செய்யுள் – 49
தன்னந்தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே.
பொழிப்புரை: “பளிச் பளிச்சென்று பிரகாசிக்கும் கதிர்வேலைத் தாங்கியவரே! பல வடிவங்கள் கொண்ட பெருமானே! தேவரீரை நினைப்பவர்களின் துக்கங்களை அழித்திடும் கிருபை சூழ்ந்த பிரகாசச் சுடரே (பேரொளியே)! தன்னந் தனியாக (இரண்டற்று) இருக்கும் அந்தப் பரம்பொருளைத் தனக்குத்தானே (அதுவாகவே இருந்து) அறிய முடியுமே தவிர; அதை (அந்த பேரின்ப அனுபவத்தை) இன்னொருவருக்கு விளக்கிச் சொல்ல முடியுமோ!”
விளக்கவுரை
எல்லையற்ற பரம்பொருள் தத்துவத்தின் சொரூபத்தையும், அதனை அடையும் நேர்வழியையும் வெளிப்படுத்தும் ஒரு அசாதாரணமான செய்யுள் இது. இறை-அநுபூதி அடைவதற்கு, இறைவன் அல்லது பரம்பொருளின்மேல், எதையும் விட்டுவிடாமல் அனைத்தையும்-சேர்த்து செய்யப்படும் தியானமே ராஜ பாட்டை என்றும், அந்த அநுபூதி அனுபவத்தை பிறருக்கு விளக்கிச் சொல்ல இயலாது என்றும், ஒவ்வொருவரும் தாமே சுயமாக அதை அநுபவித்து அறிய வேண்டும் என்றும், அந்த ஜீவன்முக்தர்/அருணகிரியார் சாதகர்களுக்கு இங்கு அறிவுரை தருகிறார்.
இத்தகைய செய்யுள்கள், அருணகிரியார் அத்வைத அநுபூதி நிலையை அடைந்து, அதிலேயே திளைத்திருந்த முனிவர் என்பதை நன்கு உறுதி செய்கின்றன.
“கந்தர் அநுபூதி” நூலின் இறுதிப் பகுதியில் வரும் ஒவ்வொரு செய்யுளும் கருத்துச் செறிவு மற்றும் ஆன்மீக-ஞான ஆழத்தில் ஒன்றையொன்று விஞ்சுகிறது. மிக உயர்ந்த வேதாந்த உண்மைகளை மிக எளிமையாகவும், அதே சமயம் அவைகளின் முக்கிய சாரத்தை சிறிதும் இழக்காமலும் துல்லியமான முறையில் எடுத்துச்சொல்லுவதில் அருணகிரியாரின் அசாதாரணமான திறனை இவை வெளிப்படுத்துகின்றன. அத்தகைய அரிய சிறப்பு வாய்ந்த செய்யுள்களில் இதுவும் ஒன்று.
பிரம்மம் இரண்டற்ற ஒன்று (ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம) என்று வேதம் பகர்கிறது. அக்கருத்தையே “தன்னந் தனி நின்ற அது” என்று அருணகிரியார் இச்செய்யுளில் தெரிவிக்கிறார். இதே கருத்தையே, “வெறும் தானாய் நிலை நின்ற அது” என்று செய்யுள் 28ல் அருணகிரியார் பகர்ந்தார். “தனி” என்றால் ‘’ஒன்று மட்டும்” அல்லது “தனியாக” என்று அர்த்தம்; மேலும், “தன்னன் தனி” என்ற சொற்கள், வெறுமனே திரும்பத்திரும்பச் சொல்லப்பட்ட சொற்களல்ல, ஆனால் உபநிஷத் சுட்டும் கருத்தை நமக்குத் தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டவை. நாம் ஒரு காட்டிலோ (அ) ஏகாந்தமாக, மக்களிடமிருந்து ஒதுங்கிய இடத்திலோ, இருக்கும்போது, நாம் ‘தனி’யாக இருக்கிறோம். ஆனால், அதன் அர்த்தம் வேறு மனிதர்களே இவ்வுலகில் இல்லை என்று சொல்லமுடியாது, ஏனெனில் நமது கண்பார்வைக்கு அப்பால் மற்ற மனிதர்களும் இருக்கின்றனர். ஆனால், பிரம்மம் அல்லது மெய்ப்பொருளின் ‘தனிமை’ அம்மாதிரியான தனிமையல்ல. அது தனியாக இருக்கிறது என்றால் அது மட்டுமே இருக்கிறது; அதைத் தவிர, அதற்கு இரண்டாவதாக, வேறெதுவும் இல்லை, அதனால்தான் அது ‘தன்னன் தனி’ என்று விளக்கப்பட்டிருக்கிறது; ‘தனி’ என்றல்ல. ‘தன்னன் தனி’ என்றால் ‘ஒன்று மட்டும்” என்று அர்த்தம், வெறுமனே ‘ஒன்று’ என்று அல்ல. வெறுமனே ‘ஒன்று’ என்று அர்த்தம் கொண்டால், அந்த ஒன்று மட்டுமல்லாமல் இரண்டு, மூன்று என்றெல்லாம் இருக்கிறதாக அர்த்தம் கொடுக்கும். அது ‘ஒன்றே’, இரண்டற்ற ஒன்று --- ஏகம் (ஒன்று) ஏவ (மட்டுமே / தனியாக உள்ளது) அத்விதீயம் (இரண்டற்றது) பிரம்ம (அந்த பிரம்மம்) ------ தன்னன் தனி (தனியாக, தான் மட்டுமே) நின்ற (நின்றது எதுவோ) அது (அது --- பிரம்மம்).
இப்பொழுது, ஒரு சந்தேகம் நமது மனதில் எழலாம். பிரம்மம் மட்டுமே இருக்கிறது, அதற்கு இரண்டாவதாக எதுவும் இல்லையென்றால், பின் நாம் உலகம் என்று காண்கிறோமே அது என்ன? இவ்வுலகம் வெறும் தோற்றமே என்று வேதாந்தம் மிக திடமாகக் கூறுகிறது, அதுவும் அந்த எல்லையற்ற உண்மையின் தோற்றம்தான்; அதைத் தவிர, உலகத்திற்கென்று தனியான இரண்டாவதான இருப்பு (அ) உண்மைத் தன்மை என்பது இல்லை. உலகின் இருப்பென்பது அந்த பிரம்மத்தின் இருப்புத் தன்மைதான். நாம் ஒன்றை காண்கிறோம் என்பதால் அது உண்மையில் இருக்கிறது என்றாகி- விடாது. நம் அன்றாட வாழ்க்கையிலிருந்தே இதற்கு நாம் அனேக உதாரணங்களைக் கூறலாம்.
கடலையும், அலைகளையும் உதாரணமாகப் பார்ப்போம். கடல் என்பது நீரின் பெருந்திரள். அலை என்பது அக்கடலில் அதன் நீரின் கொண்டை போன்றது. அலையில் நீரைத்தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? இல்லை. அலை நீர்தான், கடல்தான். அலையென்று சொல்லும்போது, நாம் அதன் முழுமையை விட்டு ஒரு பகுதியை மட்டும் கருத்தில் கொண்டுதான் சொல்கிறோம், அதாவது அதன் சாராம்சத்தை (அது நீரென்பதை) விட்டு அதன் தோற்றத்தை மட்டும் பார்த்து, அலை என்கிறோம். அதேமாதிரியான விஷயம்தான் இவ்வுலகமும். உலகமென்பது ஒரு தோற்றம்தான், அதன் சாரம் பிரம்மமே. ஸச்சிதானந்தமெனும் கடலில் அலைகளைப் போன்று எழும் எண்ணற்ற பெயர்-உருவங்களைப் (உலகைப்) பார்த்து (நாம-ரூபங்கள்) நாம் மயங்கி விடுகிறோம். எப்படி அலையென்பது கடலின் ஒரு அம்சத்தின் தோற்றமோ, அப்படியே உலகமும் ஸச்சிதானந்தத்தின் (பிரம்மத்தின்) ஒரு அம்சத்தின் தோற்றமே. உலகில் காணும் அனைத்துப் பொருள்களும் அலைகள் போன்றவைதான்; ஏன், நாமும்கூட அலைகள் போன்றவர்களே. நாம் இவ்வுலகைக் காண்பதென்பது ஒரு அலை மற்றொரு அலையைக் காண்பது போன்றது, அவ்விரு அலைகளும் அதே பெருந்திரளான நீரின் அம்சங்கள்தானே! ஒரு அலை கடலின் பரப்பையும் ஆழத்தையும் அறிய விரும்பினால், அது செய்ய வேண்டியது என்ன? அலை, அலையாக இருக்கும்வரை அதனால் கடலை அறிய முடியாது, ஏனெனில் கடலோ மிகமிகப் பெரியது, அலையோ மிகமிகச் சிறியது. அச்சிறிய அலையினால் கடலளவிற்குத் தன்னை பெருக்கிக் கொள்ள இயலாது. இருப்பினும், இதற்கு ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. அலையின் பொருட்கூறு உண்மையில் வெறும் நீர்தான், அதேபோல் கடலும் வெறும் நீர்தான். எனவே, இரண்டின் சாரமும் நீர் ஒன்றுதான். ஆகையால், அலையானது கடலில் அமிழ்ந்தால், அதுவே கடலாகிவிடுகிறது, கடலாக ஆகிக் கடலை அறிகிறது. கடலுக்கு அலைகள் என்பதே இல்லை; அவைகளும் கடல்தான். இதே போன்றதுதான் ஜீவர்களும் உலகமும். ஸச்சிதானந்தக் கடலின் உணர்வு அம்சத்திலிருந்து எழும் உணர்வலைகள் போன்றதுதான் ஜீவர்கள். அந்த ஸச்சிதானந்த சொரூபத்தின் இருப்பு அம்சம்தான் இந்த உலகம். இவற்றின் சாராம்சமும் இருப்பும் பிரம்மம்தான். ஜீவ-உணர்வு, ஜீவ-பாவனை ஸச்சிதானந்தக் கடலில் (பிரம்மத்தில்) அமிழ்வுறும்போது, அலைகள் நீர்கடலில் அமிழ்வதுபோல், ஸச்சிதானந்தம் மட்டுமே இருக்கிறது, அது தன்னை (தானாக) அறிந்து கொள்கிறது. எல்லையற்ற பரம்பொருளான பிரம்மத்தை அறிவதென்பது, பிரம்மமாகவே ஆகிவிடுவதைத்தான் குறிக்கிறது. ‘பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மமாகவே ஆகிறான்’ -- “பிரம்மவித் பிரம்மைவ பவதி” என்கிறது வேதம். எனவேதான், இங்கு அருணகிரியார் “தான் (அதுவாக இருந்து) அறிய” என்கிறார். பரம்பொருளை அடையும் வழி ஜீவ-பாவனையை மேலும் வளர்ப்பதில் அல்ல, அதனை முழுவதுமாக அழிப்பதில்தான் (இழப்பதில்தான்) இருக்கிறது. ஜீவனின் சாரமும், உலகின் சாரமும் பிரம்மமே, அதனை அறிவதென்பது அதுவாகவே ஆகி அதனை அறிவதாகும்; தன்னிலிருந்து “வேறொன்றினை” அறிய முயன்று வெளியே செல்வதல்ல. ஜீவன் சீமித்த (finite) ஒன்று. அதன் ஆதாரமும் அனைத்தின் ஆதாரமுமான எல்லையற்ற பிரம்மத்தில் அது ஒடுங்கிவிட வேண்டும் --- நானெனும் பாவனையை, அகங்காரத்தை விட்டு அதனுடன் கலந்திட வேண்டும்.
எனவே, அந்த இரண்டற்ற ஒன்றானதை (பிரம்மத்தை) அதுவாகவே இருந்து ஒருவனால் அறியப்பட வேண்டும். இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இப்பரம்பொருளை ஒவ்வொருவரும் தனக்குத்தானே அநுபவிக்க வேண்டும். அதை சொற்களால் விளக்க இயலாதென்பதால், அந்த அநுபவத்தை பெற்றவர் அதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லி புரிய வைக்க முடியாது. அநுபவங்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்க முடியாது. மகிழ்ச்சி, துக்கம், இனிப்பு, அழகு போன்ற சாதாரண புலன்-அநுபவங்களைக் கூட மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது. அப்படியாய் இருக்கும்போது, பிரம்மானுபவத்தைப் பற்றி என்ன சொல்வது? பிரம்மானுபவத்தை அநுபவிப்பவனே அப்பரம்பொருளாக ஆகிவிடும்போது, எவர் சொல்வார்? யாருக்குச் சொல்வது? அந்நிலையில், ‘அவனும்’ இருப்பதில்லை, ‘வேறு ஒன்றும்’ இருப்பதில்லை; அது (பரம்பொருள்) மட்டுமே இருக்கிறது; அதை ஒவ்வொருவரும், அதுவாகவே ஆகி, அதுவாகவே இருந்து, தன்னில் தானாகவே இருந்து அநுபவிக்க வேண்டும்.
முக்தி அடைந்த மகான்கள், அருட்செல்வர்கள், முனிவர்கள் அவர்களுடைய அநுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்ல இயலாது. அதனால் மற்றவர்களுக்கு எவ்வகையிலும் உதவி இல்லை; பின், அவர்கள் முக்தியால் நமக்கு என்ன பிரயோஜனம்? -- என்ற ஒரு நியாயமான சந்தேகம் எழக்கூடும். அவர்கள் தமது அநுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்ல இயலாது என்பது உண்மைதான். என்றாலும், அவ்வநுபத்தை அடைவது எப்படி என்று அவர்களால் மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலும்; ஏனெனில், அவர்களே அந்தப் பாதையில் சென்று ஜீவன்முக்தி அடைந்திருக்கிறார்கள். கற்கண்டின் இனிப்புச் சுவையை அனுபவித்த ஒருவன், அதைப் பிறருக்குச் சொல்ல முடியாதென்றாலும், அதை எங்கு எப்படிப் பெறுவது, சுவைப்பது என்று சொல்லி, சுவைக்கவைத்து, தான் பெற்ற அனுபவத்தை அவர்களும் அடையுமாறு செய்யக்கூடும். அருட்செல்வரும் இச்செய்யுளின் இரண்டாவது பகுதியில் இதைத்தான் செய்கிறார். அந்த அநுபவத்தைப் பெற தியானம் ஒரு ராஜ-பாட்டை என்று அருணகிரியார் உறுதிப்படுத்துகிறார். எதன்மேல் தியானம்? வேல் அல்லது முருகன் மேல் தியானம் --- இரண்டும் ஒன்றே.
சரி, தியானிக்கும் முறை யாது? வழி, முடிவை நிர்ணயம் செய்கிறது. செய்யுளின் முதல் இரு வரிகளில் தெளிவுபடுத்தியபடி, அத்வைத பிரம்மத்தை அடைவதுவே குறிக்கோளாதலின், அதை அடைவதற்கு அதற்குத்தகுந்த ஒரு திறம்மிக்க தியானமுறையை அருணகிரியார் இங்கு குறிப்பிடுகிறார். ஆனால், அவர் சாடையாகக் காட்டும் உத்தி, செய்யுளில் ஆழமாக புதைந்திருப்பதால் அதை உணர்ந்து வெளிக்கொணர்வது மிகவும் கடினம். மேலும் அது நம் கவனத்திற்கேகூட வராமல் போய்விடக்கூடும். அப்படி என்னதான் அருணகிரியார் சூட்சுமமாக கூறியுள்ளார் என்று பார்ப்போம். அவர் இங்கு பெருமானை “மின்னும் கதிர்-வேல் விகிர்தா” என்றழைக்கிறார். இதில்தான் தியானத்திற்கான குறிப்பு மறைந்துள்ளது.
“மின்னும் கதிர்-வேல் விகிர்தா”: பரம்பொருளான இறைவனின் உண்மை சொரூபம் இச்சொற்களில் புதைந்துள்ளது. அதைச் சரியாக அறிந்து கொள்வதே தியானத்திற்கான உத்தி. முதலில், நாம் இச்சொற்களின் எளிய பொருளைப் பார்க்கலாம் --- “ஓ பல உருவங்களைக் கொண்டு, மின்னலைப்போல பிரகாசிக்கும் வேல் தாங்கிய பெருமானே!” இந்த வேல் கதிர்-வேல், ஞான வேல். இது சூரியனைப்போன்று, தானே ஒளிர்கிறது. இது சுயமாக- ஒளிர்கிறது. மேலும், இது மின்னலைப் போல ஞானத்தைப் பளிச்சிடுகிறது; இது மின்னும் கதிர்-வேல். முருகப் பெருமானோ பல உருவங்கள் கொண்டவர். அவர் பாலமுருகனாக சதுர்முக-பிரம்மாவை சிறை பிடித்தவர், சிவனாருக்கு பிரணவ உபதேசத்தை தந்தவர் (செய்யுள்- 36); அவர் ஆறு முகங்களைக் கொண்டவர் (ஷண்முகர்); அசுரன் சூரபத்மனோடு போரிடும்போது பற்பல உருவங்களை எடுத்தவர்; அவர் வள்ளியை சோதித்து ஏற்பதற்காக வேடன், மரம், வயோதிகன் போன்ற பல உருவங்களை எடுத்தவர்; எவ்வுருவில் பக்தர்கள் அவரை பூஜிக்கிறார்களோ (அ) தியானிக்கிறார்களோ அவ்வுருவில் தோன்றுபவர். ஆக, அவர் உருவங்கள் அனேகம். இப்படியாக, “மின்னும் கதிர்-வேல் விகிர்தா” என்ற இச்சொற்களுக்கு எளிய அர்த்தத்தில் இவ்வாறெல்லாம் விளக்கலாம். ஆனால், இச்சொற்களுக்கு மிக ஆழ்ந்த விசேஷமான அர்த்தமும் உண்டு, அதுவே சரியாக தியானம் செய்வதற்கான உத்தியைத் தருகிறது.
வேல் என்பது எல்லையற்ற தூய உணர்வு என்பதை நாம் முந்தைய பல செய்யுள்களில் பார்த்துள்ளோம். அதுவே ஆத்மா (பிரம்மம்). அதன் இயல்பு யாது? அது சுயமாக-ஒளிர்வது; அது கதிர்-வேல். அது என்றும் மாறாத உண்மைப் பரம்பொருள், அனைத்தின் ஆதாரம். அது வெறும் கதிர் வேல் மட்டும் அல்ல; அது பளிச் பளிச் என்று மின்னும் தன்மையது. அதாவது, அது எல்லையற்ற உணர்வாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எண்ணற்ற ஜீவர்களாகவும் மினுமினுக்கிறது. பரம்பொருள் (பிரம்மம்) எண்ணற்ற புத்திகளில் பிரதிபலிப்பது (அ) மினுமினுப்பதுதான் ஜீவர்கள். இது மட்டும் அல்ல. முருகப் பெருமானும் பல வடிவங்கள் தாங்கியவர்; அதனால் அவர் ‘விகிர்தன்’. எதையெல்லாம் நாம் காண்கிறோமோ அவையனைத்துமே அவர் வடிவங்கள்தான் கடலில் அலைகள்போல. இனி வரும் செய்யுள் 51ல், அருணகிரியார், “ஓ பெருமானே! அனைத்து உருவங்களாகவும் உருவங்களற்றவையாயும் நீயே வருகிறாய்.” என்று சொல்கிறார். இறைவனே அனைத்து பெயர்-உருவங்களாகத் (நாம-ரூபங்களாகத்) தோன்றுகிறார், பரம்பொருளின் ஸத்தாவே (இருப்பே) அவைகளுக்கு ஸத்தாவைத் தருகிறது, அவைகளுக்கென்று சுயமாக ஸத்தா கிடையாது. “ஊன்றுகொலை வைத்துக்கொண்டு தடுமாறி நடக்கும் ஒரு வயோதிகக் கிழவன்போல் தோன்றி, மனிதனின் ஊனக் கண்ணை ஏமாற்றுபவர் அந்த இறைவனே; ஏனெனில், அனைத்தும் அவரே,” -- என்கிறது உபநிஷத்.
இவ்வாறாக, கதிர்-வேல் (எல்லையற்ற பரம்பொருள்) ஒரு புறத்தில் எண்ணற்ற ஜீவர்களாகத் தோன்றுகிறது (மின்னும் -- twinkles), மற்றொரு புறம் விரிந்து பரந்த இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள பல்வேறு புதுமையான அழகிய பொருள்களாகவும் (நாம-ரூபங்களாகவும்) – விகிர்தா - தோன்றுகிறது. என்றென்றும் ஒளிரும், சுயமாகப் பிரகாசிக்கும் பரம்பொருளான ‘கதிர்- வேல்’ என்ற சொல்லை மத்தியில் வைத்து, அதன் இரு புறமும் ‘மின்னும்’ மற்றும் ’விகிர்தா’ என்ற சொற்களை அமைத்து, அதன்மூலம் இவ்விரண்டும் அவைகளின் ஆதாரமான “கதிர்- வேலி”ன் இருதோற்றங்கள் என்று காட்ட, நேர்த்தியாகவும் அழகாகவும் அமைத்துள்ளார் அருணகிரியார்.
காணப்படும் இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவர்கள் பிரம்மத்தின் அம்சங்கள்தான் என்று உபநிஷத்துகள் பிரகடனம் செய்யும் உண்மையை, இங்கு அருணகிரியார் “மின்னும் கதிர்-வேல் விகிர்தா” என்று கூறுவதன் மூலம் நன்கு வெளிப்படுத்தி, உறுதியும் செய்கிறார்.
காணும் உலகம், ஜீவாத்மாக்கள், மற்றும் எல்லையற்ற பரம்பொருள் ஆகிய அனைத்துமே அவரைத் (வேலைத்) தவிர வேறு எதுவும் இல்லை என்று அறியலாம். எல்லையற்ற பரம்பொருள் ஒன்றே உண்மையில் இருப்பது, அதுவே நாமும் நாம் காணும் அனைத்தும். அந்த மகத்தான பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அனைத்தும் அதன் அம்சங்களே, எப்படி பேரலைகளும் சிற்றலைகளும் கடலின் அம்சங்களோ அப்படியே. அந்த இரண்டற்ற ஒரே பேருண்மை தத்துவத்தை (தன்னன் தனி நின்ற அது), அடைவதற்காக அருட்செல்வரால் வகுத்து வழங்கப்படும் தியான இரகசியம் இதுவே.
இவ்வாறாக யார் தியானம் செய்கிறார்களோ (நினைவார்), அவர்களின் துன்பங்களை பெருமான் அழிக்கிறார் (கின்னம் களையும்). துக்கங்களிலேயே மிகப் பெரியது சம்சார துக்கம் (முடிவற்ற பிறப்பு-இறப்பு சுழற்சி). இத்துக்கம், அந்த உயரிய பரம்பொருளை ஒருவன் அதுவாகவே ஆகி அறிந்தபின்னரே அழிபடும். ஒருவன் ஒரு தனிப்பட்ட சிறு மனிதனாக இருக்கும்வரை, நிர்பந்தமான பிறப்பு-இறப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இயலாது. தான் முன்னர் செய்த கர்ம வினைகளினால் பந்தாடப்படுவதையும் அவனால் தவிர்த்திட இயலாது. எல்லையற்ற பரம்பொருளிலிருந்து ஒருவன் பிரிந்து இருக்கும்வரை, அவன் நிம்மதியாக இருக்கமுடியாது; மேற்சொன்னபடி தியானம் செய்து அந்தப் பரம்பொருளுடன் தன் உண்மையான தொடர்பை உணர்ந்து, அதனுடன் ஐக்கியமாகாதவரை அவனால் அமைதியாக வாழ்ந்திட இயலாது. நதியானது கடலை நோக்கி ஓடி, அதனுடன் கலந்து, அதுவாகவே ஆகும்வரை, அதனால் அமைதியாக இருக்க முடியாது. குழந்தை தாயின் மடியை அடையும் வரை, வேறு எந்த ஒன்றினாலும் அது சமாதானமடையாது. தனக்கென்று தனியாக இருப்பு இருக்கிறது என்ற தவறான கருத்தே நாம் அநுபவிக்கும் அனைத்து துக்கங்களுக்கும் ஆதாரமாகிறது. இதனை முடிவிற்குக் கொண்டுவர உதவும் சக்திவாய்ந்த ஆயுதம் அப்பரம்பொருளின்மேல் தியானம் செய்வது ஒன்றே. --- “மின்னும் கதிர்-வேல் விகிர்தா” --- அப்பரம்பொருள் எல்லையற்றதும் எல்லைக்குட்பட்டதும்; காணப்படுவதும் புலன்களுக்கு அப்பாற்பட்டதும்; சைதன்யமும் ஜடப்பொருள்களும்; அதுவே பளிச்-பளிச்சென்று மின்னும், சுயமாக ஒளிரும் வேல்; பற்பல உருவங்கள் கொண்ட முருகப் பெருமான் --- என்று இவ்வாறாக (‘மின்னும் கதிர்-வேல் விகிர்தா) தியானிப்பது.
இத்தகைய தியானத்தை ஒருவன் உண்மையான ஆர்வத்துடனும் மனப்பூர்வமாகவும் செய்தால், வெற்றி என்பது நிச்சயம் என்று அருணகிரியார் உறுதிபடக் கூறுகிறார், ஏனெனில், முருகப் பெருமான் கிருபையைப் பொழியும் கருணைப்பிழம்பு என்று அருணகிரியார் மேலும் கூறுகிறார். முருகன் கிருபையினால் சூழப்பட்ட சுடர், கிருபை நிரம்பி வழியும் சுடர். “சுடர்” என்றால் ஒளிச்சுடர், பிரகாசம், ஒளிர்வு, ஜ்யோதி, அதாவது ஆத்ம-ஜ்யோதி என்று அர்த்தம். அது சைதன்யம், தூய உணர்வு, --- அசைவின்றி தொடர்ந்து ஒளிரும் ஜ்யோதி --- கூடஸ்த ஆத்மா. சுடர் என்ற சொல்லில் ‘நிரந்தரமாக, அசைவற்று’ ஒளிர்கிறது என்ற அர்த்தமும் அடங்கும். (தயவுசெய்து செய்யுள் 51-ஐ பார்க்கவும், அதில் நாராயண சூக்தத்திலிருந்து இவ்விஷயம் பற்றிய மந்திரம் இடம்பெற்றுள்ளது). எனவே, அது கூடஸ்த சைதன்யம், எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் ஜீவ-உணர்வல்ல. மேலும், அது “க்ருபைசூழ் சுடர்”. இந்த ஒளிச்சுடரானது கிருபையால் சூழப்பட்டு இருக்கிறது, அதாவது அது ஒரு கிருபை-பிழம்பு (அ) கருணையே வடிவானது. ஒளியின் பெருந்திரளான சூரியன் ஒளியைப் பொழிகின்றது, நாலாப் பக்கங்களிலும் பரப்புகிறது. எப்படி ஒளிக்கதிர்கள் சூரியனிடமிருந்து வெளிப்படுகின்றனவோ, அப்படியே கிருபையின் மொத்த உருவமான பெருமானிடமிருந்து கருணையானது பொங்கி வழிகின்றது. அவரிடமிருந்து அவ்வாறு பொங்கி வழியும் கருணையின் மிகமிகச் சிறிய பகுதிதான் (திவலையே) நாம் பெறுவது. ஆனால், அக்கருணையின் சிறு திவலையே சம்சார துக்கங்களை அழித்து, நமக்கு ஞானஒளியையும் தந்திடப் போதுமானது. என்னே ஆச்சரியம் இது!
“க்ருபை-சூழ் சுடர்” என்ற இச்சொற்றொடர் தியானத்திற்கு வேண்டிய ஒரு குறிப்பையும் தருகிறது. இது ஆத்மாவின்மேல் தியானம் செய்யும் முறையைக் குறிக்கிறது. பெருந்திரளான ஒளி, ஆனந்த சொரூபம், மற்றும் பொங்கும் கருணைக் கதிர்களை கொண்டிருக்கும் சுடராக ஆத்மாவின்மேல் நாம் தியானிக்க வேண்டும். இத்தகைய தியானமானது அனைத்துவிதமான துக்கங்களுக்கும் முடிவு கட்டும் (துக்கங்களை முழுதும் அழித்து விடும்).
அகண்ட எல்லையற்ற இருப்பு-உணர்வு-ஆனந்த (ஸத் -சித்-ஆனந்த) ஆத்மாவை அடைந்திடுவதற்கான ஒரு மிக உயரிய தியானத்தை “மின்னும் கதிர்-வேல் விகிர்தா”, மற்றும் “க்ருபை சூழ் சுடர்” ஆகிய இவ்விரு சொற்றொடர்களும் பரிந்துரைக்கின்றன.
அடுத்து ஒரு சந்தேகம் நம்மில் எழலாம்: இறைவன் கிருபையின் மொத்த உருவம், கருணைப் பெருந்திரள் என்றெல்லாமாக இருக்கும்பொழுது, ஏன் அவரை நினைப்பவர்களின் (தியானிப்பவர்களின்) துக்கங்களை மட்டுமே அவர் நீக்கிட வேண்டும்? அனைவரின் துக்கங்களையும் அவர் நீக்கலாமே? என்கிற சந்தேகத்திற்குப் பதில் காண்போம். நெருப்பு சுட்டுப்பொசுக்கிடும் தன்மை படைத்தது; ஆனால் அது எல்லாப் பொருள்களையும், அவை எங்கிருந்தாலும், பொசுக்குவதில்லை. அதில் இடப்படும் பொருள்களையும், அதன் தொடர்பில் வரும் பொருள்களையும் மட்டுமே அது பொசுக்கித் தள்ளிவிடும். புனிதப்படுத்தும் தன்மை கொண்ட கங்கையும், அதில் மூழ்கி ஸ்நானம் செய்பவர்களின் பாவங்களை மட்டுமே நீக்குகின்றது. சூரியன் ஒளியை எங்கும் பரப்புகிறது. ஆனால், ஒருவன் ஒரு அறையில் தன்னை மூடிக்கொண்டு, வெளியே வராமல் இருந்தால், சூரியனால் என்ன செய்யமுடியும்? அதேபோல், இறைவன் கருணைமயமானவர்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஒருவன் தன் திறந்த இதயத்துடன் அவரை அணுகவேண்டும், அப்பொழுதுதான் அக்கிருபையை உணர்ந்திட இயலும். ஒருவன் இறைவனை “விரும்பி வேண்டுதல்” வேண்டும், அப்பொழுது இறைவன் தன்னையே அவனுக்குக் கொடுத்து விடுகிறார். அவர் உயர்ந்த வெகுமதிகளையோ, உயர் கல்வியையோ, கூர்மையான அறிவையோ எதிர்பார்ப்பதில்லை. அவர் வேண்டுவது, நாம் அவரை விரும்ப வேண்டும் என்பதே. இறைவன் எங்கும் இருக்கிறார் என்பதை உணர்ந்து, தன்னலமற்ற சேவை செய்தல், அவரின் மகிமைகளைப் போற்றிப் புகழும் நூல்களைக் கற்றல் ஆகிய இவைகளோடு, நாம-ஜபம், கீர்த்தனை, தியானம் ஆகியவைகளையும் செய்வது, நமக்குள்ளே உறையும் இறைவனுக்கு நம் இதயத்தைத் திறந்து, அங்கு விளங்கும் “க்ருபைசூழ்” சுடரிலிருந்து பொங்கி வழியும் கிருபையைப் பெறுவதற்கான பல்வேறுப் பயிற்சிகள்.
இவ்வாறு, இறைவனை இடைவிடாது தியானிப்பது, நம் வாழ்விற்கு அவரை மட்டுமே முழுவதுமாக நம்பியிருப்பது, அவரை உண்மையாகவே விரும்பி வேண்டுவது, ---- ஆகியவை ஒருவனது துக்கங்களை அழித்து, அவரின் கிருபையை அவன்பால் ஈர்க்கும். அந்தக் கிருபை அவனுள்ளேயே கதிர்-வேலாக (தூய-உணர்வாக) வெளிப்படும். இந்த அநுபவத்தை ஒவ்வொருவரும் தனக்குத்தானே அடையவேண்டும், இதை இன்னொருவருக்கு எடுத்துச்சொல்ல இயலாது.
|
செய்யுள் 49
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment