செய்யுள் – 51
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
பொழிப்புரை: “ஓ சர்வவல்லமை பொருந்திய குகப் பெருமானே! ஓ பரம்பொருளே! உருவமுள்ளனவாயும், உருவமற்றனவாயும்; உள்ளனவாயும், இல்லாதனவாயும்; மலராகவும், அதன் நறுமணமாகவும்; ரத்தினமாகவும், அதன் ஒளியாகவும்; உடலாகவும் (பிரபஞ்சமாகவும்), உயிராகவும் (பிரபஞ்சத்தை வியாபித்து, அதற்கு உயிராகவும்); (நற்கதியாகிய) மோட்சமாகவும், (அதை அடைவதற்கான) நீதி நேர்மையின் விதிகளாகவும் (நன்னெறியாகவும்) (அதாவது, மார்க்கமாகவும், முடிவாகவும்); மற்றும் குருவாகவும் வருகின்ற குகப்பெருமானே! தங்கள் கிருபையை (அனைவருக்கும்) அருள்புரிவீராக.”
(எல்லாமாயும் குருவாயும் வருகின்ற குகப்பெருமானே, நீ எல்லோருக்கும் அருள் புரிவீராக.)
விளக்கவுரை
இது ஒரு மிகமிக அழகான மற்றும் அருமையான செய்யுள். இத்துடன் அருணகிரியார், “கந்தர் அநுபூதி” என்கிற இந்த தெய்வீக நூலை நிறைவு செய்கிறார். இச்செய்யுள் அருட்செல்வரின் மிக உயர்ந்த இறை-அனுபவத்தின் முயற்சியில்லாதெழும் பரவசமாகிற உணர்ச்சி வேகமிக்க பொழிவு ஆகும். இது மிகவும் எளிமையான, இனிமையான அதே சமயம் கம்பீரமான பாணியில் புனையப்பட்டுள்ளதால், இதை ஒருவன் ஓதும்பொழுதே, அவனை ஆன்மீக மனோபாவத்திற்குக் கவர்ந்து சென்று விடுகிறது. இதில் அவர் தானும் மற்ற பூரண ஞானிகளும் உச்சகட்ட இறைபோத அநுபூதி நிலையில் அநுபவிக்கும் அந்த சகஜ சமாதி அவஸ்தை எனப்படும் நிலையை, மிகவும் அழகாகச் சித்தரிக்கிறார்.
பேசா அநுபூதி நிலையை (பேச்சற்ற அநுபவம் – மகா மௌனம் என செய்யுள்-43ல் விளக்கப்பட்ட நிலையை) அடைந்த சாதகன், பின்னர் அவ்வநுபூதி நிலையிலிருந்து ஜீவன்முக்தனாக வெளிப்பட்டு, எங்கும் எதிலும் இறைவனைக் காண்கிறான் --- தனக்குள்ளே வேலாகவும், வெளியே எங்கும் மிளிரும் இறை-பாதங்களாகவும் காண்கிறான் (செய்யுள்-44). இத்தகைய இறை-உணர்வுடன், அந்த ஜீவன்முக்தன் இங்குமங்கும் சென்று லோகசங்கிரக (உலக ஒற்றுமை மற்றும் நன்மைக்கான) ஆன்மீகப் பணிகளையும், ஆத்மானுபூதி அடையப் பாடுபடும் சாதகர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப அறிவுரைகளையும் கொடுத்து வருகிறார். காலப்போக்கில், அவருடைய இறை-விழிப்புணர்வு ஆழமாகி, மேன்மேலும் நிறைவுற்றதாக ஆகிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில் அவர் நிரந்தரமான மற்றும் தடைகளற்ற இறைஉணர்வு நிலையில் (சகஜ அவஸ்தை) சாசுவதமாக நிலைபெற்றுக் கொள்கிறார்; நிலைபெற்ற அந்த சகஜ அவஸ்தையில் அவர் இறைவனை எல்லாவற்றிலும் பார்ப்பதோடல்லாமல், இறைவனை எல்லாமுமாகப் பார்க்கிறார். அவருக்கு, இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்றல்ல, இறைவனே அனைத்துமாக இருக்கிறார்; எனவே, அவருக்கு இறைவன் எல்லாமுமாக ‘வருகிறார்.’ அவர் எதைப் பார்த்தாலும், தொட்டாலும், நுகர்ந்தாலும், ருசித்தாலும், கேட்டாலும், அது இறைவனே. அவர் எண்ணுவதெல்லாம், உணர்வதெல்லாம், அறிவதெல்லாம் இறைவனே. இறைவன் மேலேயும், கீழேயும் உள்ளார்; இறைவனே ஸ்தூலப்பொருளும், உணர்வும்; இறைவனே வழியும் (மார்க்கமும்), இலக்கும் (முடிவும்); உள்ளேயும் இறைவனே, வெளியிலும் இறைவனே, அனைத்தும் இறைவனே, எங்கும் இறைவனே. இப்படிப்பட்ட ஒரு ஜீவன்முக்தனுடைய கம்பீர தெய்வீகமயமான அனுபவத்தை, இறையனுபூதியில் ஊறி இருக்கும் அருட்செல்வர் அருணகிரியார் இச்செய்யுள் மூலம் தெரியப்படுத்துகிறார். அதனால்தான் முனிவர் தாயுமானவர், “அருணகிரியார் கந்தப் பெருமானின் அநுபூதி பெற்று, ‘கந்தர் அநுபூதி’ எனும் நூலை, தான் பெற்ற பேரின்பத்தை மற்றவர்களும் அடையவேண்டும் என்பதற்காகத் தந்தருளினார்.” என்று சொல்கிறார். முக்தியடைந்த ஒரு மகானின் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கிறது பார்த்தீர்களா! இதைப்பற்றி நாம் எழுதலாம், படிக்கலாம், அவ்வளவுதான்; அதை ஆழ்ந்து தியானம் செய்தால், ஒருவேளை அவனருளால் ஒரு க்ஷணநேரம் அந்த அனுபவம் கிடைக்குமேயானால், நம் வாழ்க்கை பயனடைந்ததாகும்!
இருமையைக் (துவைதத்தைக்) காணும் சாதாரண மனிதபுத்தியின் புரிதலான வடிவமுள்ளது மற்றும் வடிவமற்றது, உள்ளது மற்றும் இல்லாதது போன்ற வழக்கமான இரட்டை கருத்துகள், ஒரு ஜீவன்முக்த மகாபுருஷருக்கு அர்த்தமற்ற வார்த்தைகளாகின்றன. இவை அனைத்தும் கடக்கப்பட்டு, ஒற்றைத் தனித்துவ (அத்வைத) அனுபவமாக மாறி விடுகிறது. ஜீவன்முக்தரின் இத்தகைய தெய்வீக அசாதாரண அநுபவத்தை, மானிட மொழிகளால் விவரித்திட இயலாது. இருப்பினும், பதினாறு சொற்களைக் கொண்ட ஒரு செய்யுள் எவ்வளவு அனுமதிக்குமோ அதற்குள், அருணகிரியார் மிகவும் திறமையான முறையில் (அவ்வநுபவத்தை) விளக்கியுள்ளார்! ஒரு மனிதனின் அனுபவத்தில் வரக்கூடிய சாத்தியமான அனைத்து அநுபவங்களையும் இவ்வொரு செய்யுளிலேயே மிகவும் அழகாகத் திணித்து, படமாக்கி, (அவ்வநுபவங்களை) நம்(மனக்) கண்முன் தோன்றச் செய்துள்ளார்.
“உருவாய் அருவாய்”: நாம் கண்ணைத் திறந்தவுடனேயே, வெவ்வேறு உருவங்களையும் வடிவங்களையும் உடைய பொருள்களைப் பார்க்கிறோம். எனவே, பொருள்களைப் பற்றிய நமது முதல் கருத்து “உருவம்” தான். அதே சமயம், நாம் காற்று, ஆகாசம், மணம், சத்தம், சுவை போன்ற “உருவம் அற்ற” பலவற்றையும் அன்றாடம் உணர்ந்துதான் வருகிறோம். எனவே, அருணகிரியார் இச்செய்யுளை “உருவாய், அருவாய்” என்றே துவங்குகிறார், அதாவது ‘உருவம் கொண்டது’, ‘உருவமற்றது’. என்ற இவ்விரு சொற்களிலேயே அவர் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் உள்ளடக்கி விட்டார்! உருவம், அருவம் --- அவ்வளவேதான், இவ்விரண்டைத் தவிர வேறு மூன்றாவதுவிதமாக எதையுமே (எப்பொருளையும்) நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது, அனைத்தும் இவ்விரண்டிலேயே அடங்கி விடுகின்றன.
கந்தப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி ‘கந்த புராணம்’ இவ்வாறு விவரிக்கிறது: “அருவமும் உருவும் ஆகி, அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு” ---- ”அருவமாயும் உருவமாயும் அநாதியாயும் ஒன்றாயும் பலவாயும் பரப்பிரம்மமாயும் விளங்கும் சோதிப் பிழம்பு.” இதிலிருந்து விளங்குவதென்னவெனில் உருவமோ அருவமோ ஆன எதுவும் எல்லாமும் இறைவன்தான், இறைவன் மட்டுமேதான். எனவே, இறைவனுக்கு குறிப்பிட்ட வடிவங்கள் மட்டுமே உண்டு என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட உருவில்தான் வருவார் என்றெல்லாம் இல்லை. உண்மையில், எல்லா உருவங்களும் அவருடையதேதான். ஆனால், ஜீவன்முக்தன் ஒருவரால்தான் இவ்வாறெல்லாம் அநுபவித்திட இயலும். எனவே, இறை-அனுபூதி உள்ளவர்களுக்கு, இறைவன் ஒரே சமயத்தில், உருவுள்ளனவாயும் உருவம் இல்லாதனவாயும் வருகிறார்; ஏனெனில், இறைவன் அரு-உரு என இரண்டுமாக இருகிறார், என்று சொல்கிறார் அருணகிரியார்.
“உளதாய், இலதாய்”: அடுத்ததாக வரும் இரட்டை --- ‘உளதாய், இலதாய்,’ --- ‘இருப்பதாய்’ மற்றும் ‘இல்லாததாய்”. அதாவது, ‘எந்த ஒன்று இருக்கின்றதோ’ மற்றும் ‘எந்த ஒன்று இல்லையோ.’ ’இருக்கிறது’, ‘இல்லை’ என்பதைப்பற்றிய மனிதர்களின் கருத்துக்கள் அவரவர்களின் ஆன்மீக உன்னதி நிலைகளுக்கேற்ப வெகுவாக வேறுபடுகின்றன. உலகாயதவாதிகளுக்கு (சாருவாகர்களுக்கு), இந்த ஸ்தூல உலகம் (பிரபஞ்சம்) மட்டுமே உள்ளது, அதாவது ஸ்தூலப்பொருள்கள் அல்லது இயற்கை மட்டுமே உள்ளது, அவர்களுக்கு இறைவன் என்ற ஒருவர் இல்லவே இல்லை. அதற்கு நேர்மாறாக, வேதாந்திகளுக்கு இருப்பது பிரம்மம் மட்டுமே (நித்திய உண்மை), ஏனெனில் அதுதான் நிரந்தரமான பரம்பொருள், உண்மையில் இருப்பது; உலகம் என்பது இல்லை (அநித்தியம்), ஏனெனில் அது நிரந்தரமானதல்ல, மாறும் தன்மை உடையது, கடைசியில் அழியக்கூடியது. ஆனால், அநுபூதிபெற்ற ஞானிக்கு, இறைவன் இருப்பதாகவும் இல்லாததாகவும் வருகிறார், இவ்விரு சொற்களையும் எவ்விதத்தில் புரிந்து கொண்டாலும் ஒப்புக்கொண்டாலும் சரி, என்கிறார் அருணகிரியார். உலகம் மட்டும் இருக்கிறது, இறைவன் இல்லை என்றாலும் சரி; அல்லது இறைவன் மட்டுமே இருக்கிறார், உலகம் இல்லை என்றாலும் சரி, பூரண ஞானிகளுக்கு இறைவன் இரண்டுமாகவே வருகிறார். அந்த ஞானிகள், ஆரம்பத்தில் “நேதி நேதி” (இது இல்லை, இது இல்லை) என்று ஒவ்வொன்றாக உலகம் உட்பட எல்லாவற்றையும் புறம்தள்ளி, இறைவன் ஒருவனையே எல்லாமாக தியானித்து அத்வைத ஞானியாகி, அவரை (பிரம்மத்தை) அடைந்த பின்னர், அதே உலகை இறைவனாகவே “சர்வம் கல்விதம் பிரம்ம” (“அனைத்தும் உண்மையில் பிரம்மமே”) என்று காண்கின்றனர். இவ்வாறாக, அருணகிரியார் இச்செய்யுளின் முதல் வரியிலேயே, ஜீவன்முக்தர்கள் அநுபவிக்கும் சகஜ அவஸ்தை நிலையின் சாரத்தை மிகவும் நேர்த்தியாக உற்சாகமூட்டும் விதத்தில் தந்தருளியுள்ளார்.
செய்யுள் 13க்கும் இச்செய்யுளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது: செய்யுள் 13ல், அறுதி உண்மையான பரம்பொருள் (இறைவன்) ‘உருவன்று, அருவன்று; உளதன்று, இலதன்று’ என்று விவரிக்கப்பட்டது. இச்செய்யுளில் அதே இறைவன் ‘உருவாய், அருவாய்; உளதாய், இலதாய்’ வருகின்றவராகச் சொல்லப்படுகிறது. செய்யுள்-13, சாதகனுக்கு, உற்சாகமூட்ட {மாதிரிக்காக (Sample)}, குருவினால் “கொடுக்கப்பட்ட” உண்மைப் பரம்பொருளின் தற்காலிகமான அநுபவத்தை, விவரிப்பது; அதனால், அது “இது அல்ல, அது அல்ல” என்று, அதாவது, பரம்பொருள் விவரிக்க இயலாதது, என்று கூறப்படுகிறது. ஆனால் இங்கு, இறை-அநுபூதி அடைந்த ஒரு ஞானியின் ‘சொந்த அனுபவம்’ விளக்கப்படுகிறது. அதனால், இறைவன் “இதுவாகவும் அதுவாகவும்” இருக்கிறார் எனப்படுகிறது. மேலும், அங்கோ இறைவனைக் குறிக்க ‘அது’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது; அதனால், அவர் “வெகு தொலைவில் உள்ளவர்” என்பது போன்ற எண்ணத்தை, உணர்ச்சியைக் கொடுக்கிறது; ஆனால், இங்கோ ‘குகன்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. குகன் என்றால் “இதயக் குகையில் ஒளிர்பவர்.’ இது இறைவன் மிக அருகில் உள்ளார் என்பதைக் குறிப்பதாகிறது; அதாவது அவனுடைய இதயத்திலேயே அவர் இருக்கிறார், அதனால் அவர் ‘தனக்குச் சொந்தமானவர்’ என்ற உணர்வைக் கொடுக்கிறது. மேலும் அது அவனது ‘சொந்த அநுபவம்’ என்பதையும் தெரியப்படுத்துகிறது. மேலும், சாதனையின் துவக்கக் காலகட்டத்தில் (செய்யுள்-13), சாதகனுக்கு கொடுக்கப்பட்ட அநுபவம் சீமித்தது (limited): “அதுவே (மெய்ப்பொருள் அல்லது பரமாத்மாவே) முருகப்பெருமான், (அதுவே) இணையற்ற வேல் தாங்கிய பெருமான், (அதுவே) நம் குரு.” என்பதுவரை சீமித்து இருந்தது. ஏனெனில், அந்நிலையில் அவனால் பரம்பொருளை அந்த அளவிற்குமட்டும்தான் அனுபவிக்க இயலும், பரம்பொருளே அனைத்தும் என்று அனுபவிக்க இயலாது.. ஆனால், இங்கு, இறைவனே அனைத்துமாய் உள்ளார் --- உருவாகவும், அருவாகவும்; உளதாகவும், இலதாகவும்; மலராகவும், அதன் நறுமணமாகவும்; ரத்தினமாகவும், அதன் ஒளியாகவும்; உடலாகவும் (பிரபஞ்சமாகவும்), (அதற்கு உணர்வூட்டும்) உயிராகவும்; மோட்சமாகவும், அதனை அடைய உதவும் தர்ம மார்க்கமாகவும்; மற்றும் குருவாயும் வருபவர் --- ஆக இறைவன் எல்லாமுமாக உணரப்படுகிறார். இவ்வாறு இவ்விரண்டு செய்யுள்களையும் ஆராய்ந்து பார்த்தால், பரம்பொருளை “விவரிப்பதற்கும்”, பரம்பொருளை “அநுபவிப்பதற்கும்” இடையேயுள்ள வித்தியாசத்தை நன்கு உணரலாம். ஒருவன் இறைவனை அநுபூதியாகப் பெறலாம்; ஆனால், இறைவனை புத்தியைக்கொண்டு விவரித்துச் சொல்லவோ, விளக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ இயலாது.
“மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்”: இப்பொழுது, நாம் மேலும் தொடர்ந்து பார்ப்போம். ஒன்றுக்கொன்று பரஸ்பரம் எதிரிடையானதும், நேர்மறை-எதிர்மறை கருத்துக்களான உருவம்-அருவம், உளது-இலது ஆகியவைகளிலிருந்து (முதல்வரியில்), அருணகிரியார் இப்பொழுது இறைவன் பொருள்களாகவும் அவைகளின் குணங்களாகவும் இருக்கிறார் (வருகிறார்) என்று கூறுகிறார் ---- மலர், மற்றும் அதன் நறுமணம்; ரத்தினம், மற்றும் அதன் ஒளிப்பிரகாசம். பொருள் மற்றும் அதன் குணம் பற்றிய கருத்து, முன்னர் குறிப்பிடப்பட்ட ஒன்றுக்கொன்று நேர் எதிரிடையான உருவம்-அருவம், உளது-இலது போன்ற கருத்தல்ல; அதாவது, பொருளும் அதன் குணமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போகக்கூடும், சேர்ந்து போகின்றன. எனினும் அவையிரண்டும் ஒன்றேயல்ல. மலரும், அதன் மணமும் சேர்ந்திருந்தாலும், அவையிரண்டும் வேறுவேறுதானே; அதே போன்றதுதான் ரத்தினமும் அதன் ஒளிப்பிரகாசமும். ஆனால், ஒரு ஜீவன்முக்தருக்கு மலரும் இறைவன்தான்; அது வீசும் நறுமணமும் இறைவன்தான்; ரத்தினமும், அது வெளிப்படுத்தும் ஒளிப் பிரகாசமும் ஆகிய இரண்டுமே இறைவன்தான். எனவே, அருணகிரியார் இச்செய்யுளின் இரண்டாவது வரியில், “மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்.” என்று கூறுகிறார். இத்தகைய கருத்துக்கள் மனித அனுபவத்தின் மேம்பட்ட வகையைச் சார்ந்தவை.
“கருவாய் உயிராய்”: இறைவன் உடலாகவும் உயிராகவும் வருகிறார்: உடல் என்பது ஒரு ஜடப் பொருள் (உயிரற்ற ஜடம்); உயிர் என்பது சைதன்யம் (உணர்வு கொண்டது). உயிரே உடலுக்கு உணர்வை ஊட்டி, செயல்படும் தன்மையைக் கொடுக்கிறது. உயிர் இல்லாத உடல், அழுகி அழிந்து விடுகிறது. உடலின் மதிப்பு, அழகு போன்றவை உயிரைச் சார்ந்து இருக்கின்றன. ஆனால், உயிரும் ஒரு உடலின்றி (ஸ்தூல, சூட்சும மற்றும் காரண உடல்) இருக்கவும் முடியாது, அதன் கர்மங்களை அனுபவித்து, மோட்சம் அடையவும் முடியாது. எனவே, இறைவன் உடல் மற்றும் உயிர் (கருவாய் உயிராய்) ஆகிய இரண்டாகவுமே வருகிறார் என்னும்பொழுது, அவரே பொருள் மற்றும் அவரே உணர்வு என்பதும், அவ்விரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று தனித்திருக்க இயலாதென்பதும், அவைகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது.
“கதியாய் விதியாய்”: இறைவன் மோட்சமாகவும், அதனை அடைந்திடும் மார்க்கமாகவும் வருகிறார். அவரே முக்தி நிலை; அவரே வேதங்கள், ஆகமங்கள் போன்றவைகளில் கூறப்பட்டிருக்கும் (தர்மங்கள்} விதிகள். அதாவது ஒருவன் முக்தி பெறுவதற்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய செயல்கள். தர்மத்தின் விதிகள் வழிமுறையாகும், மோட்சம் இலக்காகும். தர்மம் (நீதி) மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் சாதனம்; ஒரு செயல் அல்லது நடத்தை விதி தர்மமா இல்லையா, நீதியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணி மோட்சமாகும். இவைகளிரண்டும் ஒன்றையொன்று தீர்மானிக்கிறதென்றாலும், இரண்டும் ஒன்றல்ல, வேறுவேறானவை. ஆனால், ஒரு ஜீவன்முக்தருக்கு, இரண்டுமே இறைவன்தான்; அவரே இரண்டாகவும் வருகிறார். இவ்வாறாக, இச்செய்யுளின் மூன்றாவது வரியில், ‘பரஸ்பர சார்பு மற்றும் பரஸ்பர தீர்மானம்’ வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, இவைகள் முன்பு கூறப்பட்ட வகைகளைவிட இன்னும் மேம்பட்ட ஒன்று, இவ்வகைதான் மனித அநுபவங்களிலேயே மிக உயர்ந்த ஒன்று.
ஆக, நாம் மூன்று கருத்துக்களைப் பார்த்தோம். முதல் வரி: பரஸ்பர விலக்கல் மற்றும் முரண்பாடு; இரண்டாவது வரி: விஷயம் (பொருள்கள்), அதன் குணம் (தரம்); மூன்றாவது வரி: பரஸ்பர சார்பு மற்றும் பரஸ்பர தீர்மானம்; மனித சிந்தனை மற்றும் புரிந்துணர்வின் வளர்ச்சியில் இம்முன்று கருத்துகளும் கிரமமாக எழுகின்றன. அனைத்து விதமான மனித அநுபவங்களும் இம்மூன்று வகைகளில் அடங்கிவிடுகின்றன, மேலும் ஒவ்வொரு வகையும், அவ்வகைகள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதைக் காட்டுவதற்காக, இரட்டையாகவே தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, மனிதர்களாகிய நமக்கு, இறைவன் இரட்டையில் ஏதேனும் ஒன்றாக (இது அல்லது அதுவாக) வரலாம், ஏனெனில் நாம் வரைப்படுத்திக்கொண்ட, தனித்தன்மை கொண்ட ஜீவாத்மா. அது இடம்-காலம்சார் செயல்பாட்டில் சிக்கிக் கொண்டுள்ளது. அது ஒரு தனித்துவமான உடல்-மனதுக்குள் தன்னைத்தானே வரையறை செய்து (மட்டுப்படுத்திக்) கொண்டதனால், அதற்கு ‘உள்ளே’ மற்றும் ‘வெளியே’ என்ற கருத்துக்கள் உள்ளன. மேலும், அது புலன்களின் மூலம் வெளிச்செல்வதால், அதன் உணரும் சக்தியும் அதற்கிணங்க குறைந்துபோய், பார்ப்பது, கேட்பது, உணருவது என்ற ஒருசில வகைகளாக மேலும் கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது, அப்படி தன்னை மட்டுப்படுத்திக் கொண்ட ஜீவாத்மாவிற்கு உருவம்-அருவம், மலர்-மணம், உடல்-உயிர் ஆகிய கருத்துகள் எழுகின்றன. ஆனால், முக்தி பெற்ற ஒருவரோ தன்னை இடம்-காலம்சார் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொண்டு, ஒரே சமயத்தில் அனைத்துமாயிருக்கும் இறைவனோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டார். இப்படியாக அனைத்துடனும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட மகாத்மாவிற்கு, உள்ளே என்றும், வெளியே என்றும், உருவம்-அருவம் என்றும் சொல்வதற்கு எதுவும் இருப்பதில்லை; இறைவன் அனைத்தாகவும் இருக்கிறார், மேலும் அவரே அனைத்தாகவும் வருகிறார், ஒன்றன்பின் ஒன்றாக அல்ல, ஒரே சமயத்தில். இது இறைவனை, அதாவது தன்னை, அனைத்திலும் அனைத்துமாகவும் ஒரேசமயத்தில் அநுபவிப்பதாகும். அப்படிப்பட்ட ஒரு அநுபவத்தைப் பற்றிய கணநேரப்பார்வை இச்செய்யுளில் நமக்குத் தரப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் எந்த உருவமும்/வடிவமும் இறைவன்தான்; கண்ணுக்குப் புலனாகாததும் உருவங்களற்றவைகளும் இறைவன்தான். எது உள்ளதோ, அது இறைவனே; எது இல்லையோ அதுவும் இறைவனே. மலரும் இறைவன், அதன் மணமும் இறைவன். ரத்தினம் மற்றும் அதன் ஒளிப்பிரகாசம் இறைவனே (அனைத்து பொருள்களும், அவைகளின் குணங்களும்); உடல் மற்றும் உயிர் (மொத்த பிரபஞ்சமும், அதன் உயிரான ஈஸ்வரன்); தர்மம் மற்றும் மோட்சம் (வழிமுறையும், இலக்கும்); அனைத்தும் இறைவனே. ஒரே சமயத்தில் அவர் அனைத்துமாக வருகிறார், அனைத்துமாக அநுபவிக்கப்படுகிறார். ஜீவன்முக்தனின் இத்தகைய அநுபவத்தை நம்மால் கற்பனை செய்யவாவது முடியுமா? அதை சிந்தித்தாலே, திணறச் செய்கிறது. இந்த மகோன்னதமான தெய்வீக அநுபவத்தை ஒரு கணநேரம் தியானித்தாலே, அது நம்மை ஒரு பரவசமான சுகத்தில் ஆழ்த்தும்.
இப்பொழுது, அருணகிரியார் செய்யுளின் நான்காவது வரியில் “இறைவன் குருவாக வருகிறார்” என்கிறார். முதல் மூன்று வரிகளில் உபயோகித்த இரட்டை கருத்துக்களை விடுத்து, மிக விசித்திரமாக, இந்த நான்காவது வரியில் ஒரு கருத்தை மட்டுமே வைக்கிறார், ஏனெனில் குரு இறைவனே (செய்யுள்-13) என்பதாலும், மற்ற எல்லாவகைக் கருத்துகளும் குருவிடம் ஐக்கியமாகி விடுகின்றன என்பதாலும் இவ்வாறு சொல்கிறார். இதைப்பற்றி “குரு கீதை” பின்வருமாறு சொல்கிறது: “அசையும் மற்றும் அசையா நிலையிலுள்ள பிரம்மாண்டமான இப்பிரபஞ்சம், மற்றும் அதிலுள்ள நகராத மற்றும் நகரும் உயிரினம் அனைத்தையும் வியாபித்து, “நீ” (Twam -- Thou) என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை நமக்குக் காட்டித்தரும் அந்த குருவிற்கு நமஸ்காரங்கள். அசையும் மற்றும் அசையா பிரபஞ்சத்தை பிரிக்கப்படாத முடிவற்ற வடிவில் வியாபித்து, “அது” (Tat -- That) என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை நமக்குக் காட்டித்தரும் அந்த குருவிற்கு நமஸ்காரங்கள். மூன்று உலகங்கள் மற்றும் அவைகளிலிருக்கும் அசையும் மற்றும் அசையா நிவாசிகளையும், தன் சைதன்யமயத் தன்மையால் வியாபித்து, “இருக்கிறாய்” (Asi - Art) என்ற சொல்லின் (“அதுவே நீ” -- “Thou Art That” --- “Tat Twam Asi”) என்ற மகாவாக்கியத்தில் உள்ள சொல்லின் உண்மையான அர்த்தத்தை நமக்குக் காட்டித்தரும் அந்த குருவிற்கு நமஸ்காரங்கள். நாத, பிந்து, கலா ஆகியவற்றிற்கு அப்பாலும், தூய உணர்வாகவும், நித்தியமாகவும், அமைதியுடனும், வெளிக்கு (தேசம் --- இடம்) அப்பாலும், களங்கப்படாமலும் இருக்கும் அந்த குருவிற்கு நமஸ்காரங்கள். குருவே பிரம்ம தேவர் (சிருஷ்டி கர்த்தா); குருவே விஷ்ணு; குருவே சிவனார்; குருவே பரம்பொருள், அவரே பரபிரம்மமும் ஆவார். அந்த குருவிற்கு நமஸ்காரங்கள்.”
எனவே, நான்காம் வரியில், “குரு” என்று சொல்லும்போது, அருணகிரியார் முதல் மூன்று வரிகளிலும் எதையெல்லாம் குறிப்பிட்டாரோ, அவையனைத்தும் ஒருசேர அமைந்தவர் இந்த குரு என்கிறார். ஆக, “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” --- “குருவாக வருகின்ற ஓ குகப் பெருமானே! உனது கிருபையை அருள்வாயாக” --- இந்த வாக்கியமே பரிபூரணமானது என்றும் அது இச்செய்யுள் முழுவதற்குமே சமமானது என்றும் கருதப்படுகிறது. {இங்கு, “வருவாய் குகனே” என்பது “வருகின்ற குகனே” என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது --- வினையால் அணையும் பெயர்}.
இந்த கடைசி வரிக்கு, இவ்வாறும் அர்த்தம் கொள்ளலாம்: “ஓ குகப் பெருமானே! நீவிர் (எனக்குக்) குருவாக வந்து அருள்வீராக.” இக்காரணங்களால், இவ்வரி ஒரு மந்திரமாக கருதப்படுகிறது. மேலும், இது மந்திரம்போல் ஜபிக்கப்பட்டும், மனப்பாடமாக ஒதப்பட்டும், அன்பு-உணர்வுடன் (பக்தி-‘பா’வத்துடன்) பாடப்பட்டும் வருகின்றது. அவ்வாறு செய்பவருக்கும், மற்றவர்களுக்கும் அனைத்துவகையான நற்பயன்களையும் தருகின்றது.
“கந்தர் அநுபூதி” நூலின் முதல் செய்யுள் ஒரு மந்திரத்துடன் துவங்கியது --- “ஆடும்பரி வேல் அணிசேவல்” – அதாவது, ‘வேலும் மயிலும் துணை’ --- “வேல் மயில் ஆகிய இரண்டும் என்னைப் பாதுகாக்கும்.” இந்நூலின் கடைசிச் செய்யுளும் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்ற மந்திரத்துடன் முடிகிறது. ஆக, இந்நூல் மந்திரத்தோடு துவங்கி மந்திரத்தோடு முடிகிறது; நடுவில் மற்ற செய்யுள்களிலும் பல மந்திரங்கள் உள்ளன. எனவே, “கந்தர் அநுபூதி” நூல் ‘மந்திர சாஸ்திரம்’ --- மந்திரங்கள் அடங்கிய ஒரு தத்துவ நூல் அல்லது கிரந்தம், என்று உயர்வாகப் போற்றி புகழப்படுகிறது. இதை முறையாகவும் சிரத்தையுடனும் தினசரி ஓதும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் நலன்களைத் தரவல்லது.
இச்செய்யுளில், இறைவன் “குகன்” என்று விளிக்கப்படுகிறார். குகன் என்றால் “இதயக் குகையில் உறைபவன்/ஒளிர்பவன்” என்று அர்த்தம். “கந்தர்” என்ற பெயரை இந்நூலின் (“கந்தர் அநுபூதி”யின்) தலைப்பில் உபயோகப்படுத்தத் தேர்ந்தெடுத்த அருணகிரியார், இச்செய்யுளில் உபயோகப்படுத்த ‘குகன்’ என்ற பெயரை தேர்ந்தெடுத்ததில் ஒரு மகத்தான விசேஷம் இருக்கிறது. அது என்ன? கந்தர் அநுபூதி நூல் முழுவதிலுமே, இறைவன் உறையும் இடங்களில், வெளிப்படையாக “நாகாசல(ம்)” (திருச்செங்கோடு) என்ற ஊர் மட்டுமே கூறப்பட்டுள்ளது (செய்யுள்-11). இதற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்: இக்கோவிலில் அருணகிரியார் “நான் எங்கிருந்தாலும், உன்னை ‘கந்தா’ என்று அழைத்தால், உடனே நீ அங்குத் தோன்றி, எனக்கு தரிசனம் தரவேண்டும்.” என்று பிரத்யேகமாக பிரார்த்தித்து வேண்டியதற்கிணங்க, அங்குள்ள கந்தப் பெருமான் அவருக்கு அந்த வரம் தந்து அருளினார். இத்தகைய வரம் தந்த பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே, ‘கந்தர்’ என்ற பெயரை இந்த தத்துவ நூலாகிய “கந்தர் அநுபூதி’யில் மட்டுமன்றி, தனது மற்றுமிரண்டு நூல்களிலும் (“கந்தர் அலங்காரம்”, ”கந்தர் அந்தாதி”) அப்பெயரையே உபயோகித்துள்ளார். ஆனால், இக்கடைசிச் செய்யுளில், அதன் கடைசி வார்த்தையாக, வேண்டுமென்றே அவர் ‘குகன்’ என்ற பெயரை தேர்ந்தெடுத்து இடம்பெறச் செய்துள்ளார்; ஏனெனில், இச்செய்யுள் ‘சகஜ அவஸ்தை’யை விவரிக்கிறது; ‘குகன்’ என்ற பெயரே இங்கு பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான பெயர்.
யஜுர் வேதத்திலுள்ள ‘நாராயண சூக்தம்’ என்ற மந்திரத்தில் பரம்பொருள் பற்றிய மகத்தான வர்ணனை பின்வருமாறு வருகிறது: “பரமாத்மாவுடன் அபேதமாக இருக்கும் மொத்த பிரபஞ்சத்திற்கும் அப்பரமாத்மா ஆதாரமாய் இருக்கிறார். அவருக்கு ஆயிரம் கண்கள் மற்றும் தலைகள், அதாவது அனைத்து கண்களும், தலைகளும் அவருடையதே. அவர் ஆனந்தத்தின் ஒரே உற்பத்தி ஸ்தானம். மனிதனில், அவனுக்கு ஆதரவாக, அவனுடைய அந்தராத்மாவாகி, அவன் உடலெங்கும் வியாபித்து, மற்றும் இவ்வுலகில் எதெதெல்லாம் பார்க்கப்படுகிறதோ (அ) கேட்கப்படுகிறதோ (அருகிலோ-தூரத்திலோ, ஸ்தூலமாகவோ-சூட்சுமமாகவோ) அவைகளில் எல்லாம் உள்ளேயும் வெளியேயும் வியாபித்து உள்ளார். அவர் எல்லையற்ற ஆத்மா; உண்மையாக தியானிப்பவரும், தியானமும் அவரே; அவரே அடையவேண்டிய இலக்கும். அவர்மேல் தியானம் செய்யப்பட வேண்டும். அவர்மேல் தியானிக்க உகந்த இடம் இதயக் குகையிலிருக்கும் ஆகாசம். இதயமே இப்பிரபஞசத்தின் பெரிய இருப்பிடம். இதயத்தின் நடுவில், ஒரு தீ ஜுவாலை உள்ளது; அத்தீயின் நடுவில், ஜொலிக்கும் தங்கத்தைப்போல் நிறமுள்ள, மின்னலைப் போல் மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஒரு தீச்சுடர் உள்ளது. பரம்பொருளான பரமாத்மா அத்தீச்சுடரின் நடுவில் உறைகிறார். அவரே படைப்புக் கடவுளான பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு, அவரே இந்திரன், அவரே பிரபஞ்சத்தின் உபாதான காரணம் (Material-cause) மற்றும் நிமித்த (efficient-cause) காரணம். அவரே உயரிய சுயம்-பிரகாச தூய-உணர்வு.”
அருணகிரியார், அப்பரம்பொருளான பரமாத்மாவையே ‘’குகன்” என்கிறார் ---- இதயக் குகையில் உறைபவர்/ஒளிர்பவர், அனைத்துமாக இருப்பவர், அனைத்துமாக வருபவர், குருவாகவும் வருபவர். நாம் மேலே பார்த்த நாராயண சூக்த மந்திரங்களின் சாரத்தை கந்தர் அநுபூதியின் இவ்வொரு செய்யுளிலேயே எவ்வளவு அழகாக அருட்செல்வர் தந்துள்ளார் பார்த்தீர்களா! ஆனந்த-உணர்வுக் கடலில் திளைத்திருந்த முக்திபெற்ற மகாத்மாக்கள் அத்தெய்வீக உணர்வில் மெய்மறந்திருந்த நிலையில் பொங்கி வழிந்தவைதான் நாராயண சூக்தம் மற்றும் கந்தர் அநுபூதி கிரந்தங்கள். எனவே, ‘சகஜ அவஸ்தை’யை விவரிக்கும் இக்கடைசிச் செய்யுளுக்கு, அருணகிரியார் ‘குகன்’ என்ற பெருமானின் பெயரை பொருத்தமானதாக வேண்டுமென்றேதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
‘குகன்’ என்பது எங்கும் எல்லாமாகவும் விளங்கும் பரம்பொருள் உணர்வே. அவரே, முக்தியடைந்த மகாபுருஷர்கள் நிலைபெற்று இருக்கும் பரமாத்மா (பரபிரம்மம்). ‘குகனே’ ஜீவன்முக்தர்கள் மற்றும் பிரபஞ்சத்தின் ஆத்மாவாக இருப்பதால், அவரே அனைத்துமாக வருகிறார். இறைவனே அனைத்துமாக வருகிறார் எனும்போது அவர் கால-தேச வர்த்தமானத்திற்கு உட்பட்ட (movement in Time & Space) பௌதீகப் பொருள்களாக எங்கிருந்தோ வருகிறார் என்பதல்ல; ஆனால், “அநுபவத்தில் வருவதாக”த்தான் அர்த்தம். அதாவது, இருக்கும் அனைத்தும், இறைவனாக அநுபவத்திற்கு வருகிறது, இறைவனாக அனுபவிக்கப்படுகிறது. இறைவன்-வருவதென்பது (இறை-அநுபூதி) இதுதான். எனவே, இது பௌதீக வருகையல்ல, முற்றிலும் மற்றொரு வகையான வருகையாகும். ஏனெனில், இறைவன், ஒரு உருவம்கொண்ட பொருளாக ஜீவன் முக்தனிடம் வருகிறாரென்றால், அவர் வெளியிடத்தில் நகர்ந்து வரவேண்டும், ஆனால் வெளியிடம் வடிவமற்றது (அருவம்), அருவமும் அவர்தானே. எனவே, அருணகிரியார், இறைவன் இதுவாக, அதுவாக, அனைத்துமாக வருகிறார் என்று சொல்லும்போது, ஜீவன்முக்தரானவர் அனைத்தையும் இறைவனாக, தனது ஆத்மாவாக, குகனாக, அநுபவிக்கிறார் என்பதுதான் அதன் உட்பொருள்; ஏனெனில், அவர் பரமாத்மாவுடன் தன்னை அபேதமாக கண்டு கொண்டு, அனைத்தின் ஆத்மாவாகவே ஆகி விடுகிறார். ஆகையால், அவர், தனது ஆத்மாவை அனைத்திலும், அனைத்தையும் தன் ஆத்மாவிலும் காண்கிறார் (அ) உணர்கிறார்; அவரே காண்பவனாகவும் காணப் படுவனவாகவும் இருக்கிறார்; அவர் இறைவனை அனைத்துமாகவும், அனைத்தையும் இறைவனாகவும் கண்டு அநுபவிக்கிறார். அருணகிரியார், இச்செய்யுளின் மூலம் சொல்ல விழையும் இறை-தரிசனம் (பகவத் தரிசனம் அல்லது ஆத்ம தரிசனம்) பற்றிய சாரம் இதுவே. ஒரு ஜீவன்முக்தர் தன்னுள்ளே பெறும் தெய்வீக அநுபவங்களை சொற்களால் வெளிப்படுத்தும் பல்வேறு வழிகள்தான் இவை, அந்த இறை-அநுபவங்களை மனித மொழியில் வெளிப்படுத்தும்பொழுது, இறைவன் ‘உருவமாக’, ‘அருவமாக’ என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறார். அனைத்தும் ஒரே சமயத்தில் அநுபவிக்கப்படுகிறது என்பதை இது தெரிவிக்கிறது. இப்படியான அபேத-தரிசனம் (வித்தியாசமில்லாத சமக்காட்சி) இறை-அனுபூதியின், ஞானத்தின் அந்தம் --- “அபேத தரிசனம் ஞானம்.” அத்தகைய ஞானி, இவ்வுலகில் ‘நடமாடும் இறைவன்,’ உலகமே உற்றுழி யுதவிக்காக இவரை நாடுகிறது, இவரிடம் அனைத்து உயிரினங்களும் ஆறுதல் பெறுகின்றன, பசியால் வாடும் குழந்தைகள் சோற்றுக்குத் தாயிடம் செல்வதுபோல் முக்தியடைய பசித்திருக்கும் (வேட்கை கொண்டிருக்கும்) சாதகர்களும் இவரைச் சூழ்கின்றனர். ஆனால் அபேத தரிசனத்தில் எப்பொழுதும் மூழ்கியிருக்கும் அவருக்கோ இவைகள் எதுவுமே எவ்வித வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இதுவே ஜீவன்முக்தர்களின் ‘சகஜ சமாதி அவஸ்தை’, அவர்கள் அனைத்து உயிரினங்களின் நலம் மற்றும் மகிழ்ச்சிக்காகவே வாழ்கின்றனர்:
அனைத்து உயிர்களின் நலத்தை நோக்கமாகக் கொண்ட ஜீவன் முக்தர்களின் “சகஜ அவஸ்தை” இது. ஸ்ரீ சுவாமி சிவானந்த மகராஜ் இத்தகைய சகஜ அவஸ்தையில் (“சர்வபூத ஹிதே ரதா:” என்று) ஜீவித்தவர்களில் ஒருவர். அவர் தனது சுருக்கமான சுயசரிதையான “சிவானந்த கீதை” என்ற நூலில் தனது வாழ்வின் இலக்காகக் கூறுவதைப் பார்ப்போம்:
(சுவாமி சிவானந்த மகராஜ் அவர்கள் இவ்வாறாக எளிய முறையில் தான் உண்மையில் எப்படி இருந்தார், என்ன செய்தார் என்பதை மறைமுகமாக விளக்குகிறார்.)
இறைவன் ஸச்சிதானந்த சொரூபம், அகண்ட ஸத்-சித்-ஆனந்தக் கடல். கடல், நீரைத் தவிர வேறொன்றுமில்லை; இறைவனும் உணர்வைத் (சைதன்யத்தைத்) தவிர வேறொன்றுமில்லை. “பிரக்ஞானம் பிரம்ம” --- தூய உணர்வே பிரம்மம் என்கிறது உபநிஷத்துகள். ஆழத்தில் அமைதியாய் இருந்தாலும் சரி, மேற்பரப்பில் அலைகளால் விளாசப்பட்டுக் கொண்டு இருந்தாலும் சரி, கடல், நீர்தான். அதேபோல், ஜீவன்முக்தர் ஸச்சிதானந்தம்தான், --- ‘பேசா அநுபூதி’ நிலையில் அமிழ்ந்திருந்தாலும் சரி (செய்யுள்-43) அல்லது இப்பரந்து விரிந்த சிருஷ்டியாக சகஜ அவஸ்தை நிலையிலிருந்தாலும் சரி. கடலில், நீர் அலைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு, ஒன்றுடனொன்று கலந்து, நீராகவே மிஞ்சுகிறது; ஸச்சிதானந்தக் கடலில், உணர்வானது பொருள்களுருவத்தில் உருண்டு புரண்டு, ஒன்றுடன் ஒன்று மோதி, இறுதியில் உணர்வாகவே மிஞ்சுகிறது. இதுவே ஒரு ஜீவன்முக்த ஞானி அநுபவிக்கும் சகஜ சமாதி அவஸ்தை (இயற்கையான மற்றும் தொடர்ச்சியான பேருணர்வு நிலை).
செய்யுள் 43ல், அருணகிரியார், “பேசா அநுபூதி” நிலையை விவரித்தார். அதில், தோன்றும் உலகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு, சாதகன் பேச்சற்ற-அநுபவத்தில் (மகா மௌனத்தில்) அமிழ்ந்து விடுகிறான். ஆனால், அவ்வநுபவத்திலிருந்து வெளிப்பட்ட பின்னர், அவன் ‘லோக சங்கரஹ’ செயல்கள் செய்வதற்காக “இந்த நம் உலகத்தில்” சஞ்சரிக்கும்பொழுது, அவன் என்ன அநுபவிக்கிறான்? அவனுக்கு, நாம் காணும் உலகம் இல்லாமல் போகிறது. அது இறைவன்மயமாக மாறிவிடுகிறது. ஸச்சிதானந்த ஆத்மாவே, இந்த எல்லா நாம-ரூபங்களாகவும், அனைத்து பொருள்கள் மற்றும் அவைகளின் குணங்களாகவும், ஸ்தூல- சூட்சும- காரண லோகங்களாகவும், --- சுருங்கக் கூறின், எல்லாமாகவும் நடனமாடுகின்றது. எதையெல்லாம் புலன்கள் உணர்கின்றனவோ, மனது நினைக்கின்றதோ, (அ) புத்தி அறிந்து கொள்கின்றதோ, அவையனைத்தும் ஸச்சிதானந்தமே; ஏனெனில், இறை-உணர்வெனும் மந்திரக் கோலினால் தொடப்பட்டு அவைகள் அனைத்தும் மாற்றப்பட்டு விடுகின்றன. உணர்வு உணர்வைக் கண்ணுறுகிறது; இறைவன் இறைவனைக் கண்ணுறுகிறான்; மனிதன் இல்லை, உலகம் இல்லை; பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் இறைவன், இறைவன் மட்டுமே. என்னே மகத்தான அநுபவம்! இந்த சகஜ அவஸ்தை அநுபவத்தை நாம் எவ்வளவுதான் விவரிக்க முயன்றாலும், அது போதவே போதாது. அந்த முயற்சி திருப்தியற்றதாகவே (சப்பென்றுதான்) இருக்கும். ஏனெனில், அது விவரிக்கக்கூடிய ஒன்று அல்ல, அநுபவிக்கப்பட வேண்டிய ஒன்று.
எவ்வளவுதான் ஒருவன் சூரியனின் மகிமை மற்றும் சக்தியைப் பற்றி எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், அவன் திறந்த வெளியில் சென்று தன்னை சூரியனுக்கு வெளிப்படுத்திக்கொண்டு, வெயிலில் குளித்தால் ஒழிய, அவனால் சூரியனின் ஒளி, சக்தி மற்றும் கதகதப்பை உணரவோ, அநுபவிக்கவோ இயலாது. அதேபோலவே, ஆன்மீக சூரியன் போன்ற ஜீவன்முக்தர்கள் மற்றும் அருட்செல்வர்களின் மகிமை மற்றும் சகஜ அவஸ்தை அநுபவம் பற்றி எவ்வளவுதான் ஒருவன் படித்தாலும், கேட்டாலும், அவர்களைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தைப் பெற முடியாது. அவ்வாறு பெற்றிட வேண்டுமானால், அவர்களுடன் (அ) அவர்கள் முன்னிலையில் நாம் வாழ வேண்டும், அது மிகக் குறைந்த காலத்திற்காக இருந்தாலும் சரி (அதுவே உண்மையான ஸத் சங்கமாகும்). நாம் அவர்கள் முன் அமர்ந்து நமது உள்ளத்தைத் திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், நம்மால் அவர்களுடைய சக்தி, மகிமை, செல்வாக்கு ஆகியவைகளை அறியவும் அநுபவிக்கவும் முடியும்; --- அவர்கள் என்னவாக இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள், என்ன செய்கிறார்கள், அவர்கள் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன, அவர்கள் எப்படி மனித சமூகத்திற்கு பயன்படுகிறார்கள்: --- சகஜ அவஸ்தை என்பது என்ன என்று சிந்திப்பதன்மூலம், அவர்களின் எண்ண-அலைகள், சக்தி மற்றும் கிருபை, நம்மையறியாமலேயே நம்முள் புகுந்து, நம்மை உரிய முறையில் உருவாக்கும். இதற்கே ஸத்-சங்கம் என்று பெயர். ஸத்-சங்கத்தின் மகிமை அபாரமானது.. இத்தகைய வாய்ப்பினை அளித்திடவே, நமது பாரத தேசத்தில் எப்பொழுதும் இடைவிடாது ஞானிகள், மகான்கள் வாழ்ந்துகொண்டே இருக்கின்றனர். எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் இல்லாமல் போவதில்லை. அவர்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள், இப்பொழுதும் இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்பது உறுதி. ஜீவன்முக்தர்கள், ஞானிகள், அருட்செல்வர்கள், முனிவர்களின் மகிமையே மகிமை!
இத்தருணத்தில் நாம் மற்றொரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பார்ப்போமா. சிலர் இந்நூலின் 43வது பாடல்வரைதான் அருணகிரியார் இயற்றினார் என்கின்றனர், ஏனெனில் அப்பாடலின் முடிவில் ‘’பேசா அநுபூதி பிறந்ததுவே’’ (பேச்சற்ற அநுபவம் பிறந்துவிட்டது) என்று அவர் கூறுவதால்; அதற்கு பின்னர் வரும் 8 செய்யுள்களும் வேறு யாரோ ஒருவரால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால், மற்றும் சிலர் 51 செய்யுள்களுமே அருணகிரியாரால் சுயமாக இயற்றப்பட்டதுதான்; அனைத்து செய்யுள்களுமே அவரின் அபூர்வமான படைப்பு என்கின்றனர். நம்முடைய இந்த ஆய்விலிருந்து, கந்தர் அநுபூதி நூலின் 51 செய்யுள்களுமே அருணகிரியாரால்தான் இயற்றப்பட்டன என்றும், மேலும், கடைசி 8 செய்யுள்கள் உண்மையில் பாலேடு போன்று மிகவும் சிறந்த மற்றும் சாரமான பகுதியாக அமைந்துள்ளது என்றும் நாம் திடமாக முடிவுக்கு வர முடியும். ஏனெனில், இத்தகையதொரு ஆற்றல்மிக்க, பொதிந்த, உயரிய ஆன்மீக மற்றும் ஆழ்ந்த எண்ணங்கள் கொண்ட செய்யுள்களை அருணகிரியாரைத் தவிர வேறு ஒருவராலும் இயற்றி இருக்க முடியாது என்று எந்தவித தயக்கமும் கொள்ளாமல் உறுதியாக நம்மால் கூற இயலும். வேதாந்த சாதனைகளின் சாரம், மற்றும் உயர்நிலை தியானத்தை செவ்வனே செய்திடுவதற்கான பற்பல சூசகமான உத்திகளை தன்னகத்தே கொண்ட முத்தாய்ப்பாக அமைந்துள்ள இக்கடைசிச் செய்யுள்களை அருணகிரியாரால் மட்டுமே இயற்றியிருக்க முடியும் என்றே நாம் கூறலாம். மேலும், செய்யுள்கள் 43 மற்றும் 44க்கான நமது விளக்கத்தில், பேசா அநுபூதி நிலையை அடைந்த ஒருவன் (செய்யுள்-43) அதிலேயே ஆழ்ந்து, அதிலிருந்து வெளியே வராமல் இருப்பதென்பது மிகமிக அரிது என்றும் பார்த்தோம். மறுபுறம், அவ்வாறு பேசா-அநுபூதி நிலைக்குச் சென்றவர்கள் பொதுவாக அதிலிருந்து வெளிப்பட்டு, ஜீவன்முக்தர்களாக நடமாடிக் கொண்டு, சாதகர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதை நாம் இப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள், தங்களுடைய சமாதி அனுபவத்தையும் அதை மற்றவர்கள் அடைவதற்கான வழிகளையும் தங்களுடைய நூல்களில் விளக்கிக் கூறியிருக்கின்றனர். இல்லையேல், அளவிடற்கரிய ஆன்மீக, ஞான நூல் பொக்கிஷங்கள் எப்படி நமக்கு இப்பொழுது கிடைத்திருக்க முடியும்? அருணகிரியார் மற்றும் அவரைப் போன்ற பல மகான்கள் அநுபூதி பெற்றபின், சமாதியிலேயே இருந்திருந்தால், இத்தகைய தெய்வீக நூல்களை இயற்றித் தராமல் இருந்திருந்தால், நமது நிலை எவ்வளவு பரிதாபகரமாக இருந்திருக்கும்! சிந்திக்கவே பயமாய் இருக்கிறது. அருணகிரியார் கந்தர்-அநுபூதி பெற்றபின்னரே “கந்தர் அநுபூதி” நூலை இயற்றியிருக்கிறார், என்று தாயுமானவ சுவாமிகள் கூறியிருக்கிறார். அவர் அச்சமாதிநிலையிலிருந்து வெளிவராமலே இருந்திருந்தால் நமக்கு இந்நூல் எப்படி கிடைத்திருக்கும்? எனவே, 43ம் செய்யுளில் பேசா அநுபூதி பிறந்தது என்று கூறப்பட்டுள்ளதால் அதோடு இந்நூல் முடிந்து விட்டதென்று சொல்வது சரியானதாக இருக்க முடியாது.
பேருணர்வில் முழுவதுமாக மூழ்கியிருக்கும் சமாதி நிலைதான் இறை-அநுபூதியின் முடிவான உச்சநிலை என்று சொல்லுவதற்கில்லை. சகஜ சமாதி எனப்படும் இயல்பாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் ஒருவன் பேருணர்வு நிலையிலேயே இருந்து, மக்களின் சேவையில் ஈடுபட்டிருப்பதுவே உண்மையில் இறை-அநுபூதியின் உச்சநிலை என்று சுவாமி சிவானந்த மகராஜ் கூறியதை நாம் பார்த்தோம். அவர் சகஜ சமாதி நிலையில் இருந்துகொண்டு சாதகர்களுக்கும் உலகத்திற்கும் சேவை செய்துகொண்டு இருந்தார். சமாதி நிலையில் (பேசா-அநுபூதி நிலையில்) இருக்கும்போது, முக்தரான ஒருவர் இறைவனுடன் ஒன்றுகூடிய செயலற்ற நிலையில் (static identity), அபேதத்தில் ஆழ்ந்து இருக்கிறார்; சமாதியிலிருந்து வெளிவந்த பின்னர், அனைத்திலும் அனைத்துமாய் இறைவனைக் கண்டு, இறைவனுடன் ஒன்றுகூடிய செயலாற்றும் நிலையில் (dynamic identity) சேவை செய்கிறார். கந்தர் (அ) ஸ்கந்த (இறைவன்தான்) அனைத்துப் பொருள்களும். எனவே, கந்தர் அநுபூதி அல்லது இறை-அநுபவம் என்றால் அனைத்தையும் இறைவனாகவும், இறைவனை அனைத்தாகவும் அநுபவிப்பதாகும். இதுவே சகஜ சமாதி, இதுதான் இந்த செய்யுள் சொல்லும் கருத்து.
சுவாமி சிவானந்த மகராஜ் 1950ம் வருடம் இரண்டு மாதங்களுக்கு இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா முழுவதும், வெகுஜனங்களை தட்டி எழுப்பிடவும், தான் அனுபவிக்கும் ஆனந்தத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஒரு யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையை நிறைவுசெய்து ரிஷிகேசத்திலிருக்கும் தன்னுடைய ஆஸ்ரமத்துக்குத் திரும்பியவுடன், தனது யாத்திரை அநுபவங்களைப் பற்றி அவர், “இந்த யாத்திரையில், இறைவன் தனது விராட ரூபத்தில் ---- பக்த கோடிகளாக ---- காட்சி தந்தார். தெய்வீக வாழ்க்கையின் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவர்கள் வந்தனர். அங்கே ஒவ்வொரு மையத்திலும், இறைவனே என்மூலம் பேசினாரென்றும், அவரே தனது விராட ரூபத்தில் பக்த கோடிகளாக வந்து அந்த பேச்சைக் கேட்டனரென்றும் உணர்ந்தேன். அவர் என்னுடன் சேர்ந்து பாடினார், என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தார்; அவர் பேசினார், அவர் கேட்கவும் செய்தார். ‘சர்வம் கல்விதம் பிரம்ம’ --- ‘அனைத்தும் உண்மையில் இறைவனே.’” என்று கூறினார். இதுவே சகஜ சமாதி.
நிச்சயமாக, சமாதி மற்றும் சகஜ சமாதி --- முறையே செயலற்ற அபேத நிலை (static identity), மற்றும் செயலாற்றும் அபேத நிலை (dynamic identity) --- என்பதெல்லாம் நமது நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே, ஜீவன்முக்தருக்கு இந்த பாகுபாடு அல்லது வித்தியாசம் அர்த்தமற்றது, ஏனெனில் அவர் சதாசர்வகாலமும் இறைவனுடன் அபேதமாய் இருக்கிறார். ஆனால், நாம் அவர்கள் “தியானத்தில் ஆழ்ந்திருப்பதை”, அல்லது “இயங்குவதை, நடமாடுவதை” பார்ப்பதால்தான், நாம்தான் “சமாதி நிலை” என்றும், “சகஜ சமாதி நிலை” என்றும் ----- செயலற்ற நிலை மற்றும் செயலாற்றும் நிலை ---- ஆகிய இரண்டாக அவர்களின் நிலையை பேதப்படுத்துகிறோம்; நம் வசதிக்காக அப்படிச் செய்கிறோம். அசையாத (செயலற்ற) அபேத நிலை, “பேசா அநுபூதி” என்றால், அசையும் (செயலாற்றும்) அபேத நிலையை நாம் “நடமாடும் அநுபூதி” என்று பெயரிடலாம். இந்த நிலையானது இச்செய்யுளில் மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான நிலையில் வாழும் அருட்பேறு பெற்றவர்கள் உண்மையில் உலகில் சஞ்சரிக்கும் இறைவன், “நடமாடும் தெய்வம்”. அத்தகைய பெரும்பேறு பெற்றவர்களில் தனிரகமானவர் நம் அருட்செல்வர் அருணகிரியார். அவர் தன்னுடைய சுய அநுபவத்தை களிப்பூட்டும் ஆழ்ந்த ஆன்மீக உட்பொருளுடைய சொற்களால் இக்கடைசிச் செய்யுளில் வெளிப்படுத்தியிருப்பதைப்போல வேறு எவரால் செய்திட இயலும்!
இப்பொழுது, நாம் முழு செய்யுளையும் திரும்பவும் பார்ப்போமா: “ஓ சர்வவல்லமை பொருந்திய குகப் பெருமானே! ஓ பரம்பொருளே! உருவமுள்ளனவாயும், உருவமற்றனவாயும்; உள்ளனவாயும், இல்லாதனவாயும்; மலராகவும், அதன் நறுமணமாகவும்; ரத்தினமாகவும், அதன் ஒளியாகவும்; உடலாகவும் (பிரபஞ்சமாகவும்), உயிராகவும் (பிரபஞ்சத்தை வியாபித்து, அதற்கு உயிராகவும்); (நற்கதியாகிய) மோட்சமாகவும், (அதை அடைவதற்கான) நீதி நேர்மையின் விதிகளாகவும் நன்னெறியாகவும் (அதாவது, மார்க்கமாகவும், முடிவாகவும்); மற்றும் குருவாகவும் வருகின்ற குகப்பெருமானே! தங்கள் கிருபையை (அனைவருக்கும்) அருள் புரிவீராக.” (எல்லாமாயும் குருவாயும் வருகின்ற குகப்பெருமானே, தங்கள் கிருபையை எல்லோருக்கும் அருள் புரிவீராக.)
“அருள்வாய்”: “உனது கிருபையை அருள்வாய்” என்கிறார் அருணகிரியார். யாருக்கு அருள வேண்டும் என்று அவர் வேண்டுகிறார்? தனக்கு அருளுமாறு அவர் வேண்டவில்லை; “அனைவருக்கும் அருள்வாய்” என்றுதான் வேண்டுகிறார். ஏனெனில், அவரோ ஏற்கனவே ஜீவன்முக்தனாகி ஆனந்தக்கடலில் திளைக்கிறார். அந்நிலையில் உள்ளவருக்கு வேறு என்ன தேவை இருக்கிறது? அவர் சந்நிதியில் இருப்பதே மற்றவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். எனவே, அனைத்துமாகவும் குருவாகவும் வருகின்ற குகப் பெருமானிடம், அனைவருக்கும் குருவாக வந்து அருளுமாறு பிரார்த்தனை செய்வதாகக் கொள்வதே சரியாக இருக்கும். இறைவனால் அருளப்பட்டு தான் அநுபவித்துக் கொண்டிருக்கும் அப்பேரின்ப அநுபூதிநிலையை, மற்றவர்களுக்கும் தந்தருளுமாறு அவர் பெருமானைப் பிரார்த்திக்கிறார். இது அனைவருக்கும் அருள் புரியுமாறு செய்யப்படும் பொதுவான பிரார்த்தனை; ஆனால், இது ஒரு விசேஷ பிரார்த்தனையும்கூட. அதாவது, “மோட்சத்தை தரவல்ல இந்த “கந்தர் அநுபூதி” நூலை எவர் ஓதுகிறார்களோ, எவர் முறைப்படி படித்து, பாராயணம் மற்றும் ஸ்வாத்யாயம் செய்து, நன்றாகக் கற்று, புரிந்து கொண்டு, கற்றதை ஒரு சிறிதளவாவது நடைமுறைப் படுத்துகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அருள் புரிவாய்,’’ என்று பிரார்த்திக்கிறார்.
அனைத்தும் இறைவனே. அவரே அனைத்துமாய் வருகிறார். எனவே, அவர் அனைவருக்கும் அருளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார். தான் பெற்ற அநுபூதி, இறை-அநுபவத்தோடு அருணகிரியார் திருப்தியோடு இருக்க முடியவில்லை. அனைவரும் அவ்வநுபூதி நிலையை அடைய வேண்டும் என்று அருட்செல்வர் விழைகிறார். சுவாமி சிவானந்தரும் அவ்வாறே விழைந்தார். சுவாமி சிவானந்தர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, ஆத்மானுபூதி பெற்றார்; ஸ்ரீ கிருஷ்ண பகவான் தரிசனம் கொடுத்தார். அச்சமயத்தில் என்ன நடந்ததென்று அவர் சொல்கிறார்: “நான் எனக்கு உள்ளிருந்து வரும் ஒரு குரலைக் கேட்டேன்: ‘சிவா(னந்தா) (சமாதியிலிருந்து) எழுந்திரு, உனது வாழ்க்கை எனும் கோப்பையை இந்த அமிர்தத்தால் நிரப்பிக் கொள்; இதனை அனைவரோடும் பகிர்ந்து கொள். நான் உனக்குத் தேவையான பலம், ஆற்றல், சக்தி, ஞானம் ஆகியவற்றை தந்தருள்கிறேன்.’ என்று அந்தக்குரல் ஒலித்தது. நான் அவருடைய கட்டளைக்குப் பணிந்தேன். அவர் கோப்பையை நிறையச்செய்தார், நான் அனைவருடனும் அதைப் பகிர்ந்து கொண்டேன்.”
சுவாமி சிவானந்த மகராஜ் அவரது அனைத்து நூல்களிலும் மற்றும் சொற்பொழிவுகளிலும் மிகவும் உறுதியுடன் ஒரு விஷயத்தை சிறிதும் சோர்வடையாமல் சொல்லி வந்தார், அதாவது: “வாழ்க்கையின் இலட்சியம் இறைவனை அடைவது. அதை நீங்கள் இந்தப் பிறப்பிலேயே அடைந்திட வேண்டும்.” என்று சொல்லி வந்தார். அதன்பின், அவர் இவ்வாறு அடியார்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்துவார்: “நீங்கள் அனைவரும் இப்பிறப்பிலேயே ஜீவன்முக்தர்களாக ஒளிர்வீர்களாக!” அனைவரும் இறை-அநுபவம் பெற வேண்டுமென்பதில் அவர் பேரார்வம் கொண்டிருந்தார். அருணகிரியாரும் அதேபோல் பேரார்வம் கொண்டு, அழகிய செஞ்சொற்களால் மாலையாகப் புனையப்பட்ட கந்தர் அநுபூதி நூலை இயற்றியளித்தார் ----- ஒவ்வொருவரும் பக்திகொண்டு இதை ஓதி இறைவனுக்கு அணிவித்து, அதன் மூலம், தனக்கு இறைவனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அளிக்கப்பட்ட இறை-அநுபூதியை அவர்களும் பெற்றிட வேண்டும் என்பதற்காக இந்த நூலை இயற்றி அருளினார்.
இந்த ஆய்வு நூலில், காப்புச் செய்யுளில் தொடங்கி இதுவரை நாம் பார்த்து வந்தது அனைத்தும், அருட்செல்வர் தாயுமானவர், இந்நூலை இயற்றிய அருணகிரியாருக்குச் செலுத்திய பின்வரும் ரத்தினச்சுருக்கமான அஞ்சலியின் பொருள்தான் என்றால் மிகையாகாது:
“கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் என்னாளோ?”
“கந்தப் பெருமானின் அநுபூதியை நேரடியாகப் பெற்று, (பின்னர்) ‘கந்தர் அநுபூதி’ நூலை அருளிய (நமக்குப் பரிசாக அளித்த), என் (ஆன்மீகத்) தந்தையின் (அருட்செல்வர் அருணகிரியாரின்) அருளை நாடிப் பெற்றிருக்கும் நாள் எப்பொழுது வருமோ?”
அருளைப் பொழியும், உயிருக்கு உன்னதநிலையளிக்கும், தெய்வத் திறனுடைய ‘கந்தர் அநுபூதி’ நூல் --- அத்வைத அநுபூதி மற்றும் அதை அடைவதற்கான சாதனை பற்றிய ஒரு முழு ஆய்வு நூல் --- இவ்வாறாக முற்றுப் பெறுகிறது.
அருட்செல்வர் அருணகிரிநாதரின் கிருபை நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்! அனைத்தையும் புனிதமாக்கும், அனைத்துப் பாதுகாப்பையும் அளிக்கும், போகம் (இவ்வுலகச் சுகங்கள்) மற்றும் மோட்சத்தை வழங்கும் தெய்வீகப் பரிசான கந்தர் அநுபூதி நூலை நாம் தினந்தோறும் ஓதி, குகப் பெருமானின் கிருபையை அநுபவிப்போமாக!! கந்தப் பெருமான் நம் அனைவருக்கும் இப்பிறவியிலேயே இறை-அநுபவத்தை அருள்வாராக!!!
அவன் அருளால் அவன் தாள் வனங்கி,
அவன் அருளால் அவனை அடையப்
பெற்றேன்.
அவன் அருளால் எல்லோரும் அவனை
அடைவார்களாக.
ஓம் தத் ஸத் சிவானந்தார்ப்பணமஸ்து!
ஓம் தத் ஸத் சரவணபவார்ப்பணமஸ்து!
ஓம் தத் ஸத் பிரம்மார்ப்பணமஸ்து!
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம்
ஓம் ஓம்
ஓம் ஓம்
ஓம்
ஓம் ஓம்
ஓம்
|
செய்யுள் 51
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment