செய்யுள் – 5
மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே.
அகமாடை மடந்தையர் என்றயரும்
ஜகமாயையுள் நின்று தயங்குவதே.
பொழிப்புரை: “ஆறுமுகப் பெருமான் மகாமாயையே அழிக்கக் கூடிய திறமை கொண்டவர். “ஆறுமுகம்”, “ஆறுமுகம்” என்று நான் அவர் பெயரைப் பலமுறை ஜபித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும், மனதைச் சோர்வு அடையச்செய்யும் வீடு (மண்ணாசை), சொத்து (பொன்னாசை), மனைவி (பெண்ணாசை) ஆகிய உலகமாயையில் சிக்கி கலங்கிக் கொண்டிருப்பதிலிருந்து நான் இன்னும் விட்டு விலகப்பெற்றேனில்லையே”.
விளக்கவுரை
சாதனையின் ஆரம்ப காலத்தில், தான் தினசரி வழக்கமாகச் செய்துவரும் வெவ்வேறு செயல்களுடன், சிறிது நேரம் ஜபம், பாராயணம் ஆகியவற்றையும் செய்துவந்தாலே இறைவனை அடைந்து விடலாம் என்று அச்சாதகன் தவறுதலாக நினைத்தான். அவ்வாறு சில காலம் (சில வருடங்கள்) செயல்படுத்திய பின்னர், அது அவ்வளவு சுலபமில்லை என்று உணர்கிறான். முன்புபோல் அவனால் தன் குடும்பத்தோடு ஒட்டி மகிழ்ச்சியாக வாழவோ அல்லது குடும்பத்தை விட்டுவிடவோ முடியாமல் தவிக்கிறான் (செய்யுள்-4). எம்பிரான் மகாமாயையை அழிக்கவல்லவரென்று அவனுக்குத் தெரியும். அவருடைய திருநாமங்களை அவன் தினசரி ஜபம் செய்தும் வருகின்றான். எனினும், வெறுமனே சலிப்பைத்தான் தருகின்றன வீடு, சொத்து, மனைவி எனப்படும் உலகமாயையில் சிக்கி அவதிப்படுவதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. ஏன்? இதற்கான காரணம், இச்செய்யுளிலேயே உள்ள ‘மொழிந்து’ என்ற சொல்லில் மறைமுகமாக இருக்கிறது. எப்படி ஒரு ஒலித் தகடு இசைக்கருவி (CD Player) எந்திரகதியால் ஒலி செய்கிறதோ, அதைப்போல் அவன் உதடுகள் மட்டும் ஒரு எந்திரத்தைப்போல் ஜபம் அல்லது பாராயணம் செய்கின்றன (மொழிதல்). ஆனால் அவன் இதயம் (மனம்) அதில் சிறிதும் ஒன்றுவதில்லை. உதடுகள் எந்திரத்தைப்போல் இறைநாம ஜபம் செய்யும்போதே, மனம் அதே நேரத்தில் இரகசியமாக உள்ளூர மண், பொன், பெண் இவைகளையே நாடுகிறது. இதற்குக் காரணம், இறை நாமத்தை முழுமனதுடன் ஜபிப்பதில் அடையப்பெறும் இனிமையை (பரம சாந்தியை) அவன் இன்னும் சுவைக்காததே. இது ஒவ்வொருவருடையவும் பொதுவான அனுபவம்; அதாவது, ஜபம் (அ) பாராயணம் என்று ஏதோ ஒன்றை நாம் செய்யத் தொடங்கும்போது, தொடங்கிய சிறிது நேரம்வரை மனதானது அதில் ஓரளவுக்கு ஒன்றியிருப்பதையும், பின்னர் உதடுகள் மட்டும் இயந்திர கதியில் ஜபிப்பதையும், மனம் தனியாக தனக்குள்ளுக்குள், நமக்குத் தெரியாமலேயே, தனக்குப் பிடித்த விஷயங்களில் லயித்திருப்பதையும் காண்கிறோம். நம் மனம் அப்படிப்பட்ட ஒரு தந்திரசாலி. அதன் மூலம்தான் மாயை தன் காரியத்தை செய்கிறது, நம்மை உலகியலில் சிக்க வைக்கிறது.
(உலக (அ) ஜகன்) மாயையின் சாராம்சம் வீடு, செல்வம் மற்றும் பெண் (மனைவி, மக்கள்). இவைகளுடன் பற்று (ஆசை) கொண்டு சிக்கிக்கொள்கிறான் மனிதன். இவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று சொல்லப்படும் மூன்று ஏடணைகள் (“அடிப்படை ஆசைகள்”). வீடு, செல்வம் மற்றும் பெண் (மனைவி, மக்கள்) ---- இந்த மூன்றும் “மூவேடணை” (சமஸ்கிருதத்தில் ‘ஏஷணாத்ரயம்’) அல்லது “அடிப்படை ஆசை”களின் ஸ்தூல-வடிவம், அதாவது ‘’ஸ்தூலப் பொருள்களின் மீது பற்று.’’ இவ்வேடணைகளின் சூட்சும-வடிவம் “பேராசை” (‘ஏக்கம் அல்லது அடங்கா ஆசை’) என 16-ம் செய்யுளிலும், காரண-வடிவம் ‘மாயையிலிருந்து பிரியாத அல்லது வேறுபடாத நிலை’ என 39-ம் செய்யுளிலும் முழு விவரங்களுடன் அச்செய்யுள்களில் காண்போம். மண்ணாசை, பொன்னாசை, மற்றும் பெண்ணாசை ---- இம்மூன்றும் அதிருப்தி, சோர்வு, மற்றும் துன்பத்தையே தருபவையென்று தெரிந்தபோதிலும், அவைகளின் மீதான பற்றை போக்கிக் கொள்வதென்பது கடினமான விஷயம்தான். ஜபம், பாராயணம் போன்ற சாதனைகளை ஒரு சாதகன் தொடர்ந்து செய்கிறான் என்றாலும், அவ்வேடணை பற்றிய ஆசை மற்றும் எண்ணங்கள் அவன் ஆழ்மனதில் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன; அவற்றிற்காக அவன் இதயம் ஏங்கித் தவிக்கிறது. இவ்வேடணைகள் தன்னை சீர்குலைக்கின்றன என்று நன்கு தெரிந்திருந்தும், அவன் மனம் அவற்றையே விழைகின்றதேயொழிய, மகாமாயையிலிருந்து விடுதலை தரவல்ல இறைவன்பால் அவன் மனம் நாட்டம் கொள்வதில்லை. இதனால்தான் அதனை “மாயை” என்கிறோம்; அதாவது, காரணமற்ற, நியாயமற்ற, புரிந்துகொள்ள முடியாத, அறிவுக்கு அப்பாற்பட்ட மதிமயக்கம் என்று கூறுகிறோம்.. இதற்கு என்ன உபாயம்! சாதகன் அன்புடனும், பக்தியுடனும், பொறுமையுடனும் விடாது தொடர்ந்து இறைவன் நாமத்தை ஜபம் பண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே இதயம் உருகிடும் நிலை வந்தடையும்வரை, இச்சாதனைகளை பொறுமையுடன் விடாது செய்யவேண்டும். இது கடினம்தான், ஆனால் மிகவும் அவசியம். இறைநாமாக்களை வெறுமனே உதட்டால் மொழிந்து வந்தால் மட்டும் போதவே போதாது; மனமும் அம்மொழிதலில் முழுமையாக ஈடுபட்டு, வேறு எவ்வித எண்ணங்களும் இன்றி, இறைவனில் லயித்து, இதயத்தில் இறைவனை உணர வேண்டும், இதற்கு இறைவனருள் நிச்சயமாகத் தேவை. எனவே, அச்சாதகன் 15-ம் செய்யுளில் இவ்வாறு வேண்டுகிறான்:
“முருகன் குமரன் குகன்என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வென்று அருள்வாய்.“
{இறைவனே! “முருகன், குமரன், குகன்” என்று மொழிந்து (ஜபம் செய்து), அப்படி மொழியும்போது என் மனதை உருகிடுமாறு செய்து, உங்களை என் நெஞ்சில் உணர்ந்து அனுபவிக்க எப்போது அருள்புரிவீர்?”} இச்செய்யுளில் (செய்யுள்-5) ‘மொழிந்து’ – அதாவது, வெறுமனே உதடால் ஜபம் செய்து என்ற சொல்லை மட்டும் பயன்படுத்திய அருணகிரியார், 15-வது செய்யுளில், ‘உருகி’, ‘உணர’ என்ற சொற்களையும் சேர்த்துள்ளார். வெறும் இயந்திரகதியில் செய்யப்படும் ஜப சாதனை மட்டும் போதாது; உணர்ச்சி பூர்வமான ‘மனோபாவ’மும் அச்சாதனையில் இணைய வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படும் கருத்து. இருந்தாலும், சாதனையின் தொடக்கம் ‘மொழிதல்’ மூலமேயாம். வெறும் மொழிதலோடு ஆரம்பிக்கப்படும் சாதனை அன்புடனும், பக்தியுடனும் விடாது தினந்தோறும் தொடரப்படும்பொழுது, காலப்போக்கில், அவனுடைய சாதனையின் சக்தி, அம்மந்திரத்தின் சக்தி மற்றும் ஈஸ்வரனின் கிருபையும் ஒன்றுசேர்ந்து தேவையான மனோபாவத்தை உண்டு பண்ணும். அதனால் அவன் மனமும் நெகிழ்ந்து உருகி, நெஞ்சுக்குள்ளே இருக்கும் இறைவனையும் உணரச்செய்யும். இது திண்ணம். அதன்பின், மூவித ஏடணைகளின் மீதான பற்று சாதகனிடமிருந்து தானே விலகிவிடும், (பழுத்த பழம் தானே மரத்திலிருந்து பிரிந்து விழுவது போல்).
அருணகிரியார் எவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் உண்மைகளை சித்தரிக்கிறார்! எல்லாம்வல்ல ஆறுமுகப்பெருமான் மகாமாயையை அடியோடு களைந்திட வல்லமையுடயவர். இது பூரண உண்மை. மேலும் நாம் அப்பெருமானுடைய நாமாவை ஜபம் செய்து வருகிறோம் என்பதும் உண்மை. அப்படிஇருந்தும், நாம் (சாதகர்கள்) இவ்வுலக மாயையிலிருந்து விடுபடவில்லை என்பதும் அதைவிட மேலான உண்மையே. இது விசித்திரமாக இருக்கிறதல்லவா? ஆனால், சாதனையில் உண்மையாக ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருடைய அனுபவமும் இதுதான். இறைவனின் நாமாவை ஒரே ஒருமுறை சொன்னாலே அது ஒருவனுடைய மயக்கத்தை (மாயையை) “அழித்திட வல்லது”, என்று தீவிரமாகப் பேச்சளவில் சொல்லக்கூடும்; அது உண்மையாகவும் இருக்கக்கூடும். ஆனால், வாஸ்தவத்தில் நடப்பதுதான் என்ன? முருக பக்தர்கள் அனைவரும் அவன் நாமத்தை ஆண்டாண்டு காலமாக இன்றளவும் ஜபம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வாறு செய்து கொண்டிருக்கிறவர்கள் அனைவரும் மாயையிலிருந்து விடுபட்டு விட்டார்களா என்று கேட்டால், அநேகமாக ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும். அப்படி சாதனை செய்யும் கோடிக்கணக்கானவர்களில் யாரோ ஒருவன் இறைவனின் கிருபை கிடைக்கப்பெற்று, அதனால் அவன் கல்நெஞ்சு நெக்குருகி நெகிழ்ந்து இறைவனை உணருகிறான். அருணகிரியார் பேச்சளவு ஞானியல்ல; எனவே, உண்மைகளை மட்டுமே வெளிப்படையாகவும் உணர்ச்சியுடனும் நேர்த்தியாக எடுத்துரைக்கிறார். அதனால், அதில் அவர் மிகவும் வல்லவர் என்று உயர்வாக அனைவராலும் மதிக்கப்படுகிறார். தாயுமானவ சுவாமிகள், அருணகிரியாரின் இக்கலை நயத்தை வியந்து பின்வருமாறு கூறுகிறார்:
“ஐயா அருணகிரி அப்பா உன்னைப்போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்?”
‘ஓ அருணகிரி, என் ஆன்மீகத் தந்தையே. தங்களைப்போல உண்மைகளை வெளிப்படையாக நேர்த்தியுடன் எடுத்துரைத்தவர் எவரேனும் உண்டோ?’ (இல்லை என்ற அர்த்தத்தில் வினவுகிறார் எனச் சொல்லவும் வேண்டுமோ).
அச்சாதகன் நீண்டகால இடைவிடாத தொடர்ந்த சாதனை மற்றும் ஈஸ்வர கிருபை ஆகிய இரண்டின் அவசியத்தை நன்கு உணர்கிறான். பழைய சம்ஸ்காரங்களை (உள்ளுணர்வில் ஆழமாக பதிந்துள்ள முந்தைய பிறப்பு அனுபவங்கள் ஏற்படுத்திய சுவடுகளை/ தடங்களை) அவ்வளவு எளிதாக அழித்திட இயலாது. மிகவும் பலம் வாய்ந்த மூன்று ஏடணைகளைக் கடப்பதும் அவ்வளவு சுலபமல்ல. அவைகளோ விலகிட மறுத்து பிடிவாதம் பிடிக்கும். இந்நிலையில், அவனுக்குத் தேவை இடையறாத சாதனை. அச்சாதனை மிகநீண்ட காலத்திற்கு இடைவிடாது தொடரப்பட வேண்டும். இறையருளால் (ஈஸ்வர கிருபையால்) மட்டுமே அவைகளை அழித்தொழிக்க இயலுமென்றாலும், அவ்விறையருளைப் பெறுவதற்கு, இடைவிடாத ஆன்மீக சாதனை மிகமிக அவசியமாகிறது.
|
செய்யுள் 5
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment