செய்யுள் – 43
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.
பொழிப்புரை: “ஓ முருகப் பெருமானே! தூய இரத்தின மணி மாலைகளும் (மணி பொருத்தப்பட்ட ஆபரணங்களும்) தூய ஆடையும் அணியும் வள்ளியின் நேசரே! (அல்லது) வள்ளியை நேசிப்பவரே! உங்களது அன்பு-அருளால் எனது ஆசை சங்கிலி தூள் தூளாகிப் போயிற்று (அழிந்தது), பின் பேசா-அநுபூதி (மகா-மௌனமான அநுபூதி நிலை) பிறந்தது. (அடியேனுக்குக் கிடைக்கப் பெற்றது).”
விளக்கவுரை
சமாதி நிலை (வேல்), இறை-அநுபவம் முந்தைய செய்யுளில் அடையப்பட்டது. அந்த சமாதி நிலையில் அந்த சன்னியாச-சீடன் உணர்ந்த அனுபவத்தை இச்செய்யுளில் நேர்முறை வார்த்தைகளில் விவரிக்கிறான். எனவே, இது ‘இறந்த காலத்தில்’ கூறப்பட்டுள்ளது.
சாதாரணமாக, வேடுவக்குல மங்கையர்களின் ஆடைகள் அவ்வளவாக தூய்மையாயிருக்காது. ஆனால், தூய ஆடை-ஆபரணங்களை அணியும் வள்ளியின் நேசன் முருகப் பெருமானென்று இச்செய்யுளில் குறிப்பிடப்படுகிறது. இதில் பொதிந்துள்ள கருத்து: ஆன்மீக சாதனையின் தொடக்க காலத்தில், ரஜோ மற்றும் தமோ குணங்கள் நிறைந்து அசுத்தமாயிருந்த சாதகன், நெடுங்காலம் சாதனைகள் செய்து, சன்னியாச தீட்சையும் பெற்று, ‘அஹம் பிரம்ம அஸ்மி’ (“நான் பிரம்மம்”) என்று ஆழ்ந்த தியானம் செய்த பின்னர், பூரணத் தூய்மையடைந்து ஸத்வ குணம் நிரம்பப்பெறுகிறான். அந்நிலையில் அவன் இறைவனின் கிருபையை முழு அளவில் பெறுவதற்கு முடிகிறது. அத்தகைய நிலையை ‘அன்பருள்’ (அன்பு + அருள்) என்ற ஒரு புதுமையான வார்த்தையால் குறிப்பிடுகிறார் அருணகிரியார்.
‘அன்பருள்’ (அன்பு + அருள்): ‘அன்பு’ என்றால் இறைவன்பால் காட்டப்படும் நேசம்/பக்தி; அதில், பிரார்த்தனை, ஆர்வம், முயற்சி, மற்றும் சரணடைதல் போன்றவை அடங்கியுள்ளன. இவ்விதங்களில் அன்பு அல்லது பக்தி வெளிப்படுத்தப்படுகின்றது. (அதாவது, பிரார்த்தனை மற்றும் சரணடைதல் மூலமாக இறைவனை அடைந்திட ஜீவன் முயற்சி செய்கிறது.) ‘அருள்’ என்றால் கிருபை; ஜீவன் தன்பால் செலுத்தும் அன்பை ஏற்று, நெகிழ்ந்து அவன் மேல் இறைவன் காட்டும் பதில் உணர்வு. சாதனை அல்லது ஆன்மீகப் பயிற்சி என்பது ஒரு தொடர் போராட்டம். இச்சாதனையின் துவக்கத்திலிருந்தே தடைகளும், தடங்கல்களும் மீண்டும் மீண்டும் அதிக வீரியத்துடன் சாதகனிடம் வந்து கொண்டே இருந்ததையும், அவற்றை வெல்வதற்குப் பிரார்த்தனையை தீவிரமாக்கிக் கொண்டு, மேன்மேலும் சரணாகதியை அவன் அதிகமாக்கிக் கொண்டே போனதையும், அதனால் இறை-கிருபையானது அவன்பால் மேன்மேலும் ஈர்க்கப்பட்டதையும் பார்த்தோம். இவ்வாறு அவன் ஆன்மீகத்தில் முன்னேற்றமடையும்போது, இந்த ‘தெய்வீக-தேடல்’ வட்டம், --- பிரச்சினைகள்/தடைகள் --- அன்பு/ பிரார்த்தனை/ சரணாகதி --- கிருபை/ஆசி என்பவை தொடர்ச்சியாக மாறிமாறி நடந்துகொண்டே இருந்ததையும் பார்த்தோம். இது ‘அன்பு-அருளின்’ மர்மம் நிறைந்த ஒரு தெய்வீக விளையாட்டு. இதில் ‘அன்பு’, ‘அருள்’ ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிய-செயல்-விளைவை உண்டுபண்ணி, தங்கள் பரஸ்பரத் தொடர்பை தீவிரப்படுத்துகின்றன. இவ்வாறு தொடரப்பட்டு, ஜீவ-அன்பும் சரணாகதியும் பூரணநிலையை எய்தும் அதே சமயம், இறை-கிருபையின் பொழிவும் துரிதமடைகிறது; அப்போது, அதன் உச்சகட்டமானது எட்டப்படுகிறது. அந்த உச்ச கட்டத்தில் ‘அன்பு’ மற்றும் ‘அருள்’ ஆகிய இரண்டும் ஒருங்கிணைகின்றன. அதனால் அங்கு பிரகாசம் (ஜோதி) வெளிப்படுகிறது, ஆத்மானுபூதி ‘நிகழ்’கிறது {எப்படி நேர்மறை மற்றும் எதிர்மறை (கம்பிகள்) ஒன்றுசேரும்போது, (மின்) வெளிச்சம் வருகிறதோ அப்படியே}. அவ்வெளிச்சம் அறியாமையெனும் (அவித்யை) இருளை அகற்றுவதோடல்லாமல், அதன் விளைவான ஆசைகளின் தீய சங்கிலியையும் (அவித்யை -- காமம் -- கர்மம்) அறுத்து தூள்தூளாக்குகிறது. ‘அன்பு’ ‘அருள்’ ---- இவ்விரண்டும் சங்கமமாவது ‘அன்பருள்’ என்று குறிப்பிடப் படுகிறது, அதனால் அவித்யை -- ஆசை -- கர்மம் ஆகியவைகள் உருவாக்கிய தீய சங்கிலித் தொடர் அறுக்கப்பட்டு அழிக்கப்பட்டன (“ஆசா நிகளம் துகளாயின”), அதன் விளைவாக (“பின்”) “பேசா அநுபூதி பிறந்தது”, அதாவது நிர்விகல்பக சமாதி எனப்படும் ‘பூரண அமைதி’ ((அவனில் நிரந்தர அமைதி) குடிகொண்டது.
இதைத்தவிர, இந்த ‘அன்பருள்’ என்பதற்கு இன்னொரு மகத்துவமும் உள்ளது. இந்த அன்பு எனப்படும் ஜீவ-முயற்சியே ‘அருள்’ அல்லது இறை-கிருபையின் வெளிப்பாடுதான். (இறைவனே ஜீவனின் அகங்காரத்தின் மூலம் செயல்படுவது --- “அவன் அருளால் அவன் தாள் வணங்கி”.) ஆனால், சாதனையின் துவக்க கால கட்டங்களில் ஜீவனின் (மனத்) தூய்மை போதியஅளவு இல்லாமையால், அவனால் இதை உணர முடிவதில்லை; அதனால், தானே (சாதனை செய்வதன் மூலம்) பெரு முயற்சி எடுத்து வருவதாகக் கருதுகிறான். பின்னர், சாதனையில் முன்னேற்றம் பெறப்பெற, அகங்காரமானது மெலிவடைகிறது (மனம் தூய்மை பெறுகிறது). அந்நிலையில் தனது முயற்சியெல்லாம் இறைவனது கிருபையால் செய்யப்பட்டதே என்பதை சாதகன் உணர ஆரம்பிக்கிறான். அவன் எப்போது ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களின் பிடியிலிருந்து முழுவதுமாக விடுபடுகிறானோ (பூரண மனத்தூய்மை பெறுகிறானோ), அப்போது இதுகாறும் இறைவனின் கிருபையே தன்னில் வேலை செய்து வந்திருக்கிறது என்று உணர்கிறான். தனது சுய-முயற்சி என்று தான் இதுவரை நினைத்து வந்ததெல்லாம், அகங்காரத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இறை-கிருபையே என்று உணர்கிறான். இறுதியில், அன்பும் (சுய-முயற்சியும்) அருளும் (கிருபையும்) ஒன்றாக இணையும்போது, அங்கு ஜோதி (பிரகாசம்) வெளிப்படுகிறது, பேசா-அநுபூதி பிறக்கிறது. எனவே, ஆன்மீக வாழ்க்கை முழுவதுமே இறை-கிருபையின் விளையாட்டைத் தவிர வேறொன்றுமில்லை; அன்பும் அருளும் ஆகிய இரண்டும் இறைவனுடையதுதான். எனவேதான், அருணகிரியார் ‘நினது அன்பருளால்’ என்று சொல்கிறார். அருள் மட்டும் அவருடையதல்ல; அன்பும் அவருடையதுதான். நாம் ‘கந்தர் அநுபூதி’ முழுநூலையும் உன்னிப்பாகப் படிப்போமானால், நூலின் தொடக்கத்திலிருந்தே, அதாவது காப்பு மற்றும் முதல் செய்யுளிலிருந்தே, நூலின் முடிவுவரை, ‘அருள்’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம் – அதாவது, இந்நூலானது இறை-கிருபையைத் தந்தருளுமாறு வேண்டும் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது – ஆன்மீக சாதனை இறையருளுடன் தொடங்கப்படுகிறது. பின்னர், ‘அருள்’ எனும் சொல் நூல் முழுவதும் அங்கங்கே வருகிறது, சாதகனுக்கு உண்டாகும் இடையூறுகளிலிருந்து அவனை விடுதலை செய்ய ; இறுதியாகக் கடைசிச் செய்யுள் ‘அருள்’ எனும் சொல்லுடன், எல்லோருக்கும் அருள் புரியுமாறு பிரார்த்தித்து முடிவடைகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால்: அனுபூதி அல்லது சாக்ஷாத்காரம் என்பது சாதனையின் தொடக்கத்திலிருந்து அனுபூதி அடையும்வரை எல்லாம் இறை-அருள் படிப்படியாக விரிவடைந்து வெளிப்படுதலே ஆகும். எனவே, நாம், “அவன் அருளால் அவன் தாள் வணங்கி, அவன் அருளால் அவனை அடையப் பெற்றேன்” என்று சொல்லலாம். — “இறை கிருபையால்தான் நாம் இறைவனின் பாத கமலங்களை வழிபடத் துவங்குகிறோம், மேலும் இறை-கருணையால்தான் நாம் இறைவனை (முக்தி) அடைகிறோம்.” இறைவன் வேறு, அவன் அருள் வேறு அல்ல; இறைவனே அருள்தான், அருளே இறைவன் ---- கந்தன் கருணைக்கடல், கிருபாகரன், கருணாமூர்த்தி. எனவே, நாம் இவ்வாறு கூறலாம்: ‘கந்தர் அநுபூதி’ = ‘அருள் அநுபூதி’ – கடவுள் அநுபவம், அருள் அநுபவமே.
அருணகிரியார் ‘கந்தர் அநுபூதி’ எனப்படும் இந்நூலை முருகப் பெருமான் அவருக்குக் கட்டளையிட்டபடி ‘திருத்துருத்தி’ என்ற ஊரில் அளித்ததற்கான சாத்தியக் கூறுகள் உள. “மலைக் கனத்தென மார்பினி லேயிரு” என்று தொடங்கும் திருப்புகழ்-இல் அருணகிரியார் பின்வருமாறு சொல்கிறார்:
“அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
அழைத்து, முத்திய தாமநு பூதியெ
னருட்டி ருப்புக ழோதுக வேல்மயி லருள்வோனே.”
“”அடைக்கலம் (சரணம்) கொடுக்கப்பட்டவன் எவ்விதம் காப்பாற்றப் படுவானோ, அவ்விதம் நாயனைய அடியேனை அன்புடன் அருகில் அழைத்து, (எனது இரு தோள்களிலும் எனைக் காக்கும் கவசமாக) வேற்பொறி மயிற்பொறி இட்டு, “எனது அருளும் எனது தெய்விக புகழும் (திரு+புகழ்) நிறைந்த முத்தியாகிய (அல்லது முத்தியைத் தரவல்ல) கந்தர் அநுபூதியை ஓதுக” எனத் திருவாய் மலர்ந்தருளியவனே!””
(குறிப்பு: முத்தியைத் தரவல்லது கந்தர் அநுபூதி. எனவே அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அநுபூதியையே முத்தி என்று கூறுகின்றார்.)
{இதைப்பற்றி விரிவான விவரங்களுக்கு ‘அறுமுகனருளால் பாவி ஞானியாக மாறிய அருணகிரிநாதரின் அற்புத சரிதம்’ என்ற நூலில் ‘திருத்தல யாத்திரை’ என்ற பகுதியைக் காணவும்}.
“நினது அன்பருளால் ஆசா நிகளம் துகளாயின”: — அவித்யை (அறியாமை) -- காமம் (ஆசை) -- கர்மம் (செயல்) ஆகிய இம்மூன்றும் ஆசைச்சங்கிலியின் (ஆசா நிகளம்) வளையங்கள். அவை இதய முடிச்சுகள் (‘ஹிருதய கிரந்தி’) என்றழைக்கப்படுகின்றன. ஆத்மா/ இறைவன் பற்றிய உண்மை அறிவு இல்லாமையும் (அறியாமை), (உலகப்) பொருள்களின் ஏமாற்றும் இயல்புபற்றிய புரிதல் இல்லாமையும் (அறியாமையும்) சேர்ந்து (உலகப்) பொருள்களின் மேல் ஆசைகளை உண்டுபண்ணுகின்றன. இந்த ஆசைகள், பொருள்களைச் சேகரித்து, அநுபவித்து இன்பம்பெற (To possess and enjoy) ஒருவனை கர்மங்களைச் செய்யத் தூண்டுகின்றன. இவ்வாறு ஆசையினால் தூண்டப்பட்டு செய்யப்பட்ட செயல்கள் மற்றும் அதன் விளைவுகள், பலன்கள் (அ) எதிர்வினையைத் தருகின்றன. இந்த விளைவுகள் ‘கர்ம பலன்கள்’ எனப்படுகிறது, இவை அறியாமையை மேலும் பலப்படுத்துகின்றன. இவ்வாறான அறியாமை -- ஆசை -- கர்மம் எனப்படும் முடிவற்ற சங்கிலித் தொடர், அன்பு-அருளிலிருந்து உண்டாகும் ஞான ஒளியால் (அ) மெய்யறிவால் அழிக்கப்படுகிறது. இவ்வாறாக, ஆசை-சங்கிலி அன்பருளால் அழிபடும்போது, ஜீவன் எல்லையற்ற பேருணர்வில் கரைந்து, ‘பேசா அநுபூதி’ பிறக்கிறது, பேரமைதி நிலவுகிறது. மனிதன் இறைவனில் ஐக்கியமடைந்து, இறை-மனிதனாக வெளிப்படுகிறான்; ஜீவன், ஜிவன்-முக்த புருஷனாகிறான். அத்தகைய உயர்ந்த நிலை அடுத்த செய்யுளில் விளக்கமாக சித்தரிக்கப்படுகிறது. இந்நூலின் உச்சகட்டம் 42, 43, மற்றும் 44வது செய்யுள்களில் அடையப்படுவதால், இவை மிகவும் கிளர்ச்சியூட்டுவனவாயும் சிலிர்ப்பூட்டுவனவாயும் உள்ளன.
சாதகனின் முழுதும் தூய்மையான இதயத்தில் இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிர ஏக்கமும் (முமுக்ஷுத்வம்) எழும்பும்போது, இறை-கிருபை ஈர்க்கப்படுகிறது; இவையிரண்டின் சேர்க்கையால், ஆசை-நிகளம் (அறியாமை ) அழிபட்டு, ஆங்கு ‘பேசா அநுபூதி’ மலர்கிறது, (இறை-அநுபவம் ‘நிகழ்’கிறது).
சாதனையின் தொடக்கத்தில் அடையவேண்டுமென்று பிரார்த்தனை செய்யப்பட்ட அந்த மிகப்பெரிய குறிக்கோளான ‘எல்லாமற என்னை இழந்த நலம்’ (செய்யுள்- 2), அதை அடைந்திடும் பெருமுயற்சியில் இவ்வளவு சோதனைகளும் துன்பங்களும் தொடர்ந்து (அச்சாதகனால்) எதிர்கொள்ளப்பட்டு, கடைசியாக இப்பொழுது அடையப்பட்டுவிட்டது.
‘பேசா அநுபூதி’ அருளப்பெற்ற மகான்கள் சமாதி நிலையிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருந்து, அதிலிருந்து வெளிவராமல் இருப்பதென்பது மிகவும் அரிது. அவர்கள் சமாதிநிலையிலிருந்து வெளிவந்து லோக-சங்கிரஹத்தில் (உலகின் ஒற்றுமைக்காக இரக்கத்துடன் செய்யப்படும் பொதுச் செயல்கள்) தங்களை ஈடுபடுத்திக் கொள்வதென்பது வழக்கமாக நடைபெறும் விஷயம். அவர்களின் உள்ளத்தில் இறை-விழிப்புணர்வானது நிலைபெற்று இருப்பதால், அவர்கள் ஆனந்தத்தையும் அன்பு-களிப்பு முதலியவற்றையும் பரவச்செய்கின்றனர்; உலகில் நடமாடும் இறைவன் என்று அவர்கள் கருதப்படுகின்றனர், அவர்களின் செயல்கள் இறைவனின் செயல்களாகவே கருதப்படுகின்றன. அத்தகைய மகாத்மாக்களுடன் (அருளாளர்களுடன்) ஸத் சங்கத்திலிருப்பது, அவர்களுக்கு சேவை செய்திடும் வாய்ப்பை பெறுவது, அவர்கள் உபதேசங்களைக் கேட்பது, அவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவது ஆகியவை கிடைக்கப்பெறுவது உண்மையில் ஓர் அபூர்வமான தனிச்சலுகை எனலாம். எப்படி சாதனையின் தொடக்கத்தில் இறைவன் குருவாக வந்து அச்சாதகனுக்கு வழிகாட்டி அருளினாரோ; அப்படியே, இறை-அனுபவம் பெற்று ஜீவன்முக்தனான சாதகன், தனது பங்கிற்கு, மற்ற சாதகர்களுக்கு குருவாகி அவர்களுக்கு வழிகாட்டச் செய்கிறார். எனவே, இச்செய்யுளுடன் ‘கந்தர் அநுபூதி’ நூல் முடிவு அடைந்ததுவிடுகிறது என்று சிலர் கருதுவதுபோல நினைப்பது சரியன்று. ஆன்ம விடுதலையைப் பெற்று சாத்யனாகிவிட்ட ஞானிகள், அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரிந்து, ஆன்மீகப் பசிகொண்ட ஜீவர்களுக்கு அவரவர்களின் நிலைக்கும் தேவைக்கும் ஏற்ற உணவை வழங்குகின்றனர்; செய்யுள் 45லிருந்து தொடங்கி அதன்பின்வரும் செய்யுள்கள் அனைத்தும் இத்தகைய வகையைச் சார்ந்தவை. எனவே அவை அனைத்தும் தனித்தன்மை கொண்டவை, அதே சமயம் இயல்பில் பலவிதமாக அமைந்துள்ளன. ஆகையால், ஆன்மிக விடுதலை பெற விழையும் சாதகர்களுக்கு வழிகாட்ட அநுபூதி அடைந்த மகான்கள் (குருமார்கள்) உலகத்தில் ஒரு பொழுதும் இல்லாமல் போவதில்லை.
இது ஒரு மிக அழகானதும் அருமையானதுமான செய்யுள்; ஏனெனில் இதில் அருணகிரியார் சாதனையின் முழுமையான செயல்பாட்டுமுறை மற்றும் குறிக்கோளை அடைவது பற்றி ரத்தினச் சுருக்கமாக விளக்குகிறார். ஒவ்வொரு செய்யுளிலும் முருகப் பெருமான் அந்தந்தச் செய்யுளில் சொல்லப்படும் முக்கிய கருத்திற்குப் பொருத்தமான, அர்த்தம்கொண்ட சொற்களால் விளிக்கப்படுகிறார். அதனால் தான் இச்செய்யுளில் தூய ஆபரணங்களையும் ஆடைகளையும் அணியும் வள்ளியின் நேசனே என்று அவர் அழைக்கப்படுகிறார்.
எதனால் பெருமான் வள்ளியின் நேசன்? அல்லது, அவளிடம் இருந்த எந்த விஷயத்தினால் பெருமான் கவரப்பட்டு, அவளை நேசிப்பவரானார்? அவளுடைய செல்வங்களா, அவளுடைய புலமையா, அவளுடைய பிறப்பா, சமூக அந்தஸ்தா – இதில் எது காரணம்? இதில் எதுவுமேயில்லை. அவளுடைய தூய அன்பு மட்டுமே அவரை அவளிடம் கவர்ந்து இழுத்தது. ரிஷி நாரதர் அவளுடைய முந்தைய ஜன்மத்திலிருந்தே அவள் அவர்பால் கொண்டிருந்த முழுஈடுபாட்டை அவரிடம் சொல்லிய உடனே, அவர் தன் இருப்பிடத்தை விட்டுவிட்டு, அவள் எங்கு தினைப்புலத்தில் பறவைகளை விரட்டிக் கொண்டிருந்தாளோ அந்த வள்ளிமலைக்குச் சென்றார். அவர் அவளுடைய செல்வச் செழிப்பு ஆகியவைகளில் மயக்கம் கொள்ளவில்லை; இவையெல்லாம் பெருமானுக்கு ஒரு பொருட்டில்லை. வள்ளி இறைவன்பால் கொண்ட உயரிய பக்தி, தூய அன்பு மட்டுமே வள்ளிக்குப் பெருமையைச் சேர்த்து, பெருமானையும் அவள்பால் ஈர்த்ததே தவிர, அவளுடைய செல்வமோ (அவள் அணிந்திருந்த ரத்தினம், முத்து ஆகியவை), அல்லது அவள் ஒரு அரசகுமாரி என்ற காரணமோ அல்ல. செல்வம், நிலைமை போன்றவை உலகத்தினரின் பார்வையில் உயர்ந்ததாக இருக்கலாம்; இறைவனின் பார்வையில் அல்ல. ஒருவருடைய மகத்துவத்தை, பெருமையைத் தீர்மானிக்க இறைவன் பயன்படுத்தும் அளவுகோல், உலகத்தார் மற்றும் சமூகம் தீர்ப்பெடுக்க பயன்படுத்தும் அளவுகோலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
உண்மையை சொல்லப்போனால், யார் அடக்கமானவனாக, எளியவனாக, பணிவு உடையவனாக இருந்து, உண்மையிலேயே தன்னைச் ‘சிறியவன்’ என்று கருதுகிறானோ, அவனே இறைவனின் கணிப்பில் ‘உயர்ந்தவன்’ ஆகிறான். ஒரு ஜீவனின் உண்மையான, கலப்படமற்ற, ஒருமுகப்படுத்தப்பட்ட, தூய பக்தி மட்டுமே இறைவனின் கவனத்தையும் கிருபையையும் ஈர்க்க முடியும். அவர் அத்தகைய ஜீவர்களுக்கு அன்பானவர் ஆகிறார். இதை, அருணகிரியார் “தூசா மணியும் துகிலும் புனையும் வள்ளியின் ‘நேசன்’” என்று சொல்வதன்மூலம் வெகு அழகாகவும், அர்த்தச் செறிவுடனும் வெளிப்படுத்துகிறார். இறைவனின் கிருபையை ஈர்த்து, அவரை தன்னுடைய நேசனாக்கிக் கொள்வதற்கு, ஜீவன் அவரிடம் முழுமையான உளமார்ந்த (ஆத்ம) பக்தி கொண்டிருத்தல் மிகமிக அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இவ்வாறு சொல்லப்பட்டதன் முக்கியமான நோக்கம். இறைவன் அன்பு பாராட்டுவதில் பக்தர்கள் அனைவரையும் சமமாகவே பாவிக்கிறார், அவருடைய கிருபையும் அனைவருக்கும் ஒரே அளவிளேயே கிடைக்கிறதென்றாலும், அவர் (மனத்) தூய்மையுடைய ஜீவர்களுக்கு மட்டுமே நேசனாகிறார்.
இறைவன் கிருபாகரனல்லவா, கிருபையின் வடிவமல்லவா? அப்படியெனில், பின் ஏன் வள்ளிக்கு மட்டும், அதாவது மனத் தூய்மை கொண்டவர்களுக்கு மட்டும், தன் கிருபையைப் பொழியவேண்டும்? கிருபை மற்றும் இரக்கத்தில் கடல் போன்றவர் இறைவன் என்பது உண்மைதான். அவரது கிருபை அனைவருக்கும், எப்பொழுதும் கிடைக்கும். ஆனால், இறை-கிருபையை அடைவதற்கும், அதை அநுபவிப்பதற்கும் தேவையான தகுதி ஒருவரிடம் இருக்க வேண்டுமா- இல்லையா என்பதே இங்கு எழும் முக்கியக் கேள்வி. இதற்கான பதிலை ஒரு உதாரணத்தின் மூலம் அறிவோமா? சூரியன் பிரகாசித்துத் தன் வெளிச்சத்தை அனைத்துப் பொருள்களின் மீதும் எவ்வித பாரபட்சமுமில்லாமல் பொழிகிறது. ஆனால், எல்லாப் பொருள்களும் அவ்வொளியை ஒரே மாதிரியாகவா பிரதிபலிக்கிறது? இல்லை. ஒவ்வொரு பொருளும் அதன் பிரதிபலிக்கும் சக்திக்கேற்ப பிரதிபலிக்கிறது. கற்பாறைகள், மரக்கட்டைகள் எவ்வித பிரதிபலிப்பையும் செய்வதில்லை, அதுவே நன்கு மெருகேற்றப்பட்ட பித்தளை, வெள்ளி பாத்திரங்களாயிருந்தால் ஓரளவிற்கு பிரதிபலிக்கின்றன; ஆனால், அதுவே ஒரு தூய (அழுக்கற்ற) முகம் பார்க்கும் கண்ணாடியாக இருந்தால் அது ஒளியை முழுமையாகவும் பிரகாசமாகவும் பிரதிபலிக்கின்றது (அழுக்கான கண்ணாடியானால் இதற்கு நேரெதிரானதாக இருக்கும்தானே). அதுபோலவே, தன் அந்தக்கரணத்தை (மனதை) முழுவதுமாக சுத்தமாக்கிக் கொண்ட ஒரு ஜீவன் இறை-கிருபையை பரிபூரணமாகப் பெற்று மிளிர்கிறது. ஆகையால்தான், இறைவன் அத்தகைய தூய ஜீவர்களின் நேசனாகிறார் என்ற இவ்வுண்மையை அருணகிரியார் “தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா” என்று சொல்கிறார்.
இப்போது, இந்த ‘அன்பருள்’ என்பதை மற்றொரு கோணத்திலும் விளக்கலாம். வள்ளி என்பவள் ஜீவாத்மா. அவள் தூய ஆடைகளை அணிவதென்பது புனிதமடையப்பெற்ற ஜீவன் இறைவனை அடைய உளமார்ந்த அவா கொள்வதைக் குறிக்கும். வள்ளி ‘இச்சா-சக்தி’ -- சுத்திகரிக்கப்பட்டு மற்றும் உன்னதமாக்கப்பட்ட உணர்ச்சிகள் -- தீவிர தெய்வீக பக்தி, ‘அன்பு ’. அவள் அன்பின் உருவகம். எனவே இந்த ‘அன்பு’ என்பது தன் குறிக்கோளை அடைந்திடுவதற்காக அவள் செய்துவந்த மொத்த முயற்சியையும் குறிக்கிறது --- தீவிர சாதனைகள் மூலம் அடையப்பட்ட முழு பரிசுத்தம், இறைவன்பால் பூரண மன ஈடுபாடு, இறைவனை அடையவேண்டும் என்ற உறுதியான தீர்மானம், ஆகிய இவைகளனைத்தையும் பொறுமையாகவும், இடைவிடாதும், மிகுந்த உற்சாகத்துடனும், இறை-கிருபையின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு, செய்துவந்த முயற்சியைக் குறிக்கிறது. இந்த ஜீவ சுய-முயற்சி (‘அன்பு’), அதன் தீவிரத்திற்கேற்ப, இறை-கிருபையை (அருளை) ஈர்க்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு ஜீவன் சுத்தமாயிருக்கிறதோ, இறைவன் பால் அன்பு செலுத்துகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இறை-கிருபையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது, இறைவனும் அந்த ஜீவனின் நேசனாகிறார். இப்படியாக, அன்பினால் ஈர்க்கப்பட்ட இறை-கிருபை, தன் பங்கிற்கு, அந்த ஜீவன் மேலும் தீவிரமாக முயற்சிகளைச் செய்ய உதவுகிறது, அதன்மூலம் மேலும் கிருபையை அவன்பால் ஈர்க்கிறது. அன்பு, அருளை ஈர்க்கிறது; அருள், அன்பை மேன்மேலும் வளரச்செய்கிறது. இந்த இன்பமயமான செயல்முறையானது சீராகச் சென்று, அதன் உச்ச கட்டத்தை அடையும்போது, அன்பும் அருளும் ஒன்று சேர்ந்து, “அன்பருள்” சம்பவிக்கிறது.
“தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பருளால் ஆசா நிகளம் துகளாகியின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.” --- “ஓ முருகப் பெருமானே! தூய அணிகலன்களையும் ஆடைகளையும் அணியும் வள்ளியின் நேசனே! உனது அன்பருளால், ஆசை-சங்கிலி அறுந்தது, பேசா-அநுபூதி பிறந்தது”. இந்த ‘அன்பருள்’ என்பதில் இரகசியமான தாத்பரியம் ஒன்று உள்ளது. ஜீவனின் அன்பு (அ) சுய-முயற்சியால் மட்டுமோ அல்லது இறை-கிருபையால் மட்டுமோ ஆசை-சங்கிலி அறுந்து, பேசா-அநுபூதி பிறந்திடாது. ஜீவனின் முயற்சியும் இறைவனின் கிருபையும் ஒன்று சேர்ந்து தோளொடு தோள் நிற்க வேண்டும், இரண்டும் இணைந்து ஒன்றாகவே ஆகி விட வேண்டும், அப்பொழுதுதான் ஆசை-சங்கிலி அழிக்கப்பட்டு, இறை-அநுபவம் பெற இயலும். ஒருவன் தன் சுயமுயற்சி கொண்டு தன் புலன்களை கட்டுப்படுத்தலாம், மனதை தூய்மையாக்கிக் கொள்ளலாம், ஆழ்ந்த சாதனைகளைச் செய்யலாம், இறைவனை உளமாற முழுமையாக நேசிக்கலாம். இருந்தாலும், ஆசைத் தளையிலிருந்து இறுதியாக விடுதலை பெறுவதற்கு, இறை-கிருபை அதில் வந்து சேர்ந்தால்தான் அது சாத்தியமாகும். சூட்சும மற்றும் காரண-நிலைகளில் புதைந்துள்ள சம்ஸ்காரம் மற்றும் வாசனைகள் எனப்படும் ஆசைகளின் பதிவுகள், அறியாமை ஆகிய இவைகளை வெறும் மனித முயற்சிகளைக் கொண்டு மட்டும் முற்றிலுமாக அழிப்பதென்பது சுலபத்தில் நடந்திடும் காரியமல்ல. எப்பொழுது இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறாரோ, அதாவது எப்பொழுது இறை-கிருபையானது சாதகனை வந்தடைகிறதோ, அப்போதுதான் அவைகள் அழிக்கப்படும். ஸ்ரீமத் பகவத் கீதை இதைப்பற்றி பின்வருமாறு கூறுகிறது: “புலன்களைக் கட்டுப்படுத்திய ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்கின்றன. எனினும், அவற்றிடமுள்ள சுவை (பற்று) அவனிடம் இருக்கத்தான் செய்கிறது; பரம்பொருளைக் கண்டபின்தான் (அடைந்தபின்தான்) அச்சுவையும் நீங்குகிறது” (2.59). அன்பருள் மலர்ந்திட, கிருபை சுய-முயற்சியோடு சேர வேண்டும் என்பது ஒரு அம்சம். இதன் இன்னொரு அம்சம்: சுய-முயற்சி என்பது தேவைதானா? கிருபை மட்டும் இருந்தால் போறாதா என்ன? இல்லை, அது மட்டும் போறாது. எதனால்? இறைவனும், அவர் கிருபையும் ஒன்றுதான்; இவ்விரண்டையும் பிரித்திட இயலாது – சூரியனையும் அதன் வெளிச்சத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படியே. இறைவன் எங்கும் எதிலும் இருக்கிறார் என்பது போலவே அவரது கிருபையும் எங்கும், எப்பொழுதும், அனைத்தின் மீதும் இருக்கிறது. ஆனால், எப்படி சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்க சுத்தமான கண்ணாடி தேவையோ, அப்படியே இறை-கிருபையை வெளிப்படுத்துவதற்கு, உணர்வதற்கு தூய உள்ளம் கட்டாயம் தேவை. ஆகவே, முயற்சி (அன்பு) என்பது இறை-கிருபையை (ஜீவன்பால்) ஈர்ப்பதற்கு கட்டாயம் தேவை.
அடுத்ததாக, நம் மனதில் மற்றொரு வினா எழுகிறது. ஜீவன் தன் முயற்சியை ஈடுபாட்டுடன் விடாது செய்த பின்னரும், இறை-கிருபை எப்பொழுதுமே இருந்தும்கூட, ஏன் அவை ஒன்று சேர்ந்து, இறை-அநுபவத்தைத் தருவதில்லை? இதுவும் ஒரு புரியாத புதிரே! அந்த இரண்டும் எப்போது, எவ்வாறு ஒன்று சேர்ந்து இறை-அநுபவத்தை தரும் என்று நமக்குத் தெரியாது. இறைவன் மட்டுமே அறிவார். எனவேதான், கடோபநிஷத், “எவனொருவனை பரமாத்மா (இறைவன்) தேர்ந்தெடுக்கிறாரோ, அவனால் அவர் (இறைவன்) அறியப்படுகிறார். அவனுக்கு, அவர் தனது உண்மை சொரூபத்தை வெளிப்படுத்துகிறார்” என்று கூறுகிறது. அதனால்தான், அர்ப்பணிப்புடனும், நேர்மையாகவும் இறைவனை அடைய நீண்ட நெடுங்காலமாக முயன்ற பின்னரும் இன்னமும் அக்குறிக்கோளை அடையாமலிருப்பவர்களை நாம் காண்கிறோம். ஏனெனில், முயற்சி இருக்கிறது, ஆனால் இறை-கிருபை அதனுடன் ஒன்று சேரவில்லை. அதாவது, இறைவன் இன்னும் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே, அத்தகைய சாதகர்கள் விரக்தி அடைந்துவிடாமல், நம்பிக்கையை இழந்துவிடாமல், சாதனையைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்; அதேசமயம் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் இறை-கிருபையின் விடியலுக்காகக் காத்திருக்க வேண்டும். இன்னொருபுறம் பார்த்தால், ஆன்மீகத்துக்குச் சற்றும் அருகதை இல்லாதவர்களும், இறையருளுக்கு அடியோடு தகுதி யில்லாதவர்கள் போல் தோன்றும் சிலரும் திடீரென ஆத்மானுபூதி பெறுமளவிற்கு தெய்வீகக் கிருபை பெற்றதையும் காண்கிறோம். இறைவனின் லீலைகளை யாரால்தான் புரிந்து கொள்ள இயலும்!
“வியக்கத்தக்க, புரிந்துகொள்ளமுடியாத ‘அன்பருள்’: சாதாரணமாக, கிருபை இறைவனுடையது; அன்பு ஜீவனுடையது. ஆனால், அருணகிரியார் சொல்வதோ வேறு: ‘நினது அன்பு-அருளால்’ என்கிறார், அதாவது கிருபை மட்டும் அவருடையது அல்ல, ஜீவன் செலுத்தும் அன்பும் (செய்யும் முயற்சியும்) கூட அவருடையதே. இது எப்படி சாத்தியமாகும்? ஈஸ்வரன் சர்வ-வியாபி; ஜீவன் ஈஸ்வரனின் ஓர் அம்சம், அதற்கென்று ஒரு தனி இருப்பு இல்லை. ஆகையால், பகுத்தாராய்ந்தால் ஜீவனின் முயற்சி என்பதும் ஈஸ்வரனுடைய செயலே; அதுவும் அவர் இச்சையின்படி (கிருபையின்படி) செயல்படும் வழி. ஜீவன் மூலம் செயல்படும் இறை-அருள், அன்பு அல்லது சுய-முயற்சி எனப்படுகிறது; ஜீவன் மூலம் வேலைசெய்யும் அருள், அன்பு எனப்படும். ஜீவனால் பெறப்படும்போது, அது அருள் எனப்படுகிறது. உண்மையில், சாதனையின் தொடக்கத்திலிருந்தே அவையிரண்டும் ஒன்றாகவே பயணிக்கின்றன; சாதகனின் ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையிலும் அவை வெவ்வேறு அளவில் அநுபவத்தில் வருகின்றன; உச்ச கட்டமான சமாதிநிலை எட்டப்படும்போதுதான், அவையிரண்டும் முழுவதுமாக ஒன்றோடொன்று இணைந்து, இறை-அநுபூதியை பிறக்கச் செய்கின்றன. சாதனையைத் தான் செய்வதாக ஜீவன் நினைத்தபோதிலும், சாதனையின் தொடக்கத்திலிருந்தே அவன் முயற்சியென்பது ஈஸ்வரனுடையதே; ஆனால், இது அவ்வாறென்று (ஈஸ்வரனுடையதென்று) சமாதிநிலையில்தான் அவனால் உணரப்படுகிறது. அதனால்தான், “இறைவனே பந்தப்பட்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறார், சாதனை செய்வதாகவும், கிருபையைப் பொழிவதாகவும், கிருபையைப் பெறுவதாகவும், முக்தி அடைவதாகவும் தோற்றமளிக்கிறார்” என்று ஞானிகள் அடிக்கடி கூறுகிறார்கள்: நடப்பது அனைத்தும் மிகவும் அற்புதமான, மர்மமான ஈசனின் விளையாட்டு, மனிதனின் புத்தியைத் திணற அடிக்கும் ஈஸ்வரனுடைய லீலை. “அற்புதம், அதிசயம். ஒருவன் இதை (இந்த ஆத்மாவை அல்லது இறைவனை) ‘ஆச்சரியம்’ எனக் காண்கிறான், மற்றொருவன் இதை ஆச்சரியமெனச் சொல்கிறான், மற்றும் ஒருவன் இதை ஆச்சரியமெனக் கேட்கிறான். இருந்தும், கேட்டபின்னரும், இதனை அறிவான் எவனுமிலன்” என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சொல்கிறார் (ஸ்ரீமத் பகவத் கீதை: 2.29). “நினது அன்பருள்” என்பதும் அத்தகைய மர்மமானது. அன்பருள் என்ற மர்மமான சொல்லை பிரத்யேகமாக உபயோகித்ததற்குக் காரணம், அன்பும் அருளும் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தது என்பதையும், அவ்வாறு கலந்தது ஆசை-நிகளம் துகளாவதற்கும், பேசா அநுபூதி பிறப்பதற்கும்தான் என்பதையும் நமக்கு குறிப்பிட்டு உணர்த்துவதற்கே.
“ஆசை-நிகளம்” : ஒரு சங்கிலிக்கு இரண்டு அம்சங்கள் உண்டு. அது ஆத்மாவை பந்தப்படுத்த விலங்காக ஆகிறது; தனக்குள்ளே அது ஒன்றுடன் ஒன்று பிணைந்த வளையங்கள் கொண்டுள்ளது. இறை-அநுபூதி அடைவதற்குத் தடையாக இருப்பது ஆசைகளே. ஆசைகள் ஆத்மாவை உலகியல் வாழ்க்கையில் பந்தப்படுத்தி, மீண்டும் மீண்டும் பிறப்பு-இறப்பு சுழற்சியில் ஆழ்த்துகிறது. ஆசையே பந்தம், ஆசையிலிருந்து விடுதலை பெறுவதே முக்தி அல்லது மோட்சம் எனலாம். இதை, “உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆசைகளும் துறக்கப்படும்போது, மனிதன் இங்கேயே, இப்பொழுதே அமரனாகிறான்,” என்று கடோபநிஷத் மிக அழகாக சொல்கிறது. ஆசைகளின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் தீவிரம் குறையக் குறைய, மனிதன் இறைவனுக்கு அருகில் நெருங்குவதால், மகிழ்ச்சி அதிகரிக்கிறது; ஆசைகளின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க, மனிதன் இறைவனிடமிருந்து விலகிச் செல்வதால், துன்பம் பெருகுகிறது. ஒருவன் இறைவனிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறான் என்பதை, தன்னிடம் எவ்வளவு ஆசைகள் உள்ளன என்பதை வைத்து அவன் தெரிந்து கொள்ளலாம் (அல்லது, ஆசைகள் அவனைத் தாக்கும் தீவிரத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்).
ஆசைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஆகிய மூன்று நிலைகளில் உள்ளன, எனவே அவை மனதின் மேல்மட்ட நிலையில் மட்டும் எழுமென்று நினைப்பதற்கில்லை. அவை சாதாரணமாக நம்முள்ளே ஆழமாகப் புதைந்திருக்கும். இதயத்தின் இடுக்குகளிலெல்லாம் குடியிருக்கும். நமது தனித்தன்மையே ஆசைகளால் உருவாக்கப்பட்டதுதான். நாம் என்பதே வெவ்வேறு அடுக்குகளில் இருக்கும் ஆசைகளின் தொகுப்புத்தான். ஆசைகள்தான் நாமென்று சொல்வதில் ஒரு தவறும் இல்லையெனலாம்; ஆசைகள் எவ்வாறோ, அவ்வாறே நாம் இருக்கிறோமெனலாம். ஆசைகளின் ஆதிக்கம் நமது உடல், மற்றும் மன ஆளூமைகளின் மீது பரந்து விரிந்துள்ளது, உண்மையில் அதன் ஆதிக்கம் ஆழ்நிலை, மற்றும் நினைவிழந்த நிலை என்று பல நிலைகளைக் கடந்து உள்ளே செல்கிறது. அதனால்தான், அவை ஒரு சங்கிலிக்கு உதாரணமாக்கப்படுகின்றன. நம் உடல் மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆசைகள், சங்கிலித் தொடர்போல், நம்முள்ளேயும் நினைவிழந்தநிலைவரை இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. இறை-அநுபவம் பெற்றிட வேண்டுமென்றால், ஆசைகளின் இந்த மொத்த சங்கிலித் தொடரையும் அழிக்க வேண்டும். எனவேதான், அருணகிரியார், “ஆசைகள்” என்று மட்டும் குறிப்பிடாமல் பிரத்யேகமாக “ஆசா நிகளம்” (ஆசை-சங்கிலி) என்று குறிப்பிடுகிறார்.
“நினது அன்பருளால், ஆசா நிகளம் துகளாயின பின், பேசா அநுபூதி பிறந்தது” -- ‘’இந்த ஆசை சங்கிலித் தொடர் உனது அன்பு-அருளால் முழுவதுமாகப் பொடிப்பொடியாகிய (துகளாகிய) பின்னர், பேசா-அநுபூதி உதித்தது’’ என்கிறார் அருணகிரியார். ‘பேசா அநுபூதி’, பேச்சற்ற இறை-அநுபவம், மகா-மௌனம், பிரம்ம அநுபவம், பேரானந்த-உணர்வு நிலை, ஆகிய இச்சொற்கள் அனைத்தும் உயரிய ஆன்மீகக் குறிக்கோளான ‘அத்வைத (இரண்டற்ற) விழிப்புணர்வு’ பெறுதலைக் குறிக்கிறது. அருணகிரியார் ‘இந்த விழிப்புணர்வு எனும் அநுபூதி (அநுபவம்) ‘பிறந்தது’’ என்கிறார். இவ்வநுபூதி கொடுக்கப்படவில்லை, ஏனெனில் கொடுப்பது என்பது நடைபெறுவதற்கு, கொடுக்கும் ஒருவர் வேண்டும் (‘துவைதம்’). ஆனால், இறைவனே அந்த விழிப்புணர்வு, அந்தப் பேசா அனுபூதி. பின், யார், எதைக் கொடுப்பது! முந்தைய செய்யுளில் கூறப்பட்டதுபோல, வேலானது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, உள்ளுணர்வானது பிறந்திடும்போது, சமாதிநிலை உதிக்கும்போது, ‘ஜீவ-உணர்வானது’ ‘எல்லையில்லாப் பரம்பொருள் உணர்வில்’ அமிழ்ந்து உட்கொள்ளப்படுகிறது; பின்னர் பிந்தையது மட்டும் தனித்திருக்கிறது. இதையே ‘தன்னந்தனி நின்ற அது’ என்று செய்யுள்- 49 குறிப்பிடுகிறது.
இறைவனின் அன்பருளால் ஆசை நிகளம் துகளாக்கப்பட்டவுடன், வார்த்தைகளால் விவரித்திட இயலாத ஒரு மகாஉன்னதான அநுபவம் பிறக்கிறது. முயற்சி அருளைச் சந்திக்கும்போது, அன்பும் அருளும் மர்மமாக ஒன்றாகும்போது, அதைவிட மர்மமான ஒன்று நடைபெறுகிறது. ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஏற்பட்டு எல்லையில்லாப் பரபிரம்ம (பரம்பொருள்) அநுபவத்தைத் தருகிறது, அந்த அனுபவத்தில் ஜீவன், ஈஸ்வரன் என்ற கருத்துக்கள் கடக்கப்பட்டுவிடுகின்றன. இவ்விரண்டின் ஐக்கியம் மூன்றாவதான ஒன்றின் பிறப்பிற்கு காரணமாகிறது. ஆனால், இது, ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அது அதன் பெற்றோர்களைத் தவிர மூன்றாவதாக தனித்திருப்பது போன்றதல்ல; இது, மற்ற இரண்டில் எதுவுமில்லாததால், மூன்றாவதாகச் சொல்லப்படுகிறது. இரண்டும் காணாமற்போய், ‘அறியாத’ ஒன்று உதிக்கிறது. இந்த ‘அறியாத’ ஒன்று, அதனுடையத் தோன்றங்களேயான அவ்விரண்டையும் கடந்தும், தன்னுள்ளடக்கியும் இருக்கிறது. இதுதான் “பேசா அநுபூதி” அல்லது “மௌன அநுபூதி”. இந்த அனுபூதியில், முயற்சிகளைச் செய்யும் ஜீவன் மற்றும் அருளைப் பொழியும் (ஆசைகளை அழிக்கும்) ஈஸ்வரன் ஆகிய இவ்விரண்டு கருத்துக்களும் கடக்கப்பட்டு விடுகின்றது. அனைத்துக் கருத்துக்களும் மனத்தால், புத்தியால் உருவாக்கப்பட்டவை, எனவே கடக்கப்பட்டு விடுகின்றன. ஆங்கே பேசா-அநுபூதி பிறக்கிறது. முந்தைய செய்யுளில் விளக்கமாக கூறப்பட்டதற்கிணங்க, அந்நிலையில் ஜீவனின் அனைத்து புலன் கருவிகளும் தத்தம் செயல்பாடுகளை இழந்து விடுவதால், ஜீவனுடைய அந்த நிலையைக் குறிக்க ‘பேசா’ என்ற சொல்லும்; ஈஸ்வரனின் கார்யங்களான அழித்தல், அருளுதல் ஆகிய அனைத்தும் நின்று விடுவதால், ஈஸ்வர நிலையைக் குறிக்க ‘அநுபூதி’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. அது ‘வெறும்’ ‘அநுபவம் ‘ மட்டுமே – ‘பேசா அநுபூதி’ – அதைப்பற்றி ஒன்றும் சொல்லிட இயலாது. அன்பும் அருளும் இணைவது, பேசா-அநுபூதி பிறப்பது. ஈஸ்வரன் மேல் அபரிமிதமான அன்பை வைப்பதால் ஜீவன் தன்னையே இறைவனில் இழக்கிறான், அதனால் “பேசா”தவனாகிறான் (பேச்சற்றவனாகிறான்). அதே சமயம், (ஈஸ்வரனின்) அருள் ஜீவன்பால் அபரிமிதமாக வெளிப்படுவதால், அநுபூதி பிறக்கிறது. (அன்பு = பேசா, அருள் = அநுபூதி). அன்பருள் = பேசா அநுபூதி. அன்பருள் பேசா-அநுபூதியாகிறது. அன்பும் அருளும் இணைவதால் ‘பேசா-அநுபூதி’ பிறக்கிறது. என்னே ஓர் ஆச்சரியமான செறிவு, கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கையாளப்படும் நேர்த்தியான பாங்கு. எவ்வளவு தூரம் மொழி அனுமதிக்கின்றதோ அவ்வளவு தூரம் சென்று, மொழியில் எவ்வளவு கருத்தாழமுள்ளதோ அவ்வளவையும் பிரயோகித்து, இம்மகத்தான அநுபவமானது முடிந்தவரை மகத்தான முறையில் விளக்கபட்டுள்ளதைப் பார்க்கிறோம்! இந்த “கந்தர் அநுபூதி” நூல் முழுவதிலும், ‘அநுபூதி’ என்ற சொல் இச்செய்யுள் ஒன்றில் மட்டுமே உள்ளது.
இதயமும், ஆன்மீக சாதனையும் : ஆன்மீக சாதனையிலும், ஆத்மானுபூதியிலும் இதயம் (ஸ்தூல இதய உறுப்பல்ல; ஆனால் உள்ளிருக்கும் ஆன்மீக இதயம்) ஆற்றும் பங்கு மிகப்பெரிது. தூய்மை, அன்பு, அருள், ஆசைகளை அழித்தல், அநுபூதி பிறத்தல், ஆகியவைகளே இச்செய்யுளில் அடுத்தடுத்து சிறப்பாக விளக்கப்படும் சிறப்புக்கூறுகள். தூய்மை, இதயத்தைப் பற்றியது. ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் ஆதிக்கம் களையப்பட்டு, ஸத் துவ குணத்தை அதிகப்படுத்துவதின் மூலம் இதயம் தூய்மை செய்யப்படுகிறது. அவ்வாறு தூய்மை அடைந்த இதயத்தில் (இறைவன்பால்) அன்பானது வெளிப்பட்டுப் பெருகுகிறது. அந்த தூய அன்பானது அருளைக் கவர்ந்து இழுக்கிறது, அந்த அருள் இதயத்தில் உணரப்படுகிறது. அன்பும் அருளும் இதயத்தில் ஒன்று சேர்ந்து, இதயத்தில் குடிகொண்டுள்ள ஆசைகளை அழிக்கின்றன. பின்னர், அந்த இதயத்தில் ‘அநுபூதி’ பிறக்கின்றது. இவ்வாறு, இதயமே சாதனை செய்யப்படும், சாக்ஷாத்காரம் அல்லது ஆத்மானுபூதி அடையப்படும் அரங்கம். இப்படியாக, முயற்சியும் கிருபையும், பிண்டமும் அண்டமும், மனிதனும் இறைவனும், ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றையொன்று சந்தித்து ஐக்கியமாகின்ற இடம் இதயம். அதனால்தான், “உடலின் மத்தியில், பரம்பொருளான பிரம்மம் உறையுமிடமான தாமரை போன்று பாபமற்ற இதயமுள்ளது; அதற்குமுள்ளே துக்கமற்ற (ஆனந்தமயமான) ஆகாசம் உளது. அதனை தியானம் செய்திடல் வேண்டும்,” என்று நாராயண உபநிஷத் கூறுகிறது. ஆகையால், இதய பூர்வமாக செய்யப்படாத (இதயத்துடன் சம்பந்தப்படாத) ஆன்மீக சாதனை உயிரற்றதாய், இயந்திரம் இயங்குவது போன்றாகிவிடும், உண்மையைவிட பாசாங்காகிவிடும், தன் ஆத்ம முன்னேற்றத்திற்கு உதவுவதைவிட பிறருக்கு தம்பட்டம் அடித்துக் காட்டுவதுபோலாகிவிடும்; அவ்வாறு செய்யப்படும் சாதனைகள் எவ்விதப் பலனையும் அளிப்பதில்லை. இதயமே ஆன்மீகத்தின் உறைகல். எனவேதான், ‘ஒருவன் தன் மனத்தில் (இதயத்தில்) தூய்மையுள்ளவனாக இருக்க வேண்டும்; அதுவே அறம். மனத்தூய்மையற்ற பிற யாவும் (அறம் ஆகா) வீண் ஆரவாரத் தன்மைஉடையவை ஆகும்’ (“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்; ஆகுல நீர பிற” -- குறள்: 4.4), என்று திருவள்ளுவப் பெருமான் கூறுகிறார்.
மற்ற செய்யுள்களோடு உள்ள தொடர்பு:
(1) 39-ம் செய்யுளில் ஆத்மா கதறி வேண்டியது, இச்செய்யுளில் நிறைவேறி இருக்கிறது. 39-ம் செய்யுளில் அச்சாதகன், “முருகப் பெருமானே! தாங்கள் வள்ளிதேவியை அணைத்து ஆதரித்ததுபோல, (உடனே) வந்து என் ஆத்மாவை அரவணைப்பீர்களாக; அவ்வாறு தாங்கள் செய்தால்தான், என்னை விடாப்பிடியாக பற்றியுள்ள மூவித ஏடணைகளும் பூரணமாக விலகும், அதன்மூலம் எனது ஏழு பெரிய பிறப்புகளும் முடிவுறும்,” என்று பிரார்த்தனை செய்தான். அங்கு செய்யப்பட்ட ஒவ்வொரு பிரார்த்தனையும் ஒவ்வொன்றாக இங்கு நிறைவேறுகிறது. “மாயைவிடா முவேடணை என்று முடிந்திடும்” என்று 39-ம் செய்யுளில் கேட்கப்பட்டது. அது “ஆசா நிகளம் துகள் ஆயின” என்பதில் பூர்த்தி செய்யப்பட்டது. மூன்று ஏடணைகளும் ஒருவனின் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண செயற்பண்பு நிலைகளை ஒருங்கிணைக்கும் ஆசை-சங்கிலியேயன்றி வேறில்லை; இவ்விரண்டும் ஜீவனை இந்த உலக வாழ்வில் பந்தப்படுத்துகின்றன. ‘இந்த ஏழு பெரிய பிறப்புகளையும் முடிவிற்குக் கொண்டு வர’ (“மாவேழ் சனனம் கெட” – செய்யுள்; 39), ‘பேச்சற்ற அநுபவம் பிறந்தது’ (“பேசா அநுபூதி பிறந்ததுவே” - இச்செய்யுள்) – அதாவது பேச்சற்ற அநுபவம் பிறந்ததும் அவ்வேழு பெரிய பிறப்புகளும் முடிவிற்கு வந்து விட்டன. ஒன்றின் பிறப்பு மற்றப் பிறப்புகளை அழிக்கின்றது. எத்தகைய பரம இரகசியம்!
செய்யுள்-39ல் “குறமின்கொடி தோள்புணரும் தேவே” என்று முருகனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதை, அந்த முருகன், “தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசன் (முருகன்)” இங்கு பூர்த்தி செய்தான்.
‘அன்பருள்’ என்பது முருகனின் கிருபை, வள்ளியின் அன்போடு இணைதல் என்று ஏற்கனவே பார்த்தோம். இது, ஜீவனின் முயற்சியுடன் இறைவனின் அருளாசி சேருதல். ஜீவனை இறைவன் அரவணைக்க வேண்டுமென்று செய்யப்பட்ட பிரார்த்தனை (செய்யுள்-39), இச்செய்யுளில் நிறைவேறுகிறது. எனவேதான், இவ்விரு செய்யுளிலும் ‘வள்ளி’-யைப் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆக, 39ம் செய்யுளில் வைக்கப்பட்ட பிரார்த்தனை, அதனைத் தொடர்ந்து வேலின்மேல் இடைவிடாது செய்யப்பட்ட தியானமும் (செய்யுள்- 40), ஜீவாத்மாவுக்கு மறுபிறப்பு இல்லாமலிருக்கத் திருப்பாதங்களை உடனே அருளுமாறு வேண்டப்பட்ட பிரார்த்தனையும் (செய்யுள்- 41), வேலை வெளிப்படுத்தி அதன் மூலம் அறியாமையை (ஜீவ பாவத்தை) அழித்து (செய்யுள்- 42), அன்பு-அருள் மூலம் இறுதிக் குறிக்கோளான (முக்தி) பேசா-அனுபூதியை பிறந்திட வைத்து, ஆசை-நிகளம் தூள் தூளாகின (இந்த அநுபூதிச் செய்யுள்).
(2) மேலும், சாதனையின் ஆரம்பத்தில், அதன் குறிக்கோளாய் அடையவேண்டி, 2ம் செய்யுளில் செய்யப்பட்ட பிரார்த்தனை இச்செய்யுளில் பூரணமாக நிறைவேறுகிறது: “எல்லாமற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா” -- ‘ஓ முருகப் பெருமானே! அனைத்தும் அற்றுப்போய், என்னை (அகந்தையை) இழக்கும் நலத்தை எனக்கு அருள்வாயாக’ என்று 2ம் செய்யுளில் பிரார்த்திக்கப் பட்டது. ஆசை-சங்கிலி தூள்தூளாகிவிடும்போது, ‘எல்லாமற்ற’ நிலை ஏற்படுகிறது. (‘ஆசா நிகளம் துகளாயின’ என்பதில் ‘எல்லாம் அற்றது’.) ‘பேசா’மையில், ‘என்னை இழத்தல்’ நிகழ்கிறது. ‘நலம்’, ‘அனுபூதி’யில் பெறப்படுகிறது. ‘சொல்லாய்’ என்று கேட்ட பிரார்த்தனை, ‘பிறந்தது’ என்பதில் பூர்த்தி செய்யப்பட்டது. இரண்டாம் செய்யுளில் பிரார்த்தனை முருகப் பெருமானிடம் செய்யப்பட்டது (‘சொல்லாய் முருகா’); அப்பிரார்த்தனையை இங்கு முருகனே நிறைவேற்றி வைக்கிறான் -- “நேசா, ‘முருகா’, நினது அன்பருளால் …. பேசா அநுபூதி பிறந்ததுவே”. பிரார்த்தனை எந்த வரிசைக்கிரமத்தில் செய்யப்பட்டதோ, அதே வரிசைக்கிரமத்தில் நிறைவேறுதலும் செய்யப்பட்டுள்ளது: ‘எல்லாம் அற’; --‘என்னை இழந்து’; --‘நலம்’; --‘சொல்லாய்’ ---–--- ‘ஆசா நிகளம் துகள் ஆயின’ பின்; --‘பேசா’; --‘அநுபூதி’; -- ‘பிறந்தது’.
(3) “சும்மா இரு சொல்லற என்றலுமே, அம்மா பொருளொன்றும் அறிந்திலனே” (செய்யுள்-12). இந்த “சும்மா இரு”க்கும் தற்காலிக அனுபவம் அச்சாதகனுக்கு குருவால் ‘கொடுக்கப்பட்டது’. (விவரங்களுக்குச் செய்யுள்-12 பார்க்கவும்.) இது அவனை உற்சாகமூட்டி, சாதனை செய்து அந்த அனுபவத்தை தானே அடைந்து அனுபவிப்பதற்காகக் ‘கொடுக்கப்பட்டது.’ நீண்டகாலம் சாதனைசெய்து அது இப்பொழுது அடையப்பட்டுவிட்டது. எனவே, இங்கு “பேசா அநுபூதி”, “பிறந்தது”,; கொடுக்கப்படவில்லை. இங்கு, சாதகனின் சாதனையும் (அன்பும்), இறைவனின் அருளும் சேர்ந்ததால் “அநுபூதி” “பிறந்தது’”; அங்கு, “என்றலும்” என்பதில் “கொடுக்கப்பட்டது” குறிக்கப்பட்டுள்ளது. “சும்மா” = “பேசா”; “இரு”த்தல் = அநுபூதி; “என்றலும்” = (குருவால்) “கொடுக்கப்பட்டது”; “பிறந்தது” = தானாகவே நிகழ்ந்தது. அங்கும் ‘கொடுத்தது’ முருகன், இங்கும் பேசா அனுபூதி ‘பிறந்தது’ முருகன் அருளால். அங்கும் முருகன், இங்கும் முருகன். (இரண்டு செய்யுளிலும் இரண்டாவது வரியில் இரண்டாவது வார்த்தையாக!).
இச்செய்யுள் ஒரு சாதகன் பயணிக்க வேண்டிய (ஆன்மீக) சாதனைப் பாதையைப் பற்றி முழுமையாக தொகுத்தளிக்கிறது. – அதாவது இந்நூலில் தரப்பட்ட அனைத்து உபதேசங்களின் சாரம், மற்றும் குறிக்கோளானது எட்டப்பட்டு விட்டது என்பது உட்பட. ஒரு சாதகனால் செய்யப்பட வேண்டிய சாதனைகள் மற்றும் குறிக்கோளை அடைதல் ஆகிய விஷயங்களைப் பற்றி அருட்செல்வர் அருணகிரியார் நேர்த்தியாகவும் அழகாகவும் கோர்வையாகவும் இவ்வொரு செய்யுளிலேயே தொகுத்து அளித்துள்ளார்:
ஒரு சுவாரஸ்யமான விஷயம்: இச்செய்யுளில் வள்ளியைக் குறிப்பிடும்போது அருணகிரியார், அவர் பெயரை உபயோகிக்காமல், வெறுமனே ‘தூசாமணியும் துகிலும் புனைவாள்’ -- (தூய அணிகலன்களையும் தூய ஆடைகளையும் அணிபவள்) என்கிறார். முன்னர், எப்பொழுதெல்லாம் வள்ளியைக் குறிப்பிட நேரிட்டதோ, அப்போதெல்லாம் “வள்ளி”, “வேடுவச்சி” என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொண்டு வந்த அருணகிரியார், இப்பொழுது மட்டும் ஏன் அவ்வாறு குறிப்பிடவில்லை? ஏனெனில், அப்போதெல்லாம் வள்ளி, இறைவனுடன் ஐக்கியமடைய (முக்திபெற) விழையும் ஒரு ஜீவாத்மாவாக இருந்தாள்; சென்ற செய்யுளிலே அந்த முக்தி அடையப்பட்டுவிட்டது, அதாவது ஜீவாத்மாவின் எல்லாப் போர்வைகளும் (vestures) அற்றுப் போய்விட்டன (செறிவற்று உலகோடு, உரை சிந்தையுமற்று, அறிவற்று அறியாமையும் அற்றதுவே), எஞ்சி நிற்பது தூய ஆத்மா மட்டுமே; அதாவது, ஒட்டுமொத்த தூய உணர்வின் (பரம் பொருளின்) ஓர் இணைந்த அம்சமாய் – “தூசாமணியும் துகிலும் புனைவாள்”. ஆக, இப்பொழுது எஞ்சி இருப்பது முன்பிருந்த அந்த ‘வேடுவ குல மங்கையான வள்ளி’ (ஜீவாத்மா)-அல்ல; இப்போதிருப்பது ‘வள்ளிதேவி’, முருகப் பெருமானின் துணைவி, அவரிடமிருந்து பிரியாதவள்; எல்லையற்ற பரம்பொருள் உணர்வான பிரம்மத்தோடு ஒருமுகமாகிவிட்ட தூய-உணர்வு. எனவேதான், இந்நூலின் எஞ்சிய செய்யுள்களில் வள்ளியைப் பற்றிய குறிப்பே இல்லை.
|
செய்யுள் 43
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment