செய்யுள் 45



செய்யுள் – 45


கரவாகிய   கல்வியுளார்   கடைசென்று
இரவாவகை   மெப்பொருள்  ஈகுவையோ
குரவா   குமரா   குலிசாயுத குஞ்-
சரவா   சிவயோக   தயாபரனே.

    பொழிப்புரை: குருவே! குமரப் பெருமானே! வஜ்ராயுதத்தை ஏந்திய பெருமானே! தெய்வயானையின் நாயகனே! அடியார்க்குச் சிவ-யோகத்தை வழங்கும் கருணாமூர்த்தியே! தாம் பெற்ற கல்வி அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளாமல் மறைத்து வைப்பவர்களிடம் சென்று யாசிக்கா வண்ணம் மெய்ப்பொருள் ஞானத்தை எனக்குத் தாங்களே தந்தருள்வீராக!”

விளக்கவுரை

    அந்த ‘நலம்’ எனப்படும் இறைவனை அடைவதே சாதகனுடைய குறிக்கோளாக இருந்தாலும் (செய்யுள்-2), அந்தக் குறிக்கோளை அவன் அடைந்தபின், அவன் நிறைவேற்றுவதற்கான கட்டளைப் பணிகளை இறைவன் வைத்திருக்கிறார். இறைவன் யாரை ஜீவன்முக்தனாக ஆக்கினாரோ, அவனிடமிருந்தும் அவன் மூலமும் தனது வேலைகளைச் செய்துகொள்வது இயற்கை. இவ்வாறு, உயரிய இறை-அநுபூதியைத் தந்த அந்த ஜீவன்முக்தனுக்கு (செய்யுள் 42, 43, & 44 ), ஆன்மீகப் பணி செய்யுமாறு அருளானை புரிகிறார்.

    பேசா அநுபூதியை அடைந்த பாக்கியசாலி அதிலேயே திளைத்திருந்து விடுவதில்லை; மாறாக, அதிலிருந்து வெளிவந்து சுதந்திரமாக உலாவி, மக்களுக்குச் சேவை புரிகிறார். நம் போன்ற சாதாரண மனிதர்கள் அவருடைய உயர்ந்த நிலையைப் புரிந்து கொள்வது கடினம், அது நமது கற்பனைக்கு எட்டாதது. அந்த ஜீவன்முக்த சந்நியாசிக்கு, சாதகர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற தெய்வக் கட்டளையானது நிறைவேற்றப்பட காத்திருக்கிறது. எப்படி அவர் சாதகனாக இருந்தபோது இறைவனே குருவாக வந்து அவருக்கு வழிகாட்டினாரோ, அப்படியே இப்பொழுது மற்ற சாதகர்களின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய இறைவன் அவர் மூலம் செயலாற்றுகிறார். எனவே, அருட்தொண்டர்கள், முனிவர்கள் மற்றும் ஜீவன் முக்தர்கள் இறைவனின் பிரதிநிதிகளாகவும், பூமியில் நடமாடும் தெய்வங்களாகவும் கருதப்படுகிறார்கள். இப்படியாக, ஆன்மீக அறிவுரைகளைப் பெறுவதற்காக அவரிடம் வருபவர்களுக்கு அறிவுரை அளித்து, அவர்கள் சுதந்திரமாக எங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாடிவரும் சாதகர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களுக்குத் தரப்படும் அறிவுரைகளும் அதன் செயல்முறைகளும் மாறுபடுகிறது. எனவே, இச்செய்யுள் முதல் செய்யுள்-50 வரை உள்ள செய்யுள்களில் கூறப்படும் அறிவுரைகளில் தொடர்பு இருக்காது, இருக்கவேண்டிய அவசியமுமில்லை. ஆனால் இச்செய்யுள்கள் அனைத்தும் மிகவும் பிரத்யேக (தனியான) ரகத்தைச் சார்ந்தவை என அறிவோமாக. இவை தனித்துவமானவை, மிகவும் உயரிய அறிவுரைகளைத் தருபவை. எப்பொழுதும் இறை-உணர்விலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்முக்தர்களின் உயரிய ஆன்மீக மனநிலையையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துபவை இச்செய்யுள்கள். ஆன்மீக முன்னேற்றத்தை அடைய விழையும் பல தரப்பட்ட சாதகர்கள் அவர்களைச் சூழ்ந்து, தங்களுக்கு வழிகாட்ட வேண்டுவதால், அவ்வறிவுரைகள் பெரிதும் மாறுபடுகின்றன; என்றாலும் தீவிர சாதகர்களுக்கு அவை அரும்பெரும் திடமான அறிவுரைகளாக அமைகின்றன. சுருங்கச்சொல்லின், அவை உண்மையிலேயே ஞானக்களஞ்சியம். மேலும், இச்செய்யுள்கள் ஆன்மீகத்தில் பல்வேறு துறைகளில் அருணகிரியாருக்கிருந்த ஞானத்தைக் காட்டுகின்றன. எனவே, இச்செய்யுள்களில் விதவிதமான தனித்தன்மையைக் காண்கிறோம். இச்செய்யுள்கள் உயர்ந்த ஆன்மீக உண்மைகளை எடுத்து இயம்புகின்றன. அவை ஆழ்ந்த அர்த்தத்தை வெளிப்படுத்தி, தியானத்திற்கான ரகசிய உத்திகளைத் தருகின்றன; அவை சாதகர்களுக்கு சரியான வழிகாட்டுதலைச் செய்கின்றன. எனவே இச்செய்யுள்கள் அசாதாரணமான மகத்துவம் கொண்டவை. இச்செய்யுள்களில் தரப்படும் அறிவுரைகளை அந்த ஜீவன்முக்தர் தந்ததாகவோ, அல்லது அருணகிரியார் மற்றும் அவரைப் போன்ற மகான்கள் தந்ததாகவோ கொள்ளலாம். ஆன்மீக முக்தி என்ற குறிக்கோளை அடைந்திட அழைத்துச் செல்லும் வெவ்வேறு யோக மார்க்கங்களை அருணகிரியார் இச்செய்யுள்களில் விளக்கித் தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

    ஓ குருவே! குமரப் பெருமானே! சிவ-யோகத்தை வழங்கும் கருணாமூர்த்தியே! தாம் பெற்ற கல்வி அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளாமல் மறைத்து வைப்பவர்களிடம் சென்று யாசிக்கா வண்ணம் மெய்ப்பொருள் ஞானத்தை எனக்குத் தாங்களே தந்தருள்வீர்!” -- இறைவனைத் தெய்வீகக் குருவாகவும், கருணா மூர்த்தியாகவும், அடியார்க்குச் சிவ-யோகத்தை தருபவராகவும் அறிந்து, அனுபவித்து, ஆத்மானுபூதியடைந்த இந்த ஜீவன்முக்தர், சில சாதகர்கள் ஞானசாகரமாயிருக்கும் இறைவனிடமிருந்தே ஞானத்தைப் பெற முயலாமல், தாங்கள் கற்றதைப் பிறருக்குச் சொல்லித் தர விருப்பமில்லாத மெத்தப் படித்த (ஆத்ம-ஞானமில்லாத) பண்டிதர்களிடம் சென்று அறிவுரைகளை வேண்டுவதைப் பார்த்து வருத்தப்படுகிறார். எனவே, இங்கு, சிவ-யோகத்தைத் தந்தருளும் முருகப் பெருமானிடமே ஞானம் தந்திடுமாறு பிரார்த்திக்கச் சொல்லி சாதகர்களுக்கு புத்திமதி வழங்குகிறார். சாதகர்கள் வேண்டும் ஞானத்தை பெற்றிட இறைவனிடமே பிரார்த்தனை செய்தால், அவரே தேவையான புத்தகத்தை அளித்துப் படிக்க வைப்பது (அ) ஸத் சங்கத்தில் பங்கேற்க வைப்பது (அ) ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்க வைப்பது என்று ஏதோ ஒன்றின் மூலம் ஞானம் பெற வழி செய்து அருள்புரிவார்; சரியான தருணத்தில் அவரே குருவாகவும் வந்து அறிவுரைகளைத் தருவார், (செய்யுள்-17ல் விவரிக்கப்பட்டதுபோல்).

    இந்த ஜீவன்முக்தர், சாதகர்கள் அனைவருக்கும் பின்வருமாறு அறிவுறுத்துகிறார்: “எல்லா கல்வியின் சாரம் பரம்பொருள் ஞானம், அதை இறைவனிடமிருந்தே கேட்டுப் பெறுங்கள், அவ்வாறு செய்வதன் மூலம் கற்றதை மூடி மறைத்து வாழும் பண்டிதர்களிடம் சென்று கல்வி அறிவை இறைஞ்சி வேண்டும் நிலையைத் தவிர்க்கலாம்.” இந்த அறிவுரையின் அர்த்தம், அவர் கல்வி கற்கவேண்டாமென்று சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்ததைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கப் பிரியம் இல்லாதவர்களிடம் செல்வதைத்தான் அவர் கண்டிக்கிறார். கற்க வேண்டியது அவசியம். கல்வியும் இறைவனின் கொடையே. புத்தகங்கள், ஆசிரியர்கள் மூலம் நாம் பெறும் கல்வியும் மற்றும் நமது அறிவும் (உள்ளிருந்து உதிக்கும் ஞானமும்) ஆகிய இரண்டுமே இறைவனிடமிருந்துதான் வருகின்றன (செய்யுள்-17). எனவே, கல்வி கற்பதில் ஒரு தவறுமில்லை, ஆனால், ஆன்மீகமற்ற, கல்வியின் குறிக்கோளை இழந்த, வெறும் பகட்டாக வாழ்பவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பதை கண்டிக்கிறார்.

    ஒரு பெரிய விதி: “பிறருக்கு அளியுங்கள்; அது உங்களுக்கு பத்து மடங்காக, நூறு மடங்காக, எண்ணற்ற மடங்காக திருப்பி அளிக்கப்படும்.” குறிப்பாகக் கல்வி விஷயத்தில், அறிவைப் பகிர்வதால் ஒருவன் எதையுமே இழப்பதில்லை. செல்வத்தைக் கொடுத்தால் அது குறையலாம். ஆனால், கல்வி அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொண்டால் அது மேலும் மேலும் வளரும். “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்று வள்ளுவர் பெருந்தகையார் கூறுவது போல. ஒருவர் செல்வம், உணவு, பொருள்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அது அவரிடம் குறைகிறது, மேலும் இவை, பெறுபவர்களின் தேவையை ஒரு சிலகாலம் மட்டுமே பூர்த்தி செய்யும். ஆனால், அறிவுக் கொடை (ஞான தானம்) அதைப் பெறுபவரிடம் நீடித்துத் தங்குகிறது. ஞான தானத்தில், கொடுப்பவருக்கு எதுவும் குறைவதில்லை, அதே சமயம் பெறுபவனும் அதை இழப்பதில்லை. இருவருமே என்றென்றைக்கும் நன்மை அடைகிறார்கள். ஞான தானத்தின் மகிமை, மற்ற எல்லா தானத்தையும் விட மிகவும் பெரியது. அப்படி இருக்கும்பொழுது, எதற்காக ஒருவன் ஞானத்தை பிறருக்குக் கொடுக்காமல் மறைக்க வேண்டும்? இருப்பினும், மெத்தப் படித்தவர்கள் பொதுவாகத் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் பகிர்ந்திட சுலபத்தில் முன் வருவதில்லை. அவர்கள் அவ்வாறு மறைத்தால், இறைவனும் தன்னை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வானென்று அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

    எதனால் மக்கள் தாங்கள் கற்றதை மறைத்து வைக்க முயல்கிறார்கள்? மற்றவர்களிடம் தங்கள் அறிவை பகிர்ந்து கொண்டால், தங்களது ‘வியாபாரம்’ பாதிக்கப்படும் என்று பயப்படுவதே அதற்குக் காரணம். தாங்கள் கற்றறிந்த அறிவை, செல்வம், பதவி, புகழ், சமூக மதிப்பு, செல்வாக்கு, ஆகியவைகளை அடைவதற்காகப் பயன்படுத்துகிறவர்கள், அவ்வறிவை மற்றவர்களுக்குப் போதிக்க விரும்புவதில்லை; ஏனெனில், அவ்வாறு செய்தால் அவர்கள் இவர்களுக்குப் போட்டியாக வந்து விடுவார்களோ என்று பயம். ஆனால், உண்மையில் கல்வி கற்பதன் குறிக்கோளே வேறு. அதன் குறிக்கோள் திருவள்ளுவர் சொல்வதுபோல், “இறைவனைத் தொழுவதற்கே (அடைவதற்கே).” (“கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.”) தங்கள் அறிவை அதன் உண்மையான குறிக்கோளான இறைவனை அடையப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்குத் தெரிந்ததை உண்மையான சாதகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குவதில்லை. அத்தகைய உயர்ந்த ஆத்மாக்களே குருமார்கள், அவர்கள் இயற்கையாகவே இரக்கமும் கருணையும் மிக்கவர்கள், அவர்களிடமிருந்துதான் ஞானத்தைப் பெறவேண்டும். அவர்கள் இறைவனின் பிரதிநிதிகள்.

    உயரிய ஆத்ம ஞானத்தைத் தருமாறு இறைவனிடமே பிரார்த்திக்க வேண்டும், அவர் ஒருவரால் மட்டுமே அதனை அருள முடியும். நன்கு படித்தவர்களால் வெறும் தகவல்கள் எனப்படும் நூல் அறிவை மட்டுமே வழங்கிட முடியும்; அவர்களால் ஆத்ம ஞானத்தை தருவதற்கு இயலாது, ஏனெனில் அது அவர்களிடம் இல்லை. கல்வி கற்பதற்காகவோ (அ) ஞானம் பெறுவதற்காகவோ யாரேனும் ஒருவரிடம் சென்றுதான் தீர வேண்டும். அப்படி இருக்கும்பொழுது, எதற்காக மனிதனிடம் செல்ல வேண்டும்; இறைவனிடமே ஏன் நேரடியாகப் பிரார்த்திக்கக் கூடாது? பகட்டுக்கார படித்த மனிதர்களுக்கும், இறைவனுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை எவ்வளவு அழகாக அருட்செல்வர் எடுத்துரைக்கிறார் பாருங்கள்! இம்மேதைகளிடம் இருப்பது ஆத்ம ஞானமல்ல, வெறும் நூல் அறிவு மட்டுமே, இருந்த போதிலும் இவர்கள் அதை மறைத்திட முயலுகிறார்கள். அதேசமயம், இறைவன் சிவ- யோகத்தை அருளுபவர். சிவ-யோகம் அல்லது சிவ-ஞானமென்பது அத்வைத (இரண்டற்ற பேருணர்வு) நிலை, அதை அருளிட இறைவன் ஒருவரால் மட்டுமே இயலும். மேலும், அவரோ கருணையின் மொத்த உருவம். உண்மையாகவே சிவ-ஞானத்தைப் (இறைவனை) பெற்றிட விரும்புவோர், நேர்மையுடனும், சரியான முறையிலும் இறைவனை அணுகினால், அதைத் தந்திட இறைவன் எப்பொழுதும் தயாராக இருக்கின்றார்.

    ஞானத்தைப் பெற்றிட இறைவனை எப்படி அணுகுவது என்று ஒருவன் வியக்கலாம்? இறைவனே குருவாக வருகிறாரென்று ஏற்கனவே பார்த்தோம். எனவே இறைவனைக் “குரவா” (குரு) என்று அழைக்கிறார் அருணகிரியார்; ஏனெனில், ஒருவரின் நேர்மை மற்றும் தீவிர ஏக்கம் ஆகியவைகளுக்கேற்ப, அதற்குரிய வேளையில், இறைவனே மனித உருவில் குருவாக வருகின்றார். இறைவனே அனைவரின் உண்மையான குரு. எனவே, இறைவனுக்கும் குருவிற்குமிடையே ஒருவித வித்தியாசமும் பார்க்கக்கூடாது. இறைவனே நம் குருவாக வருகிறார் என்ற உண்மை, அவன் அருள்கொண்டு அறிபவர்களுக்கு மட்டுமே தெரியும் (செய்யுள்-13).

    இப்பொழுது, குருவை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதுதான் சாதகர்களின் அடுத்த பிரச்சனையாகிறது. இதைப்பற்றி சுவாமி சிவானந்த மகராஜ் கூறுவதைக் காண்போமா:

    “ஒரு அசல் குருவின் பண்புகள் பின்வருமாறு: இப்பண்புகள் ஒருவரிடம் இருப்பதைக் கண்டால், நீங்கள் அவரை உடனே குருவாக ஏற்றுக்கொண்டு விடுவீர்களாக. ‘அசல் குருவானவர் பிரம்ம-நிஷ்டனாகவும் (பிரம்மனில் நிலைபேறு பெற்றவர்), பிரம்ம-ஸ்ரோத்திரியனாகவும் (வேதங்களில் கரை கண்டவர்) இருப்பார். அவர் ஆத்மாவைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும் முழுமையான ஞானம் கொண்டிருப்பார். சாதகர்களின் சந்தேகங்களை அவரால் சரியாகத் தீர்த்து வைக்க முடியும். சமச்சீரான பார்வையும் சமநிலையான மனதும் கொண்டிருப்பார். அவர் விருப்பு-வெறுப்பு (ராக-துவேஷம்), களிப்பு (ஹர்ஷ), சோகம் (துக்கம்), அகங்காரம், கோபம், காமம், லோபம் (பேராசை- கஞ்சத்தனம்), மோகம் (பற்று), மதம் (ஜம்பம்), பொறாமை, ஆகியவைகள் இல்லாதவராய் இருப்பார். அவர் கருணைக் கடலாக இருப்பார். அவர் சன்னிதானத்தில், ஒருவன் சாந்தி பெறுகிறான், அவன் மனதும் உயர்வு அடைகிறது. வெறுமனே அவர் சன்னிதானத்தில் இருப்பதினாலேயே, சாதகர்களின் அனைத்துச் சந்தேகங்களும் நிவர்த்தியாகின்றன. எவரிடமிருந்தும் எதையும் அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் பின்பற்றத்தக்க தூய்மையான ஒழுக்கமுடையவர். அவர் முழுமையான ஆனந்தத்திலும் பேரின்பத்திலும் திளைப்பவர். அவர் (தன் ஞானத்தைக் கொடுக்க) உண்மையான சாதகர்களைத் தேடிக் கொண்டிருப்பார்.’

    “வெறுமனே நூல்களைப் படித்துப் பெற்ற அறிவு மட்டும் ஒருவரை குருவாகச் செய்திடாது. வேதங்களை நன்கு அறிந்தவராகவும், நேரடியான அநுபவங்கள் மூலம் ஆத்ம ஞானம் பெற்றவராகவும் உள்ள ஒருவரையே குருவாக வரிக்க இயலும். ஒரு ஜீவன்முக்தரே (ஆத்மானுபூதியடைந்த முனிவர்) உண்மையான குரு (ஆன்மீக ஆசான்). அவரே ஸத் -குரு ஆவார். அவர் பிரம்மத்துக்குச் சமமானவர் (பரம்பொருள், பரமாத்மா). அவர் பிரம்மத்தை அறிந்தவர் (அடைந்தவர்), அதாவது பிரம்மமாகத் தன்னை உணர்ந்தவர்.”

    இதிலிருந்து கல்விக்கும் மெய்ஞ்ஞானத்திற்குமுள்ள வித்தியாசம் தெளிவாகிறது.

    ஒரு ஆன்மீக ஆசானிடம் (குருவிடம்) படிப்பதற்கும், படித்த பண்டிதரிடம் படிப்பதற்குமிடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆன்மீக ஆசானான குரு, ஒரு பிரம்ம-ஸ்ரோத்திரியராகவும், பிரம்ம-நிஷ்டராகவும் இருப்பதால், அவருக்கு சாஸ்திர-ஞானம் பூரணமாக உண்டு; மேலும், அவர் தானே ஆன்மீகப் பாதையில் சென்றிருப்பதால், அவரது போதனைகளில் அவரது சொந்த அநுபவங்களின் சக்தியும், உயிரோட்டமும், உற்சாகமும் இருக்கும்; ஆனால் வெறுமனே படித்த பண்டிதரின் போதனை உற்சாகமற்று உலர்ந்ததாயிருக்கும். மேலும், சாதனை செய்யப்படும்போது, நிறைய சந்தேகங்களும், இடைஞ்சல்களும் வந்து கொண்டேயிருக்கும், அவைகளனைத்தும் அப்போதைக்கப்போது களையப்பட வேண்டும். இதைச் செய்திட ஒரு குருவினால் மட்டுமே இயலும், ஏனெனில் அத்தகைய கட்டங்களை அவரே அனுபவித்துத் தாண்டி வந்திருக்கிறார். இறைவனை அடைய சாதனை செய்பவர்களுக்கு ஆன்மீகக் குருவின் அவசியமும் முக்கியத்துவமும் இவ்வாறாக உள்ளது.

    குரு இறைவனேயானதால், இச்செய்யுளில் காட்டப்படும் வேறுபாடு அன்பும் இரக்கமும் கொண்ட உண்மையான குருவிற்கும், கல்வியை மறைக்கும் கஞ்சத்தனமுள்ள வறட்டுப் பண்டிதர்களுக்கும் இடையே உள்ளதாகத் தோன்றுகிறது.

    ‘குமரா’ என்றால் ‘என்றும் இளமையான பெருமானே’ என்று அர்த்தம். தீயவைகளை அழிப்பவர் என்றும் மற்றொரு அர்த்தம். குருவானவரும் உண்மையில் குமரனே --- அவர் பெற்றுள்ள மிகவும் நேர்த்தியான ஆத்ம-ஞானமே அவருக்கு அழகு தருவது; மேலும், அவர் சாதகர்களிடம் உள்ள அறியாமை, அகங்காரம் போன்ற தீயவைகள் அனைத்தையும் அழிக்கவல்ல சக்தியையும் பூரணமாகக் கொண்டுள்ளார்.

    ‘குலிசம்’ என்பது முருகப் பெருமான் தன் பன்னிரு கைகளில் ஒன்றில் தாங்கியுள்ள ஓர் ஆயுதம். இவ்வாயுதத்தைக் கொண்டே பெருமான், சூரபத்மனின் தம்பியாகிய சிங்கமுகன் எனும் அசுரனை வதம் செய்தார். குலிசம் எனுமாயுதத்தை வைத்திருப்பதால், முருகன் ‘குலிசாயுதன்’ என்றழைக்கப்படுகிறார். குலிசம் (வஜ்ராயுதம்) இந்திரனுடைய ஆயுதமும்கூட.

    “குஞ்சரம்” என்றால் யானை. இந்திரனின் குமாரியான தெய்வயானை, இந்திரனின் தெய்வீக யானையான ஐராவதத்தால் வளர்க்கப்பட்டவள், அதனால் அவள் ‘குஞ்சரி’ என்றும் அழைக்கப்பட்டு வந்தாள். கந்தப் பெருமான் அந்த தெய்வயானை எனும் குஞ்சரியின் மணாளனானதால், அவர் ‘குஞ்சரவா’ என்றழைக்கப்படுகிறார். மேலும், ‘’பிணிமுகன்’ எனும் யானையைப் பெருமான் தன் வாகனமாகக் கொண்டுள்ளதாலும், அவர் ‘குஞ்சரவா’ என்றழைக்கப்படுகிறார்.

    குலிசம் எனும் வஜ்ராயுதத்தை இந்திரன் வைத்துள்ளதால், இந்திரனும் ‘குலிசாயுதா’ என்றழைக்கப்படுகிறான். ‘குலிசாயுத-குஞ்சரவா’ என்றும் மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம்; அவ்வாறு எடுத்தால் இதன் அர்த்தம் --- ‘இந்திரனின் மகளான குஞ்சரியெனும் தெய்வயானையைத் தன் துணைவியாகக்கொண்ட கந்தப் பெருமானே’ என்றாகும்.

    இச்செய்யுளில் எதற்காக தெய்வயானையைப் பற்றி குறிப்பிடப்படுகிறது என்று அதிசயிக்கலாம்? இதன் காரணம் இவ்வாறு இருக்கக்கூடும்: முருகப் பெருமான் தெய்வயானையை முதலில் மணம்புரிந்துகொண்டார், வேடுவ-வள்ளி (ஜீவாத்மா) பெருமானை அடைந்து, இப்பொழுது அவரின் துணைவி வள்ளி-தேவியாகும்போது (செய்யுள்-43), அங்கு அவள் தன் சகோதரியான தெய்வயானையைப் பெருமானுடன் காண்கிறாள்!

    “கந்தர் அநுபூதி” நூல் முழுவதிலும் இச்செய்யுள் ஒன்றில் மட்டும்தான் தெய்வயானை தேவியைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. இதற்கான காரணம் இவ்வாறாக இருக்கலாம்: கந்தப் பெருமானுடன் சம்பந்தப்பட்ட பெயர்கள் ---- சிவனார், உமா தேவி, கணேசர், வள்ளி, வேல், மயில் மற்றும் சேவல் ஆகிய பெயர்கள் ---- இந்நூலில் எங்காவது ஓரிடத்தில் (அ) பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (தெய்வயானையைத் தவிர); எனவே தெய்வயானையின் பெயரை எங்காவது ஒரு இடத்தில் (இச்செய்யுளில்) குறிப்பிட்டால், அனைவரும் இடம்பெற்று விடுவார்கள் என்று அருணகிரியார் நினைத்திருக்கலாம்.

No comments:

Post a Comment