செய்யுள் – 31
பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தனதாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.
பொழிப்புரை: “ஓ மயில் வாகனப் பெருமானே! நிலையில்லாத உலகவாழ்வு என்னும் இந்த அழியக்கூடிய மாயையில் (மீண்டும்) விழுந்து துன்புறும்படி நீங்கள் என்னை விதித்துவிட்டீர்களே! (தாங்கள் அவ்வாறு செய்வதற்கு) நான் முந்தைய ஜன்மங்களில் செய்த இழிவான, பாவங்கள் நிறைந்த, இன்னும் அனுபவிக்கவேண்டிய கர்மங்கள் உள்ளனவோ? (ஆம், அப்படி உள்ளன என்ற ஞானத்தைத் தந்ததற்காக) நீவிர் நீடூழி வாழ்க!”
விளக்கவுரை
அச்சாதகன் பெற்ற சற்றேகுறைய சமாதி அனுபவம் (செய்யுள்-28) தந்த ஆனந்தத்தின் தாக்கத்தை அவனால் பலகாலத்திற்கு மறக்க முடியவில்லை. திரும்பத் திரும்ப அது அவன் ஞாபகத்திற்கு வந்துகொண்டே இருந்தது. ஆனால், அது இப்பொழுது கழிவிரக்கத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது --- முருகன் தன்னை அர்த்தமற்ற இம்மாய வாழ்வில் விழும்படிச் செய்ததற்குக் கழிவிரக்கமும், எக்காரணத்திற்காக அவர் அவ்வாறு செய்தார் என்பது அவனுக்கு புரிந்து விட்டதால் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அந்த நிகரற்ற அநுபவம் பெற்ற பின்னர் (செய்யுள்-28), அந்த பழைய மாய வாழ்விற்கே தன்னைத் திரும்பவும் அனுப்பியதற்காக, இதுகாறும் அவன் வெகுவாக வருந்தி வந்தான் (ஏன், சில சமயம் இறைவனை நிந்தனையும் கூட செய்து வந்தான்) {செய்யுள்- 29}. ஆனால், முருகன் அப்படிச் செய்தது அவருடைய சொந்த விருப்பத்தால் இல்லையென்றும், அச்சாதகன் முந்தைய ஜன்மங்களில் செய்த, இன்னும் அனுபவிக்க வேண்டிய கொடூரமான (பாவ) வினைகள் (சஞ்சித/ பிராரப்த கர்மங்கள்) பாக்கி இருப்பதால் என்றும் அவனுக்கு உணர்வித்தார். (,இது பின்னர் செய்யுள்- 35 & 38ல் மேலும் தெளிவாகும்). எனவே, அச்சாதகன் “ஓ பெருமானே! நான் முற்பிறவிகளில் செய்த கொடூரமான கர்மங்கள் (பாவபலன்களில்) சில இன்னும் தீராமல் மிச்சமிருக்கிறதோ?” (“தாழ்வானவை செய்தனதாம் உளவோ”) என்று வியந்து முருகப் பெருமானைக் கேட்கிறான். இதற்கு விடை ‘ஆமாம்’ என்பது (அவனது) கேள்வியிலேயே தொக்கி நிற்கிறது. (இவ்வாறான சொற்களின் பிரயோகம் சர்வசாதாரணம்.) இவ்வாறு உண்மையை வெளிப்படுத்திப் புரிய வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சியுற்று, “வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே”, என்று முருகனுக்கு நன்றியையும் தெரிவிக்கிறான். ஏனெனில், தான் படும் கஷ்டங்களுக்கான காரணம் ஒருவனுக்குத் தெரிந்துவிட்டால், அவன் அவற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கலாம்; மேலும் அதற்கான பரிகாரம் காணுவதும் சுலபமாகிவிடும்.
“முன்பேதான் காரண சரீரத்திலிருந்து சம்ஸ்காரங்கள் வெளிவந்து அவனைத் துன்புறுத்தி, பலவீனமடைந்து, அழிந்துபோய் விட்டனவே (செய்யுள்கள் 23 முதல் 27 வரை). பின், இப்பொழுது மறுபடியும் எங்கிருந்து கொடூரமான கர்மங்கள் வந்தன?” என்று நாம் நினைக்கலாம். அது உண்மைதான். ஆனால், இதில் மிகப்பெரிய இரகசியம் உளது. அதாவது, சாதாரணமான அதிக பலமில்லாத கர்மவினைகளை அவ்வாறு அனுபவித்து அழித்துவிட முடியும், அழிந்தும்விட்டன. ஆனால், சில கர்மங்களை (மகா பாபங்களை) அப்படி அழிக்க முடியாது. ஏனெனில், அவை அனுபவத்திற்கு வந்தால், அவனைக் அழித்துவிடும்; அவை அவ்வளவு பயங்கரமானவை. ஆனால், அச்சாதகனுக்கு அப்படி இறக்க விருப்பமில்லை; அவன் இந்த ஜென்மத்திலேயே இறைவனை அடைய விரும்புகிறான். எனவே, முருகப் பெருமான் எஞ்சி இருக்கும் கொடூரமான கர்மங்களை அழிக்கும் வழியை அவனுக்கு உள்ளிருந்து தெரிவித்தார். “யாமோதிய கல்வியும் எம்மறிவும் வேலவர் தாமே தந்தது, அதனால் பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்.” என்பதைத் தெரிவித்தான். அச்சாதகன் அநேக நூல்களைக் கற்றிருக்கிறான், ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறான், குருவிடமிருந்து உபதேசங்கள் பெற்றிருக்கிறான். இவையெல்லாம் முருகனே தந்தவை. இவைகளிலிருந்து அவன் கற்றறிந்தது (முருகன் உள்ளிருந்து தெரிவித்தது) என்னவென்றால், அவன் சந்நியாசம் எடுத்துக்கொண்டால் கர்மங்களை அனுபவிக்காமல், அவற்றை ஞான-அக்கினியில் எரித்துவிடலாம். முருகன் இப்படித் தெரிவித்ததற்கு அவருக்கு நன்றி செலுத்தி, ‘வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே’ என்றும் வாழ்த்துகிறான். மேலும், தன்னை சந்நியாசத்திற்கு தயார் செய்கிறான்.
“படுமாயை” ---- “அழிந்து படக்கூடிய மாயை” : இம்மாயை அழியக் கூடிய ஒன்று. விடாப்பிடியாக முயற்சி செய்தால், தன்னால் இதிலிருந்து வெகுசீக்கிரம் விடுபட முடியுமென்று அச்சாதகன் நினைக்கிறான் என்பது “படுமாயை” வார்த்தை உபயோகத்திலிருந்து தெரிய வருகிறது.
இவ்வுலக வாழ்வு நிரந்தரமானது அல்ல. அது வந்து போகும் தன்மையுள்ளது. அது நிலையற்றது. இவ்வாழ்வும் கனவைப் போன்று தோன்றி மறைவது. இருந்ததற்கான சுவடே தெரியாமல், பொருள்கள் மறைந்து போகின்றன. அதனால், புலன்களால் மட்டுமே உணரப்படும் தன்மை படைத்த (இவ்வுலக) வாழ்க்கை மாயை எனப்படுகின்றது. மாயை அழியக்கூடியது; அதாவது, என்றுமிருக்கக்கூடிய உண்மையான ஒன்று அல்ல. (மாயை ஆதியற்றது, ஆனால் அதற்கு அந்தம் உண்டு என்று சொல்லப்படுகிறது.) ஆத்மானுபூதி அடைந்த ஒருவனுக்கு அது இல்லாமற்போய்விடுகிறது. அதனால்தான். இங்கு மாயை “படு”, அழிந்து போகக் கூடியது, என்று குறிப்பிடப்படுகின்றது. அப்படியிருக்க, அழிந்துபோகும் தன்மையைக் கொண்ட அந்த மாயையால் எப்படியோ தோற்றுவிக்கப்பட்ட இவ்வுலகம் எவ்வளவு தோன்றிமறையக்கூடியதாக இருக்கவேண்டும்? இருந்தாலும், அது மிகவும் சரியான மற்றும் விஞ்ஞான பூர்வமான விதிகளால் (சட்டங்களால்) நிர்வகிக்கப்படுகிறது --- எதற்கும் பரிவு காட்டாத கர்மவிதி (காரண-காரிய விதி) அவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் முன்னர் செய்த செயல்களுக்கான பலன்களை நிச்சயம் அறுவடை செய்துதான் ஆகவேண்டும்; எனவே, நமது இன்ப-துன்பங்களுக்கு நாமே காரணம். நமது தற்போதைய நிலைக்கு, இறைவனையோ (அ) மற்றவர்களையோ பழி கூறுவதால் யாதொரு பிரயோஜனமும் இல்லை. இப்புலன்சார் உலகில் நாம் துன்பத்துடன் வாழ்ந்து வருகிறோமெனில், அதற்குக் காரணம் இரண்டு: (1) இவ்வுலக வாழ்க்கை வெறும் தோற்றமென்று அறியாமல், அதை உண்மையென்று கருதி, அதற்காக ஆசைப்பட்டு, அதனுடன் ஒட்டி உறவாடி வந்தது. (2) நாம் இறைவனையும் அவரின் அருமை பெருமைகளையும் மறந்தது.
இறைவன் வெறுப்பினாலோ அல்லது தன் இச்சைப்படி வேண்டுமென்றோ நம்மை இந்த சம்சாரத்தில் விழச் செய்வதில்லை. அவர் எவரையும் வெறுப்பதுமில்லை, விரும்புவதுமில்லை. அவர் எல்லோரிடத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார். ஆனால், அவரது தெய்வீக விதியானது துல்லியமாக ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த வினைகளுக்கேற்ப பலன்களைத் தருகின்றது. அவர் நீதியை வழுவாது வழங்குபவர். ஒருவன் எங்கு எந்தச் சூழ்நிலையில் பிறந்தால் அவன் முன்பு செய்த வினைகளுக்கான பலன்களை அநுபவித்து, இறைவனை நோக்கி முன்னேற முடியுமோ அந்தச் சூழ்நிலையில் அவனைப் பிறவியெடுக்க விதிக்கிறார். ஏனெனில், கர்மங்கள் (கர்மபலன்களை அனுபவித்து) தீர்க்கப்பட்டாலொழிய, ஆன்மீக விடுதலையை அடைய முடியாது; ஆதலால், இறைவன் ஒவ்வொருவரின் ஆன்மிக வளர்ச்சிக்கு இவ்வாறு வழிவகை செய்கிறார். இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நம் கர்மங்களை கழிப்பதற்கும், பின்னர் அமைதி- ஆனந்தத்தின் நிரந்தர உறைவிடமான இறைவனை (முக்தியை) அடைவதற்கும் அவசியமான புலமாக விளங்கும், இந்தத் “தோன்றிமறையக்கூடிய” கொஞ்ச காலமேயிருக்கும் உலகைப் படைத்தருளிய இறைவனுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்தானே? இவ்வுலகை இறைவன் நிரந்தமற்றதாகப் படைத்ததற்கு நாம் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும். ஏனெனில், இவ்வுலகம் நிரந்தரமாகயிருக்கும் ஒன்றானால், அது நமக்கு துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே தருவதாயிருந்தாலும், அதில் மோகித்து ஆனந்தப்படக்கூடும்! சரி. ஸ்ரீமத் பகவத் கீதை இவ்வுலகை அநித்யம் (நிலையற்றது) மற்றும் அசுகம் (சுகமற்றது) என்று வர்ணிக்கிறது; அது துக்கமயமானது மட்டுமல்ல, அது நிரந்தரமில்லாது தோன்றி மறையும் தன்மை கொண்டதும் ஆகும். சுகமற்றதாயிருந்தாலும், நிரந்தரமாக இருக்கக்கூடியதாய் இருந்திருக்குமாயின், நாம் அதனோடு ஒட்டிக்கொண்டு, அதிலேயே நிரந்தரமாக வாழவும் நினைத்திருக்கலாம் அல்லவா! ஒருவன் தன் கனவில் ஒரு பெரிய புதையல் கிடைத்ததாகக் கண்டால், அவன் எப்படியாவது அக்கனவை நீடிக்கச்செய்து அதிலேயே ஒரு செல்வந்தனாக இருக்க விரும்பக்கூடும் --- செல்வம் துன்பங்களையும் கவலைகளையும் கொடுப்பதாக இருந்தாலும் சரி. எனவேதான், கனவு மிகவும் குறுகிய காலத்திற்கே நீடிக்கிறது. நனவுலகோடு ஒப்பிடப்படும்போது கனவுலகு அநித்யமானதே. அதேபோன்றுதான், நிரந்தரமான இறை-உணர்வு விழிப்பு (அனுபூதி) நிலையோடு ஒப்பிடப்படும்போது (இம்மாயா) நனவுலக வாழ்வும் அநித்யமாகிறது, எனவேதான், இறைவன் தன் அநித்திய (படு)மாயையால் இந்த அநித்திய உலகைப் படைத்தார், அதையும் நமது நன்மைக்காகவே செய்தார். உண்மை இப்படி இருக்கும்பொழுது, அதன் அறிவு நமக்கு இல்லாத காரணத்தால், நாம் இவ்வுலகில் பிறந்ததற்கும், அநுபவிக்கும் துன்பங்களுக்கும் இறைவன் மீது பழிபோடுகிறோம். “ஓ பெருமானே, நீங்கள் என்னை இவ்வுலகில் பிறந்து துன்பப்படு என்று விதித்திருக்கிறீர்கள்; அந்தோ பரிதாபம், என் நிலை!” என்று புலம்புகிறோம். நாம் துன்பப்படுவதற்கு நாம்தான் காரணம், இறைவன் எவ்வகையிலும் காரணமல்ல, நாம் முன்பு செய்த கர்மங்களின் பலனை அநுபவித்து வினையை கழித்துக் கொள்வதற்காகத்தான், இவ்வுலகில் அவர் நம்மை பிறக்கச் செய்தார், இவ்வாறு அவர் செய்தது நமது மேலான நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் காலம் வரும். பின்னர், நாம் இறைவனின் மேன்மை, அருள், பரிவு, இரக்கம், ஆகிய அனைத்தையும் உணர்ந்து, அவரிடம் நன்றி பாராட்டி, அவரை இதய பூர்வமாக வாழ்த்தாமல் இருக்கமுடியாது. “பெருமானே, நீங்கள் எவ்வளவு கருணை உடையவர்! எவ்வளவு இரக்கம் உடையவர்! நீங்கள் நீடூழி வாழ்வீராக!” என்று இறைவனை போற்றிப் புகழ்வோம். இதையெல்லாம் எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக அருணகிரியார் இச்செய்யுளில் விளக்கி அருளியுள்ளார் பார்த்தீர்களா!
முற்பிறவியில் செய்த செயல்களின் பலனாகத்தான் நாம் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம். இறைவனை, அவரது மகிமைகளைப் போற்றிப் புகழ்ந்து பாடி, நாம் அவரருளை நாடினால், நாளடைவில் அவரது மாயையைக் கடந்து செல்வதன் மூலம் சம்சாரத்திலிருந்தே விடுபட்டு விடலாம். இவ்வுலக வாழ்வு ‘ஒளிந்து-மறைந்து-கண்டுபிடிக்கும்’ விளையாட்டைப்போன்றது என்று கருதப்படுகிறது. பாட்டியம்மா இவ்விளையாட்டை துவக்கி வைக்கிறாள்; குழந்தைகள், விரும்பி மகிழ்ச்சியோடு விளையாடும்வரை அவர்கள் இவ்விளையாட்டின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரு குழந்தை விளையாட்டில் சோர்வடைந்து விளையாட்டு போதுமென்று கருதி பாட்டியிடம் வந்தடையும்போது, அவ்விளையாட்டிலிருந்தும், அதன் விதிமுறைகளிலிருந்தும் அக்குழந்தை விடுவிக்கப்பட்டு விடுகிறது. எப்பொழுதுவரையில் ஒருவன் இவ்வுலக வாழ்க்கையை உண்மையென்று கருதியும், அதனை விரும்பி அநுபவித்தும் வருகின்றானோ, அப்பொழுதுவரை அவன் அதற்குக் கட்டுப்பட்டு அடிமையாகிறான். அந்நிலையில் இறைவனால் என்னதான் செய்ய முடியும்? (‘அப்படியே மகிழ்ந்திருப்பாயாக’ ‘ததாஸ்து’ என்று ஆசீர்வாதம் செய்வதைத் தவிர அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?). ஆனால், அவ்வாறு வாழ்ந்த ஒருவன், மாய வாழ்வில் சலிப்புற்று, இதில் சாரமொன்றும் இல்லையென உணர்ந்து இறைவனை முழு மனதுடன் சரணடைந்தால், அவனது துன்பங்கள் முடிவிற்கு வந்துவிடும் (அவன் சம்சாரத்திலிருந்து விடுதலை பெற்று விடுகிறான்). சம்சாரத்திலிருந்து ஒருவன் விடுதலை பெற்றிட, இறைவனைச் சரண் புகுவது, அவரைப் புகழ்வது, அவரது மகிமைகளைப் பாடுவது, அவர் நாமங்களை ஜபம் செய்வது, அவரைத் தொழுவது மற்றும் தியானிப்பது, போன்ற சாதனைகளைச் செய்திடல் வேண்டும். “நான் முன்பு செய்த கர்மங்களுக்காக நீங்கள் என்னைச் சம்சாரத்தில் விழச்செய்தீர்கள். ஆனால், இப்பொழுதிலிருந்து, உங்களது மகிமைகளையும் புகழையும் பாடுவதிலேயே நான் முழுமையாக என்னை அர்ப்பணிப்பேன், ஓ மயில் வாகனனே. நீவிர் நீடூழி வாழ்வீர்களாக!”.
“ஓ பெருமானே! நீங்கள் ஸச்சிதானந்தம், ஆனந்தமயம், அதுவே எனக்குப் போதும்; கடந்துபோகும் துன்பமும் துயரமுமான என்னுடைய இவ்வுலக அநுபவங்கள் எனக்கு ஒரு பொருட்டேயல்ல,” என்ற கருத்தே இச்செய்யுள் முழுவதும் பரவி இருக்கிறது. ஆன்மீகத்தில் முதிர்ச்சி பெற்று வெகுவாக முன்னேறிய சாதகனால்தான் இத்தகைய மனோபாவத்தைப் பெறமுடியும். இது பெறுதற்கரிய ஒரு விசித்திரமான நிலை. இதில், ஒரு சாதகன், அவனுடைய (பழைய) கர்மங்கள் தரும் சரீரத் துன்பங்களை அனுபவிக்கிறான்; ஆனால், அதேசமயம், அவன் இறைவன் மகிமைகளை இடைவிடாது மௌனமாக சிந்திப்பதன்மூலம் அந்தராத்மாவுடன் தியானத்தில் இணைந்திருந்து, ஆனந்தத்தில் மூழ்கி இருக்கிறான்.
|
செய்யுள் 31
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment