காப்பு


உட்பொருள் உணர்த்தி 
பக்தி-ஞான அருள்வழி காட்டும்

கந்தர் அநுபூதி


காப்புச் செய்யுள்


நெஞ்சக்   கனகல்லு   நெகிழ்ந்து   உருகத்
தஞ்சத்தருள்   சண்முகனுக்கு   இயல்சேர்
செஞ்சொற்   புனைமாலை   சிறந்திடவே
பஞ்சக்கரவானை   பதம்   பணிவாம்.


    பொழிப்புரை: “தன்னைத் தஞ்சம் அடைந்தவரின் கல் போன்று கடினமாய் இறுகிய நெஞ்சை, தன் கருணையால் நெகிழ்ந்து உருகும்படி அருள்புரியும் ஷண்முகப் பெருமானைப் புகழ்ந்து, செவிக்கினிய செழுமை நிறைந்த அழகிய தமிழ் சொற்களால் தொடுக்கப்பட்ட (கந்தர் அனுபூதி எனும்) இப்பாமாலை, திக்கெட்டும் பரவி சிறந்திடவே, ஐந்துகர ஆனைமுகத்தோனின் (ஸ்ரீ விக்னேஸ்வரரின்) தாமரைப்பாதம் பணிந்து வணங்குவோம்.”

விளக்கவுரை


    காப்பு என்பது ‘பாதுகாப்பு’ –-- தடைகளிலிருந்து பாதுகாப்பு. ஒரு நூலை படைத்திட விழையும் ஒருவர், அப்படைப்புச் செயல் எவ்வித தங்கு தடைகளும் இன்றி நன்கு நிகழ்ந்து புகழுடன் வெற்றியடைந்திட, இறைவனின் அருள் வேண்டி இயற்றப்படும் தொடக்கச் செய்யுள் காப்புச் செய்யுள் என்று அழைக்கப்படும். அருட்செல்வர் அருணகிரிநாதரும் தன் அனுபூதிப் படைப்பான ‘கந்தர் அனுபூதி’ நன்கு வெளிப்பட விநாயகரைத் துதித்து ஒரு காப்புச் செய்யுளைப் புனைந்து தொடங்குகிறார். இப்படைப்பான கந்தர் அனுபூதியானது வெற்றியும், புகழும் பெற்றுச் சிறந்திட, முழுமுதற் கடவுளான ஐங்கரத்தோனின் (ஸ்ரீ விக்னேஸ்வரரின்) அருளை வேண்டுகிறார். இக்காப்புப் செய்யுளின் முதலிரண்டு வரிகளிலேயே, கந்தப் பெருமானையும் மிக நேர்த்தியாக பெருமைப்படுத்திப் பாடியுள்ளார்; இதிலிருந்து கந்தப்பெருமானின் மீது அவர் கொண்டிருந்த அளிவிலா அன்பு மிகவும் மேலோங்கி இருந்தது நன்கு விளங்குகிறது. ஸ்ரீ கணேசரின் அருளால், இவ்வனுபூதிப் படைப்பான ‘கந்தர் அனுபூதி’, அதனைப் பாடுபவர், எழுதுபவர், கேட்பவர், படிப்பவர், இதனைப் படைத்த மெய்ஞானி, கந்தப் பெருமான் ஆகிய அனைவருக்கும், தமிழ் மொழிக்கும் பெரும்புகழை ஈட்டித் தரும்.

    இவ்வுயரிய படைப்பான கந்தர் அனுபூதியின் புகழ் மேன்மேலும் பரவிட ஐங்கரத்தோன் ஸ்ரீ கணேசரை நாம் பணிந்து வணங்குவோமாக. ஐந்துகரத்தின் செயல்களை தமிழ் மறைநூல்கள் கீழ்கண்டவாறு விளம்புகின்றன:   
  1. எழுத்தாணி பிடித்த கரம்  : படைக்கும் தொழில்.
  2. மோதகம் ஏந்திய கரம்   : காக்கும் தொழில்.
  3. அங்குசம் தரித்த கரம்   : அழிக்கும் தொழில்.
  4. பாசக்கயிறுடைய கரம்   : மறைக்கும் தொழில்.
  5. தும்பிக்கை (5-வது) கரம்  : அருள்பாலிக்கும் தொழில்.
    இந்நூல் அழகிய இனிய தமிழ்மணம் கமழும் சொற்களால் தொடுக்கப்பட்ட பாமாலை. அழகிய மணம் பரப்பும் பூக்களால் தொடுக்கப்பட்ட பூமாலையானது உபயோகத்திற்கு வந்த ஓரிரு மணிநேரத்தில், அல்லது அதிக பட்சம் ஒருசில நாட்களில் பொலிவுகுன்றி வாடி - வதங்கிவிடுகின்றது. ஆனால் இந்த செஞ்சொற் பாமாலையின் பொலிவோ, நாளாக நாளாக அதிகரிக்கிறது. பலப்பலமனிதர்கள் இப்பாமாலை பற்றிக் கேட்டறிந்து, இதனைப் படித்து, பாடி, தங்கள் இடர்கள் நீங்கி, பெரும்பயன் அடைந்து வருவதால், மேன்மேலும் கூடி வருகின்றது. எனவே, இச்செஞ்சொற் பாமாலை இறைவனின் இதயத்திற்கு, பூமாலைகளைவிட, பிரியமானதாக இருக்கின்றது.

    சூரியனின் முன் நின்று தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றவனுக்கு, சூரியன் ஒரு ஹிதத்தை அளித்து அருளுகிறார். அதுபோல, இறைவனிடம் தஞ்சமடைந்தவர்களை இறைவன் எப்பொழுதும் தனது அருட்கிரணங்களால் அரவணைத்துப் பாதுகாக்கின்றார். ஹிதம் தந்து அரவணைப்பது சூரியனின் இயல்பான சுபாவம். தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, தன் இயலாமையை உணர்ந்து, இறைவனின் மேன்மை மற்றும் அருமை பெருமைகளை நன்கறிந்து, போற்றி அவரது பாதகமலத்தில் முழுமையாக சரணடைகின்ற பக்தர்களின் அநேக ஆசைகளால் கட்டுண்டு கல்போன்று இறுகிவிட்ட நெஞ்சங்களை, தன் கருணையால் நெகிழ்ந்துருகச் செய்வது இறைவனின் இயல்பு.

கந்தப் பெருமானின் அவதாரம்

    கந்தப் பெருமானின் அவதார மகிமை பற்றி ‘கந்த புராணம்’ எனும் தமிழ்மறை பின்வருமாறு கூறுகிறது: தொன்றுதொட்டு யுகயுகமாக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்து வந்த எல்லாப் போர்களிலும், தேவர்களே மீண்டும் மீண்டும் வெற்றியடைந்து வந்தனர். சுரசா எனும் ஒரு அரக்கி, தங்கள் குலத்தின் தோல்விகளுக்கு ஒரு முடிவுகண்டு பழிதீர்த்துக் கொள்ள, காஷ்யப மகாமுனிவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாள். அவர் மூலம் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று புதல்வர்களை பெற்றெடுத்தாள். அவர்கள் கடுமையான தவம் செய்து சிவபெருமானின் அருளையும், பலப்பல வரங்களையும், பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் சக்தியையும் அவரிடமிருந்து பெற்றிடப் பணித்தாள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர், அம்மூவரும் தேவர்களுக்கு பலவித இன்னல்களைத் தந்தனர். தேவர்களுடன் போர் தொடுத்து தேவலோகத்தைக் கைப்பற்றினர். அவர்களை மான பங்கப்படுத்தியும், கீழ்மைப்படுத்தியும், பணியாளர்களாக ஆக்கியும் அவமானப் படுத்தினர். இவர்களின் அசுரச் செயல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேன்மேலும் வளர்ந்து வந்தது. இவற்றையெல்லாம் இனிமேலும் தாங்கிக்கொள்வதற்கு சக்தியற்ற நிலைமையை அடைந்த அனைத்து தேவர்களும் இந்திரனின் தலைமையில், சதுர்முக பிரும்மாஜி மற்றும் ஸ்ரீவிஷ்ணு பகவான் ஆகியோரை முன்னிறுத்தி, கயிலை மலைக்குச் சென்று கயிலைநாதரை தரிசித்தனர். தங்களை உடனடியாகக் காத்தருளுமாறுக்கூறி கதறி அழுதவாறே சிவபெருமானை சரணடைந்தனர். அவர்களின் பால் இரக்கம் கொண்ட சிவனார் அவர்களைக் காத்தருள்வதாகக் கூறி அவர்களுக்கு நம்பிக்கையளித்தார். அவ்வாறு உறுதியளித்தவர், மீண்டும் தியானநிஷ்டையில் (Meditation) ஆழ்ந்தார். அவரை அந்த சமாதி நிலையிலிருந்து விழித்தெழச் செய்ய, தேவர்கள் காமதேவனை (மன்மதனை-Cupid) ஈடுபடுத்தினர். சிவனாரிடம் அவனுக்கிருந்த பயத்தினால், காமதேவன் அச்செயலைச் செய்யத் தயங்கினான். தேவர்களின் வற்புறுத்தலினால், அவன் தன் வில்லில் மலரம்புகளைத் தொடுத்து எய்தி சிவனாரின் தியானத்திற்கு இடையூறு செய்தான். இவ்வாறு தனது  தியானத்திற்கு இடையூறு ஏற்பட்டதால், சிவனார் தனது  மூன்றாவது கண்ணிலிருந்து அக்னிப் பிழம்பை வெளிப்படுத்தினார். அந்த அக்னி காமனை எரித்து சாம்பலாக்கியது. இதையறிந்த தேவர்கள் சிவனாரின் காலடியில் விழுந்து வணங்கி, சற்றும் தாமதிக்காமல் தம்மைக் காத்தருளுமாறு வேண்டினர்.

    அசுரர்கள் சிவனாரிடமிருந்தே வரங்களைப் பெற்றதனால், சிவன் தன் உருவில் அவர்களை வதைக்க இயலாது. எனவே. ஈசானம் முதலிய ஐந்து திருமுகங்களோடு அதோமுகமொன்றும் கொண்டு ஆறுமுகங்களை உடையவரானார். அந்த ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக்கண்களிலிருந்து (Third Eye), ஆறு அக்னிச் சுடர்கள் (ஜோதிகள்) வெளிப்பட்டு அகண்டாகாசம் முழுவதையும் நிறைத்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தினால், தேவர்கள் மிகவும் பயந்து நடுங்கினர். ‘அச்சப்படாதீர்கள் காப்பாற்றுகின்றேன்’ என்று அபயமளித்து, அக்னிச் சுடர்களை தன் கரங்களில் இருத்தினார். பின்னர், அவர் அக்னிச் சுடர்களை, வாயு மற்றும் அக்னி தேவர்களிடம் கொடுத்து, கங்கையிடம் அளிக்கக் கட்டளையிட்டார். பெரும்சக்தி வாய்ந்த அக்னிச் சுடர்களை சுமந்து செல்ல தயங்கிய இத்தேவர்களுக்கு, விசேஷ சக்தியை தந்தருளினார். சிவன் கொடுத்த விசேஷ சக்தியினால், வாயுதேவர் மிகவும் கஷ்டப்பட்டு சிறிது தூரம் சுமந்து சென்றார். தன்னால் இயலாதென்ற நிலையில், அக்னிதேவரிடம் அக்னிச் சுடர்களை கொடுக்க, அவர் விரைந்து சென்று கங்கையில் இட்டார். கங்காதேவியாலும் அக்னிச் சுடர்களின் வெப்பத்தை தாங்க இயலாததால், அவள் அவற்றை சர-புதர்களால் சூழப்பட்ட சரவணப் பொய்கை என்ற தடாகத்தில் சேர்த்தாள். என்ன ஆச்சர்யம்! அக்னிச் சுடர்களைத் தாங்கிய சரவணப் பொய்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சரவணப் பொய்கையைச் சென்றடைந்த அந்த ஆறு அக்னிச் சுடர்கள் ஆறு தாமரைப் பூக்களின் மேல் தெய்வீக ஒளி பொருந்திய ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றி காட்சி அளித்தன. பகவான் ஸ்ரீவிஷ்ணு, பிரும்மாஜி, மற்றும் அனைத்து தேவர்களும்/ தேவதைகளும் ஆங்கு வருகை தந்து சுப்ரமணிய சுவாமியின் அவதாரம் நிகழ்வதைக் கண்டு பெருமகிழ்ச்சியில் திளைத்தனர். தேவர்கள், ஆறு கார்த்திகைப் பெண்களை அழைத்து அக்குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கப் பணித்தனர். அவ்வாறே அவர்களும் செய்தனர். அச்சமயத்தில் அங்கு சிவனாரும் - பார்வதியும் தோன்றினர்; அப்பொழுது பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒருங்கே தன் கரங்களில் எடுத்தாள். அந்த ஆறு குழந்தைகளும் ஓர் உடல், ஆறு முகங்கள், மற்றும் பன்னிரு கரங்கள் உடையதாக உருப்பெற்றன.

    ஆறுமுகங்கள்கொண்ட குழந்தை ஆறுமுகப் பெருமான் (ஷண்முகர்) என்று அழைக்கப்பட்டார் ---- தன்னைத் தஞ்சம் அடைந்த அனைவருக்கும் அருளை அள்ளி வழங்குவதே இந்த அவதாரத்தின் முக்கிய நோக்கம்.

    அவரே கந்தன் (ஸ்கந்தன்). “ஸ்கந்தன்” என்றால் “வெளிப்பட்டவன்” ----அக்னிச் சுடர் வடிவாக சிவனாரின் நெற்றிக் கண்களிலிருந்து ‘வெளிப்பட்டு’ அவதாரமாகத் தோன்றியதால் அவருக்குப் பெயர் ஸ்கந்தன் (கந்தன்). ஆறு குழந்தைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஐக்கியப்பட்டதால் அவரே கந்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இருபத்தேழு விண்மீன்களில் மூன்றாவது விண்மீன் குழுமமான கார்த்திகை தேவதைகளால் வளர்க்கப்பட்டதால், அவரே ‘கார்த்திகேயன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

   சரப்புதர்களின் நடுவில் அமைந்த சரவணப் பொய்கையில் அவதரித்ததால் அவர் ‘சரவணபவன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    அவர் என்றும் இளமையாகவும், மிகுந்த அழகுடனும் இருப்பதால் தமிழ் மொழி பேசப்படும் பிரதேசங்கள் மற்றும் தமிழிலக்கியங்களில் எல்லாம் அவர் “முருகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

    எல்லையற்றதும் / பூர்ணமானதுமான தூய உணர்வாக (Absolute–Brahman) பரபிரம்மமாக இருப்பதால் அவரே “சுப்ரமணியன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

    மேலும் பக்தர்களின் இதயக் குகைகளில் வசிப்பதனால், அவர் “குகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

    இப்பெயர்களைத் தவிர இவ்விறைவனுக்கு மக்களால் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் அநேகம். சிவனாரின் மூன்றாவது (நெற்றிக்) கண்ணாகிய ஞானக்கண்ணிலிருந்து அவதரித்ததால், கந்தன் ஒப்பில்லா பிரும்ம ஞானத்தைக் குறிப்பதாகவும், தூய உணர்வான (சுத்த சைதன்யமான) சிவனாரின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவ்விஷயங்களை நன்கு நினைவில் இருத்துதல், கந்தர் அனுபூதியை நன்கு படித்துணரப் பயன்படும்.

    கந்த புராணத்தை தமிழில் இயற்ற ஷண்முகக் கடவுளால் முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்டு, பணிக்கப்பட்ட கச்சியப்ப சிவாச்சாரியார் (கி.மு. 7ம் நூற்றாண்டு), கந்தப்பெருமானின் அவதார மகிமையை வெகு துல்லியமாகவும், மிக அழகாகவும் இரண்டு செய்யுள்களில் பின்வருமாறு விளக்கிக்கூறுகிறார்:

    “அருவமாயும் உருவமாயும் அநாதியாயும் ஒன்றாயும் பலவாயும் பரப்பிரமமாயும் விளங்கும் ஜோதிப்பிழம்பே ஒரு திருமேனியாக வடிவுகொள்ளக் கருணை வெள்ளம் பொழியாநின்ற ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களுங் கொண்டு ஒப்பற்ற முருகக் கடவுள் உலகம் உய்யும்வண்ணம் திருவவதாரம் செய்தருளினார்.”

    எக்காலத்தும் தூய்மையாயும், எங்கும் நிறைந்துள்ளவருமான அந்த முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான், சொற்களினாலும், மனதினாலும், மற்றும் ஏன் வேதங்களினாலும்கூட அறிவதற்கு மிக அரிதானவர். அவரே கருணையுடன் ஆறு திருமுகங்களை உடையவராகத் தோன்றியருளிச் சரவணப் பொய்கையில் செந்தாமரை மலர்மீது இனிது வீற்றிருந்தருளினார்.”

    அந்த ஆறுமுகங்களின் பெருமை அளவற்றது, விளக்கமுடியாதது. அவை தமிழ்மறை நூல்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முன் கூறியதுபோல, ஆறுமுகனாகத் தோன்றிய இறைவனின் ஆறுமுகங்கள் விழிப்புணர்வு, மற்றும் ஐம்பூதங்களின் சேர்க்கையைக் குறிக்கின்றது. மேலும் இந்த ஆறு முகங்களும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் ஆகிய ஆறு திசைகளையும் நோக்குகின்றன; அவற்றை அறிவதாக விளங்குகின்றன. அவர் எங்கும் வியாபித்து அனைத்தையும் அறிபவராக உள்ளார், ஆறுமுகங்கள் இறைவனின் ஆறுகுணங்களான ஞானம், வைராக்கியம், புகழ், செல்வம், செழிப்பு, மற்றும் சக்தியை வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன. மேலும், அந்த ஆறு முகங்களே நம் சூட்சும சரீரத்தில் ஆறு யோக சக்கரங்களை ----- மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மனிபூரகம், அனாகதம், விசுத்தம் மற்றும் ஆக்ஞா சக்கரங்களைக் குறிக்கின்றன. பரமாத்ம தத்துவரூபமான ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களில் ஒவ்வொரு முகம் ஆறு யோக சக்கரங்களின் அதிஷ்டான தேவதைகளான கணேசர், பிரம்மாஜி, விஷ்ணு, ருத்ரர், மகேஷ்வரர் மற்றும் சதாசிவர் ஆகியவர்களின் முகத்தின் ரூபத்தைக் கொண்டுள்ளது.

    சிறு வயதில் அநேக பால-லீலைகளைச் செய்தபின், கந்தப் பெருமான் அவருடைய அவதாரத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய, தேவர்களின் சேனாதிபதியாக பொறுப்பேற்றார். பின்பு, அசுரர்களுடன் போர் புரிந்து, ஞானசக்தியாகிய தன்னுடைய வேலினால் அவர்களை வதம் செய்தார். தேவர்கள் அனைவரையும் அசுரர்களின் சிறையிலிருந்து மீட்டு, தேவலோகத்தில் மீண்டும் வாழ வழி செய்தார். இந்திரன் நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பொருட்டு, தன் மகள் தெய்வயானையை கந்தப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தெய்வயானை கிரியா சக்தியை குறிக்கிறாள். பின்னர், இச்சா சக்தியான வள்ளி தேவியை, கந்தப் பெருமான் மணம் புரிந்தார். இவ்வாறாக, கந்தப்பெருமான் சக்திகளின் அதிபதி; அவரிடம் சரணடைபவர்களுக்கு அவர் வரங்களை அருள்கிறார்.

    ஸ்ரீகிருஷ்ணர் யசோதையின் மகன்; கம்சனை அழித்தவர்; அல்லது பார்த்தனுக்கு சாரதி மட்டுமல்லாமல்  அவர் பரப்ரம்ம பரமாத்மாவே என்று ஸ்ரீமத் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம். அதைப்போலவே கந்தப் பெருமான் தேவசேனாதிபதியோ அல்லது அசுரர்களை அழித்தவரோ மட்டுமல்லாமல், பேருணர்வு தத்துவமான பரமாத்மாவே குறிப்பிட்டதொரு நோக்கத்தை செயல்படுத்துவதற்காகவே வந்த அவதாரம் என்று நாம் அறிய வேண்டும். உண்மையில், கந்தப் பெருமானின் அவதாரமென்பது இப்பிரபஞ்சத்திலும் தனியொருவனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சிக்கல்களைக் களைய இறைவனின் தலையீடு எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் தேவையோ, அங்கெல்லாம், அப்பொழுதெல்லாம் அச்சிக்கல்களை சரி செய்வதற்கேற்ற முறையில் அவர் தன்னை தோற்றுவித்துக் கொள்கிறார். மகாபலி சக்கரவர்த்தியை வெற்றி கொள்ள, அதிசக்தி கொண்ட பரசுராமராகவோ, பகவான் ஸ்ரீராமராகவோ, அல்லது ஸ்ரீகிருஷ்ணராகவோ அவதரிக்காமல், சிறுவன் வாமனனாக வந்ததை உதாரணமாகச் சொல்லலாம். பரமாத்மாவான அவர் எல்லையில்லா சக்தி கொண்டிருப்பினும், எதிர்ப்படும் இடரை எதிர்கொள்ள எத்தனை சக்தி போதுமோ அதற்கேற்றவாறே தன்னை தோற்றுவித்துக் கொள்கிறார். தேவைக்கு அதிகமான சக்தியுடன் தன்னை அவர் ஒருபொழுதும் வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது; சக்தியை பரமசிக்கனமாகவே எப்பொழுதும் கையாள்கிறார். ஆகையால், பக்தர்கள் அவரே நேரில் வந்து அருள விரும்பினாலும், அது தேவையற்றதாயின், தன்னை நேரில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை; உடல் பலம், புத்தி கூர்மை, பணம்–பொருள்கள் என்று அவர்களின் அப்போதைய தேவைக்கேற்ப மறைமுகமாக வெளிப்படுத்திக் கொள்கிறார். அவர் அந்தந்த சமய சந்தர்ப்பங்களில் ஜீவர்கள் அடைய விரும்பும் இலக்குகள் நிறைவேறத் தேவையான  சக்தியுடன் மட்டுமே வெவ்வேறு உருவங்கள் மற்றும் பெயர்களில் தன்னை உலகில் வெளிப்படுத்திக் கொள்கிறார் ---- ஆனால் நமக்கு அவர் எவ்வாறு புலப்பட்டாலும் அல்லது  நாம் அவரை எப்படி புரிந்து கொண்டாலும், அவர் தன்னில் எவ்வித மாற்றமும் இல்லாத பரம்பொருளாகவே எப்போதுமிருக்கிறார்.

No comments:

Post a Comment