அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு


அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்*


    பரம்பொருளாகிய கந்தப் பெருமான், குருதேவ் சுவாமி சிவானந்தஜீ ம<கராஜ் மற்றும் அருளாளர் அருணகிரிநாதர் ஆகியோரைப் போற்றிப் பணிந்து வணங்கி அவர்களின் திருவடிகளில் இந்த நூலைப் பூஜை மலராகப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

    அத்வைத ஆசார்யர் ஆதிசங்கரர், ஷண்மத ஸ்தாபனம் செய்தார்; ஆறுசமய வழிபாட்டை வகுத்தளித்தார். இந்து ஆறு வழிபாட்டு முறைகள் அல்லது மரபுகளில் ஒன்று கௌமாரம். இந்தப் மரபைச் சார்ந்தவர்கள் (கௌமாரர்கள்) மதிப்புடனும், மரியாதையுடனும் குமரனை, ஸ்கந்தனை, சண்முகனை மற்றும் கார்த்திகேயனை பரம்பொருளாகப் போற்றி வழிபடுகின்றனர். கௌமார குருநாதர்களில் அருணகிரிநாத சுவாமிகளை முதன்மையான குருவாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் மதித்துப் பாராட்டிப் போற்றுகின்றனர். அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். இது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலம். இந்த புனிதத் திருத்தலம் மற்றும் பல காரணங்களாலும் புகழ் பெற்றது. இது, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று நம்பப்படுகிறது.

    முற்காலத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும் ஞானிகள் வாழ்க்கையைப் போலவே அருணகிரிநாதர் வாழ்க்கை சம்பந்தமாகவும் ஆதாரபூர்வமான பதிவுகள் இல்லை. அவரது பிறப்பு, ஜாதி சம்பந்தமாக உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆகவே, இயற்கையாகவே அவரைப்பற்றி பல தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. அவரைப் பற்றிய சிறுசிறு விஷயங்களில்கூட பல்வேறு விதமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எது சரி, எது தவறு என்று நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. அருணகிரிநாதரின் வரலாற்றை அதிகமதிகமாகப் படிக்கப்படிக்க அதிகமதிகமான குழப்பங்கள்தான் மனதில் ஏற்படுகின்றன. அருணகிரிநாதரைப் பற்றி எழுதிய நூல் ஆசிரியர்கள் இறைவன் மீதும் அருணகிரிநாதர் மீதும் கொண்டுள்ள பக்தியால் பல்வேறு விஷயங்களை எந்த ஆதாரமும் இன்றி எழுதியுள்ளனர். எனக்குக் கிடைத்த சில நூல்களைப் படித்தபின் அருணகிரிநாதரைப் பற்றி நூல் எழுத நான் தயங்கினேன். ஏனெனில், ஏற்கனவே இருக்கும் குழப்பம் போதாதென்று நானும் குழப்பத்தை அதிகரித்துவிடுவேனோ என்று எண்ணினேன். ஆனால், இருக்கும் குழப்பம், முரண்பாடுகளில் சிலவற்றையாவது எனது நூல் தெளிவுபடுத்தும் வகையில் அமையுமாயின், மற்றுமொரு விளக்கமான நூலை எழுதுவதில் தவறில்லை என்று எண்ணி எழுதத் தீர்மானித்தேன். எனவே நம்பத் தகுந்த ஆதாரங்களை மட்டும் தொகுத்துச் சேர்க்க முயற்சி செய்திருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் பல்வேறு நூல்களில் கூறப்படுவதுபோல அருளாளர் அருணகிரிநாதர் அடைந்த அருள், ஞானநிலை சாதாரணமானதல்ல என்பது மட்டும் உறுதி.

    அருளாளர் அருணகிரி நாதரின் போற்றத்தக்க வாழ்க்கை வரலாற்றை அகச்சான்றுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் சுருக்கமாக பின்வருமாறு கூறலாம்.

    வடதேசத்திலிருந்து வந்து திருவண்ணாமலை அருகில் முல்லந்திரம் மற்றும் பிற கிராமங்களில் குடியமர்ந்த கௌட பிராமண குடும்பத்தில் பிறந்தவர் அருணகிரிநாதர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். அவர் இளமைப் பருவத்திலிருந்தே தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவருக்கு நன்கு கல்வி போதிக்கப்பட்டது. அவர் நன்கு வளர்க்கப்பட்டார். அவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருந்தனர். ஒருவேளை அவருக்கு நற்கல்வி அளிக்க அவரது பெற்றோர்கள் திருவண்ணாமலைக்கு வந்து வசித்திருக்கலாம் அல்லது திருமணமானபிறகு ஜீவனம் நடத்துவதற்காக அவர் திருவண்ணாமலைக்கு வந்திருக்கலாம். அவருக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் விதிவசத்தால் அவர் திருவண்ணாமலையில் விபச்சாரிகளின் மோக வலையில் சிக்கித் தவித்தார். சிற்றின்பச் சேற்றில் மூழ்கினார். விபச்சாரிகளை திருப்திப்படுத்த தன் செல்வம் முழுவதையும் இழந்தார். மேலும் கருமிகளைப் புகழ்ந்து பாடிப் பணம் பெற்று விபச்சாரிகளுக்கு கொடுத்தார். அவர்களுடன் கொண்ட தகாத உறவால் அவர் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். உற்றார் உறவினரும் விபச்சாரிகளும் அவர் நிலை கண்டு ஏளனமாகச் சிரித்தனர். அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்கினர். காலம்தான் குணப்படுத்தும் மகத்தான சாதனம். அருணகிரி தனது செயலுக்காக வெட்கப்பட்டார். கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைத் தான் வீணாக்கிவிட்டதற்காக வருந்தினார். வேதனைப்பட்டார். ஒரு முதியவர் அவரைப் பார்த்து முருகப் பெருமானை வழிபடுவதிலும், தியானிப்பதிலும், அவரிடம் பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தைச் செலவிடுமாறு அறிவுரை கூறினார். அதன்படி கோவில் கோபுரத்தின் அருகில் அமர்ந்து இறைவன் மீது மனதைச் செலுத்தி தியானித்தார். ஆயினும் மனம் அமைதி பெறவில்லை. இறுதியாக, தரம் தாழ்ந்த தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும், தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடவும் அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார். கோவில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். முருகனைப் பிரார்த்தித்தார். தற்கொலை செய்துகொள்ள கோவில் கோபுரத்திலிருந்து கீழே குதித்தார். அவர் பூமிக்கு அருகில் வரும்போது அவர் வணங்கும் முருகன் தனது அபார கருணையினால் அவரை தனது திருக்கரங்களில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். தனது வேல் கொண்டு அருணகிரியின் நாவில் “ஓம்” எனும் புனிதமான பிரணவ மந்திரத்தை எழுதினார். அவருக்கு ஒரு ஜபமாலையைத் தந்தார். தனது புகழைப் பாடுமாறு அருளாணை பிறப்பித்தார். பாடுவதற்கு ‘முத்தைத்தரு’ என்று முதலடியும் எடுத்துக் கொடுத்தார். பாவியான அருணகிரி நொடிப் பொழுதில் இறைஞானம் பெற்ற பரமஞானியாக மாற்றம் பெற்றார். தீராத நோய் தீர்ந்து முழுமையான ஆரோக்கியமான உடல்நலம் பெற்றார். பல்வேறு தெய்வீக அனுபவங்களைப் பெற்றார். அவர் முகம் அருட்பொலிவுடன் பிரகாசித்தது. கோவில் கோபுரத்தின் அடிவாரத்தில் அருணகிரியை முருகன் காப்பாற்றிய இடத்தில் முருகனுக்கு ஒரு கோவில் உள்ளது. அது “கோபுரத்து இளையனார் கோவில்” என்றழைக்கப்படுகின்றது. அருணகிரியார் வீடுவாசலற்ற துறவியானார். எப்பொழுதும் இறைவன் புகழைப் பாடும் பணியே பணியாய் மேற்கொண்டார். திருவண்ணாமலையில் கோவில் கொண்டிருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடினார். அவர் புகழ் திக்கெட்டும் பரவியது. அந்த தேசத்து மன்னன் பிரவுட தேவன் அருணகிரிநாதரைப் போற்றி வணங்கி அவர் பக்தராக மாறினார். அருணகிரியாரைக் காப்பாற்றியருளிய முருகனை மன்னன் தரிசிக்க விரும்பினார். அதற்காக அருணகிரியை வேண்டினார். அருணகிரியும் அதற்காகக் கூட்டிய ஒரு சபையில் ‘அதலசேடநாராட’ என்ற திருப்புகழ் பாடலைப்பாடி முருகப்பெருமானை காட்சி அளிக்கப் பிரார்த்தித்தார். அவ்வண்ணமே, முருகப் பெருமான் மன்னன் மற்றும் திரளாகக் கூடியிருந்த மக்கள்முன் ஒரு கம்பத்திலிருந்துத் தோன்றி, ஆடிடும் மயில் மீது ஏறிவந்து காட்சி தந்தார். மன்னன் பெருமகிழ்ச்சி அடைந்தான். மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். முருகன் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு காட்சியளித்த இடத்தில் முருகனுக்குக் கோயில் இருக்கிறது. அது கம்பத்து இளையனார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது. கர்ண பரம்பரைக் கதைகளில் கூறப்படுவதுபோல முருகனை தரிசித்ததால் மன்னன் கண்பார்வையை இழக்கவில்லை; மன்னன் கண்பார்வைபெற பாரிஜாத மலரைக் கொண்டுவர அருணகிரி தேவலோகம் செல்லவுமில்லை.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு அருணகிரி திருத்தல யாத்திரை செய்தார். இந்தியா முழுவதும் உள்ள முருகன் திருக்கோவில்களையும் மற்ற கோவில்களையும் தரிசித்தார். அங்கு கோவில் கொண்டுள்ள முருகனையும் மற்ற தெய்வங்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினார். இந்த யாத்திரையில் அவருக்குப் பலவிதமான அனுபவங்களும் இறைவன் தரிசனமும் கிடைத்தன. திருச்செந்தூரில் முருகன் குழந்தை வடிவில் வந்து நடனமாடி காட்சி அளித்தார். இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் வில்லிபுத்தூராருடன் இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டு, “கந்தர் அந்தாதி” பாடி, அவரை வென்றார். அதன்பின் கடல் கடந்து ஈழம் (இலங்கை) சென்றார். ஸ்ரீலங்காவில் அவர் அருக்கோணமலை மற்றும் கண்டி ஆகிய ஊர்களுக்குச் சென்று தரிசித்தார். அதன்பிறகு அவர் பிரசித்தி பெற்ற கதிர்காமம் சென்றார். பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து அகத்திய முனிவர் தங்கித் தவம் செய்த பொதிகைமலை சென்றார். அங்கு, “இறைவா! (i) நீ என்னை உன் அருகில் அழைத்துப் பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, (ii) வேல், மயில் ஆகிய சின்னங்களைப் பொறித்து அருள்வாயாக,” என்று பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து திருத்துருத்தி என்னும் தலத்திற்குச் சென்றார். அங்கே முருகன் அருணகிரியின் கனவில் தோன்றி, அவரது தோள்களில் வேல் மற்றும் மயிலின் சின்னங்களைப் பதித்து “கந்தர் அனுபூதி” பாடல்களைப் பாட அருளாணை பிறப்பித்தார். அருணகிரி உடனடியாக கந்தர் அனுபூதிப் பாடல்களை திருத்துருத்தியிலேயே பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது, பொதிகைமலையில் அகத்தியர் போன்ற தவசீலர்கள் பட்டியலில் தன்னையும் சேர்த்துக் கொள்ள இறைவனிடம் பிரார்த்தித்தார். திருத்தணிகையில் தங்கி, இறைவன் சித்தம் களிகூர ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட அருள்புரியுமாறும் அவர் பிராத்தனை செய்தார். அங்கிருந்த வட இந்திய யாத்திரையைத் தொடங்கி காசி, ஹரித்வாரம், கயிலை மலை, மற்றும் பூரியில் ஜகந்நாதரையும் தரிசித்துத் திரும்பிவரும்போது இந்த இரு வேண்டுதல்களையும் நிறைவேற்ற முருகன் அவரை திருத்தணிகைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி, அருணகிரி திருத்தணிகை சென்று சில ஆண்டுகள் தங்கி ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டார். கடும் தவம் செய்தார். அந்த வேளையில் அற்புதமான திருவகுப்புப் பாடல்களை இறைவன் உள்ளம் மகிழ்ச்சி அடையும் பொருட்டுப் பாடினார். எனவே, இவற்றில் விபச்சாரிகளின் காமக் களியாட்டங்கள் பற்றிய குறிப்புகள் முற்றிலும் இல்லை. மரணபயம் பற்றிய குறிப்பும் ஒரு சில பாடல்கள் தவிர மற்ற பாடல்களில் இல்லை. இறுதியாக, அவர் எங்கிருந்து தனது திருத்தல யாத்திரையைத் தொடங்கினாரோ அந்த சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். இந்த பாரத யாத்திரையின்போது அவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சுமார் 1300 பாடல்களே நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவர் யாத்திரையின் போது ‘கந்தர் அனுபூதி’, ‘கந்தர் அந்தாதி’, ‘கந்தர் அலங்காரம்’ மற்றும் பிற நூல்களையும் பாடியுள்ளார்.

    அருணகிரிநாதர் தனது நீண்ட யாத்திரையை நிறைவு செய்து திருவண்ணாமலைக்குத் திரும்பி வந்தபோது மன்னன் பிரவுட தேவன் உரிய மரியாதையுடன் வரவேற்றான். அருணகிரியார் தனது இறுதிக் காலத்தை தியானத்தில் தவத்தில் கழித்தார். நாளடைவில் இறைவனோடு இரண்டறக் கலந்து, அத்வைத நிலையாகிய சாயுஜ்ய நிலையை அடைந்தார். அவர் தனது பூத உடலை உதறித்தள்ளியபோது, தனக்கு இறைவனை தரிசிக்கும் வாய்ப்பை அருளித்தந்த அருணகிரிநாதருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னன் பிரவுடதேவன், அவர் உடலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலைப் பிராகாரத்தில் அடக்கம் செய்து, அத்துடன் அவருக்கு ஒரு சிறிய கோவிலும் அமைத்தான். அதில் அருணகிரிநாதரின் கல் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்து, அதற்கு தினசரி பூஜை செய்வதற்கும் ஏற்பாடு செய்தான். இந்தச் சமாதிக் கோவிலை இன்றும் நாம் காணலாம்.

    என்னே மன்னனின் புத்திக்கூர்மையும், பெருந்தன்மையும், நன்றியறிவும், அருணகிரியாரிடம் பக்தியும் மற்றும் விசுவாசமும்! அன்று கோவில் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள அருணகிரியார் முயன்றபோது அவரை முருகப் பெருமான் தடுத்து ஆட்கொண்ட இடம் (கோபுரத்து இளையனார் கோவில்); அருணகிரியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து மன்னன் மற்றும் மக்கள் மத்தியில் கம்பத்திலிருந்து வெளிப்பட்டு முருகன் காட்சி அளித்து அருளிய இடம் (கம்பத்து இளையனார் கோவில்), --- இந்த இரண்டு இடங்களும் (கோவில்களும்) உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே, அருணகிரிநாதர் அடக்கமான இடமும் (அருணகிரிநாதரின் சமாதியும், அத்துடன் அவருக்கு ஒரு சிறு கோவிலும்) அமைத்தான் மன்னன் பிரவுட தேவன். இது அவனது மிகவும் போற்றத்தக்க செயல்.
    (இந்தச் சிறு சமாதிக் கோவிலில் அருணகிரிநாதரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருத்தணிகையில் அருணகிரிநாதர் நீண்ட காலம் தவத்தில் ஈடுபட்டிருந்தபின் அவரது உடல் அமைப்பு எப்படி இருந்தது என்பதை இந்த விக்கிரஹம் வெளிப்படுத்துகிறது).

    இவ்வாறு அருணகிரிநாதர் போற்றத்தக்க இறைஞானம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார். மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அற்புதச் செயல்களை நிகழ்த்திக் காட்டினார். மக்களை சம்ஸார வாழ்க்கை எனும் மாயையிலிருந்து விடுவித்தார். அவர்கள் நிரந்தரமாக இறைவனைப்பற்றிய விழிப்புணர்வுடன் வாழ வழிகாட்டினார். அவர் இன்றும்கூட பக்தர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலைத் தந்து கொண்டிருக்கிறார். பக்தர்கள் ஆன்மீகப் பூரண நிலையை அடைய வழிகாட்டுகிறார். அருணகிரிநாதரின் அருளாசி நமக்கு என்றும் கிடைக்கட்டும். அனைத்து அருளாளர்கள் மற்றும் ரிஷி முனிவர்களின் அருளாசி மனிதகுலத்துக்கு என்றென்றைக்கும் கிடைக்கட்டும்.

N.V. கார்த்திகேயன்.


* என்னுடைய “அறுமுகனருளால் பாவி ஞானியாக மாறிய அருணகிரிநாதரின் அற்புத சரிதம்” என்ற ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆய்வு நூலிலிருந்து (112 பக்கங்கள் கொண்டது) தொகுக்கப்பட்டது.



அருளாளர் அருணகிரிநாதரின் சமாதி-கோவில்



அருணகிரிநாதர் அடக்கமான இடம்
படம் 1: அருணகிரிநாதரின் புனிதமான சமாதி மண்டபம். இங்கே அவர்
உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்புரத்தில் அவருக்கு
சிறிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. (படம் 2ஐக் காண்க.)



படம் 2: படம் 1ல் உள்ள அருணகிரியார் சிறிய கோயிலின்  நெருங்கிய தோற்றம்.  ----
முன்னால் பலி பீடமும், பக்கத்தில் கணபதி விக்ரஹமும் உள்ளன.




படம் 3: படம் 2ல் உள்ள கோவிலின் உள்ளே, பலி பீடத்திற்குப் பின்னால்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருணகிரிநாதரின் திருவுருவச்சிலை. அதற்கு தினசரி பூஜை செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment