செய்யுள் 24



செய்யுள் – 24


கூர்வேல்விழி   மங்கையர்   கொங்கையிலே
சேர்வேன்   அருள்சேரவும்   எண்ணுமதோ
சூர்வேரொடு   குன்று   தொளைத்த   நெடும்
போர்வேல   புரந்தர   பூபதியே.


    பொழிப்புரை: "சூரபத்மன், அவனது குலம், கிரௌஞ்ச மலை ஆகிய அனைத்தையும் துளைத்தழித்த போரில் வெல்லவல்ல நீண்ட வேலாயுதத்தைத் தாங்கிய முருகப் பெருமானே! இந்திர லோகத்தின் தலைவனே! கூரிய வேல் போன்ற கண் பார்வையை உடைய மங்கையர் கொங்கைகளில் சேர்ந்து தழுவி வாழ்ந்தவனாகிய எனக்கு, உனது கிருபையைத் தந்தருள நீ நினைக்க மாட்டாயோ? ”

விளக்கவுரை

    அறியாமை தொந்தரவு செய்யத் துவங்கியதால், சாதகனால் இறைவனின் பாதங்களை நினைக்கக்கூட முடியவில்லை (செய்யுள் - 23). ஆனால், அறியாமை ஏன், எவ்வாறு அவனைத் தொந்திரவு செய்தது? ஆத்ம தியானம் வெகு தீவிரத்துடன் ஒருவனால் செய்யப்படும்பொழுது, அவனது உட்புற சுத்திகரிப்பும் நடைபெறத் துவங்குகிறது. இது, பல்லாண்டு காலமாக பூட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு அறையைப் பெருக்கி சுத்தம் செய்வது போன்றது. தரையில் தூசிகள் ஓர் விரிப்பின் கணஅளவிற்குக்கூட படிந்து போயிருக்கலாம். அவ்வளவு தூசிபடிந்த தரையை சுத்தம் செய்யத் துவங்கினால், தூசிகள் மேலெழும்பி, சுத்தப்படுத்துபவன் எங்கே இருக்கிறானென்றுகூடத் தெரியாத அளவிற்குக் கண்பார்வையை மறைக்கும். அப்படிப்பட்ட ஒரு மனநிலைக்கு சாதகனும் இப்பொழுது தள்ளப்பட்டு விடுகிறான். காரண சரீரத்தில் மலைபோல் இதுகாறும் குவிந்து கிடந்த காம-வாசனைகள் () சம்ஸ்காரங்கள் அதாவது, இந்த ஜன்மம், மற்றும் முந்தைய பல ஜன்மங்களில் அவன் பெற்றிருந்த இந்திரிய-போக அநுபவங்களால், குறிப்பாக பாலின வேறுபாடுகளால், ஏற்படுத்தப்பட்ட பதிவுகள் ஆத்ம தியானத்தினால் திடீரென கிளறிவிடப்பட்டதால் (செய்யுள்– 22) அவை அதிர்ச்சி அடைந்து, சீற்றத்துடன் மேலெழும்பி சூட்சும சரீரத்திற்கு வருகின்றன. அதனால், அவை அவன் புத்தியைக் குழப்பி, மனசாட்சியை உறுத்தி, மனதை கலக்கத் துவங்குகிறது. இதுவரை புதைந்துகிடந்த காம-வாசனைகளின் வெளிப்பாடு, அவன் மனசாட்சியைக் கொத்தத் தொடங்குகிறது; அதன் தாக்கம் சாதகனை இறை-பாதங்களை நினைக்கக்கூட முடியாமல் செய்கிறது, மேலு ஆன்மிக சாதனையில் ஈடுபடத் தனக்கு உண்மையில் தகுதி உள்ளதா என்ற சந்தேகத்தையும் அவனிடம் ஏற்படுத்தி விடுகிறது. இம்மாதிரியான ஒரு பரிதாப நிலைக்கு தான் தள்ளப்பட்டுவிட்டதை அவன் இப்பொழுது உணர்கிறான். அதனால்தான், அச்சாதகன் இறைவனிடம் வாய்விட்டுக் கதறி, தான் செய்திருந்த பழைய தவறுகளுக்காக மனமார வருந்தி, தன்னை மன்னிக்கக் கோரி பிரார்த்திக்கிறான், தனக்கு உடனே கிருபையைப் பொழிய வேண்டுகின்றான். இதன்மூலம், இறைவனிடம் சாதகன் தன் குற்றங்களை இரகசியமாக (தன் இதயத்தில்) நேர்மையாக ஒப்புக் கொள்ளுகிறான். அதுவே பிராயசித்தமாகவும் மாறி, இறைவனின் கிருபையை அவனுக்குக் கிடைக்கச்செய்யும். (இதைப் பின்னர் காண்போம்.)

    இறைவனின் சர்வ வியாபகத்துவத்தை உணர முடியாமல் போனபின்னர், அவரது தாள்களில் தன் மனதை நிலைநிறுத்தக்கூட முடியாமற்போகிறது (செய்யுள்-23); அதுமட்டுமல்லாமல், அவன் மனம் பெண்களுடன் முன்னர் அநுபவித்த இன்பங்களின் நினைவால் தொந்திரவு செய்யப்படுகிறது. அச்சாதகன் இப்பொழுதும் தன் குடும்பத்துடன் சேர்ந்துதான் வாழ்ந்து வருகிறான்; அதனால், அவனுக்குக் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன. மேலும், பாலியல் உள்ளுணர்வு, கடந்த கால இன்ப அனுபவங்களின் நினைவுகள், மற்றும் அவைகளின் மீதான ருசி ஆகியவைகள், ஒருவனைவிட்டு எளிதில் அகலுவதில்லை. ஒருவனின் சொந்த முயற்சியால் மட்டும் அவைகளைக் கடப்பது இயலாத காரியம். அவைகளைச் சமாளிக்க இறைவனின் கிருபை அவசியம் தேவையே. எனவே, அவன் அவ்வின்ப அநுபவ நினைவுகளுக்கு திரும்பவும் அடிமையாகி, ஆன்மிகப் பயிற்சிகளை கைவிட்டுவிடாதிருக்க இறைவனிடம் தஞ்சம் அடைந்து தன்னை காத்தருள வேண்டுகிறான்.

    இந்திரன், அசுரன் சூரபத்மனால் சித்திரவதைப் படுத்தப்பட்டான். அவர் அவ்வசுரனுடன் போர் செய்தும், அவரால் அவனை தோற்கடிக்க முடியவில்லை. சூரபத்மன் இந்திரனின் தேவலோகத்திற்குள் நுழைந்து, அதை எரித்து, இந்திரனையும் சிறைப் பிடித்து விடுகிறான். அதுபோலவே, பெண்களின் மீதான காமாக்னி ஆண்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி, அவர்களின் இதயங்களை எரித்து, அவர்களை அடிமைப்படுத்துகிறது. தனது சுயமுயற்சிகளால் அசுரனை வெல்லமுடியாமல் போனதால், இந்திரன் பகவான் சிவனாரிடம் சென்று, அவரை முழுமையாகச் சரண் அடைந்து, அவர் கிருபையை வேண்டுகிறான். சிவனார் தானே கந்தப் பெருமானாகத் தோன்றி, கூரிய வெற்றி வேலால் சூரபத்மனை அழித்து, இந்திரனை காத்தருளுகிறார். அதுபோலவே, தனது சுயமுயற்சிகளால் காமத்தை வென்றிட முயன்று தோல்வியடந்த ஒருவன், கந்தப் பெருமானிடம் சென்று, முழுவதுமாக அவரை தஞ்சமடைய, அவரின் வேலெனும் கிருபை அவனுக்கு உதவி, அவனை காமாக்னியிலிருந்து விடுவிக்கிறது. அதனால், சாதகன் இவ்வாறு வேண்டுகிறான்: “ஓ கந்தப் பெருமானே! நீங்கள் தங்கள் வேலை சூரபத்மன் மீது எறிந்து, அவனை அழிப்பதன் மூலம், இந்திரனைக் காப்பாற்றினீர்கள். அதுபோல், என் மீது தாங்கள் இரக்கம் கொண்டு தங்கள் கிருபையின் மூலம், எனது இழிவான காம இயல்புகளை அழித்து, நான் தங்கள் அருள்பெற நினைக்கும் பாக்கியத்தை அருள்வீர்களாக.”

    உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பெண்களின் பார்வை, இங்கு கூர்மையானதும் அனைத்தையும் துளைத்துச் செல்லும் வேலுடன் ஒப்பிடப்படுகிறது. அவர்களின் பொல்லாத பார்வை ஆண்களின் மிகவும் வலுவான மனோதிடத்தைக்கூடக் குலைத்து விடுகிறது, அவர்களின் இதயத்தைக் கவர்ந்து, அவர்களை இங்குமங்கும் அலைக்கழித்து பரிதவிக்க வைக்கிறது; அவர்களின் தீய வழிகளுக்கு ஆண்களை இணங்க வைத்து விடும் (இது இரண்டு பாலாருக்கும் சமமாகவே பொருந்தும்; ஆண்களால் பெண்களும் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்.). முருகப் பெருமானின் வேல் (கிருபை) மூலமே, வேல் போன்று துளைக்கும் பெண்களின் பார்வையின் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும் என்று இச்செய்யுள் குறிப்பாகச் சொல்கிறது. மங்கையர் கொங்கையில் “சேர்வது”, இறைவனின் அருள் “சேர்வதால்” தவிர்க்கப்படும் ---- ஒரு சேர்க்கை மற்றொரு சேர்க்கையை அழிக்கிறது. முருகனுடைய “போர்வேல்” சாதகனை மங்கையர் “கூர்வேல்” விழியிலிருந்து காப்பாற்றுகிறது. ஒரு ‘வேல்’ மற்றொரு ‘வேல்’இல் இருந்து விடுதலையை பெற்றுத் தருகிறது. இச்செய்யுளில் என்ன அற்புதமான ஒப்பீடுகள்! என்ன ஒரு வியத்தகு சொல்லமைப்பு! ‘தங்களது வேல், சூரபத்மனையும், கிரௌஞ்ச மலையையும் (அசுரன்) துளைத்தது (அழித்தது). தங்களது கிருபையெனும் வேல், பெண்களின் வேல் போன்று துளைக்கும் பார்வை மற்றும் அரவணைப்பிலிருந்து என்னை (மீட்டு) காத்தருளாதா?’ என்று அச்சாதகன் பணிந்து வேண்டிக்கொள்ளுகிறான்.

    அருணகிரிநாதர் அருளின இச்செய்யுளின் தாள அழகு மற்றும் பொருளாழத்தை விளக்க வார்த்தைகள் இல்லை.
    
    

No comments:

Post a Comment