட, தான் அதற்கு தகுதியானவனா என்று சிந்திக்கச் செய்யும் அந்த சன்னியாச வைபவம். உதாரணமாக, உலகத்திலேயே உயரமான ஒருவன் ஒரு மிகப்பெரிய மலை முன் நின்றால், அவன் எப்படித் தன்னை ஒரு சித்திரக் குள்ளனாக உணர்வானோ அப்படி தற்சோதனை செய்வான். எனவே, காவி வஸ்திரங்களைப் பெற்ற அச்சாதகன் ஆத்ம ஞானத்திலும் பேரின்பத்திலும் மலைபோல் உச்ச நிலையிலிருக்கும் ஆசானான தன் குருவின் பாதாரவிந்தங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, முழுமையான விநயத்துடன், தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்துகிறான்: “குருவே, என் இறைவனே! நான் ஒரு வரட்டுஜம்பக்காரன், நல்லது ஒன்றையும் அறியாதவன், கொடூரமான தீய இயல்பு கொண்டவன், நான் ஒரு முழு முட்டாள். இவ்வாறெல்லாம் இரும்பு போன்று இருந்த என்னை (ஏற்றுக்கொண்டு) விலைமதிப்பற்ற தங்கம் போன்று மாற்றியமைத்துவிட்டீர்கள்! நான் திகைத்து ஊமைபோல் ஆகி விட்டேன்”.
சன்னியாச ஆசிரமத்தை மேற்கொள்ளும்போது ஒவ்வொருவரின் உண்மையான உணர்வும் இவ்வாறுதான் இருக்கிறது. மேலும், இத்தகைய ஒரு அருமையான பாக்கியம் கிடைப்பது எத்தனை பேர்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது! இந்த பாக்கியத்தை பல கோடி நபர்களில் ஒருவன் பெறுவதுகூட மிகமிக அரிது. இவ்வாசிரமத்தின் மகிமையை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. எனவேதான், பொய்யாமொழிப் புலவர் எனப் பெயர் பெற்ற திருவள்ளுவப் பெருமான் பின்வருமாறு கூறுகிறார்: “துறந்தார் பெருமை துணைகூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” -— ‘முற்றும் துறந்த முனிவரது பெருமையை அளவிட்டுக் கூறுதல், இவ்வுலகத்தில் இதுவரை இறந்தவர்களை எல்லாம் எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது’ (குறள்: 3.2).
ஒரு மகாபுருஷராகிய குருவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சன்னியாச-தீக்ஷை கொடுக்கப்பட்டு, அவரிடமிருந்து மகாவாக்கிய உபதேசத்தைப் பெற்று, தனது நிஜ-சொரூபத்தை நினைவூட்டி உபதேசம் பெறுவது (செய்யுள்-37), ஒரு சாதகனுக்கு பெரும் சிறப்பு வாய்ந்த முக்கிய சம்பவம். எனவே, தனது அதிர்ஷ்டத்தை நினைத்து அவன் அதிசயிக்கிறான்; மேலும், மிக்க கிருபையும் கருணையும் கொண்டு தனக்கு இவ்வாறான பொன்னான வாய்ப்பையளித்த தன் குருவிற்கு அவன் மௌனமாகத் தன் மனதில் பலகோடி நன்றிகளையும் செலுத்துகிறான். சாதாரணமாக, தகுதி வாய்ந்தவனென்று கருதப்படும் சீடனுக்கே குரு சன்னியாச ஆசிரமம் கொடுப்பாரென்றாலும், எந்த சாதகனும் தான் நூறு சதவிகிதம் தகுதி உடையவன் என்று மார்தட்டிக் கொள்ள இயலாது; உண்மையாகவே தகுதி உடையவனான ஒருவன் விஷயத்திலும்கூட, குருவானவர் அவன்பால் காட்டிய கிருபையாலும் முன்னர் அவர் அவனை இதற்குத் தயார்படுத்தியதாலும்தான் அந்த தகுதியானது வந்ததென்பது அவனுக்குத் தெரியும். எனவே, குரு தன்பால் காட்டிய கிருபையைக் கண்டு அதிசயித்து, அச்சாதகன் தனக்குக் கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆச்சரியமடைகிறான்.
மலைப் பகுதிகளில் கூதாள பூச்செடிகள் காணப்படுகின்றன. அதன் மலர்களுக்கு நல்வாசனையோ அழகோ இல்லை. அப்படிப்பட்ட கூதாள மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை முருகப் பெருமான் அணிந்து கொள்கிறார். இது அவரது எளிமையையும், தகுதியற்ற பொருள்களைக் கூட உவந்து ஏற்றுக்கொள்ளும் கருணை உள்ளத்தையும் குறிக்கிறது. இயல்பாகவே மிகவும் கொடூரமான குணம் கொண்ட வேடுவர்களால் வள்ளி தேவியார் வளர்க்கப்பட்டவர். பெருமான் தானே தேடிப்போய், அவரை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார். இதுவும் பெருமானின் தாராள குணத்தை வெளிப்படுத்துகிறது. சூரபத்மன் மற்றும் அவனது படையுடன் நடந்த போரில், பெருமானின் வேலாயுதத்தால் எண்ணிலடங்கா அசுரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பிணம் தின்னும் வேதாள கணங்கள், அந்த இறந்த அசுரர்களின் உடல்களை உண்டு நல்விருந்து பெற்றதால் மகிழ்ந்தனர்; அந்த மகிழ்ச்சியில் அவர்கள் கூவி, பாடி, ஆடிப் பெருமானைப் போற்றினர். பெருமானும் அவர்களது பாடல்களையும், போற்றுதல்களையும் கேட்டு மகிழ்ந்தார். பெருமான் எவ்வளவு கருணை படைத்தவர், மற்றும் எளிமையானவர்! தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், பக்தர்களும் சரியான ஸ்வரத்துடன் கூடிய வேத மந்திரங்களை ஓதுவதைக் கேட்பதில் பெருமகிழ்ச்சி அடையும் அதே பெருமான், பேய்களும் பிசாசுகளும் செய்யும் பெரும் குழப்பக் கூச்சல்களை பொறுமையுடன் கேட்டு ரசிக்கிறார். இவை அனைத்தும் பெருமானுடைய இரக்க குணத்தையும், தகுதியற்ற பொருள்களைக் கூட மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் உன்னத குணத்தையும் மிக அழகாக சித்தரிக்கின்றன. இந்த உபமானங்களை இச்செய்யுளில் கொடுப்பது எவ்வளவு பொருத்தம்: “ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ!
|
செய்யுள் 38
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment