செய்யுள் – 6
திணியான மனோசிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியாஎன வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.
பொழிப்புரை: “‘நான் என்ன பணி செய்ய வேண்டும்’ என்று கேட்டு, வள்ளியின் பாதங்களைப் பணியும், மற்றும் வள்ளி மீது தணியாத அன்பு கொண்ட எல்லையற்ற பரிவின் உறைவிடமுமான பெருமானே! கல் போன்று இறுகிய என்னுடைய நெஞ்சத்தில், உனது அழகிய தாமரை போன்ற தாள் மலருமோ! (மலர்வதற்கு அருள் புரிவாயாக.) ”
விளக்கவுரை
குடும்பம் (பெண்ணாசை), செல்வம் (பொன்னாசை), சொத்து (மண்ணாசை) ஆகிய மூவித ஏடணைகளின் மீதான பற்றினாலும், சுயநலத்தாலும், நெஞ்சானது கனத்துப்போய் கல்லாகிவிட்டது (செய்யுள்–5). அப்படி ஏற்கனவே (கல்லாகி) சுருங்கிய அந்நெஞ்சினில், பெருமானின் பாதகமலங்கள் எங்ஙனம் மலர்ந்திட இயலும்?
தன் சாதனையும், சுய முயற்சியும் இப்பற்றுகளை (ஏடணை) சமாளித்திட போதுமானதல்ல என்பதை நன்குணர்ந்து கொண்டுவிட்ட அச்சாதகன், கருணைமழை பொழிவதையே தன் இயல்பாக கொண்டுள்ள அத்தயாபரனின் இரக்கத்தையும், கிருபையையும் வேண்டி அவரைச் சரண் புகுகின்றான். பெருமான், அவர் தாள், அவர் நாமா – இவை அனைத்தும் ஒன்றே, வேறு வேறல்ல.
அருணகிரியார் இந்நூலில் முதன் முதலாக ஸ்ரீ வள்ளி தேவியை இச்செய்யுளில் அறிமுகப்படுத்துகிறார், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். வள்ளி தேவியார் முருகப்பெருமானை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கம் கொண்டு, எப்பொழுதும் அவர் நினைவில் ஆழ்ந்திருந்தார். ஆனால், அவர் எங்கே இருக்கிறார், அல்லது அவரை எப்படி சந்திப்பது என்பது தேவியாருக்குத் தெரியாது. இருப்பினும், தேவியின் பக்தி ஆத்மார்த்தமாக (முற்றிலும் உண்மையானதாக) இருந்ததால், அப்பக்தியே அவரை தேவியின்பால் ஈர்த்துவிட்டது. அதாவது, அவரே தேவியை வலியத் தேடிப்போனார். எனினும், முதல் முறை சென்றபொழுது, தன்னை யார் என காட்டிக் கொள்ளாமல் சென்றார். எப்பொழுதும் இறைவனைப் போற்றி அவன் நாமாவைப் பாடிக் கொண்டிருந்தாலும் (செய்யுள்-1), மாயையை கடக்க சக்தியற்ற (செய்யுள்-5) அந்த பக்தனான சாதகனை (ஜீவாத்மாவை) வள்ளி தேவி குறிக்கிறார். எனவே, இறைவனே வள்ளியைத் தேடிப்போய் அவளுக்கு உதவியதைப் போல், உடனே வந்து தன்னையும் காத்தருளுமாறு, அனைவருக்கும் இயல்பாகவே கருணை காட்டும் தயாபரனாகிய பெருமானை, அச்சாதகன் தன் நெஞ்சாற வேண்டுகிறான். மாயையை அழிக்கவல்ல பெருமானின் பரம்பொருள்- தத்துவ அம்சத்தைவிட, கருணையே உருவான அவரின் திருஅவதார அம்சத்தினிடம், கிருபை புரிந்திடுமாறு ஒருவன் தன் அடிநெஞ்சிலிருந்து பிரார்த்தித்தால், அவர் உடனே மிகவும் மகிழ்ச்சியடைந்து, குருவாய் வந்திடுவார்.
சுந்தரவல்லி, மற்றும் அமிர்தவல்லி ஆகிய இருவரும் விஷ்ணு பகவானின் புதல்விகள். அவ்விருவரும் ஒருசமயம் சிவனாரின் உறைவிடமான கைலாசம் சென்றனர். அங்கு கந்தப் பெருமானை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. கந்தனது பேரழகினால் வசீகரிக்கப்பட்ட அவ்விருவரும், அவரது துணைவிகள் ஆக விழையும் தங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர். இரக்க குணவானான அவர், அவர்களுடைய முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டு, முந்தையவரை வேடுவகுல அரசனான நம்பிராஜனின் மகள் ஸ்ரீ வள்ளியாகவும், பிந்தையவரை இந்திரனின் மகள் ஸ்ரீ தெய்வயானையாகவும் அவதரித்திடப் பணிந்தார்.
கன்வ முனிவரின் சாபவசத்தால், விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியும் ஒரு காட்டில் முறையே சிவமுனி (ஒரு ஊமை முனி) மற்றும் மானாக ஆகி அலைந்து திரிந்து வந்தனர். சிவமுனி ஒருசமயம் அம்மானை பார்க்க நேரிட்ட பொழுது, தான் அதன்பால் வியத்தகு முறையில் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தார்; அதுவும் அவர்பால் அன்பு கொண்டது. இவ்வாறு பரஸ்பரமாக பார்த்ததினால், மான் ஒரு பெண் (மனித) குழந்தையை ஈன்றது. அக்குழந்தையானது தன்னிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததால், அந்த மான் வள்ளிக்கொடிகளின் அருகிலிருந்த ஒரு குழியில் அக்குழந்தையை விட்டுச் சென்றது. அக்குழந்தையானது வேடுவ அரசனான நம்பிராஜன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டது. தனக்கு குழந்தை இல்லாததால், அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்துச் சென்று “வள்ளி” என்று பெயர் சூட்டி வளர்த்தார். தன் குழந்தைப் பருவத்திலிருந்தே, ஸ்ரீ வள்ளி தேவியார் முருகப் பெருமானின் மேல் உயரிய அன்பு கொண்டு, அவரைத்தவிர வேறு எவரையும் திருமணம் புரியமாட்டேனென்ற தீர்மானத்திலிருந்தார். தேவியார் வளர வளர, பெருமானின் மீதான பக்தியும் வளர்ந்து கொண்டே போனது; எப்பொழுதும் அவர் நினைவாகவே இருந்தார். இச்செய்தியை தேவமகரிஷியான நாரதர் முருகப் பெருமானுக்கு தெரிவிக்க, அவரும் தான் வள்ளியை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்ந்தார்.
வேடுவ குலத்தின் மரபின்படி, வள்ளி தினைப் புனத்தில் கதிர்களை காவல்காக்கும் பொறுப்பேற்று, பறவைகளை கவண் கொண்டு துரத்தி வந்தார். கந்தப் பெருமான், தானே வள்ளியை வலியத் தேடி, தினைப் புனத்திற்குச் சென்றார். முதலில் ஒரு வேடுவனைப்போல் வேடம் தரித்துச் சென்றார். அடுத்து, ஒரு தள்ளாத கிழவன்போல் சென்றார். இவ்வாறு அவர் அவள் பக்தியை பலவாறு சோதித்து, முடிவில் தன்னையே (முருகனாக) வெளிப்படுத்திக் கொண்டார். பின்னர், அவளை மணந்தார்.
‘வள்ளி இருந்த இடத்திற்கு முருகன் தானாகவே தேடிப்போனது மட்டுமல்லாமல், அவளை விழுந்து வணங்கியும், அவளுக்கு தான் எவ்விதத்தில் சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டார்’. இதிலிருந்து தெரிவதென்னவென்றால், பெருமான் தன் பக்தர்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதோடல்லாமல், அவர்களின் அனைத்து (யோகஷேம) தேவைகளையும் தானே பூர்த்தியும் செய்து வைக்கிறார் என்பதே. பெருமானின் பரிவு (தயை) அத்தகையதாயிருக்கிறது. இதன்மூலம், அருணகிரியார் இச்செய்யுளில் சொல்லுவதென்னவென்றால், ஒரு பக்தன் பெருமானை உண்மையாக நேசித்து, அவரை அடைய விரும்புகிறானெனில், அவன் சரியான சாதனைமுறைகளை அறியாவிட்டாலும், அல்லது அறிந்தும் அதன்படி சாதனை செய்யாவிட்டாலும், தானே அவனைத் தேடிப்போய் அவனை அப்படியே ஏற்றுக் கொள்கிறார் என்பதே. பெருமான் பக்தனிடம் கொண்டுள்ள அன்புக்கு அளவேயில்லை. பரமாத்மாவுடன் ஐக்கியமடைந்திட விரும்பும் ஒரு ஜீவாத்மாவை, வள்ளி தேவிக்கு ஒப்பிடலாம். எப்படியும் முருகப் பெருமானை திருமணம் செய்துகொள்வதென்று வள்ளி திடமாக நிச்சயம் செய்திருந்தாலும், அவளுக்கு அவர் எங்கிருக்கிறார், அவரை அடையும் வழி என்ன என்பனவெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அதேபோல், ஜீவாத்மா (சாதகன்) அக்ஞானத்தின் விளைவானதால், அவனுக்கு இறைவனைப்பற்றிய சரியான ஞானம் கிடையாது -- இறைவன் எங்கிருக்கிறான், எப்படி அவனையடைவது என்பது அவனுக்குத் தெரியாது; எனவே அவன் தன்னுடைய சுயமுயற்சியால் பரமாத்மாவை அடைய முடியாது. எனினும், பரமாத்மாவை அடைய அவன் தன் மனதார தீவிரமாக ஆசைப்பட்டால், அவர் தானே அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்; தக்க தருணம் வரும்பொழுது, அவரே குருவாக வந்து, சிஷ்யனை நன்கு பயிற்றுவித்து, சோதித்து, முடிவில் அஜ்ஜீவனை தன்னுள்ளேயே ஐக்கியப்படுத்திக் கொள்கிறார், எப்படி அவர் வள்ளியை ஆட்கொண்டாரோ அப்படியே. ஒரு ஜீவன் தன் மனதார பரமனை அடைய விரும்பினால், பரமன் ஒரு குருவின் உருவில் வந்து, அந்த ஜீவனை சரியான வழியில் செலுத்தி, தன்னை அடைய வைத்து விடுகிறார். பரமாத்மா பக்தனுக்கு கருணை மற்றும் பரிவுகாட்டுவதில் எவ்வித வரம்பும் கொள்வதில்லை என்பது இதிலிருந்து தெள்ளெனத் தெறிகிறதல்லவா! எனவேதான், அவரை “தயாபரன்” என இச்செய்யுள் வர்ணிக்கிறது. அவர் கருணை, மற்றும் பரிவு பரிபூரணமாக உடையவராக இருக்கிறார்.
பெருமானின் தாள் இங்கு தாமரை மலருக்கு உவமையாக்கப்படுகிறது. ஏனெனில், எப்படி தாமரை படர்ந்து மலர்வதற்கு சேறு எனப்படும் மென்மையான பூமி தேவையோ, அப்படியே (பெருமான் தாள் பதிய, மலர), சாதகனின் நெஞ்சு பரமனை நினைத்து உருகி (சேறுபோல்) மென்மையாவது மிகவும் அவசியம் .
இச்செய்யுளில் பயன்படுத்தப்பட்ட ‘தணியா’ என்ற சொல்லிற்கு ‘திருத்தணி’-யில் குடிகொண்ட கந்தக் பெருமானே’ என்றும் ஒருசிலர் பொருள் கொள்கின்றனர் (‘திருத்தணி’ முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்று என செய்யுள் 2ல் பார்த்தோம்).
|
செய்யுள் 6
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment